Showing posts with label ஊழல். Show all posts
Showing posts with label ஊழல். Show all posts

Monday, 6 October 2014

எங்கெங்கு காணினும் சக்தியடா !


எங்கெங்கு காணினும் சக்தியடா தம்பி 

ஏழுகடல் அவள் வண்ணமடா - அங்குத் 
தங்கும் வெளியினிற் கோடியண்டம்  - அந்தத் 
தாயின் கைப்பந்தென ஓடுமடா!.. 
- பாரதி தாசன்

##########
நான் என்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். சில சமயங்களில் நடக்கும் நல்லதெல்லாம் உண்மைதானா - என்று உணர்ந்தது கொள்வதற்கு இப்படிச் செய்வதுண்டு. ஆனால் கடந்த இருபத்தி ஏழாம் தேதியிலிருந்து நடக்கும் பல நல்லவைகளை நினைத்துப் பார்க்கும் போது இவைகளெல்லாம் உண்மைதானா என்று என்னையே கிள்ளிப் பார்த்து பார்த்து நகக் கண்கள் உடைந்தே போய்விட்டன. கிள்ளிப் பார்ப்பதற்கு என்னுடம்பில் இடமும் இல்லாமல் போய்விட்டது. எங்கெங்கு காணினும் அம்மாவே! காலை செய்தித்தாட்களில், சாலையில் போஸ்டர்களில், நாள் முழுவதும் தொலைக்காட்சிகளில் என எல்லா இடங்களிலும். ஆளும் கட்சி இடைத்தேர்தல்களில் மட்டுமல்ல, நீதித்துறையை எதிர்ப்பதிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதற்காக எதையும் செய்வதற்குத் தயாராக இருக்கின்றது.

பதிவியில் இருக்கும் போது தண்டனை பேரும் முதல் நபராக மட்டும் அவர் அல்ல. அப்படிப் பதவியில் இருக்கும் போது அந்தத் தண்டனையைக் கூட தனக்கு சாதகமானதாக மாற்றக்கூடிய சக்தியையும் கொண்டவர் என்பதை என்பித்திருப்பதிலும் அவர்தான் முதல்வர்.
இது நீதித் துறைக்கு நல்லதல்ல.

###

ஆளும் கட்சி, தான் எப்போதும் தனது தலைவருக்கு விசுவாசம் உள்ளவர்கள் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது. அதைத்தான் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒன்றுமில்லாமல், ஒரு சில இடங்களில் இருந்த இந்த விசுவாசக் காட்சிகளை தமிழகம் முழுவதும் பரப்பி விட்ட பரப்புரையாளர்கள் நமது செய்தித் தாள்களும், செய்தித் தொலைக் காட்சிகளும். 
பெயருக்கு ஒன்றிரண்டு ஊடகங்களைத் தவிர ஒட்டு மொத்தமாக பத்திரிக்கைகள் இது நீதித் துறையின் வெற்றியாகவோ, அநீதிக்குக் கிடைத்த தண்டனையாகவோ கருதாமல் - சிலரின் சூழ்ச்சிகளால், மாயவலைக்குள் அவர் சிக்கிக் கொண்டது போல சித்தரித்தால், படிப்பவன் என்ன நினைப்பான்? நேற்று தொடங்கி இன்று தண்டனை விதித்தால் அதில் சூழ்ச்சி பற்றிப் பேசலாம். இதில் எப்படிப் பேசுவது? பத்திரிக்கைகள் தங்களது நம்பகத் தன்மையை முற்றிலுமாக அடகு வைத்து விட்டன. 
இதன் மூலம் பத்திரிகை சுதந்திரத்தை இவைகள் அடகு வைத்து விட்டன. இது பத்திரிகை தர்மத்திற்கு நல்லதல்ல.

###

ஒட்டு மொத்த சினிமாத் துறையும், ஒருங்கே அமர்ந்து - அல்லது அவ்வாறு இருந்தது போல ஒரு பிரம்மையை உருவாக்கி அதில் நீதி அரசர்கள் அமர்ந்து இருப்பதைப் பார்த்த போது- 
ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை எல்லாம் திருத்தவே முடியாது என்று நமக்கு சொன்ன விவேக் நீதியரசராகத் தெரிந்தார்.
ஊழலுக்கு எதிராக அன்னியனான விக்ரம் நீதியர்சராகத் தெரிந்தார்.
தெய்வத்தை மனிதன் தண்டிக்க முடியுமா 
என்ற வசனத்தைப் பார்த்த போது 
ஐயகோ 
எந்த வசனகவிக்கும் தோன்றாத இந்தச் சிந்தனை எந்த நீதியரசருக்குத் தெரிந்தது என்று உள்ளுக்குள்ளே 
குடைந்து எடுத்து விட்டது.

இவர்கள் ஏன் நீதியர்சர்களாகவோ, அடுத்த முதல்வர்களாகவோ வரக்கூடாது?
இந்தப் போக்கு சினிமாவிற்கும் நல்லதல்ல
தமிழகத்துக்கும் நல்லதல்ல.

###

அன்னைக்கு ஆதரவாக தனியார் பள்ளிகள் மூடப்படும் என்று அறிக்கை விட்டு மீண்டும் அதை வாபஸ் செய்தது / நீதித் துறைக்கான முடிவுகளில் பள்ளிகள் தலையிடுவது ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய பள்ளிகள் தடம் புரள்கின்றன என்பதையே காட்டுகிறது. இது நல்லதல்ல.
###

கட்சி ஆட்சியில் இருக்கும் போது அதன் தலைவர் சிறை பிடிக்கப்பட்டால் இது போன்ற நிகழ்வுகளை எல்லாம் இனிமேல் சர்வ சாதரனமாய்ப் பார்க்கலாம். இந்த நிகழ்வுகளெல்லாம் நமக்குள் பல கேள்விகளை கொடுக்கின்றன.

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விடயங்கள் இன்றைய இளைஞர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. வரலாறு தெரியாமல் இருந்தால் என்னென்ன பாதகங்கள் நிகழும் என்பதற்கு இதுவே சாட்சி. ஆனால் பத்திரிகைகளுக்குத் தெரியவில்லை என்பது மிக ஆச்சரியமானதே! வரலாறு தெரியாமல் இருக்க முடியுமா?

ஜனநாயக நாட்டில், மக்கள் போராட்டங்கள் என்பது அவர்களுக்கான உரிமை. ஒரு ஊழல் வாதியை தங்களது தலைவர்களாக ஏற்றுக்கொள்வது அவர்களது சுதந்திரம். அதில் தலையிட நாம் யார். அதற்காக சாதாரண மக்களை துன்பத்திற்கு ஆளாக்குவதை யாராவது அவர்களது உரிமை என்று சொல்லிவிட முடியுமா? 

இத்தைகைய போக்கு, இன்றைய தேதியில் ஆயிரக்கணக்கான கோடிகள் அளவிற்கு ஊழல் செய்தவர்களுக்குச் சாதகமாக இருக்குமே தவிர வேறு யாருக்கும் எந்த வித நன்மையையும் செய்து விட முடியாது. இனிமேல் ஊழல் வழக்குகள் என்று வந்தால் அதனால் தண்டிக்கப் படப போவது சாதாரண ட்ராபிக் கான்ஸ்டபிள்கள் மட்டுமே. பழம் தின்னிக் கொட்டைகள் எல்லாரும் மிகச் சாதரணமாய் ஒரு பேருந்தை எரிப்பதன் மூலம் தப்பித்து வரமுடியும். அறிவாளிகள், தாங்கள் ஆட்சியில் இருக்கும் போதே தங்கம் மீதான வழக்குகளை எதிர் கொண்டு இலகுவாக வெளியே வந்து விட முடியும்.
ஊழல் வழக்குகள் தவறு என்று சொல்லிவிட முடியுமா?

தவறு செய்தவர்கள் திருந்தலாம். இல்லையென்று மறுப்பதற்கில்லை. அதற்காக செய்த தவறுகளுக்கு தண்டனை இல்லை என்று சொல்ல முடியுமா? 
###

மூடர்கள் இருக்கும் வரை ஊழல் பேர்வழிகள் உருவாகிக் கொண்டே இருப்பார்கள்.
###


துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? -

அறமி தென்றும் யாம் மறமி தென்றுமே
அறிகி லாத போது - யாம்

அறிகி லாத போது - தமிழ்
இறைவ னாரின் திருக்குறளிலே ஒருசொல்



இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ
இயம்பிக் காட்ட மாட்டாயா? 
பாரதிதாசன் 







Monday, 2 December 2013

ச. சசிமா .....


°சச்சின்
அளவுக்கு அதிகமாக புகழப்பட்ட சச்சின் டெண்டுல்கார் இனிமேல் விளையாட மாட்டாரே என்கிற கவலை எனக்கு பல வருடங்களுக்கு முன்பே வந்து விட்டது. இது என் தொண்டைக் குழியை இழுக்க இதைத் தாங்க முடியாமல் கிரிக்கெட் பார்ப்பதை விட்டு பல வருடங்களாகி விட்டது. (அப்பவே அவர் ரிட்டயர்டு ஆகியிருக்கனுமான்னு கேள்வி கேக்கப்புடாது).

அவரின் இறுதி விளையாட்டைக் கூட செய்தியாய்த்தான் படித்தேன். ஏதாவது ஒரு ஹீரோ பின்னால் போவதை நம்மால் தடுக்க முடியவில்லை. விடயம் அதுவல்ல.
இந்தியப் பத்திரிக்கைகள் போலவே பாக்கிஸ்தானியப் பத்திரிக்கைகளும் சச்சினை மிகவும் புகழ்ந்து எழுதியதைப் பார்த்த தாலிபான் - இனிமேல் சச்சினைப் புகழ்ந்து எழுதவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது. எனக்கென்ன பயமா இருக்குன்னா நானும் தான் இந்தியப் பத்திரிக்கைகள் அளவுக்கு அதிகமாக சச்சினைப் புகழ்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். என்னையும் தலிபான் என்று நினைத்து விடுவார்களோ?

° சங்கரராமன்
சங்கரராமன் கொலைவழக்கில் சங்கராச்சாரியார் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். ஏறக்குறைய எண்பத்தி ஒரு நபர்கள் பிறழ் சாட்சிகளாக மாறி, ஆவணங்கள் மறைக்கப்பட்டு (அப்படி என்று சில பத்திரிக்கைகள் சொல்லுகின்றன) அனைவரும் விடுதலை செய்யப் பட்டிருக்கின்றனர். பிறழ் சாட்சிகளாவது குற்றம் என்றே இதுவரை நான் நினைத்திருந்தேன். ஆனால் தனியாகவோ ஒட்டு மொத்தமாகவோ அந்தர் பல்டி அடிப்பதெல்லாம் குற்றம் இல்லை என்று இப்போதுதான் தெரிந்திருக்கிறது.  அவர்கள் எல்லாம், உயிருக்குப் பயந்தோ, பணம் விரும்பியோ தங்கள் சாட்சியங்களை மாற்றிக் கொள்ள வில்லை. உண்மையை மட்டுமே சொன்னார்கள் என்றும், அவர்கள் அனைவருக்கும், மறதி இருப்பது உண்மை என்றும், தமிழக மக்கள் அனைவரையும் போல, நான் நம்புகிறேன்.

எண்பதுக்கும் மேற்பட்டோர் மாற்றி சொல்லி பலரை விடுதலை செய்தததும், ஒரு அதிகாரி வாக்கு மூலத்தை மாற்றி எழுதி பல பேர் மரண தண்டனைக் கைதிகளாக இருப்பதும் இந்திய நீதித் துறைக்கு அழகல்ல. பேரறிவாளன் உட்பட பலர் இன்னும் உள்ளே இருப்பது நமக்குத் தான் அவமானம். 

ஒன்று இப்போதும் புரிகிறது. அரசும், அதிகாரமும், சேர்ந்தால் எதையும் செய்ய முடியும் என்பதற்கு இவை இரண்டே போதுமானது.


° சிக்கியது - (பணமல்ல) 
ஒவ்வொரு ஆண்டும்  - அதாவது ஓர் ஆண்டு மட்டும், ஆர்.டி.ஓ சோதனைகளில் 22,000 கோடி லஞ்சம் பெறப் பட்டிருக்கிறது என்று ஒரு நிறுவனம் ஓட்டுனர்களிடமிருந்து பெறப்பட்ட ஓர்  ஆய்வு தெரிவிக்கிறதாம். நான் சொல்லலை டைம்ஸ் ஒப் இந்தியா சொல்லுகிறது. 

"சந்தர்ப்ப சாட்சியங்களை வைத்துப் பார்க்கும் போது, சாட்சிகளான ஓட்டுனர்கள் முன்னுக்குப் பின் முரணாக பிறழ்வதை கருத்தில் கொண்டு அனைத்து அதிகாரிகளையும் விடுதலை செய்கிறோம்." 

° மங்கள்யான் 
மங்கள்யான் - மங்களகரமான பெயர். [எனக்கென்னமோ மங்கள் அண்ட் மங்கல் மெட்டல் மார்ட் என்கிற வானொலி விளம்பரம்தான் நினைவுக்கு வருகிறது.] 
மங்கள்யான் - செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பியிருக்கும் விண்கலம். செப்டம்பர் மாதம் 2014 ஆம் ஆண்டு அங்கு சென்று சேரும் என்று சொல்லப் படுகிறது. தொழில் நுட்ப வளர்ச்சியில் தொடர்ந்து இந்தியா காலடி எடுத்து வைப்பது மகிழ்ச்சியே. அதுவெல்லாம் கூடாது என்று கோபித்துக் கொள்ள நாம் யார்? சொன்னால் நாம் பிற்போக்கு வாதி என்று சொல்வதற்கு விளக்கமாத்துக் கட்டையை  தூக்கிக் கொண்டு ஆயிரக் கணக்கில் ஓடிவருவார்கள்.  RTO காரர்களிடம் லஞ்சத்தில் சிக்கிய பணத்தை மீட்டாலே வருடத்திற்கு 42 விண்கலங்களை இந்தியா அனுப்ப முடியும். அதனால அதெல்லாம் கேட்கலை.
ஆளே இல்லாத செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்புறது போல அது போல ஒரே ஒரு போட் இந்திய இலங்கை கடற்பரப்புக்கு அனுப்புங்க. அதைத்தான் கேட்குறோம். இன்னைக்கு நினச்சு உடனே அனுப்பினா அது இன்னைக்கே போய் சேரும். செப்டம்பர் 2014 வரை காத்துக்குட்டு இருக்க வேண்டியது இல்லை பாருங்க. அதை விட்டுட்டு இலங்கை கடற்படையினருக்கு பயிற்சி அளிக்கத் தயார் என்று சொல்றீங்களே என்ன நியாயம்?

°°°°°°°°°°​​


அடுத்த பதிவு 
தமிழ் கூறும் நல்லுலகில் 
பின்நவீனத்துவக் கூறுகளை உள்ளடக்கி 
கதை கட்டுரை எழுதும் 
தமிழ் புத்திரன் அ. பிரபாகரனின் - 
(கை) எழுத்தும் நானும் 
என்கிற கட்டுரை... 
எதிர் நீச்சல் என்கிற படத்தின் கரு 
எங்கிருந்து கிடைத்தது என்பதை 
விவரிக்கும் கட்டுரை.

(விளம்பரம்)
இதை தினமணி, தினகரன் 
மற்றும் அனைத்து நாளிதழிலும் வரும் 
விளம்பரமாக நினைத்துக்கொள்ளவும்.
°°°°°°°°°°

Sunday, 1 September 2013

என்ன ஆச்சு? – (நானும் பிரதமரும்) - நடுவுல கொஞ்சம் ...

என்ன ஆச்சு? டிரெயின விட்டு இறங்குனேன்... வேகமா நடந்து ஸ்டேஷனின் வாசலுக்கு வந்தேன்.. எதுத்தாப்ல இருந்த படகைப் பார்த்துட்டே படில இறங்குனேன்... ஓ மூணாவது படில செருப்பு வழக்கி விட்டு தலை கீழா விழுந்து படில உருண்டேனா... அப்ப இங்க அடிபட்டிருக்கும்... அங்கதான் ...-

- என்று நான் கீழே விழுந்த பிறகு புலம்ப ஆரம்பித்திருந்தால் நான் கீழே விழுந்ததை வேடிக்கை பார்த்த யாருக்கும் ஒன்றும் புரிந்திருக்காது... ஏன்னா அவங்க யாருக்கும் தமிழ் தெரியாது. மொழி தெரியாத நாட்டுல விழுந்தா இதுதான் சிக்கல்... புலம்பக் கூட முடியாது. யாரு செஞ்ச புண்ணியமோ தலைல அடிபடாம இருந்ததால புலம்பா தப்பிச்சேன்  (ஆனா பாவம் நீங்க மாட்டிக்கிட்டிங்க – என்ன செய்யுறது?).
நானும் வருஷத்துக்கு ஒருமுறை விழுகிறதை வழக்கமா வச்சிக்கிட்டு இருக்கேன். போன வருஷம் ஜூன் மாதம் இப்படித்தான் கி. க. சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் மதிய உணவு சாப்பிட்டு வெளியே வரும்போது படி முடிஞ்சிறோச்சுன்னு நினைச்சு காலை வைக்க நெஞ்சு தெறிக்க விழுந்தேன் (கி. க. சாலை அப்படின்ன உடனே உங்கள்ள சில பேர் மது உணவு சாப்பிட்டு வெளியே வரும்போது விழுந்தேன்னு படிக்க வாய்ப்பு உண்டு அதனால ரிப்பீட்டு மதிய உணவு) – ஆக மொத்தம் அன்னைக்கு குப்புற விழுந்தேன்... இப்ப மல்லாக்க...
கமல் சொன்ன மாதிரி அது என்ன மாயமோ தெரியல எனக்கு ஒண்ணுமே ஆகிறதில்லை... ... ....

ஏதோ நான் மட்டும்தான் இப்படி விழுந்து அடி வாங்கி ரொம்ப தெம்பா இருக்கிறதா எனக்கு ஒரு திமிரு வந்த நிமிஷமே நம்ம பிரதமரை நினைச்ச உடனே எல்லாம் மறந்து போச்சு... நானெல்லாம் ஒண்ணுமே இல்லைன்னு ஆகிப் போச்சு.

அவர் ஒவ்வொரு கூட்டத் தொடருக்கும் முன்னாடி ஒவ்வொரு முறையும் அவரை யார் கவிழ்த்து விழ வச்சாலும், அவரே வழுக்கி விழுந்தாலும்  ஒண்ணுமே ஆக மாட்டேங்குது - வெட்கமே இல்லாமல் நான் விழுவதுமாதிரி  அதை பெருமையா வேற சொல்றமாதிரி அவரும் தலையில இரண்டு கைய வச்சுகிட்டு ... 
“என்ன ஆச்சு? 2 G ஆ  ... ஏலம் விட்டாங்களா... ஆயிரக்கணக்கான கோடிகளை ஏப்பம் விட்டாங்களா... நான்தான் பிரதமாரா நான்தான் பேசணுமா ஓ கே ஓ கே.. அது ஊழல் இல்லை நாட்டுக்கு நட்டம் மட்டும்தான் சொன்னா  ... எதிர் கட்சிக் காரங்க இரண்டு நாள் சத்தம் போடுவாங்க... தூங்கி எந்திரிச்சா அதுக்கப்புறம் சரியாயிரும் ...”

அடுத்த கூட்டத் தொடர் - “என்ன ஆச்சு? நிலக்கரி ஊழலா? பதுக்கிட்டாங்களா. நான்தான் பிரதமாரா நான்தான் பேசணுமா... ஓகே ஓகே... எதிர் கட்சிக் காரங்க இரண்டு நாள் சத்தம் போடுவாங்க அதுக்கப்புறம் சரியாயிரும்.”

என்ன ஆச்சு? பண மதிப்பு சரிஞ்சு போச்சா? ரொம்பக் கேவலமா போச்சா? ஓகே ஓகே.. நான்தான் பிரதமாரா! நான்தான் பேசணுமா? எதிர்கட்சிகாரங்க கூப்பாடு போடுறதுனாலதான் பொருளாதார சீர்திருத்தம் கொண்டு வர முடியலைன்னு சொன்னா இரண்டு நாள்ல சரியாயிரும்... ... என்ன ஆச்சு பணவீக்கம் அதிகமா போச்சா??? ஓகே ஓகே  - அப்பத்தான் இறக்குமதி கொறஞ்சு ஏற்றுமதி அதிகமாகுமுன்னு சொன்னா எல்லாம் சரியாயிரும்... 

அடங்கொக்க மக்கா - அவரும் ஒவ்வொரு கூட்டத் தொடருக்கும் முன்னாடி விழுகிறாரு.. ஆனா என்ன மாயமோ தெரியலை நாலு வருஷத்துக்கும் மேல ஆகிப் போச்சு அவருக்கு மட்டும் ஒண்ணுமே ஆகிறதில்லை...

ஆனா ஒண்ணுங்க - விழுந்தவனுக்குதாங்க வலி தெரியும்... நாங்க கடைசியில இப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கு... நாங்களும் எவ்வளவு நாளைக்குத்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது...
எது எப்படி ஆனாலும் எத்தனை முறை விழுந்தாலும் அவருக்கு ஒன்னும் ஆகாது... ஏன்னா ரெண்டு நாள் ஆனா நாமதான் எல்லாத்தையும் மறந்து போயிருவோம்...

ஆனா நமக்கு அப்படியா நமக்கு ஏதாவது ஆயிப்போனா என்னையே மொத்தமா மறந்துருவாங்க. அதுனால நான் முடிவு பண்ணிட்டேன். இனி நான் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் ஒன்ற டன் வெயிட் இருக்கும்... அப்பதானே விழாம இருக்க முடியும். ஒருநாளைப் போல எல்லா நாளும் இருக்காதில்லை...

Sunday, 19 May 2013

ஐ. பி. எல் ஸ்பெஷல்


  • இருபது ஓவர் மாட்சில் ஒரு பாலைக் கூட அடிக்காமல் விட முடியாது. அப்படி ஏதாவது ஒரு பாலை மட்டையாளர் அடிக்காமல் விட்டால் --- அப்போது சப்பாத்தி ஷாட் ஸ்பெஷலிஸ்ட் ரவி சாஸ்த்ரி சொல்லும் காமெண்டரி உங்கள் காதில் தேனாக வந்து விழும்.  அதுவும் சாஸ்த்ரி வீட்டில் கிரிக்கெட் ரசிகர்கள் கல்லெறிந்த செய்தி தெரிந்தவர்களுக்கு மட்டும். எப்படித்தான் பழசெல்லாம் மறந்துட்டுப் பேசுறாங்களோ?
  • ஸ்ரீஷாந்த் பஜ்ஜு விடம் அடி வாங்கிய வீரன். பல சமயங்களில் அழுது அழுதே கொஞ்சம் அனுதாபம் சம்பாரித்துக் கொண்ட இந்தப் பையன் கொஞ்சம் அழுகுணி ஆட்டம் ஆடி சம்பாரிக்கலாம் என்று பார்த்திருக்கிறார். இந்தக் குற்றத்துக்கான தண்டனைதான் ஹர்பஜன் அவனை அறைந்தது. இதற்கு மேல் அவருக்கு எதுவும் தண்டனை கிடைக்காது. மிஞ்சிப் போனால் விளையாடத் தடை சொல்வார்கள். அதனாலென்ன இருக்கவே இருக்கிறது காங்கிரஸ் --- அதில் சேர்ந்து ஒரு எம். பி. ஆகிவிட மாட்டாரா என்ன?
  • விஜய்  மால்யா எம். பி. தனது கிங் பிஷேர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு அதன் பணியாளர்களுக்கு இன்னும் சம்பளப் பாக்கி செலுத்தவில்லை. ... ஏறக்குறைய 6,500 கோடி கடன்களை வசூல் செய்யும் வழி தெரியாமல் இருக்கின்றன வங்கிகள். மல்யாவுக்கு சொத்து மதிப்பி ஏறக்குறைய 40, 000 கோடிகளுக்கு மேல் என்று சொல்கிறார்கள். இதெல்லாம் தெரிந்தும், அரசும் ஒன்னும் செய்ய முடியவில்லை, வங்கிகளும் ஒன்றும் செய்ய முடியவில்லை, ஊழியர்களும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் அவரும் அவரது புதல்வரும் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள் - ஐ. பி. எல்லில். 
  • வங்கிகள் என்றவுடன் நினைவுக்கு வருவது எஸ் பேங்க் மாக்சிமம். அவர்கள் ஒரு மேட்சுக்கு ஒரு லட்சம் என்று ஏறக்குறைய 77 போட்டிகள்.... எப்படி ஒரு வங்கிக்கு இவ்வளவு பணம் இந்த ஒரு மாத விளம்பரத்தில் மட்டும் செலவு செய்ய முடியும். பெப்சி ... வோடபோன் ... ஸ்டார் ப்ளஸ் ... விளம்பரத்திற்கு மட்டும் இவ்வளவு பணம் என்றால், அவர்களின் இலாபம் எவ்வளவு.... வி ஆர் ஸ்லேவ்ஸ் ஆப் தி அட்வேர்டைஸ்மென்ட்ஸ்... 
  • நடு கிரவுண்டில் சண்டையிட்டுக் கொண்ட கம்பீரும் கோலியும் அடுத்த கட்டத்திற்கு தேர்வாகவில்லை என்பது சரியாகவே தோன்றியது. ஒருவேளை கொல்கொத்தா வெற்றி பெற்றால் பெங்களூரு அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்று நினைத்தாரோ கம்பீர். சன்ரைசர்ஸ் வெற்றி பெற்று கோலிக்கு கிலி உண்டாக்கி விட்டார்கள். வருடத்திற்கு என்பது கோடிகள்  என்று ஐந்து வருடத்திற்கு ஹைதராபாத்தை குத்தகைக்கு எடுத்திருக்கிறது சண் டி. வி. இறுதி மாட்சில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கும் மும்பைக்கும் இடையே இருக்கலாம்... 
  • லலித் மோடி லலித் மோடி என்று  ஒருவர் பிக்சிங் செய்து இந்த ஐ. பி. எல்லை மிகவும் பிரபலப் படுத்தியவர்.... அதனால் ஆயிரக்கணக்கான கோடிகள் லவுட்டியவர்... இன்னமும் அவருக்கே என்ன ஆச்சுன்னு தெரியலை... ஆனா ஏன் ஸ்ரீ சாந்த் கேசுல டெல்லி போலிஸ் இவ்வளவு அக்கறை காட்டுதுன்னு தெரியலை... வேற ஏதாவது ரேப் கேசு வந்து அதை மறைக்க இதைச் செய்யுறாங்களோ அல்லது இறுதிப் போட்டியில் நடக்க இருக்கும் பிக்சிங்கை மறைக்க முன்பே நடவடிக்கை என்ற பெயரில் ரசிகர்களை இன்னமும் உண்மையிலேயே உண்மையான மாட்ச்   நடக்கும் என்று நம்ப வைப்பதற்கா? 

Sunday, 28 April 2013

சொர்க்கமேன்னாலும் நம்மூரு போல வருமா?


  • சிறைவாசம் செல்வதற்கு ஏற்கனவே நான்கு வார அவகாசங்களை வழங்கியிருந்த நீதிமன்றம் இப்போது மேலும் நான்கு வாரங்களை உச்ச நீதிமன்றம் சஞ்சய் தத்துக்கு வழங்கியிருக்கிறது. ரூ. 278 கோடிகள் மதிப்பிலான மீதியிருக்கிற படங்களை முடித்துக் கொடுப்பதற்காக 'மனிதாபிமான' அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கிறதாம்.
    • மனிதாபிமானம் என்பதற்கான புதிய விளக்கம். இதுபோல பல வார்த்தைகளுக்கு புதிய விளக்கம் கொடுக்கத் தயாராய் இருக்கிறோம் என்று அறிவிப்புதான் இது.
  • டெல்லியில் ஐந்து வயதுப் பெண் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப் பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு ரூ. 2000 கொடுத்து வழக்கு தொடுக்க வேண்டாம் என்று கேட்டிருக்கிறார்கள்.
    • ?????????????
  • நரேந்திர மோடியை விமர்சித்த பிறகு நித்திஷ் குமார் அரசிற்கு, மத்திய அரசு 12,000 கோடி பின்தங்கிய பகுதிகளுக்கு உதவும் நிதி வழங்க முடிவு செய்திருக்கிறது. நாட்டின் நலன் மட்டுமே கருதி இந்த முடிவை உண்மைக்கும் நீதிக்கும் சொந்தக் காரரான காங்கிரஸ் கட்சி எடுத்திருக்கிறது.
    • ஸ்டாலின் வீட்டில் உண்மையாய் ரெய்டு நடத்திய மாதிரி.........
  • 29 வயதான கிருஷ்ணா என்கிற காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் [கர்நாடகா] தனது சொத்து மதிப்பு ரூ. 910 கோடிகள் என்று   தெரிவித்திருக்கிறார். 
    • ஏழைகளின் நண்பன் காங்கிரஸ் என்று உலகுக்கு உணர்த்துவதற்காகவும், ஏழை இளைஞர்களுக்கு மிகப் பெரிய க்ரியா ஊக்கியாக இருப்பதும் தான் அவரது வாழ்க்கை இலட்சியமாம்.
  • பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப் படுவதற்கு பெண்களின் பார்வையே காரணம் என்று சத்யதேவ் கட்டாரே என்கிற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவர் [மத்தியப் பிரதேசம்] சொல்லியிருக்கிறார்.  
    • எல்லாப் பெண்களின் கண்களையும் குருடாக்க வேண்டும் என்றுதான் சொல்ல நினைத்தாராம்...   என்று விட்டு விட்டாராம்.
  • பாலியல் பலாத்காரம் டெல்லியில் மட்டுமா நடக்கிறது .... எல்லா இடங்கலிலும் தான்... பாலியல் பலாத்காரத்தை கட்டுப் படுத்துவதுதான் உள்துறை அமைச்சகத்தின் வேலையா என்று அறிவுப் பூர்வமாகக் கேட்டிருக்கிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த [உத்திரப் பிரதேசம்] ஒரு அமைச்சர் கூறியிருக்கிறார். 
    • கடற்படைக்கு மீனவர்களைக் காப்பதுதான் வேலையா? உள்துறைக்கு மக்களைக் காப்பதுதான் வேலையா... நிதி அமைச்சகத்துக்கு விலைவாசியைக் கட்டுப்படுத்துவதான் வேலையா ... சீனர்கள் ஊடுருவாமல் தடுப்பதுதான் இராணுவத்தின் வேலையா .... என்றெல்லாம் கேட்க நினைத்தாராம்...
  • தெற்கே தினம் தினம் தமிழக மீனவர்களைக் கொள்ளும் இலங்கையிடம் அமைதி... பத்தொன்பது கிலோ மீட்டர் வரை ஊடுருவிய சீனர்களிடம் பேச்சு வார்த்தை ... பாலியல் தீவிரவாதச் செயல்களுக்கு எதிராக நீதி கேட்ட பெண்ணிடம் மட்டும் 'அறை' --- 
    • என்ன வீரம் சார்... என்ன கொடுமை சார்?


Tuesday, 19 February 2013

எல்லாம் மாத்தமாட்டிக்ஸ்


நீங்களும் வெல்லாம் ஒரு கோடி ப்ரோமோ பார்த்ததிலிருந்து எல்லாமே மாத்தமாட்டிக்ஸ் மனசுல ஓடிக்கிட்டே இருக்கு. அதில் சில:

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தேர்தல்
கரண்ட் கட் + தமிழகம் + தேர்தல்      = தி. மு. க. தோல்வி  
பெட்ரோல்  + இந்தியா + தேர்தல்       = காங்கிரஸ் தோல்வி  
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஊழல்
12 ஹெலிகாப்டர்                       = 3600 கோடி
10 சதவீதக் கமிஷன்           = 360 கோடி
1அணு உலை                           = 16,000 கோடி
10 சதவீதக் கமிஷன்                         = 1600?

கமிஷன் இல்லாமல் எதுவும் நகராது...

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
திரைப்படம்
கடல்           = அலைகள் ஓய்வதில்லை இரண்டாம் பாகம் + மின்சாரக்      கனவு இரண்டாம் பாகம்       
விளக்கம்

கார்த்திக் + ராதா             = அலைகள் ஓய்வதில்லை
கார்த்திக் மகன் + ராதா மகள் = கடல்

காதலை சேர்த்து வைத்து பின் சாமியாராகும் அரவிந்த்சாமி
= மின்சாரக் கனவு
சாமியாரான பின் காதலை சேர்த்து வைக்கும் அரவிந்த்சாமி 
= கடல்
ஆக

மனிரத்னம்   = பாரதிராஜா + ராஜீவ் மேனன்

கூட்டிக் கழிச்சுப் பாருங்க கணக்கு சரியா வரும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தொலைக்காட்சி
ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்ப ஆறு ரூபாய்
ஒருநாளைக்கு ஒரு லட்சம் எஸ். எம்.எஸ் அனுப்பினால் 
= ஆறு லட்சம் ரூபாய்.
பதினைந்து நாளைக்கு பதினைந்து லட்சம் எஸ். எம்.எஸ் 
= தொண்ணூறு லட்சம்
ஆக

ப்ரோக்ராம் பெயர் 
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி இல்லை
நீங்களும் அனுப்பலாம் ஒரு கோடி
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++







Friday, 10 August 2012

அன்னா ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும்



அன்னா பற்றிய தொடர் செய்திகளைப் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இன்னும் செய்திகள் வந்த வண்ணம்தான் இருக்கின்றன. மேலெழுந்த வாரியாக படிக்கிற செய்திகள் நம்மையும் உள்ளே இழுக்கின்றன. ஆனால் நடந்துகொண்டிருக்கும் விவாதத்தின் கட்டமைவு பற்றிய சில கேள்விகளை இக்கட்டுரை முன்வைக்கிறது. 
ஏன் அன்னாவை எதிர்க்கும் அருந்ததிராயைக் குறி வைக்கிறார்கள் ஆனால் சோ - வை விட்டு விடுகிறார்கள்?

  • ஆதரவாளர்கள்    


அன்னா ஆதரவாளர்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம் [இன்னும் நுணுக்கமாகப் போனால் இன்னும் நிறைய என்றுதான் நான் கருதுகிறேன்]. 

முதல் வகையில் குரல் கொடுப்பவர்கள் அன்னாவோடு ஒட்டி நின்று ஊழல் ஒழிய வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தோடு ஒன்று சேர்ந்தவர்கள். அதனால் அன்னா என்ன சொன்னாலும் சரி என்று சொல்லுகிறவர்கள். அதனாலேயே அவர் முற்றிலுமாகக் காந்தியவாதி என்பதை என்பிப்பதற்காகவே முழுவதும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்கள், பின்பற்றுபவர்கள். இதில் சிலர் அறிவு ஜீவிகள். பெரும்பான்மையானவர்கள் சாதாரண மக்கள், மற்றும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்கிற இளைஞர்கள்.
 
ஆதரவாளர்களில் மற்றொரு வகை ஊழலுக்கு எதிர்ப்பு என்பது சரியானதுதான்; அன்னாவைப் பின்பற்றுவது அவசியம்தான் என்பதோடு, அதிலும் உள்ள சிக்கல்கள் களையப்படவேண்டும் என்று நினைப்பவர்கள். அது மட்டுமல்லாமல் ஊழல் என்பது மட்டுமே இந்தியாவின் முதன்மையான பிரச்சனை அல்ல; மாறாக அதுவும் ஒரு பிரச்சனை என்று நினைப்பவர்கள். இதில் பெரும்பான்மையானவர்கள் வலைப்பூக்களில் எழுதுபவர்கள் என்றே நான் கருதுகிறேன். பிரச்சனை என்னவென்றால் தள்ளி நின்று அண்ணாவை ஆதரிக்கும் இந்த வகை ஆதரவாளர்களையும் அன்னா எதிர்ப்பாளர்களாகவே முதல் வகை ஆதரவாளர்கள் கருதுவதுதான். 

  • எதிர்ப்பாளர்கள் 

ஏன் இந்தச் சிக்கல்? இதைப் புரிந்து கொள்ள அன்னா எதிர்ப்பாளர்களையும் இரண்டு விதமாகப் பிரிக்கலாம். கொள்கை பிடிக்காததால் அன்னாவை எதிர்ப்பவர்கள் முதல் வகை. அவர் காங்கிரசின் கைக்கூலியோ என்பதனால் பிடிக்காமல் போனவர்கள் இரண்டாம் வகை. 

முதல் வகையில், அருந்ததிராய், அருணா ராய் போன்றவர்களைக் குறிப்பிடலாம். இரண்டாவது வகை வெறுப்பாளர்கள் வரிசையில் ‘சோ’ போன்றவரைச் சொல்லலாம். குஜராத் முதல்வரைப் பற்றித் தவறாகச் சொன்ன ஒரே காரணத்திற்காக அவரை இவருக்குப் பிடிக்காமல் போய் விட்டது என்றே கருதுகிறேன். 

இதில் முதல் வகை எதிர்ப்பாளர்கள் அவர்களுடைய கருத்துக்களுக்காக கவனிக்கப்பட வேண்டியவர்கள் - மிகவும் கவனிக்கப்பட வேண்டியவர்கள். அதேபோல இரண்டாம் வகை வெறுப்பாளர்கள் இன்னும் அதிகமாகவே கவனிக்கப் பட வேண்டியவர்கள். அண்ணாவோடு ஒட்டி நிற்கும் ஆதரவாளர்கள் தள்ளி நிற்பவர்களையும் எதிர்த்து நிற்பவர்களை மட்டுமே கவனித்து இந்த இரண்டாம் வகை வெறுப்பாளர்களை /எதிர்ப்பாளர்களைப் பற்றி அதிக அக்கறையோ அல்லது அவர்களை பெரிய எதிரியாகப் பார்ப்பதை விடுத்து அருந்ததிராயை மட்டுமே பிரதானப்படுத்துகிறார்கள். இதில் எந்த வித சிக்கலுமின்றி ‘சோ’ வகையறாக்கள் தப்பித்துக் கொள்கிறார்கள் [அல்லது தப்பிக்க ஆதரவாளர் அறிவு ஜீவிகள் உதவுகிறார்களா?]. 

அருந்ததி ராய் கேட்கிற கேள்விகள் நியாயமானவை என்பதை எள்ளளவும் புரிந்து கொள்ள மனமின்றி அன்னாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை நியாயப்படுத்துகிறார்கள். இரண்டாவது சுதந்திரப் போர் என்பது இந்தியாவிற்குள் நடக்கும் முதல் சுதந்திரப் போர்தான் – அது அரசியல் வாதிகளுக்கு எதிராக நடத்தப்பட வேண்டுமா அல்லது சாதிய / இந்துத்துவத்துக்கு எதிராக நடத்தப்பட வேண்டுமா என்பதிலும், அல்லது பழங்குடியினரின் வாழ்க்கையைக் காப்பாற்றுவதற்காக நடத்தப்பட வேண்டுமா என்கிற கேள்விக்கும் பதில் இல்லாமல் இவர்களை அன்னாவின் மீதும் காந்தியத்தின் மீதும் அவதூறு செய்வதாக அவதூறு செய்கிறார்கள் முதல் வகை ஆதரவாளர்கள். இந்தச் சிக்கலில் அன்னா ஆதரவாளர்களில் இரண்டாவது வகையாளர்கள் அருந்ததிராயின் கேள்விகளோடு இன்னும் பல கேள்விகளையும் சிக்கல்களையும் முன்னிறுத்துவதனால், அன்னா ஆதரவாளர்களில் இரண்டாம் வகையும் அன்னாவின் எதிரிகளாகக் கட்டமைக்கப் படுகிறார்கள்.

இதில்தான் அன்னா ஆதரவாள அறிவுஜீவிகள், இரண்டாம்வகை ஆதரவாளர்கள் மீதும், முதல் வகை எதிர்ப்பாளர்கள் மீதும் வெறியோடு இருக்கும் சூழலில் ‘சோ’ போன்றவர்கள் எளிதாகத் தப்பித்துக் கொள்ளுகிறார்கள். 

  • வேண்டுகோள் 


எனவே அன்னாவை கொள்கையளவில் எதிர்க்கும் அருந்ததிராய் போன்றோரை கொடூரமானவராக சித்தரித்து, இந்துத்துவக் கொள்கை வெறியில் எதிர்க்கும் ‘சோ’ வை எந்த விதச் சிக்கலுமின்றி தப்பிக்க உதவும் முதல் வகை ஆதரவாளர்களே கொஞ்சம் விழித்தெழுங்கள் என்பதுதான் எனது வேண்டுகோள். 

இன்னும் ஒரு கோணத்தில் பார்த்தால் இந்த அறிவு ஜீவிகள் ஏற்கனவே விழித்து எழுந்து விட்டார்களோ என்று தோன்றுகிறது. முதல்வகை அன்னா ஆதரவாளர்களும், இந்தியா இந்து என்கிற போர்வையில் மீண்டும் சாதியக் கட்டுமான மேலாதிக்கத்தை விதைக்க இந்த ஊழல் போராட்டத்தை ஆதரித்து சோ எதிர்ப்பின் வழியாய்ச் சாதிக்க நினைப்பதை இவர்கள் ஆதரவின் வழியாய்ச் சாதிக்க நினைக்கிறார்களோ என்றும் கருதுவதற்கான முகாந்திரம் இருக்கிறது. இருந்தாலும், இதில் சாதாரண மக்கள், பெருமளவில் எழுச்சியோடு கலந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் போது இந்த முகாந்திரம் களைந்து போகிறது. ஆனால் அறிவு ஜீவிகளின் அந்தக் கட்டமைவில்தான் இந்தச் சந்தேகம் வலுக்கிறது.


Saturday, 12 November 2011

கனிமொழி கற்றுக் கொடுக்கும் பாடம்

கனிமொழி மற்றும் ராசா அவர்கள் செய்தவை தண்டிக்கப் படவேண்டிய தவறு என்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு சரியான தண்டனை வழங்கப் படவேண்டும் என்பதே எனது கருத்து. இதை ஏற்றுக்கொண்டே பின்வரும் புனைக்கடிதத்தினைப் பதிவு செய்கிறேன்.

தனது சூழலில் இருந்து கனி மொழி சில கேள்விகளை முன்வைத்தால் எப்படி இருக்கும் என்பதற்கான விதத்தில் அவரே இனி எழுதுவது போன்று...

/////////////////////////////////////////////////////////////////////////////////////////

என் தந்தையின் உயிரினும் மேலான வாக்காளர்களே 
- மன்னிக்கவும் - 
மேலான வாசிப்பாளர்களே,
ஊழல் என்பது எல்லா மட்டங்களிலும் உண்டு - ....................ஆகிய என்னோடும் சேர்த்து. இந்த ஜாமீன் விஷயத்தில்,  எல்லாரும் திரு. ராசாவுக்குமான ஜாமினுக்கான முயற்சியிலும் சேர்ந்து இறங்கியிருந்தால் யாருக்கும் ஒன்றும் தெரிந்திருக்காது.

ஒருவேளை, அப்படி எனது கட்சிக் காரர்களும் குடும்பத்தினரும் செய்திருந்தால் இவர்கள் எல்லாரும் சேர்ந்ததுதான் ஊழல் செய்தார்கள் என்று எழுதிக் கொண்டிருப்பீர்கள். அப்படிச் செய்யாததால், மகளுக்காக உருகும் குடும்பத்தினர் என்று எழுதிக் கொண்டு இருக்கிறிர்கள்.

  • இன்னும் வழக்கு விசாரணை தொடங்கப் படாத சூழலில், இரு நூற்றிப் பத்துக் கோடி ரூபாய் கலைஞர் தொலைக் காட்சிக்காகக் கொடுக்கப் பட்ட வழக்கில், இன்னும் விசாரிக்கப் படாமலே எனக்கு ஜாமீன் பல முறை மறுக்கப் பட்டிருக்கிறது. மத்திய ஆட்சியில் இருக்கும் ஒரு பாராளு மன்ற உறுப்பினர் - வெறும்  இரு நூற்றிப் பத்து கோடிகளுக்காக எந்த விதமான முகாந்திரமும் இன்றி ஜாமீன் மறுக்கப் பட்டிருப்பது ஜீரணிக்கவே முடியவில்லை. ஆயிரம் கோடிகள், லட்சம் கோடிகள் ஊழல் என்கிற சூழலில் வெறும் இருநூற்றி பத்து கோடிகள் என்பதுதான் என்மீது சுமத்தப் பட்டிருக்கும் குற்றச் சாட்டு. இதற்கே எனக்கு ஜாமீன் மறுக்கப் பட்டிருக்கிறது.
  •  ஜாமீன் கொடுத்திருந்தாலும் நீதித் துறையின் மீது நீங்கள் எல்லாரும் சராமாரியாக சேர்ந்தே கேள்வி எழுப்பி இருப்பிர்கள். ஆனால் எனக்குள்ளே எழும் கேள்வி - இந்த ஜாமீன் மறுக்கப் பட்டிருப்பதால் எதுவும் நன்மை வந்திருக்கிறதா? அல்லது - கனிமொழி என்கிற ஒரு தனிநபருக்கு  ஜாமீன் வழங்கப் படாததில் மக்களுக்கு என்ன அவ்வளவு சந்தோசம்? நீங்கள் ஏன் இந்த மறுப்பில் இவ்வளவு மகிழ்ச்சியுறுகிறீர்கள் ? இதைத்தான் நீங்கள் எல்லாரும் கேட்டுக் கொள்ள வேண்டும்!
  •  ஊழலைப் பற்றி ஒன்றும் செய்ய முடியாத உங்களது இயலாமையின் வெளிப்பாடாகத் தான் அதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. அரசுக்கு பல கோடிகள் இழப்பு ஏற்படும் வகையில் ராசா செயல் பட்டிருக்கிறார்? சரி - அதனால் நாம் அவர் தண்டிக்கப் பட வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்க வேண்டியதுதான் - அதில் என் பங்கும் இருக்கும் பட்சத்தில் நானும் தண்டிக்கப் படவேண்டியவர்தான். ஆனால் இதே உறுதியை எல்லா ஊழல் வழக்குகளிலும் நீங்கள் காட்டுகிறீர்களா  ? அல்லது காட்டிக் கொண்டு இருக்கிறீர்களா?
  •  ஒட்டு மொத்தமாக இந்தியாவின் கவனமும் திசை திரும்பும் அந்த விளையாட்டுப் போட்டிகளை பணத்திற்காக பிக்ஸ் செய்தும் அதனால் ஆயிரக் கணக்கான கோடிகள் சுருட்டியிருக்கும் லலித் மோடி வழக்கில் நீங்கள் அக்கறை கொண்டிருக்கிறீர்களா?
  • அல்லது கிரிக்கெட் போர்ட் இந்தியாவின் பேரைத் தாங்கும் - ஆனால் அதை அரசின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரும் திட்டம் தவறு என்று குரல் கொடுக்கிற ஒரு மத்திய அமைச்சரின் கொள்கைகள் பற்றியும் தனியாக இருப்பதனால் அவர்கள் சுருட்டுகிற கோடிகள் பற்றி நீங்கள் அக்கறை கொண்டிருக்கிறீர்களா?
  • அல்லது சுவிஸ் வங்கியில் இருக்கும் கறுப்புப் பணத் தொகை மற்ற உலக நாடுகள் அங்கே வைத்திருக்கும் கறுப்புப் பணத்தை விட அதிகம் என்று இருக்கும் போது இந்திய அரசு அதில் அக்கறை காட்டத் தயங்குவது எது என்று கேள்வி எழுப்பியிருக்கிறீர்களா?
  • ஏறக்குறைய முப்பதாயிரம் கோடிகளுக்கு மேல் சுருட்டிய கல்மாடி வழக்கில் அக்கறை காட்டுகிறீர்களா? இல்லையெனில் ஏன்?

சரி - ராசா அந்த இழப்பு வராத வண்ணம் செயல் பட்டிருந்தால் -
செயல் பட்டிருந்தால் - நமது நாட்டில் விலைவாசி குறைந்திருக்குமா? அல்லது எல்லாரும் நியாய தர்மத்தோடு நடந்திருப்பார்களா? ஊழல் என்பதே இல்லாத நாடு என்பது நம் நாட்டில் ஒழிக்கப் பட்டிருக்குமா?

இருந்திருக்காது என்பதைத்தான்  வருத்தத்தோடு பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.
  • ஊழல் மிகுந்த நாடுகளில், ஊழலைப் பற்றி அதிகம் அக்கறைப் படுகிறோம் என்கிற விதத்தில் ஒரு சிலரை மட்டும் பலி கடா ஆக்குவதன் மூலம் நீங்கள் ஒட்டு மொத்தமாக மற்ற ஊழல்களைப் பற்றிய மௌனத்தை கடை பிடிக்க வைக்கப்படுவீர்கள்.
  • உங்களது ஒட்டுமொத்த கவனமும், ஊழலை ஒழிப்பதற்கான போராட்டம் முழுவதுமாக இந்த ஒரு வழக்கின் போக்கில் திசை திருப்பிவிடப்பட்டு, மற்ற ஊழல் பெருச்சாளிகள் அனைவரும் சுதந்திரமாக உலா வருவார்கள் அதை நீங்கள் அனுமதிப்பிர்கள் என்பதையும் நான் இந்த நேரத்தில் வருத்தத்தோடு பதிவு செய்து கொள்கிறேன்.
  • இந்த ஒரு வழக்கில் உங்கள் பார்வைகள் குவிந்திருக்கும் அந்த நேரத்தில், ஆயிரக்கணக்காண கோடிகள் இடப்பட்டிருக்கும் சுவிஸ் வங்கிக் கணக்கு பற்றி யாரும் குரல் எழுப்ப மாட்டிர்கள். அதுதானே அவர்களுக்கு வேண்டும். உண்மையிலேயே இந்த அரசோ பட்டியல் தன்னிடம் இருக்கும் போது அதை வெளியிடத் தயங்குவதும், அதைப் பற்றி மவுனம் சாதிப்பதும் எதற்காக? எங்களை மட்டும் இப்படி அலைக்கழிக்க வைத்து விட்டு யாரைக் காப்பாற்றுவதற்காக என்னைப் பலிகடாவாக ஆக்குகிறார்கள்?
அல்லது
  • ஏதோ இதில் மட்டும்தான் ஊழல் நடந்தது என்பது போலவும் வேறெங்குமே ஊழல் நடக்காதது போலவும் நீங்கள் நினைக்க வைக்கப் படுகிறிர்கள். எந்த அரசு அலுவலகத்தில் நீங்கள் நுழைந்தாலும், வேலை நடக்க வேண்டுமென்றால் சில நூறுகளைக் குறைந்த பட்சம் தர வேண்டியிருக்கிறது. அல்லது ஆயிரங்கள் என்றும், எங்களைப் போல உள்ளவர்களிடம் லட்சங்கள் என்றும் தள்ள வேண்டியிருக்கிறது. இல்லை என்றால் நீங்கள் தான் நடையாய் நடக்க வேண்டியிருக்கிறது. ஆனால் இந்த வழக்கில் இதை எல்லாம் மறந்து விடுகிறிர்கள்.
  • சிறு இடம் தொடங்கி பெரிய இடம் வரை ஊழல் கொழுத்துக் கொண்டிருக்கிறது. அதையும் கணக்கில் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நீங்கள் இருக்கிறிர்கள் - அதிலும் அக்கறை கொள்ளுங்கள். 
  • சிறு பியூன் தொடங்கி, பெரிய அமைச்சர்கள் வரை - எல்லா வற்றையும் முடக்கிப் போடுவதற்குப் பதில், ஒரு வழக்கை மட்டும் முடுக்கி விட்டு மற்ற எல்லாவற்றையும் மறைக்கும் முயற்சிக்கு எதிராகவும் நீங்கள் போராட வேண்டியிருக்கிறது.
  • இந்த வழக்கில் அக்கறை காட்டும் நீங்கள், ராம் தேவ் பல ஆயிரக்கணக்கில் சொத்து வைத்திருப்பதும், அவருடைய சொத்து விபரங்களையே முழுவதும் வெளியிடாமல் இருக்க, அவர் கருப்பு பணப் பட்டியலை வெளியிட நான் போராடுவேன் என்று இன்று வரை சொல்லுவதை நீங்கள் பேசாமல் ஏற்றுக் கொள்கிறீர்களா?
  • காங்கிரஸ் அவருக்கு எதிராக சொத்துப் பட்டியலை வெளியிட்டால் அது அவரை மிரட்டுகிறது என்று சொல்லுகிறீர்கள். ஆனால் ராசா மற்றும் கனி மொழி வழக்கில் மட்டும் காங்கிரஸ் மற்றும் ஊழல் ஒழிப்புத் துறை நேர்மையாக நடந்து கொண்டிருப்பதாக நீங்கள் நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். அது எப்படி இந்தக் காங்கிரஸ் எங்கள் வழக்கில் மட்டும் நேர்மையாக நடக்கும் என்பதை நீங்கள் நினைக்கலாம். ராஜீவ் வழக்கிலேயே நேர்மையாக இல்லாத அரசு எப்படி எங்கள் வழக்கில் நேர்மையாக நடப்பதாக நினைக்கிறிர்கள் எனபதுதான் மிகப் பெரிய வியப்பாக எனக்கு இருக்கிறது.
  • தன்னுடைய ஆதாயத்திற்காக காங்கிரசால் தொடரப் பட்ட வழக்கு இது- அதைவைத்து என்ன சாதிக்க முடியுமோ அதை இந்த அரசு சாதித்துக் கொண்டிருக்கிறது.

இதனால் நீங்கள் அறிய வேண்டியது என்னவென்றால் -
கனி மொழி ஜாமீன் மறுப்பு மட்டும் உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமென்றால் - நீங்கள் ஊழலின் ஆணி வேரையும், அரசுகள் ஊழல் ஒழிப்புத் துறையின் மீது செலுத்துகிற ஆதிக்கத்தையும் மறந்து போவீர்கள். உங்கள் வேலை நடக்க லஞ்சம் கொடுத்து ஊழலை வளர்த்து விட்டு - ஆயிரங்கள் சரி, கோடிகள் தான் ப்ராப்ளம் என்று சப்பைக் கட்டு கட்டிக் கொண்டு ஊழலுக்கு நீங்களும் துணை போவீர்கள்.

அடிப்படையில் எதுவும் மாறாமல் - இந்த வழக்கு மட்டும் ஊழலை ஒழித்து விட முடியாது.

  • இந்த வழக்கை ஊழல் ஒழிப்பின் தொடக்கம் என்று சொல்லப் படுகிற அளவுக்கு நேர்மையோடும், அரசின் குறுக்கீடு இன்றியும் நடப்பது போலத் தெரியாததனால் இதை அப்படியும் சொல்ல முடியாது.

  • அதனால் அதுவரை ஊழலின் ஒட்டு மொத்த உருவம் என்று என்னை முத்திரை குத்தி என் செய்திகளின் வெப்பத்தில் உங்கள் ஊழல் ஒழிப்பு எதிர்ப்பையும் சேர்த்துக் கடாசி விடுவீர்கள் - அடுத்த ஒரு உருவம் கிடைக்கும் வரை...
  • அடுத்த உருவம் தேடாமல் இப்போதே எல்லா ஊழலிலும் கவனம் செலுத்துங்கள்.
இப்படிக்கு,
ஒட்டு மொத்த ஊழலுக்கு எதிராக நீங்கள் போராடும் 
அந்த நாளில்தான் என்னைப் பற்றிய செய்திகள் மட்டும் 
இடத்தை அடைக்காமல் ஊழல்வாதிகள் அனைவரும் நாளிதழ்கள் 
மீடியாக்களை ஆக்கிரமித்துக் கொள்ளுவார்கள்.
அப்போதுதான் இது எவ்வளவு முக்கியமற்ற வழக்கு என்பதைப் 
புரிந்து கொள்வீர்கள்.

அந்த நாளை கனிவோடு நோக்கும் 

[..................................]

//////////////////////////////////////////////////////


கொசுறு:
கனிமொழி திகாரில் தியானத்தில் ஆர்வத்தோடு ஈடுபடுகிறார்.

.........


    Friday, 2 September 2011

    சிறு துளி - 02092011


    விஜய் தொலைக்காட்சியில் வரும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் - உலக அளவில்
      • உலகம் எவ்வளவு சின்னதுன்னு தெரியனும்னா அதில் திவ்யா 'இம்முறை உலக அளவில்' னு சொல்லுறப்ப அவங்க கையப் பாருங்க. உலகம் அவ்வளவு சின்னதான்னு தோணும். 
      • அதிலேயே - கோபிநாத் 'உலக அளவில்' னு சொல்லும்போது அந்தக் குரல் அழுத்தமும், கையைக் காட்டும் விதத்தையும் பார்த்தா உலக அவ்வளவு பெருசான்னு தோணும். 
    மரண தண்டனைக் குறைப்பு
      • முடியவே முடியாதுன்னு சொன்ன அம்மா, நீதிமன்றம் எட்டு வாரம் தடை விதித்த அந்த நேரத்துல தீர்மானம் நிறைவேற்றப் போய் - பாருக் அப்துல்லா நாங்களும் ஒரு தீர்மானம் நிறைவேற்ற முடியுமான்னு அப்சல் குருவுக்காக ன்னு ஒரு கேள்வியை கேட்குறாரு?
      • இந்தியா ரொம்பப் பெருசுன்னு நினைச்சேன். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எப்படி ஒன்றாய் இருக்கிறோம் பாருங்கள். - தேசிய நீரோட்டம். ஏற்கனவே தமிழக சபையின் தீர்மானம் இலங்கையினால் கேள்விக்குட்படுத்தப் பட்டது. உலகம் ரொம்பச் சின்னதுதானா? 
    பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்
      • சிறைப்பிடிக்கப்பட்ட தமிழர்கள் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இருப்பதால் அவர்கள் விடுதலைக்கு வழில்லாமல் செய்திருக்கிறார் இலங்கை அதிபர். 
      • இந்தத் தடுப்புச் சட்டம் - இந்தியா தொடங்கி இலங்கை வரை நீடிக்கிறது. உலகம் இதைவிடப் பெரிதல்லவா? 
    கேரளா மார்க்சியம்
      • அமெரிக்க அரசிடமிருந்து உதவி பெற மார்க்சியத் தலைவர்கள் எல்லாரும் ஆர்வம் காட்டியதை விக்கி லீக்ஸ் சொல்லியிருக்காம். இதுல என்ன தப்பு இருக்குன்னு அவர்கள் கேட்டார்களாம். ஆனால் அதுக்காக எங்கள் கொள்கையில் சமரசம் எதுவும் செய்து கொள்ள மாட்டோம் -னு சொல்லியிருக்காங்க. 
      • முதலாளித்துவப் பணம் வேணும் ஆனால் கொள்கையில் உறுதியாய் இருப்போம்னா... அமெரிக்கவரைக்கும் போகுது. 
    ஊழல் எதிர்ப்பு

      • அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாகவும், வன்முறையில் இங்கே இறங்கி ஊழலை எதிர்ப்போம் என்று சொன்னவரும், கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று குரல் கொடுத்தவருமான குரு பாபா ராம்தேவ் மீது கருப்பு பண வழக்கு தொடரப் பட்டிருக்கிறதே.
      • ஸ்காட்லாண்டுக்குப் பக்கத்தில் ஒரு குட்டித்தீவே அவருக்கு சொந்தமா இருக்காம்?பாருங்க திவ்யா சொல்றமாதிரி உலகம் ரொம்பச் சின்னதாத்தான் இருக்கு.

      • அன்னா ஹசாரே போராட்டத்துக்கு இவ்வளவு விரைவாக பதில் கிடைத்திருக்கிறதே.
     

        Monday, 22 August 2011

        அன்னா ஹசாரே மற்றும் அரசியல் வாதிகள்

        அன்னா ஹசாரே - இந்தியாமுழுவதும் உச்சரிக்கப்படும் மந்திரம். இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இவரைத் தவிர வேறு யாரும் நமது கண்ணுக்குத் தெரியப் போவது இல்லை.

        இந்தியா ஊழலற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்காது. ஊழல் பெருச்சாளிகளைத் தவிர எல்லாரும் அதை விரும்புவர். எனவே இப்போது நடந்து கொண்டிருக்கும் இந்த இரண்டாவது சுதந்திரப் போராட்டம் - ? பற்றி பெரிய அபிப்பிராயம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஊழலற்ற நாட்டிற்கான விதையை யார் விதைத்தால் என்ன? நாம் வேண்டும் என்று விரும்புவதை யாராவது ஒருவர் செய்யும் போது அவர்களுக்கு ஆதரவுக் கரம் கொடுக்க கை தானே எழுகிறது.
        அன்னா பற்றி முதலில் மீடியாக்கள் செய்தி கொடுத்த போது எனக்கு அப்படித் தான் தோன்றியது. இன்றும் ஒன்றும் பெரிதாய் மாற்றம் இல்லை. ஆனால் சில கேள்விகள் கூடச் சேர்ந்து கொண்டன. இனிமேல் எனக்குள்ளும் மாற்றம் வரலாம் -

        • ஜன் லோக்பால் தாக்கல் செய்யப் பட - ஏதோ காங்கிரஸ் கட்சி மட்டும் எதிர்ப்புத் தெரிவிப்பதாக ஒரு மாயை எல்லா இடத்திலயும் இருந்து எழுப்பப் படுகிறது. அவர்கள் இப்போது ஆட்சியில் இருப்பதால் இது தவிர்க்கப் பட முடியாது என்றாலும் எந்த அரசியல் கட்சியும் இதற்கு பெருத்த ஆதரவு தருவது போல இல்லை - பி . ஜே. பி. யும் பின் வாங்கிவிட்டது. இதுவரை மிகக் குறைந்த ஆண்டுகளே ஆட்சியில் இருந்த ஒரு கட்சியே இதற்கு ஆதரவு தராத போது இத்தனை ஆண்டுகள் பதிவியிலேயே ஊறித் திளைத்த ஒரு கட்சி எப்படி ஆதரவு தரும். எந்த அரசியல் வாதியும் இதற்கு ஆதரவு தர விரும்ப வில்லை. அதனால் அடிப்படையிலேயே நமது அரசியல் அமைப்பில் ஏதோ குறை இருக்கிறது.


        முதலில் பகடி -
        ஏன் இந்த அரசியல்வாதிகள் இதை எதிர்க்கிறார்கள்?
        அவர்களுக்கு நாட்டின் மீது உள்ள பற்றுதான். குழம்பாதீர்கள் -
        ஜன லோக்பால் நிறைவேறிவிட்டது என்று வைத்துக் கொள்வோம்.
        அரசியல் வாதிகளை விடுங்கள் - அது எல்லாரும் ஓட்டு மொத்தமாக எல்லா அரசியல் வாதிகளும் உள்ளே போக வேண்டியதுதான். ராசா வின் குற்றச் சாட்டை எடுத்துக் கொண்டால் பிரதமர் உட்பட எல்லாரும் உள்ளே  -
        அப்புறம் பழைய அரசு என்று பார்த்தாலும் - எல்லாக் கட்சியிலிருந்தும் உள்ளே போவார்கள்.
        இதில் அரசு அதிகாரிகள் - எந்த அரசு அலுவலராக இருந்தாலும் - ஒரு பக்கம் காசு வாங்காமல் எதையும் நகர்த்துவது இல்லை.
        "அன்னா லோக் பால் " சொல்லுவதுபடி பார்த்தால் எல்லா அரசு அலுவர்களும் - சிறு மட்டம் தொடங்கி பெரு மட்டம் வரை - எல்லாரும் ஊழல்வாதிகள்தான். ஏன்னா யாரு வேண்டுமானாலும் யாரைப் பற்றி வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம். அப்ப ஒட்டு மொத்தமாய் இரண்டு ஆண்டுகளுக்கு விசாரணை நடந்து தீர்ப்பு வழங்கப் படும். அப்படியெனில் - பால் நிறைவேறிய நாள் தொடங்கி வெறும் கைது படலம்தான்.
        அப்படிப் பார்த்தால் குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு - அப்புறம் தண்டனை கிடைக்கும் பட்சத்தில் சிறு பியூன் தொடங்கி -
        ஒவ்வொரு மட்டத்திலும் வெகு சிலர் தவிர -
        மேல்மட்டம் வரை எல்லாரும் உள்ளே போக வேண்டியதுதான். எல்லாரும் உள்ளே போகும் பட்சத்தில் நாட்டில் எதுவும் நடைபெறாது. அரசியல் வாதிகள் உள்ளே போனால் பரவாயில்லை.
        ஆனால் அரசு இயந்திரம் முழுவதுமாகப் பாதிக்கப் பட்டால் என்ன ஆவது - எது ஊழல் - பெரிய லெவல் மட்டும் இல்லை - சின்னதும்னு ஜன் லோக்பால் சொல்லுது. - அதில் லஞ்சம குறைந்த பட்சம் உள்ளே வரும் - நமக்கு வர வேண்டிய காசை ஒரு அரசு அலுவலர் தராமல் விட்டால் - அதை அவர் எடுத்துக் கொண்டால் - அல்லது ஒன்றைத் தருவதற்கு எதாவாது பதிலாகக் கேட்டால் - அது லஞ்சம் / ஊழல் -
        அப்படின்னா முதல்ல மக்கள் புகார் குடுப்பது [சென்னையில் பேருந்து கண்டக்டர்கள் மேலதான்] அவர்கள் தொடங்கி எல்லாரும் உள்ளே போயிட்டா எப்படிப் பஸ் ஓடும் - ஆட்டோக்கள் சொல்ல வேண்டாம் [அவர்கள் அரசு அலுவலர்கள் இல்லை]- அப்புறம் அலுவலகம் - அப்புறம் ஒன்னொன்னா மேல பொங்க - இப்படி எல்லாரும் உள்ள போயிட்டா நாட்டின் ஸ்திரத் தன்மை பாதிக்கப் படும்னுதான் -
        எல்லா அரசியல் வாதிகளும் ஜன் லோக் பாலை எதிர்க்கிறார்கள். இப்போது புரிகிறதா அவர்கள் நாட்டு பற்று....

        அப்புறம் மீடியா
        தாங்கள் ஒன்று நினைத்தால் எதையும் சாதித்து விட முடியும் என்பதற்கு இவர்கள் தான் - இது வரைக்கும் எத்தனை எத்தனையோ போராட்டங்கள் - நியாயமான போராட்டங்கள் - இவர்கள் நினைத்தால் சப்போர்ட் உண்டு இல்லையென்றால் ஒன்றும் இல்லை. முல்லைப் பெரியாறு அணை - பழங்குடியினர் போராட்டம் / நியாயமான போராட்டங்கள் பலவும் மறைக்கப் படுவதும் - தேவையான அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் - இதுதான் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்று சொல்வது வேதனைக்குரியதுன்னு ஒரு பத்திரிக்கயாளர் [Tehelka] சொல்லியிருக்கார். இணைப்பில் பாருங்க - [ஆங்கிலம்]

        http://www.youtube.com/watch?v=hYbhpbdkWhg

        • எந்த ஒரு தொழிலும் இப்போது நேர்மை இல்லை - அடிப்படை அரசியல் பொருளாதார மாற்றங்களில் நாம் கவனம் செலுத்தாமல் - மேலோட்டமாக - ஒரு நபரை முன்னிறுத்தி செயல்படுத்தப் படும் போராட்டம் - அதில் உள்ள நிறை குறைகள் பற்றிய பொது விவாதம் - இவைகளுக்கு எல்லாம் இன்னும் வழி வகுத்தால்தான் எதற்குமே நல்லது. ஒரு சுதந்திரமான ஊழல் ஒழிப்பு நிறுவனம் என்பது இப்போது பிரகாசமாகத்தான் தோன்றுகிறது. முதலில் அப்படித்தான் பல விஷயங்களுக்குத் தோன்றியது.

          •  மக்கள் நல்ல தலைவர்களைத் தேர்ந்தெடுக்க முடியும் என்றுதான் வாக்குரிமை பெற்ற போது நினைத்தோம். நல்லவர்கள் யாரையாவது தேர்ந்தெடுக்க முடிந்ததா..

          • நிலா உச்ச வரம்பு சட்டம் கொண்டு வந்த பிறகு - பண்ணையார்கள் எல்லாம் குறைந்து விட்டார்களா? வேறு விதத்தில் பண்ணையார்கள் வர வில்லையா.

          •  T V S பார்சல் சர்வீஸ் எல்லாம் எப்படி வந்தன? 

        • எல்லாம் சரிதான் ஒவ்வொரு முறையும் ஒன்றைச் சரி செய்ய ஒருதலைவர் வரும் வரை காத்திருப் பதை விட அடிப்படை மாற்றங்கள் பலவற்றைச் சரி செய்ய வேண்டியிருக்கிறது.

        சரி இந்த ஊழல் அரசு அலுவலகங்கள் - அரசு ஊழியர்களுக்கு மட்டும்தானா - கார்பரெட் நிறுவனங்கள்  - ஆட்டோக் காரர்கள் இவர்களுக்கெல்லாம் லோக்பால் கிடையாதா?

        Friday, 27 May 2011

        போதுமடா சாமி

        வலையுலக நண்பர்களே,

        தேர்தல் முடிந்து விட்டது. புதிய ஆட்சி வந்து விட்டது. அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகுங்கள். ஏறக்குறைய ஆறு ஏழு மாதங்களாக 2 G  - இதே நடந்து கொண்டிருக்கிறது. இப்போது கிளைமாக்ஸ்.

        கலைஞரின் கண்ணீர் கடிதம் - கனிமொழியின் பரிதவிப்பு - இன்னும் எல்லாப் பத்திரிக்கைகளும், எல்லா வலைகளும் இதையே எழுதிக் கொண்டிருக்கின்றன. எப்போது இது முடியும் என்று தெரியவில்லை? அவர்களின் குற்றங்களுக்கு அவர்கள் அனுபவிக்கிறார்கள். அவர்கள் அனுபவிக்கட்டும். அதை விட்டு விட்டு இன்னும் அதையே நாம் மீண்டும் புரட்டிப் போட்டு ஒன்றும் ஆவப் போவது இல்லை. இதில் என்னவென்றால், ஏறக்குறைய - 'நடுநிலையோடு' எழுதிக்கொண்டிருக்கிற வலைப் பதிவர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த நபர்கள் எல்லாம், இன்னும் அதே ரோதனையைப் பாடிக் கொண்டிருக்கும்போது, அவர்கள் மீது வாசிப்பாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகிறது என்பதை ஏன் நினைக்க மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை.

         இதில் எல்லாருமே பாதிக்கப் பட்டிருக்கிறோம் - இந்திய நாட்டின் குடிமகன்கள் என்கிற விதத்தில். எனவே தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தெல்லாம் இல்லை. உப்பத் தின்னவன் தண்ணி குடிச்சுத்தான் ஆகணும்.

        இந்த வழக்கு நீதி மன்றத்தில் இருக்கிறது. இந்த வழக்கு வாய்தா போட்டு வாய்தா போட்டு இழுத்தடிக்காம இருக்கிறதுக்கு என்ன பண்ணணுமோ அதைப் பண்ணலாம். ஆனால் அதை விட்டுட்டு, கலைஞர் கண்ணீர் வடித்தார் - அது நீலிக் கண்ணீர். அடுத்தா நாள், கட்டாந்தரையில் படுத்தார் கனி மொழி - இதே பொழப்பா.
        இங்கே யாரு பொது நலத்தோடு வேலை செய்யுறது. எல்லாரும் சுய நலம்தான். சிலருக்கு பண ஆசை - சிலருக்கு புகழ் ஆசை. எல்லாரும் அப்படித்தான்.
        எனவே அடுத்த கட்ட முயற்சியில் இறங்குவது உத்தமம் என்று படுகிறது.

        இப்படி தொடர்ந்து அதைப் பற்றியே எழுதிக் கொண்டிருப்பது, நமக்குள் ஒரு கிளர்ச்சியை, அக்களிப்பை, மனதுக்கு நிறைய சந்தோஷத்தைத் தருகிறது. மவனே அனுபவிடி... நீ ஆடுனப்ப ஒன்னும் பண்ண முடியலை - இப்ப என் வஞ்சத்தைத் தீர்க்க அதைப் பற்றியே எழுதுகிறேன்னு எழுதிக்கிட்டே இருக்கோம். இது நமக்குதான் நல்லதில்லை. அடுத்து என்ன செய்யலாம்னு யோசிக்காம வஞ்சம் தீர்ப்பது நல்லதில்லைன்னு மனதுக்குப் படுது. அதனால இதைப் பத்தி மறந்துறணும் அப்படின்னு சொல்லலை. அதைப் பற்றிய தொடர்ச்சி தேவை. ஆனால் அது மட்டுமே அப்படின்னு இருக்கிறது யாருக்கும் எதுவும் செய்யாது.

        பெட்ரோல் விலை ஏறுது. எதுவும் மாற்றம் அடைந்தது போல தெரியலை. இது எங்க போயி முடியும்னு தெரியலை.
        அரசியல் அதிகாரிகள், போலிசை ஏவிவிடும் காலம் இருக்கும் வரை, அரசியல் பலம் உள்ளவன் கையில் பதவி இழந்ததால், பலம் இழந்தவன் மாட்டுவான். அதுதான் அரசியல் உலகில் நியதி.


        அப்படி அந்தக் கண்ணீர்க் கதையையே பேசிக் கொண்டிருப்பது இன்றைய ஆட்சி செய்வதை எல்லாம் நியாயப் படுத்தும் விதமாகவே இருக்கும். 

        தலைமைச் செயலகத்தை பயன் படுத்தக் கூடாது ஏனெனில் கலைஞர் கட்டினார். சமச் சீர் கல்வி முறை தடை செய்யப் பட்டது. ஏனெனில் அதில் கலைஞர் வரலாறு மற்றும் செம்மொழி மாநாடு பற்றிய குறிப்பு உள்ளது. எனவே அதைத் தடை செய்வது நியாயம். யாரும் எதுவும் கேட்கமுடியாது. நாம் வளர்த்துவிடுவோம், அப்புறம் ....

        கலைஞர் டாஸ்மாக்கை வளர்த்துவிட்டார்னு அதைத் தடைசெய்தாவது நல்லா இருக்கும். மக்கள் கொஞ்சம் பணக் கஷ்டம் இல்லாம வளர்ந்து போற விலைவாசில வண்டிக்காவது பெட்ரோல் போடலாம்.

        போதும்டா சாமி!

        Saturday, 14 May 2011

        தேர்தல் முடிவுகள் - அடுத்த தேர்தல் வரை நாம் மௌனிகள்

        நேற்று விடியற்காலையில் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பு கொடுத்த தலைப்பு. எழுதிக்கொண்டிருக்கும் போதே அறுந்து போன தொடர்பு வருவதற்குள் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. சரி அதே தலைப்பு இருந்து விட்டுப் போகட்டுமே - எப்படி இருந்தாலும் அதுதானே உண்மை.

        இன்று முழுவதும் காலை தொடங்கி இறுதி முடிவு வெளிவரும் வரை எல்லாத் தொலைக்காட்சிகளும், மைக் பிடித்துக் கொண்டு அல்லது மேசையைச் சுற்றி அமர்ந்துகொண்டு இறுதி முடிவு வரை பேசிக்கொண்டே இருந்து விட்டார்கள். நாம்தான் ஒன்றும் செய்யமுடியாமல் போய்விட்டது. blogger - க்கு நமது நன்றிகள்.

        எல்லாருடைய எதிர்பார்ப்பிற்கும் மேலாகவே முடிவுகள் - அம்மாவே எதிர்பார்க்காத அசத்தலான முடிவுகள். ஏன் இப்படி ஒரு வெற்றி என்று அம்மாவுக்கே புரியாது. ஆனால் ஏன் இந்தத் தோல்வி என்று கலைஞருக்கு நன்றாகத் தெரியும்.

        சீமான் மிக்க மகிழ்ச்சியோடு இருக்கலாம்.

        வை.கோ அமைதி காத்ததன் மூலம், காமேடியனாக்கப் பட்டுவிட்டாரே என்று நான் எழுதினேன். ஆனால் தனது அமைதின் மூலம் இன்னும் அன்புச் சகோதரிக்கு அருகிலேயே இருக்கும் வாய்ப்பைப் பிரகாசப் படுத்திக் கொண்டார்.  சாணக்கியத்தனம் !

        ஆட்சியில் பங்கு கேட்கமாட்டோம் என்று முன்கூட்டியே அறிவித்து விட்டதால் நாம் ஒரு காமெடி பார்க்கும் வாய்ப்பை இழந்து விட்டோம். கேட்டாலும் கிடைக்காது என்பதால் - "இந்தப் பழம் புளிக்கும்."

        தனது வாயினாலேயே பேமஸ் ஆன வடிவேலு, அதாலேயே குட்டிச் சுவரைப் போய்விட்டார். ஒரு வேலை ரஜினியிடம் மண்டியிட்டால், மனோரமாவுக்கு வாய்ப்பு கிடைத்தது போல கிடைக்கலாம்! ஆனாலும் எழுந்து நடக்க முடியாது.

        நாம் பல பேருக்கு நன்றி சொல்லவேண்டும். அதில் முதலாவது ஆற்காட்டார் - மின்சாரக் கடவுள். ராசா - தொலைபேசிக் கடவுள். காங்கிரஸ் - எமதர்மர்கள். இன்னும் நிறைய .....

        தேர்தல் கமிஷன் - வெற்றி!

        எது எப்படி இருந்தாலும், இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நாம் ஒன்றும் பேச முடியாது. ஒருவரா? ஒரு குடும்பமா? எதிர் பாராத சோகம் நிகழ்ந்தால் ஒழிய 2016 வரை நாம் மௌனிகள்தான்.

        வாழ்க ஜனநாயகம்!

        Wednesday, 11 May 2011

        பட்டி மன்றமும் - நீதி மன்றமும்

        • சில நாட்களுக்கு முன்பு, கலைஞர் தொலைக் காட்சியில் ஒரு பட்டி மன்றம். உழைப்பாளர்களுக்கு களைப்பைப் போக்க பெரிதும் உதவுவது நாட்டுப் புறப் பாடல்களா அல்லது திரைப் படப் பாடல்களா? லியோனி எப்போது இந்தத் திரைப்படப் பாடல்களை விட்டு வெளியே வரப் போகிறார் என்று தெரியவில்லை. எப்போது பார்த்தாலும் திரைப் படம் தொடர்பான பட்டி மன்றம்தான். ஆனால் தமிழ் கூறும் நல்லுலகும் அப்படித்தானே இருக்கிறது. எல்லாமே நமக்குத் திரைப் படம் சம்பந்தப் பட்டவைகள்தானே. நாம் எப்போதுதான் அதைவிட்டு மீண்டு வரப் போகிறோம் என்றுதான் தெரியவில்லை. 
          • சரி அது இருந்து விட்டுப் போகட்டும். அன்றைய தீர்ப்பை முடிவு செய்ய உதவியது, கலைஞரின் பொன்னர் சங்கர் - அதாவது திரைப் படப் பாடல்கள். 
          • எந்தப் பட்டி மன்றங்களும், பேச்சாளர்களின் விவாதத்தை முன்வைத்து யார் மிகச் சிறப்பாக வாதடியிருக்கிரார்களோ அதை முன்னிறுத்தி ஒரு போதும் தீர்ப்பு வருவதில்லை. நீதிபதி - பட்டிமன்ற நடுவர் - என்ன நினைக்கிறாரோ அதுதான் எப்போதும் தீர்ப்பாக வருகிறது. பேச்சாளர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் ஒரு போதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படுவதில்லை என்பதுதான் கவனிக்கப் படவேண்டியது. 
          • மேலும், அன்றைய தினம் கலைஞர் அவர்கள் பட்டிமன்றத்தில் கலந்து கொண்டதாலும், அவரும் திரைப்படத்தோடு தொடர்பு கொண்டவர் என்பதாலும், அண்மையில் அவரது பொன்னர் சங்கர் வெளிவந்தது என்பதாலும், இந்தத் தீர்ப்பு கலைஞருக்கு பிடிக்கும் என்பதாலும் அந்தத் தீர்ப்பு என்றே கருத வேண்டியிருக்கிறது. 
        • நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்பும் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருப்பவர்களுக்குப் பிடிக்கும் விதத்திலேயே வழங்கப் படுகிறதோ என்று ஒரு சந்தேகம் - நீதி மன்றத்தை அவமதிக்கும் எண்ணமெல்லாம் நமக்கு இல்லை. நடக்கிற நிகழ்வுகளைப் பார்த்தால் அப்படித் தோன்றுகிறது என்பதால் இந்த அய்யம். பதினான்காம் தேதிதான் ஒரு தீர்ப்பு வரும் என்று சொல்லியிருக்கிறார்கள்  - இதைப் படித்தவுடன் எனக்கு அந்தப் பட்டிமன்றம்தான் நினைவுக்கு வந்தது. - ஏன் பதினான்காம் தேதி? 
          • தேர்தல் முடிவுகள் இந்தத் தீர்ப்பை நிர்ணயம் செய்யலாம்.  
          • பட்டிமன்றங்கள் போலத்தான் நீதி மன்றங்களும் இருக்கின்றன
        கலைஞருக்கும் இது தெரியும் - அவரின் சக்திக்கு உட்பட்ட இடங்களில் அவரின் விருப்படியே தீர்ப்பு வருகிறது. அதுபோலவே இன்னும் அதிக சக்தி வாய்ந்தவர்கள் இருக்கும் இடங்களில் அப்படித்தான் இருக்கும் என்பதை அவர் அறிவார்.

        Saturday, 9 April 2011

        அன்னா ஹசாரேக்கு எதிராய் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் - ஊழலுக்கு ஆதரவாய்

        அன்னா ஹசாரே ஒரு தனி மனிதனாய் பல்வேறு கோரிக்கைகளுக்குப் பிறகும், பிரதமரோடு உரையாடிய பின்பும், இது ஒன்றும் நடக்கிற காரியம் இல்லை என்று, சாகும் வரை உண்ணா விரதம் இருக்கிறார். இது போராட்டம். களத்திலும் நாட்டிலும் மிக குறைவான எண்ணிக்கையிலேயே இப்போராட்டம் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறது.
        இணையத்தில் தமிழ் வலைப் பூக்களில் இது பெற்ற முக்கியத் துவத்தைக் கூட தமிழ் பத்திரிகைகள் பதிவு செய்யவில்லை என்பது வருத்தம்தான். 

        எத்தனை எத்தனைப் பத்திரிக்கைகள், தொலைக் காட்சிகள். எதெதெற்கோ நேரடி ஒளிபரப்புச் செய்யும் தொலைக் காட்சிகள் இதைச் செய்தால்தான் இப்போராட்டத்தை வலுப் படுத்த முடியும் என்பது திண்ணம். 

        வியாபார நோக்கம் கொண்ட பத்திரிக்கைகள், ஊழல் பின்புலம் கொண்ட அரசியல் வாதிகளின் தொலைக் காட்சிகள், வியாபார நோக்கம் கொண்ட விளையாட்டு தொலைக் காட்சிகள், உண்மையை இருட்டடிப்புச் செய்யும் மீடியாக்கள் இதற்கு ஒரு போதும் துணையிருக்காது.
        எல்லாக் கட்சியும் அயோக்கியக் கட்சிதான். அவைகளுக்குள்ள அதிகாரப் போதையைத் தெளிவு படுத்தவும், ஊழல் பற்றிய நினைவு வராமல் இருக்கவும், லோக் பால் சட்ட மசோதா நிறைவேற்றப் படவேண்டும் என்பதுதான் இந்த வீரரின் கோரிக்கை. 

        எதற்கும் ஒத்து வராத அனைத்து அரசியல் கட்சிகளும், இந்த  விஷயத்தில் ஒற்றுமையாய் இருக்கிறார்கள்.  அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் - ஊழலுக்கு ஆதரவாய். இவர்கள் அனைவரும் ஊழலுக்கு எதிராய் ஒன்றைக் குரல் கொடுப்பார்கள் அதில் ஏதாவது பெற முடியுமெனில்....
        அவநம்பிக்கை எதையும் சாய்த்து விடக் கூடாது. எல்லாத் தமிழ் வலைப் பூக்களின் முதற் பக்கத்திலும் அன்னா ஹசாரே பற்றிய கட்டுரைகள் முதற்பக்கத்தில் சில நாட்களுக்கு இருக்கும் படி செய்தாலே இந்தப் போராட்டத்தை இன்னொரு நிலைக்கு எடுத்துச் செல்ல முடியும்.

        சிறு தீப் பொறி காட்டை அழிக்கும். அன்னா ஹசாரேப் பொறி ஊழல் நாட்டை ஒழிக்கும்.


        விரிவான கட்டுரைகளுக்கு 
        http://truetamilans.blogspot.com/2011/04/40000-1000.html


        http://sakthistudycentre.blogspot.com/2011/04/blog-post_7097.html


        http://smuthukumaran.wordpress.com/2011/04/07/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87/

        http://tamilnanbargal.com/node/32566

        http://www.sangkavi.com/2011/04/blog-post_07.html

        http://www.giriblog.com/2011/04/hazaare-no-to-politicians.html



        Wednesday, 16 March 2011

        அணு உலகம் - ஆழ்ந்த அனுதாபம்

        • ஜப்பான் சோதனைக்கு உள்ளாகி இருக்கிறது. ஒவ்வொரு முறையும் "அணு" குறித்த விவாதம் எழ ஜப்பானே காரணாமாக இருக்கிறதே என்பது வருத்தம்தான். முன்பு அமேரிக்கா - இப்போது அவர்களே காரணமோ என்றுதான் தோன்றுகிறது. செத்தவனைப் பத்தி தப்பா பேசுறது நாகரீகம் இல்லைதான். ஆனால் அவர்கள் ஒவ்வொரு முறையும் செத்து இது போல நடக்கூடாது என்று அவர்கள் கூவுவது மாதிரிதான் எனக்குத் தெரிகிறது.  
        • அணு உலகம் -  ஆபத்து என்று சொன்னால் அறிவாளிகள் அடிக்க வருவார்கள்.
        • உலகப் போரில் ஹிரோஷிமா - நாகசாகி என்கிற நகரங்களில் அணு குண்டு வீசப் பட்ட போது, இனிமேல் உலகத்தில் இப்படி ஒரு அநீதச் செயல் ஒரு போதும் நடக்கக் கூடாது என்றுதான் அனைவரும் விரும்பினர்.
        • ஆனாலும் அதன் பிறகு அழிப்பதற்கு அல்ல, ஆக்கத்திற்கு பயன் படுத்துவோம் என்கிற ரீதியில், ஏறக்குறைய 55 அணுஉலைகளை அமைத்து அந்த நகர்களை அழகு படுத்திய ஜப்பானியர்கள் மீது இயற்கை மீண்டும் அத்தகைய நிகழ்வை ஏற்படுத்தியிருக்கிறது.
        • இதுவரை இல்லாத அளவிற்கு, பூகம்பம், சுனாமி, அதைத் தொடர்ந்து, வரிசையாக அணு உலைகள் வெடித்துக் கொண்டிருக்கின்றன.  அவைகளிலிருந்து வெளிவரும் கதிர் வீச்சுகள் மிக மோசமானவை என்பது அனைவருக்கும் தெரியும்.  இது இயற்கையின் சதி என்றால் நாம் ஒன்றும் சொல்ல முடியாது. 
        • எல்லாம் எனக்குத் தெரியும்; எல்லாவற்றையும் என்னால் கட்டுப் படுத்த முடியும் என்கிற அறிவு ஜீவிகளுக்கு கிடைத்த பரிசாகத் தான் இதை ஏற்றுக் கொள்ள முடியும்.  என்னை மிஞ்சி எதுவும் நடக்காது என்ற மமதை.  தான்தான் இந்த உலகத்தின் மிகச் சிறந்த உயிரினம் - நான் செய்வதனைத்தும் சரி தான் என்று நியாயப் படுத்தும் குணம். இந்தத் தலைக் கனத்தை எப்படிக் குறைக்க முடியும்?
        • ஒவ்வொரு நாடும் அடுத்த நாட்டை எதிரியாகப் பார்ப்பதும், எல்லைகோட்டு சண்டையை வளர்ப்பதும், தன பலத்தை நிரூபிக்க அணுவைப் பிளப்பதும் - போட்டிக்கு வேறொருவன் அதற்கான முயற்சியில் இறங்குவதும் என்று ஒரு சுழலில் சிக்கித் தவிக்கிறோம். 

        • உலக அரங்கில் பொருளாதார வளர்ச்சி - அது மட்டுமே பிரதானம் - அந்நியச் செலவாணியை அதிகரிக்க வேண்டும். நவீன வளர்ச்சியில் இருந்து பின்செல்ல முடியாது என்பது தெரியும் ஆனால் அதே சமயத்தில் பொறுப்புணர்வு என்பது மங்கிக் கொண்டே இருக்கிறது.  
        • எதையும் செய்ய எனக்கு உரிமை இருக்கிறது என்கிற ரீதியில் உலக அரங்கில் பெயரெடுக்க, பொருளாதார வளர்ச்சி என்கிற போர்வையில் சில பெருச்சாளிகள்  வளர்ந்து கொள்ள மட்டுமே அரசு முயல்கிறது. 

        • அமெரிக்கா உள்ளே வந்து விடக் கூடாது, சீனா அருகில் போய்விடக் கூடாது என்பதற்காய் இலங்கைக்கு தமிழரைக் கொல்ல உதவுகிறது. அவர்கள் வேறு நாட்டுத் தமிழர்கள். தமிழ் மீனவர்களுக்குப் பாதுகாப்பில்லை என்றதற்கு என்ன செய்தது?  தெற்கிருந்து செய்தி போக நேரமாகிறது - ஆனால் இலங்கையிலிருந்து விரைவாய்ப் போகிறது.  நமது அரசும் கொள்கைகளும் வெறும் வெளி வேஷங்கள்  போடும் நாடக தாரிகள். 

        • மூன்றாம் உலகப் போர் தொடங்கினால் அச்சண்டை முடிவுறாது - ஏனெனில் தொடங்கும் போதே உலகம் முடிந்திருக்கும். இது அனைவருக்கும் தெரியும். ஆனால் நவீனப் போர் - பொருளாதாரப் போர். அனைத்து நாட்டையும் ஆட்டிப் படைக்கும் பேய். 
        • வளர்ந்த நாடுகள் என்ற நாடுகளுக்குள்ளும் - ஏழ்மை, வறுமை, விலைவாசி உயர்வு - வேலையில்லாத் திண்டாட்டம். அப்புறம் என்ன வளர்ந்த நாடு, வளராத நாடு? நாமும் அதைப் பார்த்து வளர வேண்டும் என்று ஆசிக்கிறோம்.
        • நில உறவு போயிற்று - மனித உறவு மங்கிற்று - கோடைகளில் நமக்குக் குளிர் வேண்டும் - குளிரில் வெப்பம் வேண்டும் - அணு சக்தி இருந்தால் தான் சாதிக்க முடியும். பன்னாட்டு நிறுவனங்களுக்கு செம்பரம்பாக்கம் தண்ணீர் போகும் - அவர்களுக்கு மின்சக்தி போக மீதி மக்களுக்கு கிடைக்கும். அப்புறம் என்ன நமக்கு வசதி?
        • தொலைக்காட்சிப் பெட்டி வீடு தோறும் போகும் - மின்சாரத்திற்கு என்ன செய்யலாம்? அணு சக்தி வேண்டும். 
        • யாரும் இல்லாத கடைகளில் ஷோ கேசில் எரியும் மின் விளக்குகளை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அணைக்க முன்வந்தாலே இன்னொரு தலை முறைக்கு எரிசக்தி மிஞ்சும். இந்தியாவும் அதனை பின் பற்றுகிறது. அப்புறம் எப்படி மின்சாரம் பற்றும்?
        • சேமிக்கும் பழக்கம் போய் விட்டது -   பணம்- மின்சாரம் - நீர் - எல்லாம்... தேவைக்கு மேலே இல்லையென்றால் கடன் வாங்கலாம்- மின்சாரம் - அணு சக்திதான். சரி நீர் எங்கே வாங்குவது?
        • அமைதி விரும்பிகள் உலகப் போருக்குப் பின் சண்டையிடுவதை குறைக்க வேண்டும் என்றும், சண்டைகளின் அழிவை உணர்த்தியும், பல இடங்களில்  இயற்கையிடமிருந்து பிரிந்து போனதை உணர்ந்து திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். நாம் இன்னும் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறோம். 
        • ஜப்பானியர்கள் இந்தக் குட்டி நகரத்திற்குள் ஐம்பத்து ஐந்து அணு உலைகள் வைத்திருக்கும் போது இந்தியாவில் வெறும் பதினேளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று கேட்டார்கள் - எதற்கு?

        • செர்நோபில் அணு உலை விபத்து மிக மோசமானது என்ற போது அதில் குறிக்கப் பட்ட பாதுகாப்பு வளையங்கள் ஒழுங்காக அமைக்கப் பட வில்லை எனவேதான் விபத்து என்றார்கள். 

        • ஜப்பான் - நில அதிர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரிந்தும், அதையெல்லாம் கருத்தில் கொண்டும் மிகவும் பாதுகாப்பாக வடிவமைக்கப் பட்டது என்றும் சொன்னார்கள். இப்போது என்ன நடக்கிறது என்பதை உலகம் பார்க்கிறது. 
        • இப்படியே போனால், யாருக்காக அணு உலை? மக்களுக்கா?
        • இந்தியாவில் மிகவும் பாதுகாப்பகவே அணு உலைகள் இருக்கின்றன. எந்த நில அதிர்வையும் தாங்கும் என்று, ஏதோ ஒரு விஞ்ஞானி சொல்லியிருக்கிறார். 
        • எதை வைத்து இவர்களை நம்புவது? நால் வழிச் சாலையில் ஊழல் - பாலங்கள் கட்டுதலில் மோசடி - விளையாட்டு நடக்கும் முன்னே கட்டிடங்கள் சரிவு- கல்மாடியின் ஊழல் - ஊழல் வழக்கில் உள்ள ஒருவரே ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமனம். போலி மருந்துகள் - போலி மருத்துவர்கள் - போலி விமானிகள் [இண்டிகோ விமானத்தில் பனி புரிந்த ஒரு விமானி வெற்றி பெறாத தேர்வில் வெற்றி பெற்றதாக மாற்றியது மட்டுமல்ல அதுபோல இன்னும் பலர்] - இதில் அணு மின் நிலையங்களை மட்டும் மிகவும் உண்மையோடும், நேர்மையோடும், எந்தவித கலப்படமும் இன்றி, ஜப்பான் முன்வரைந்த பாதுகாப்பு வளையங்களுக்கும் மேலாக, எல்லாவித நில அதிர்வுகளையும் தாங்கிப் பிடிக்கும் வல்லமையுள்ள அணு மின் நிலையங்களை நம்மவர்கள் அமைத்துள்ளார்கள் - இனிமேலும் அமைப்பார்கள். அணு உலைகள் விபத்து ஏற்படும் பட்சத்தில் இழப்பீட்டுத் தொகை என்பதை வெறும் 500 கோடியிலிருந்து பல போராட்டத்திற்குப் பின்னர் 1500 கோடிகளாக மாற்றிய இந்திய அரசு மக்கள் நலம் பற்றியும், அணு உலை அமைக்கும் அந்நிய நாட்டு கம்பெனிகளின் பணியில் தலையிட்டு அனைத்தும் ஒழுங்காக நடை பெறுகிறதா என்று நோண்டி நொங்கெடுக்கும் என நம்புவோம். 

        • நான் இந்தியாவின் மீது அவ நம்பிக்கை கொண்டிருக்கிறேன் என்று தவறாய்ப் புரிந்து கொள்ளப்பட்டாலும் பரவாயில்லை.  நாம் இன்னும் வளர வேண்டியிருக்கிறது.  நம் பண்பாட்டுக் கண்கொண்டு நம் மக்களைப் பார்க்கிற பார்வை வேண்டும். நியூ யார்க்கில் விளக்கு உள்ளது போல நமக்கு வேண்டும் என்றால் - அதுவா நமது முதல் தேவை. மக்கள் பொருளாதாரத்தில் உலக அரங்கோடு போட்டி போட்டுக் கொண்டு ஐந்து நட்சத்திர உணவகங்களில் உணவு அருந்தவோ, காலையில் சிங்கப்பூரிலும், மாலையில் மலேசியாவிலும் இருந்து விட்டு இரவோடு இரவாக இந்தியா திரும்பும் வசதியோ, அடுக்கு மாளிகைகளோ, இரவு பகல் வித்தியாசம் தெரியாமல் இருக்க வண்ண வண்ண விளக்குகளோ - ஆளுக்கு ஒரு வாகனமோ - ... இல்லாவிட்டாலும் பரவாயில்லை - அடுப்பெரித்து கஞ்சி குடிக்க உயிராவது மிச்சமிருக்க வேண்டாமா? 

        • இப்போதாவது அணுஉலைகளுக்கு அருகில் இருக்கும் மக்கள் பாதுகாப்பு பற்றியோ, அல்லது ஊழல் ஒழிப்பில் உண்மையாகவே இறங்கினாலோ - அறுபத்தி மூன்று சீட்டுக்களைப் பெறுவதற்கும்,  ஆட்சியில் பங்கு கேட்பதற்கும் சி. பி. ஐயைப் பயன் படுத்துவதை விட்டு விட்டு - மாற்று வழி பற்றிய விவாதங்களை முன்வைக்கத் தொடங்கினாலோ,  இயற்கை ஆர்வலர்களின் குரலுக்கு செவி கொடுத்தாலோ - கூடன்குளம் அல்லது நர்மதாப் போராட்டங்களில் உள்ள நியாயங்களை பரிசீலிப்போம் என்கிற அறிக்கையோ விட்டாலோ, இயற்கை அரண்களை அழிக்கும் முயற்சியை கைவிட நாம் முன்வந்தால்தான் நாம் நமது தலைக் கனத்தை  குறைக்க முயற்சிக்கிறோம் என்றாவது படும்.



        Friday, 11 March 2011

        சிறு துளி - ஜாமீன்

        ஜாமீன்

        ஏறக்குறைய நாற்பதாயிரம் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு  செய்த ஹாசனை - வெறும் எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாய் ரொக்க ஜாமீனில் விடுதலை செய்திருக்கிறது உயர் நீதி மன்றம். 
        ஒருவேளை ஹாசன் இதையே தி. மு. க. விலிருந்து செய்திருந்தால், தொகுதிப் பங்கீடு முடியும் வரை, அல்லது, கேட்ட இடங்கள் கிடைக்கிற வரை, அல்லது வென்று கூட்டணி ஆட்சி முடிவு கட்டுகிற வரை, அதிலும் கேட்ட பதவி கிடைக்கிற வரை... சிறையில் இருந்திருக்க வேண்டியிருக்கும். ஒருவேளை ராசாவிடம் எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாய் கூட இல்லையோ என்னவோ!

        நம்புங்கள் -  
        • சி. பி. ஐ... ஊழலை ஒழிக்க உதவுகிறது. ஆளும் கட்சிக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.  அதனால்தான் அண்ணா அறிவாலயத்தில் விசாரணை தொடர்கிறது....
        • கட்சியிலிருந்து வரி ஏய்ப்போ, ஊழலோ செய்யாதீர்கள் - தனியாய் செய்தால் நிச்சயமாய் தப்பிக்கலாம் - ஹாசன் போல.
        • ஹாசன் வெளியில் வந்து தனக்கெதிரான சாட்சியங்களை எல்லாம் அழித்து விடவோ, யாரையோ விலை கொடுத்து வாங்கி விடவோ மாட்டார் - ஏனெனில் அவர் நேர்மையாளர்.
        • காந்தியைப் போல காங்கிரசும், உண்மையையே கடவுள் என்றும், நேர்மையையே மதிப்பீடு என்றும், தூய்மையே தங்கள் வழிகாட்டி என்றம் இருக்கிறது.

        Tuesday, 8 February 2011

        கறுப்புப் பணம் - மந்திரக்கோல்

        கறுப்புப் பணம்  செல்லுமா செல்லாதா? 

        ஒரு  நாடு விட்டு இன்னொரு நாடு செல்லும் - ஆனால் தன் நாடு செல்லாது.

        [அதுசரி நோட்டு கிழிந்தாலே செல்லாதே - கருப்பாய் இருந்தாலும் செல்லுமா?]

        கறுப்புப் பண விவகாரம் சில ஆண்டுகளாய் நிலுவையில் இருந்து இப்போதுதான்  ரு வழியாய் மீண்டு எட்டிப் பார்த்திருக்கிறது.


        முதல் பட்டியல் விவரம் வேண்டுவோர் இங்கே படிக்கலாம்.

        மொத்த கறுப்புப் பணம் ஏறக்குறைய 65,000,000,000,000.௦௦ [இது சரியா தவறா அல்லது எப்படி எண்ணால் எழுதுவது என்று தெரியவில்லை. கணக்கில நாம கொஞ்சம் வீக்.]

        அதாவது அருபத்தியஞ்சு லட்சம் கோடிகள் அளவிற்குக் கறுப்புப் பணம் உள்ளதாகச் சொல்லுகிறார்கள். முதல் பட்டியல் வந்ததும் அதில் உள்ள பணம் 52 கோடிகள் என்கிறார்கள்.
        இங்கே மதிய உணவுக்கு பருப்பு வாங்கிய கணக்கிலேயே 700 கோடிகள் அளவிற்கு ஒரிசாவில் பிரமிளா மல்லிக் ஊழல் செய்ததானக் குற்றச் சாட்டில் ராஜினாமா செய்திருக்கிறார்.
        ஐ.பி.எல் புகழ் மோடி தொலைக் காட்சி ஒலிபரப்புக் காண உரிமம் வழங்கியதில் பெற்றுகொன்ண்ட கமிஷன் மட்டுமே 465 கோடிகளைத் தாண்டுகிறது.
        2 G அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஆயிரக்கணக்கான கோடிகள் என்கிறார்கள்.
        இந்த முதல் பட்டியல் வெறும் 52 கோடி என்பது நம்பும் படிக் கூட இல்லை.
        என்ன சாதிக்க விரும்புகிறார்கள்?

        கறுப்புப் பணம் இந்தியாவுக்குக் கொண்டு வாருங்கள் என்று கூடச் சொல்லவில்லை. பட்டியலையாவது முழுவதுமாய் வெளியிடுங்கள் என்றால் அதைக்கூட வெளியிட முடியாது என்று மீண்டும் மாண்புமிகு முகர்ஜி சொல்லியிருக்கிறார். அதோடு சேர்த்து - "பணவீக்கத்தையோ விலைவாசியைக் கட்டுப் படுத்தும் அலாவுதீன் விளக்கோ அல்லது மந்திரக்கோலோ என்னிடத்தில் இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்.

        அமைச்சர் என்பதை வைத்துக் கொண்டு நான் எதுவும் செய்ய முடியாது என்று சொல்வதை எப்படிப் புரிந்து கொள்வது? விலைவாசி உயர்வுக்கு ஒன்றும் செய்ய முடியாது. பெட்ரோல் விலை உலக அளவில் குறைந்தாலும் நாங்கள் இந்திய முதலாளிகள் லாபம் பெரும் வரை குறைக்க முடியாது. தமிழ் மீனவர்கள் கொல்லப்படுவது பற்றி ஒன்றும் சொல்ல இயலாது.

        ஒன்றுமே உங்களால் செய்ய இயலாதெனில் மந்திரக்கோல் இருந்தாலும் ஒன்றுமே செய்ய முடியாது என்றுதான் பொருள்.
        ஒன்றும் செய்ய இயலாதவர்களுக்கு எதற்கு ஆட்சியில் அமர ஆசை?

        ஆனால் - நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஸ்திரமான நாடாய் இருக்கும் என்று கூவுவதற்கு இவரே இன்னும் சில மாதங்களில் தமிழகத்திற்கு வரலாம். யார் கண்டது?



        Tuesday, 1 June 2010

        சாலை மரணம் - நவீன கொடை

        முன்பெல்லாம் யாராவது இறந்தால் எப்போது இறந்தார் என்று கேட்பார்கள். அவர் காலையில் இறந்தார் அல்லது மாலையில் இறந்தார் என்று பதில் கிடைக்கும். இப்போது யாரவது இறந்தால் - எங்கே இறந்தார் என்கிற கேள்வியும் அதற்கு பதிலாக - சாலையில் இறந்தார், அல்லது ஓடு பாதையில் இறந்தார் அல்லது ரயில் பாதையில் இறந்தார் என்கிற பதிலே கிடைக்கிறது.

        முன்பு இறந்தவர் - இயற்கை எய்தினார் என்று சொல்வோம். ஆனால் இப்போது நடப்பதையெல்லாம் பார்த்தால் இயற்கை எய்தினார் என்று சொல்வதற்கு மனம் ஒப்பவில்லை, ஏனெனில், பலரது வாழ்க்கை முடிதல் என்பது செயற்கையாகவே முடிகிறது அல்லது முடிக்கப்படுகிறது.

        மானிட உயிர் விலை மதிப்பற்றது. ஆனால் ஏன்தான் நமது ஊர்களில் இப்படி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன என்பது தெரியவில்லை.

        1. சாலை ஒழுங்குகள் இன்னும் சரிவர கடைபிடிக்கப் படுவதில்லை என்பதைக் காட்டிலும், அதை நடைமுறைப் படுத்துவதற்கு அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்கிற குற்றச் சாட்டை முதன்மைப் படுத்தலாம். உள்ள விதிகளை எல்லாரும் கடைப் பிடிப்பதற்கும் அல்லது அனைவரும் அறிந்து கொள்வதற்கும் எந்த முயற்சியும் எடுப்பதில்லை. எதெற்கெல்லாமோ இந்த அரசுகள் விளம்பரம் மேற்கொள்கின்றார்கள். அதைத் திறக்கிறார்கள், இதற்கு மாலையிடுகிறார்கள், அவருக்குப் பிறந்த நாள், இவருக்கு நினைவு நாள் - சாலை விதிகளை மதித்தது நடப்பது பற்றி விளம்பரம் குடுத்தால் குறைந்தா போவார்கள். சரி கஜானாவில் காசு இல்லையென்றால், உள்ள அனைத்து ஊடகங்களும் இதை வெளியிட வேண்டும் என்று ஒரு சட்டம் போட்டால் செய்ய முடியாதா என்ன?

        2. சரி - ஒழுங்காக ஓட்டுனர்களுக்கான உரிமம் வழங்கப் படுகிறதா? அதுவும் இல்லை. இந்தியன் படம் வந்தபிறகு - ஒவ்வொருவனும் தங்களது உரிமம் எப்படிப் பெற்றார்கள் என்பதை நினைவு படுத்தி அதோடு அனைவரும் RTO அலுவலகம் எப்படி நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள உதவியும் செய்தது. ஆனாலும் இதுவரையும் RTO அலுவலகங்கள் அப்படித்தான் இருக்கின்றன. படிக்காதவர்களுக்கு உரிமம் மறுக்கப் படக் கூடாதுதான் - ஆனால் விதிகளே தெரியாமல் உரிமம் பெறலாம் என்கிற நிலை இருந்தால் எப்படி விதிகளை கடைப் பிடிப்பதைப் பற்றி பேச முடியும்?

        3. சரி. சாலைகளில் விதிமுறைகளைக் கடைபிடிக்காத ஓட்டுனர்களை எப்படி சரிசெய்ய முடியும். காவல் துறை நண்பர்கள் - மிகவும் பாராட்டப் பட வேண்டியவர்கள். சென்னை சாலைகளில் - அனல் பறக்கும் வெயிலிலும் தார்ச் சாலையின் நடுவில் வியர்க்க வியர்க்க நிற்கும் அவர்களையும் மீறி
        தங்கள் விருப்பம் போல வண்டி ஓட்டுபவர்களை நாம் என்ன செய்ய முடியும். எல்லாருக்கும்தான் அவசரம்.

        4. அரசுப் பேருந்துகளை அதிகப் படுத்தி மக்கள் அவைகளைப் பயன்படுத்த ஊக்கப் படுத்த வேண்டும். சென்னையைச் சுற்றி எத்தனை கல்லூரிகள், எத்தனை தொழிற்சாலைகள் - ஒவ்வொன்றிற்கும் எத்தனை சொகுசுப் பேருந்துகள் - சென்னையின் போக்குவரத்து இப்படி இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் இப்படி ஆயிரக்கணக்கில் இயங்கும் பேருந்துகள்தான். இத்தகைய பேருந்துகளை தாம்பரம், பூந்தமல்லி எண்ணூர் போன்ற இடங்களுக்குப் பிறகு அனுமதிக்கக் கூடாது. அரசுப் பேருந்துகளையோ அல்லது மின்சார இரயிலைப் பயன்படுத்தி சென்னையின் போக்குவரத்து கூட்டத்தைக் கொஞ்சம் குறைக்கலாம். விதிகளை மீறி ஓட்டுவதிலும், தடம் மாறி ஓட்டுவதிலும், சொகுசுப் பேருந்து என்பதனால் அதிக இட ஆக்கிரமிப்புச் செய்வதிலும், அரசுப் பேருந்து நின்று செல்கிற இடங்களில் எல்லாம் இவர்களும் அவ்விடங்களை ஆக்கிரமிப்புச் செய்து...ஆனால் அவர்களிடமிருந்து வரும் பணத்திற்காக அரசு அதைச் செய்யாமல் இருக்கலாம் ?


        5. எப்படித்தான் அனைவரையும் சாலை விதிகளை மதிக்கச் செய்வது - சாலை விதிகளை மதித்தால் விபத்துக்கள் தானாய் குறையும். ஒழுங்காகத் திட்டமிடுவது, நேரத்தோடு கிளம்புவது, சிறிது தாமதமானாலும் அடுத்த நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்திப் போடும் தைரியம், சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதனால் நமது பாதுகாப்பை முதன்மைப் படுத்துவது ... நாம் நினைத்தால் முடியும் - அரசு நினைத்தால் முடித்துக் காட்டலாம்...

        சாலை விதிகள் மதிக்கப் பட்டால், சாலைகள் நன்றாய் இருந்தால், நாடும் வளம் பெரும் - நாமும் வளம் பெறலாம்.