அறன் மிகு ஆசிரியர்
எந்த
மனிதனும் தன்னாலேயே எல்லாவற்றையும் கற்றுக்கொள்வது இயலாது. ஒவ்வொரு மனிதருக்கும்
யாராவது குரு இருந்துதான் ஆக வேண்டும். யாருமே அப்படி இல்லையென்றாலும் அனுபவம்
என்பதாவது சிறந்த ஆசிரியனாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்
எல்லாவற்றையும் அனுபவம் மட்டுமே கற்றுக்கொடுக்க வேண்டும் என்று முரண்டு பிடித்தால்
பலவற்றை நாம் அறிந்து கொள்ளவே முடியாது. அதனால்தான் நாம் குருவை நாடுகிறோம். நல்ல
ஆசிரியர் இல்லாத மாணவர்கள் வாழ்வை நன்முறையில் வாழ்வது கடினமானது.
அறியாமை அகற்றும் அறிவு
குரு
அல்லது ஆசிரியர் என்பவர் ஒரு மனிதனின் அறிவுக் கண்களைத் திறந்து, அவர்களை அறிவில் வளர்க்க
உதவி, அறவாழ்வில் மேன்மை மிகுந்தவர்களாக வாழ ஊக்குவிப்பவரே ஆசிரியர். அதனால்,
அடிப்படையில் ஆசிரியர் தானே தகுதி படைத்தவனாக, அறம் பற்றி அறிந்தவனாக, பிறரை
நல்வழிப்படுத்தும் அளவிற்கு ஆற்றலைப் பெற்றவனாக இருக்க வேண்டும். திருமூலர் ஒரு குரு
எப்படி இருக்க வேண்டும் என்பதைச் சொல்லுகிறார்.
குருட்டினை நீக்கும் குருவினைக்
கொள்ளார்;
குருட்டினை நீக்காக் குருவினைக்
கொள்வர்;
குருடும் குருடும் குருட்டுஆட்டம்
ஆடிக்
குருடும் குருடும் குழிவீழு
மாறே
(திருமந்திரம் - 1680)
பேரா.கரு.ஆறுமுகம்
இதனைப் பின்வருமாறு விளக்குகிறார். அதாவது “வழிகாட்டுவதற்காக நாம் தேர்ந்து கொண்டவரும்
நம்மைப் போலவே பார்வையற்றவராக, வழிதெரியாதவராக இருந்தார் என்றால், நாம் போக
வேண்டிய புதிய இடத்துக்குப் போய்ச்சேர முடியுமா? போகிற வழியில் ஏதேனும் ஒரு
குழியில் தடுமாறித் தலை குப்புற உருள வேண்டியதுதான்.” அதானால் அறியாமை என்னும்
குருட்டினை நீக்கும் ஆற்றல் இல்லாத குருவைக் கொள்பவர் குருடர்கள். இருவரும்
சேர்ந்து நடந்து குழியில் விழுவதற்கு ஈடாக இருக்கும். அதையே இயேசுவும், “பார்வையற்ற
ஒருவர் பார்வையற்ற வேறொருவரை வழி நடத்தினால் இருவரும் குழியில் விழுவர்” என்றார். எனவே
வழி நடத்தும் ஆசான் தனது பார்வையை அறிவின் பாதையிலும், ஒளியின் பாதையிலும், வைத்துக்கொள்ள
வேண்டியது அவசியமாகிறது.
விளக்கும் திறன்
ஓர்
ஆசிரியர் தன்னளவிலே அறிவு மிகுந்தவராக இருக்கலாம். ஆனால் அதை தனது மாணவர்களுக்கு
விளக்கிச் சொல்லும் ஆற்றலையும் பெற்றிருக்க வேண்டும். தன்னிடம் இருக்கும் ஒளியை
மற்றவர்களுக்குக் கடத்தும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். உள்ளதை அப்படியே
சொல்வதில் அல்ல, மாறாக வாழ்வின் சூழலை ஒட்டி, தகுந்த உதாரணங்களோடு விவரித்துச்
சொல்லவும் வேண்டும். திருவள்ளுவர் ஆசிரியர் பற்றி எதையும் நேரடியாகச் சொல்ல வில்லை
என்றாலும் ஒருவர் தான் கற்றதைப் பிறருக்கு நன்முறையில் கற்றுக் கொடுக்க வில்லை
என்றால் அதனால் பயன் இல்லை என்கிறார்.
“இணர்ஊழ்த்தும் நாறா
மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்” [650]
அதாவது,
கற்றதைப் பிறருக்கு விரித்துக் கூற முடியாதவர் மணம் பரப்பாத மலரைப் போன்றவர்
என்கிறார் வள்ளுவர். நேர்மறையாகச் சொல்லும்போது, ஒருவர் தான் பயன்படுத்தும் சொற்களின் முழுப்
பொருளை உணர்ந்து, சரியான விதத்தில் பயன்படுத்த வேண்டும் என்கிறார்:
திறனறிந்து
சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங் கில் [644]
சொல்லின்
திறத்தை அறிந்து சொல்ல வேண்டும். அதைவிட
சிறந்த அறமும் பொருளும் இல்லை என்கிறார்.
கேள்விகேட்கத் தூண்டும் ஆற்றல்
ஆசிரியர்
பாடங்களில் மட்டும் புலமை பெற்றவராக இருந்தால் மட்டும் போதாது. தெரிந்ததை சொல்லிக்
கொடுக்கிற நபராக இருந்தால் மட்டும் போதாது. மாறாக, தனது மாணவனையும் கற்பதில்
ஆர்வமுள்ள நபராக மாற்ற வேண்டும். உலகத்தில்
நடக்கும் விஷயங்களை கூர்ந்து கவனிக்கிற ஆசானாக இருக்க வேண்டும். கேள்வி கேட்கிற
ஆசானாக, மாணவர்களைக் கேள்வி கேட்கத் தூண்டுகிற ஆசானாக அவர் இருக்க வேண்டும். பல சமயங்களில்
ஆசிரியர்கள் மாணவர்களை நடத்திய பாடம் பற்றிய கேள்விகளை மட்டுமே கேட்கிறோமே தவிர, நடக்கிற
நிகழ்வுகளைப் பற்றியோ, அறம் பற்றிய கேள்விகளையோ, அரசு மற்றும் பொதுவெளியில் நமது
கடமைகள் பற்றிய கேள்விகளையோ நாம் கேட்பதுமில்லை, அத்தகைய கேள்விகளைக் கேட்பதை
ஊக்குவிப்பதும் இல்லை. தொடக்கப் பள்ளிகளில் இது சாத்தியம் இல்லை என்றாலும், மேல்நிலை
அல்லது கல்லூரி அளவில் இது கண்டிப்பாய் நிகழ வேண்டும்.
வாழ்ந்து காட்டும் அறன்
இவை
எல்லாவற்றைக் காட்டிலும் ஓர் ஆசிரியர் அறம் சார்ந்த ஆசிரியராக இருக்க வேண்டும்.
இன்றைய கால கட்டத்தில் இது வெகுவாகக் குறைந்து வருகிறது. ஆசிரியர்களே மாணவர்களை
பாலியல் ரீதியாக துன்புறுத்துவதும், சிறப்புக் கவனம் செலுத்த தனியாக ட்யூஷன்
வைப்பதும், பள்ளிகளில் அதிகக் கட்டணம் வசூலித்து அறத்திற்கு எதிராகச்
செயல்படுவதும் ஆசிரியர்களுக்கான மதிப்பையும், கற்றலின் மேன்மையையும் குலைக்கிறது. எனவே
கல்வியின் மேன்மையை உணர்த்தும் மிகப்பெரும் பொறுப்பு ஆசிரியர்களையே சார்ந்திருக்கிறது.
இன்றைக்கு இத்தகைய ஆசிரியர்களின் தேவை மிக அதிகமாயிருக்கிறது.
அறம் சார்ந்த ஆசிரியர்களின் தேவை
இன்று
நமது பொது வெளியில் எது நடந்தாலும், அதில் அரசியலைப் புகுத்துவது என்பது வழக்கமாகி
விட்டது. இராணுவ வீரன் ஒருவர் இறந்ததை வைத்து எப்படி அரசியல் செய்யலாம் என்று
யோசித்து குழப்பத்தை விளைவித்து அதில் குளிர் காய்ந்து, ஆதாயம் காண்கின்ற அறநெறி
அற்ற முன்னாள் காவல்துறை அதிகாரிகள் இருக்கிற கால கட்டத்தில் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம். அவருக்கு பாடம் கற்றுக் கொடுத்த ஆசிரியர் அறநெறியையும்
சேர்த்துக் கற்றுக் கொடுத்திருந்தால் ஒருவேளை அவர் அரசியலிலும் அறநெறி என்று
சிந்திக்க வாய்ப்பு இருந்திருக்கும்.
இப்படி
அரசியல் செய்கிறவர்கள் ஆசிரியர்களையும் மற்றும் பள்ளிகளையும் வைத்து அரசியல்
செய்வதை மாற்றிக் கொள்ளவும் வேண்டும். ஒரு பள்ளியில் படித்த மாணவி வீட்டிற்குச்
சென்று தற்கொலை செய்து கொண்டால் ஆசிரியரைக் குற்றம் சுமத்துவதும், உடனடியாக தேசிய
அளவில் ஊடகங்களைப் பேச வைப்பதும், தேசிய கமிட்டியை வரவைப்பதும், வேறொரு பள்ளியில்
மாணவி தற்(கொலை) செய்து கொண்டால் அது காதல் தோல்வி என்று சொல்லி அரசியல் செய்யும்
புத்தி மாறினால்தான் ஆசிரியர்கள் ஒழுங்காக, சிறப்பாக பணியாற்ற முடியும். அதற்காக
அறநெறியில் பிறழாது வாழ்கின்ற ஆசிரியர்களின் தேவை முன்பு எப்போதையும் விட அதிகமான தேவையாக இருக்கிறது.
இன்றைய அரசியல் சூழலினாலோ,
அல்லது ஆசிரியர்கள் குறைவினாலோ அரசுப் பள்ளிகளில் ஆசிர்யர்கள் இல்லாத அவல நிலை நீடிக்கிறது. இந்த ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பள்ளியில்
பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களைக் கவனித்துக் கொள்ள ஒரே ஒரு
ஆசிரியர்தான் இருக்கிறார் என்பது எவ்வளவு வெட்கக்கேடு? “பள்ளிகள்
திறந்து மூன்று மாதங்கள் ஆகியும் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள்
தவிப்பு. 13000 ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
எடுக்குமா பள்ளிக் கல்வித்துறை,” என்று தி இந்து ஆகஸ்டு மாதம் 22 ஆம் தேதி
செய்தித்தாள் கேள்வி கேட்டிருக்கிறது. இன்னும் அடுத்த மூன்று ஆண்டுகளில் 20,000 மேற்பட்ட ஆசிரியர்கள் ஒய்வு பெறுவார்கள் என்றும்
சொல்லப்படுகின்றது. அத்துணை இடங்களையும் நிரப்பும் அளவிற்கு அறநெறி மிகுந்த
ஆசிரியர்கள் தயாராக இருக்கிறார்களா? இதை நிறைவு செய்ய வேண்டிய தேவை அரசையும், ஆசிரியர்களையுமே
சார்ந்திருக்கிறது.
அன்பின் சுவடுகள் செப்டம்பர் 2022 க்காக எழுதப்பட்டது.