Tuesday 19 March 2019

யூதாசின் முத்தம் – யுத்த முத்தம் – அது உயிரையே குடிக்கும்


எதிர்பார்க்கும் முத்தமோ எதிர்பாரா முத்தமோ அது இயல்பாய் இருந்தால்தான் அன்பின் வெளிப்பாடு. அது நன்றியின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். ஒரு குழந்தையைப் பார்த்த மாத்திரத்தில் நமக்குள் எழும் பூரிப்பின் நிறைவில்தான் ஒரு குழந்தையைக் கன்னத்தில் முத்தமிடுகிறோம். ஒருவிதத்தில் அது நன்றியின் வெளிப்பாடுதான். கள்ளம் கபடமில்லாத அந்தச் சிரிப்பை அந்தக் குழந்தை வழங்கியதற்காகவோ அல்லது இறைவனின் அற்புதத்தைக் கண்டுகொண்ட நன்றியுள்ளத்தில் வெளிப்படுவதோதான் நாம் அக்குழந்தைக்குக் கொடுக்கும் முத்தம். நான் ஒரு குழந்தையைப் பார்க்கப் போகிறேன் எனவே அதற்கு நான் முத்தமிடுவேன் என்று யாரும் முன்கூட்டியே திட்டமிடுவது இல்லை.


குழந்தைக்கோ பெரியவர்களுக்கோ முத்தமிடுதல் எப்போது திட்டமிடப் படுகிறதோ அங்கே அது உண்மையான அன்பின் வெளிப்பாடு என்கிற நிலையில் இருந்து வெறும் வெளிவேடத்தன்மை கொண்ட   வெளிப்பாடாக மாறுகிறது. இப்படிப்பட்ட வெளிவேடத்தில் அடுத்து அன்பின் போர்வையில் துரோகம் கை ஓங்கும். அறிந்தவன் கொடுக்கும் முத்தமோ அறியாதவர்கள் கொடுக்கும் முத்தமோ அது திட்டமிடப்பட்ட முத்தம் என்றால் அது வன்முறையின் வெளிப்பாடுதான். “பிள்ளைகளைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்றுஒரு திரைப்படப் பாடலின் முன்வரும் வசனம் உண்டு. அப்பாக்கள் தங்கள் பிள்ளைகளை முத்தமிடத் திட்டம் தீட்டுவதில்லை. அது இயல்பாய் வருகிறது. அதனால்தான் முத்தமிடலில் திட்டம் தீட்டுதல் மிகப்பெரிய குற்றம்.


யூதால் இஸ்காரியோத்து இயேசுவை முத்தமிடத் திட்டம் தீட்டுகிறார். இயேசு தனது மெசியாத்தன்மையை முற்றிலும் வெளிப்படச்செய்யவோ அல்லது அரசத்தன்மையை வெளிப்படுத்த வேண்டிய மெசியா பணியாளனாய் இருக்கிறார் என்கிற ஏமாற்றத்திலோ, அல்லது பணத்தின் மீதான பேராசையிலோ யூதாஸ் இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக் கொடுக்கிறார்
தனது சீடரான யூதாஸ் நெருங்கி வருவதைப் பார்த்ததும், இயேசு மகிழ்ச்சி கொள்கிறார். ஆனால் யூதாசின் முத்தம் திட்டமிடப்பட்ட முத்தமாய் இருக்கிறது. இயேசு எதிர்பார்த்த அன்பின் முத்தம் எதிரியின் முத்தம் அவர் மீது கொண்ட யுத்தமாய் மாறுகிறது. அது யூதாசிற்கு முப்பது வெள்ளிக் காசையும் இயேசுவிற்கு கசையடியையும், காடியையும், சிலுவையையும் கொடுத்தது. இயல்பாய் வெளிப்படும் அன்பின் முத்தம் இருவருக்கும் மகிழ்ச்சியைத் தரும். நமது முத்தமிடலை ஒரு குழந்தை ஏற்றுக்கொள்ளாமல் அழுகிறது என்றால் வலுக்கட்டாயமாக முத்தமிடல், அது தன் குழந்தையே என்றாலும் வன்முறைதான். முத்தமிடல் எங்கே இருவருக்கும் மகிழ்ச்சியையும், ஆனத்தத்தையும் கொடுக்கிறதோ அதுவே அன்பின் முத்தம். ஒருவருக்கு வலியையும், துன்பத்தையும் கொடுத்தால் அம்முத்தம் வன்முறையின் உச்சகட்டம். அன்பின் செயலான எதிர்பார்ப்பின் முத்தம் இயேசுவிற்கு, யூதாஸ் என்கிற எதிரியின் முத்தமாய், துரோகியின் முத்தமாய் மாறுகிறது. துரோக முத்தத்தில் கிடைத்த வெள்ளிக்காசு அவனுக்கு செல்லாத காசாகவே மாறிப் போய் உயிரைக் குடித்தது. நம்பிக்கைத் துரோகம் அடுத்தவன் உயிரையும் எடுக்கும் அது நம் உயிரையும் குடிக்கும். யூதாசின் திட்டமிட்ட யுத்த முத்தம் இயேசுவையும் கொன்றது அதன் குற்ற உணர்வே யூதாசின் உயிரையும் எடுத்தது.  



யூதாசின் முத்தம் நமக்குப் பாடம் எடுக்கிறது. 

அன்பின் வெளிப்பாட்டில் இயல்பாய் இருங்கள். யுத்தத்திற்கு திட்டமிடுவதைப் போல முத்தத்திற்கானத்  திட்டமிடலைத் தவிருங்கள்.  
அன்பென்னும் போர்வையில் வைத்து துரோக முத்தம் கொடுத்து ஏமாற்றுவதைத் தவிருங்கள். உங்கள் விருப்பத்திற்காக உங்களை அறிந்தவரையோ அறியாதவரையோ பலிகடாவாக மாற்றாதீர்கள்
இருவரில் ஒருவருக்கு அது துன்பம் தருமெனில் ஒருவரிடம் அன்பு இல்லை என்பதை உணருங்கள்
உங்களின் ஏமாற்றத்திற்காகவோ, தேவைக்காகவோ, பழிவாங்கவோ அன்பின் போர்வையில் எதைச்செய்தாலும் அது உயிரழிப்பிற்குச் சமம்
அது ஒருபோதும் நம்மை நிம்மதியாய் உறங்க விடாது. அதைத் தொடர்ந்து அது நம் உயிரையும் குடிக்கும்

=        =        =

[கடவுளின் பிரதிநிதிக்காக எழுதப்பட்டது]