Thursday 30 November 2017

Gujarat bishop’s plea

Gujarat bishop’s plea to save India from nationalist forces is an act of citizenship we must support

"The critics do not understand the pathos and irony of the letter. The nationalism of our fathers was a unifying force, a source of diversity, where differences added to the power of the idea. It was a nationalism where diversity went hand in hand with liberty and equality, which dreamt of a democracy that went beyond the brute power of electoral demography. There is power and irony when Macwan states that “nationalist forces are taking over the country”, as the tragedy and the irony is complete when the majority becomes the nation. It is an ethnic cleansing through concepts because by definition it excludes minorities and dissent and pretends to sanitise a world of violence."

Wednesday 15 November 2017

கிறித்தவமும் மெர்சலும் - [இரவல் பக்கம் - 1]


  
சிறுவயது ஞாபகங்கள் சில அவ்வப்போது வந்து கிளுகிளுப்பை ஊட்டும். சில கிலியையும் ஏற்படுத்தும். மெர்சல் படத்தையொட்டி பா.ஜ.க. தலைவர்கள் ஏற்படுத்திய சர்ச்சையும், திரு எச். ராஜா அவர்களின் முகநூல் பதிவும் எனக்கு அப்படி ஒரு சம்பவத்தை ஞாபகப்படுத்தியது. எத்தனையோ ஆண்டுகளுக்குமுன் நான் ஆரம்பப்பள்ளியில் படித்தபோது நடந்த சம்பவம் அது. ஓர் மே மாத விடுமுறையில் என் உறவினரின் வீட்டுக்குப் போயிருந்தேன். எனது ஒன்றுவிட்ட சகோதரனும் நானும் ஏதோ பந்தயம் வைத்து கோலிக்குண்டு விளையாடினோம், நான் ஜெயிக்கப்போகும் நேரத்தில், தோல்வியைப் பொறுக்கமுடியாமல் அந்தச்சகோதரன் “டேய் நீ வச்சிருக்கிறது என்னோட கோலிக்குண்டு, அதைக்கொடுடா,” என்று சண்டைக்கு வந்தான். என் கையில் உள்ளதை அவன் பறிக்க, நான் மறிக்க விளையாட்டின் போக்கே மாறி இருவரும் கட்டிப் புரண்டோம். பந்தயம் மறந்துபோய் சண்டைதான் வந்தது. மெர்சல் படம் வெளிவந்து அதன் மூலமாக விஜயின் பெயர் ஜோசப் விஜய் என்ற உண்மையை எச். ராஜா துப்பறிந்து கண்டுபிடித்து விவகாரம் ஆக்கியபோது எனக்கு இந்தச் சிறுவயது சண்டைதான் ஞாபகம் வந்தது.


   இந்துத்துவவாதிகள் எப்போதும் இப்படிதான். மெயின் ஆட்டத்தைத் திசைதிருப்பி ஆட்டத்தைக் கலைப்பதில் வல்லவர்கள். ஆனால் இந்த முறை என்னவோ எடுபடவில்லை. இந்தத் தமழ் நாட்டில் இது கஷ்டம்தான். இவர்கள் போட்ட கூச்சலில் சரி, அப்படி என்னதான் இருக்கிறது அந்தப் படத்தில்? எனப்போய்ப் பார்த்தால் படம் என்னவோ முதல் பாதி கொஞ்சம் விறுவிறுப்பாகப் போகிறது, எடுத்துக்கொண்டிருக்கிற கருத்து அருமையானது என்பதைத் தாண்டி படத்தில் ஒன்றுமேயில்லை. இவர்கள் சொல்கிற வசனங்கள்கூட ஏதோ போகிற போக்கில் வருகின்றன. அவ்வளவுதான். வழக்கமான மசாலாக்களும், நம்பவே முடியாத திருப்பங்களும், அறிவை மழுங்கடிக்கும் சண்டைகளும், பாடல்களும் என சராசரி தமிழ் சினிமாக்களின் அத்தனை அம்சங்களும், அபத்தங்களும் நிறைந்த விஜய்யின் இன்னொரு படமாகப் போயிருக்கவேண்டிய ஒரு படம், அது ஏற்படுத்திய சர்ச்சைகளால் இன்று பிளாக் பஸ்டர் வரிசையில் சேர்ந்திருக்கிறது. இந்த சர்ச்சைக்குப் பின்னால் முதல் போட்டவர்களின் தந்திரம் இருக்கிறது இது ஒரு வியாபாரயுக்தி என்றெல்லாம் சொல்கிறார்கள். நாம் அதற்குள் போக விரும்பவில்லை. எது எப்படியோ இந்த படத்தினால் தமழ்ச் சமூகத்தில் நிகழ்ந்த உருப்படியான விளைவு ஒன்று உண்டு. 



   ஏறத்தாழ ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்குப் பிறகு சிந்தனையளவில் தமிழர்கள் ஒன்றுபட்ட விஷயம் என்ற ஒன்று உண்டென்றால் அது மெர்சல்தான். (அஜித் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும்கூட சமூக வலைத்தளத்தில் ஒன்றுபட்டார்களென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்) கடைசியில் எச். ராஜா கோஷ்டியினர் தாங்கள் மூக்குடைப்பட்டதை சமாளிக்க எஸ்.வி. சேகர் போன்றவர்களெல்லாம் ‘வரும் ஆனால் வராது’ என்று வடிவேல் பாணியில் ‘தப்புத்தான். ஆனால் தப்பு இல்லை’ என்று பேசிக்கொண்டிருந்தார்கள். மொத்தத்தில் சென்னை மழைக்கு முன்பாக பேரிரைச்சலோடு மெர்சல் ஆராவாரம் வந்து போனது. அந்த இரைச்சலில் சத்தம் போடாமல் கல்லாக் கட்டியவர்கள் படத்தை முதல் போட்டுத் தயாரித்தவர்கள்தான். 

        சரி! அது போகட்டும் இந்த மெர்சலில் நாம் கவனிக்க வேண்டியது மெர்சல் பேசும் அரசியலையல்ல. மெர்சலை முன் வைத்தும் அதற்குப்பின்னாலும் இருக்கக்கூடிய அரசியலைத்தான் இதில் எச். ராஜாவுக்கும் ஒரு அரசியல் இருக்கிறது. விஜய்யிக்கும் ஒரு அரசியல் இருக்கிறது. அதைப்பற்றி பேசுமுன் இன்னொன்றையும் சொல்லி விடுகிறேன். மெர்சலில் விஜய் போகிற போக்கில் கோயிலைப்பற்றி ஒரு வசனம் சொல்கிறார். அதையொட்டி எச். ராஜா பிரிவினைவாத அரசியலொன்றை முன் வைக்கிறார் இதில் கவனித்தீர்களென்றால் அந்தப் படத்தில் கோயில் என்று சொல்லி பேசப்படும் வசனத்தை எச். ராஜா பொருள் படுத்தும் முறையே தவறானது. விஜய் கோயில் என்று சொல்கிறபோது சர்ச் என்பதும் அதில் அடக்கம். நமது ஊர்களில் யாரும் சர்ச்சுக்குப் போகிறேன் என்று சொல்வதில்லை. கோயில்தான.; இந்துக் கோயிலாக இருந்தாலும் சரி கோயில்தான். கிறித்தவக் கோயிலாக இருந்தாலும் அதுதான். வழக்கு மொழியில் கிராமங்களில், “அந்தோனியார் கோயிலுக்குப் போகிறேன் என்றோ”, “பங்குக் கோயிலுக்குப் போகிறேன்”; என்றோதான் சொல்வார்கள். யாரவது பங்கு சர்ச்சுக்குப் போகிறேன் என்று சொல்வீர்களா? இந்து என்றால், “நான் மாரியாத்தா கோயிலுக்குப் போகிறேன்”; “சிவன் கோயிலுக்குப் போகிறேன்”; என்பார்கள். படித்த நகர்ப்புற மக்கள் மத்தியில் வேண்டுமானால் சர்ச் என்கிற வார்த்தை பிரயோகிக்கப்படலாம். இந்த வசனத்தின் மூலம் கிறித்தவர்கள் உணர வேண்டிய நீதியொன்றும் உண்டு. கோயில் கட்டுவதே சாதனை என்ற சாமியார் மனநிலையும், அதற்கு தூபம் போடுவதே நம் பணி என்ற பங்குப் பேரவை மனநிலையும், கோயில் கட்டறதுக்குத்தான் சாமியார் என்ற மக்கள் மனநிலையும் மாற வேண்டும் என்பதுதான் அது.  

     இருக்கிற கோயிலை இடிப்பதும், இருக்கின்ற கோயிலை சுரண்டுவதும், ஒண்ணும் முடியவல்லையென்றால் நற்கருணை பேழையில் இருக்கும் ஆண்டவரை மாற்றிக் கொண்டுவந்து சிறு ஆலயத்தில் வைத்துச் சிறைப்பிடிப்பதும் போன்ற நம் பிரபலமான ஆன்மீக காரியங்களைப் பற்றியெல்லாம் நாம் மறுபரிசீலனை செய்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். (ஆண்டவர் சொன்னபடி மனம்தான் மாற முடியவில்லை இடமாவது மாற்றுவோமே என்று எண்ணுகிறோமோ என்னவோ தெரியவில்லை. நற்கருணை ஆலயம் ஒன்றைத் தனியாக எழுப்பினால் அதைச் சந்திக்க எப்போதும் ஆட்கள் இருக்க வேண்டும் என்பது மரபு. ஆனால் அநேக நகரங்களில் ஆண்டவர் தனியாகத்தான் இருக்கிறார். ஆட்கள் இருக்கிறார்களோ இல்லையோ ஆலயம் வேண்டும் என்பதுதான் நகர்புற வழக்கு). கோயில்கள் கட்ட வேண்டாம் என்பது நம் கொள்கையல்ல, அனால் அது மட்டுமே ஆன்மீகப் பணியின் அளவுகோல் அல்ல. மத்.25-ம் அதிகாரத்தோடு அதைப் பொறுத்திப் பார்க்க வேண்டும். 

     இந்த பின்னணியில் விஜயின் அந்த வசனத்தை கேட்டுப் பாருங்கள். அவர் யாரைச் சொல்கிறார் என்று புரியும். இப்போது எச். ராஜாவுக்கு வருவோம். இன்னொருவர் எழுதிக்கொடுத்து இந்த வசனத்தைப் பேசியவரைக் கண்டிக்க விரும்பிய அவர் ஷெர்லாக் ஹோம்ஸ் போலத் துப்பறிந்து ஆதாரத்தோடு ஜோசப் விஜய் என்ற அடையாளத்தை வெளியிட்டார். விஜய் கிறித்தவர் என்பதுதான் தமிழ் நாட்டில் எல்லோருக்கும் தெரியுமே. அதை வெளிப்படுத்தியதன் ஒரே நோக்கம், இவன் கிறித்தவன்; அதனால்தான் இந்துக்களை அவமானப்படுத்துகிறான் என்று, அந்த வசனத்தை எழுதியவனிலிருந்து, பேசியவனிலிருந்து, கேட்டவனிலிருந்து, தமழ் நாட்டில் யாருமே நினைத்து பார்க்காத ஒன்றை நிறுவி அதன் மூலம் தமிழர்களை மதரீதியாக பிரித்துப் பார்த்து கிறித்துவர்கள் எல்லாம் அயல்நாட்டுச் சாமியைக் கும்பிடுபவர்கள் என்று தமிழர்களாகிய நமக்குச் சொல்ல விரும்புவதுதான். இங்குதான் தமிழர்களாகிய நாமெல்லோருமே சிந்திக்க வேண்டும். 

      தமிழர்களாகிய நாமெல்லோருமே இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு ஒரே மதத்தைச் சார்ந்தவர்கள்தான். அது தமிழர் சமயம். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில்தான் சமணம், பௌத்தம் போன்றவை வந்தன. அதுவரையில் நாமெல்லோரும் தமிழர் சமயம்தான். கி.பி. ஆறாம் நூற்றாண்டுவரை சமணம் பௌத்தம் ஓங்கி நின்றன. அந்த கால கட்டத்தில் தமிழர் சமய வாழ்வு நெறிகளை மீட்டெடுக்க வந்தவர்கள்தான் திருமூலரும் அவரைத் தொடர்ந்து வந்தவர்களும். திருமூலர் காலத்துக்குப் பின்வந்த சைவ மதத்தை வடஇந்தியப் பார்ப்பனர்கள் உள் வாங்கி இந்து மதத்தின் ஓர் அங்கமாக மாற்றிக் கொண்டனர். இதை நான் சொல்லவில்லை. மயிலை சீனி வெங்கடாசலம் போன்ற ஆய்வாளர்கள் தெளிவாகச் சொல்கிறார்கள். எனவே பார்க்கப்போனால் தமிழர்களாகிய நமக்கு எச். ராஜா போன்றவர்கள்தான் அந்நிய மதம். இன்னும் ஒரு விதத்தில் பார்க்கப்போனால் கிறித்தவம் தோமையார் காலந்தொட்டே, அதாவது எச்.ராஜா போன்றோர் முன்வைக்கும் இந்து மதத்துக்கு முன்பே இருக்கிறது. எனவே, தமிழர்களுக்கு இவர்கள்தான் அன்னியர்கள். இதை நான் ஒரு வாதத்துக்காக முன்வைக்கிறேனே தவிர, அடிப்படையில் இப்படி மனிதர்களை மார்க்கம் சார்ந்து பார்ப்பது தவறு. கிறித்தவம் என்பது நம் நிறைவாழ்வுக்காண நம்பிக்கை. தமிழ் என்பது என் பிறப்பிற்கான அடிப்படை. இந்தப் பிரிவினைவாதிகள் செய்யும் பிதற்றல்களால் இப்பொதெல்லாம் தேவையற்ற கேள்விகளைச் சந்திக்கவேண்டியிருக்கிறது. முன்பெல்லாம் இப்படி இல்லை. 

     “நீங்கள் கிறித்தவராக இருந்தும் தமிழில் இவ்வளவு ஆர்வமுள்ளவராக இருக்கிறீர்களே? என்று கேட்கிறார்கள்”, என்று நண்பர் ஒருவர் குறைப்பட்டுக்கொண்டார். அடப்பாவிகளா! வரலாற்றைப் படியுங்கள். நிகழ்காலத்தையும் கொஞ்சம் உற்றுப் பாருங்கள். பெஸ்கியிலிருந்து கால்டுவெல் வரை தமிழுக்குக் கிறித்துவம் ஆற்றிய பணிகள்தான் எத்தனை? தமிழ்க் கீர்த்தனைகள் அமைத்து முதலில் பாடியது நாம்தானே. பெரியபாளையம் மாதாவைப் பற்றி மாயூரம் வேதநாயகம் எழுதிய கீர்த்தனை எவ்வளவு நயம் வாய்ந்தது! வேண்டுமானால் கவிஞர் செம்பை சேவியர் எழுதிய விளக்கவுரையைப் படித்துப் பாருங்கள். இப்படி எத்தனை சொல்லலாம்?
நிகழ்காலத்துக்கு வாருங்கள். நம்முடைய ஆலய வழிபாடுகளில் எத்தனை பிறமொழி வாக்கியங்கள் பயன்படுத்தப்படுகின்றன? ஆமென், அல்லேலுயா என்று ஏதேனும் ஒன்றிரண்டு இருக்கலாம். நாம் என்ன, இன்னும் லத்தீனிலும், சமஸகிருதத்திலுமா வழிபாடு செய்கிறோம்? பிரிவினைவாதம் பேசுபவர்கள் இதே கேள்வியைக் கொஞ்சம் அவர்களை நோக்கிக் கேட்டுப் பார்க்கட்டும். எனவே நாம் அன்னியர்களா? எண்ணிப்பாருங்கள். 

    கிறித்தவர்கள் அடிப்படையில் தமிழர்கள். கிறித்துவம் என்பது அந்தந்த பண்பாட்டின் வழி நிறைவாழ்வை கண்டடையச் சொல்லும் வழிமுறை. இயேசு யூதராகத்தான் இருந்தார். நாம் தமிழராகத்தான் இருக்கமுடியும்.


        அடுத்து இந்தப் படத்தை முன் வைத்து விஜய் செய்ய விரும்பும் அரசியலுக்கு வருகிறேன். அவர் செய்ய விரும்புவது அல்லது செய்வதாக நினைத்துக்கொள்வது எம்.ஜி.ஆர் பாணி அரசியல். எம்.ஜி.ஆர் எப்படி எந்த வித சித்தாந்தமுமில்லாமல் தன்னை ஒரு தலைமையாகக் கட்டமைத்தாரோ அதேபோன்ற ஒரு பாணியை விஜய் கையாள விரும்புகிறார். இப்போது காலம் மாறி விட்டது. அதுவமல்லாது எம்.ஜி.ஆரின் வளர்ச்சிக்குத் திராவிடம் என்ற இயக்கமும், சித்தாந்தமும் ஆரம்பத்தில் துணைநின்றன. எனவே, எம்.ஜி.ஆர் போன்றே இவர் தன்னைக் கற்பனை செய்துகொண்டால் அது இன்று சாத்தியம் இல்லை. சமீபகால வரலாற்றில் விஜயகாந்த் இதற்கு ஒர் உதாரணம். எனவே, தன் கொள்கை என்ன? இலட்சியம் என்ன? அதற்கான செயல் திட்டம் என்ன என்பதை விஜய் தெளிவு படுத்த வேண்டும். அதற்கு சாத்தியம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. ஒரு முறை ராகுலோடும், இன்னொருமுறை மோடியோடும் போஸ் கொடுத்துக் கொண்டிருப்பதெல்லாம் கதைக்கு ஆகாது. கொள்கையற்ற, மாந்தீரிக  கதாநாயகர்களை இனியும் தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று தோன்றவில்லை. ஒருவேளை அப்படி நடந்தால் தமழ்நாட்டை நினைத்து நொந்துகொள்வதைத் தவிர வேறுவழியில்லை. அது எச்.ராஜா பேசக்கூடிய அரசியல் போன்றே அபத்தமானதும் ஆபத்தானதுமாகும். எனவே இதை வைத்து விஜய் செய்யும் அரசியலைக்குறித்து நாம் விழிப்பாயிருக்க வேண்டும். 


பின் குறிப்புகள்: 

1) விஜயின் அப்பா எஸ். ஏ. சந்திரசேகர் பாண்டேயிடம் படாத பாடுபட்ட நேர்காணல் ஒன்றைப் பார்க்க நேரிட்டது. ஜோசப் என்ற பெயருக்கு விளக்கம் சொல்லப் போனவர் பெரும்பாடுபட்டு தன்னை மனிதராக நிருபிக்க முயன்றார். திடீரென்று இயேசு ஒரு சித்தர் என்றார். சரி, அவர் இயேசுவை எப்படியோ பார்த்து விட்டுப் போகிறார். அது அவர் தனிப்பட்ட விஷயம், கிறித்தவ பெயர் என்றால் ஆம் என்று நேரடியாகச் சொல்வதில் என்னதயக்கம்? தமிழனாக இருக்கிறவன் கிறித்தவனாக இருக்க முடியாதா? சார், கிறித்தவனாக இருப்பது என்பதே அடிப்படையில் மனிதனாக இருப்பதுதான். உங்கள் சித்தர் விளக்கத்தைக் கேட்டு எனக்கு கொஞ்சம் சித்தப் பிரமை வந்துவிட்டது. 

2) இந்த மெர்சல் சர்ச்சை வந்ததிலிருந்து சமூகவலைத் தளங்களில் கிறித்தவனை டிஸ்டர்ப் பண்ணாதே என்ற ஓர் அபத்தமான பாட்டு உலாவருகிறது. அவ்வப்போது என் வாட்ஸ் அப்பில் வந்து கிறித்தவனாகிய என்னை அது டிஸ்டர்ப் செய்கிறது அந்தப் பாட்டைப் பத்தாததற்கு விஜயின் டான்சோடோடு கோர்த்துவிட்டிருக்கிறார்கள், பாவம் விஜய். அநேகமாக தெருக்களில் நின்று நோட்டீஸ் கொடுத்தும், ஸ்க்கபீர்களில் இறைந்தும் நரகத்தைக் காட்டிப் பயமுறுத்தி பாமரமக்களை டிஸ்டர்ப் செய்யும் ஏதோ ஒரு குழுவின் வேலை இது என்று நினைக்கிறேன். தயவு செய்து இது போன்ற அபத்தங்களை நிறுத்தவும். இது ஒரு மோசமான எதிர்வினை, வன்மையாகக் கண்டிக்கிறேன். 

* * * * *
[இக்கட்டுரை வழங்கிய நண்பருக்கு நன்றி ]