Showing posts with label இயற்கைச் சீற்றம். Show all posts
Showing posts with label இயற்கைச் சீற்றம். Show all posts

Tuesday, 2 July 2013

இயற்கை, முன்அறிவிப்பு, அனுதாபங்கள்

நான் எழுத வந்து ரொம்ப நாளாச்சு. மூச்சு விட நேரமில்லை முடிவெட்ட நேரமில்லை. எல்லாம் இன்றோடு முடிந்து இன்னும் மூன்று நாட்கள் கொஞ்சம் வேலைப்பளு இல்லாமல் இருக்கலாம். நிறைய நடந்து விட்டது. இப்போதைக்கு ஒன்று மட்டும்.

இயற்கையின் சீரழிவிற்கு எல்லைகள் கிடையாது என்பதை உத்தர்கண்ட் மாநிலத்தில் வெள்ளம் மீண்டும் நினைவு படுத்தி இருக்கிறது.  இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஆனால் வெறும் அனுதாபங்களோடு மட்டும் இதனை நிறுத்திக் கொள்ள வேண்டுமா என்கிற கேள்விகளை கேட்டாக வேண்டும். பல ஆயிரக்கணக்கான மக்களை காவு வாங்கியிருக்கும் இந்தக் காட்டாற்று வெள்ளம் வரும் என்று முன்பே தெரியுமா தெரியாதா? அடிக்கத் ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து ராக்கெட் பறக்கிறது. வானிலை முன்னறிவிப்பை நமக்குத் தெரியப்படுத்தும் தொழில் நுட்பம் நமக்கு இல்லை... அப்படியே இருந்தாலும் வரும் முன் என்ன செய்ய வேண்டும் என்கிற தயார் மன நிலை, மக்களைக் காப்பாற்ற துரித நடவடிக்கை....ரொம்பக் குறைவு.

[உடனே, காப்பாற்றச் சென்று இறந்த இராணுவ வீரர்களை நினைவு படுத்தி என்னைக் குற்றவாளியாக்க முயற்சிக்காதீர்கள்... அவர்கள் இறந்த ஹெலிகாப்டர்களை ஊழலில் தரம் குறைந்தவைகளாக வாங்கியதால் வந்தது.... வெறும் தொழில் நுட்பக் கோளாறால் மட்டுமல்ல.... அதை ஒழுங்காகச் செய்திருந்தால் இந்த இராணுவ வீரர்கள் இறந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை].

மழை வருமா இல்லையா, எந்த அளவுக்கு வரும் என்பது வரை இன்று துல்லியமாக கூகுல் முதல் யாகூ வரை தெளிவாகச் சொல்கின்றன... ஆனால் அதைக் கண்டு அதற்கான முன் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அரசுதான்... மழை பெரு வெள்ளமாக  மாறுவது, மரங்களை வெட்டி காடுகளை அழிப்பது போன்ற நமது பணம் பார்க்கும் எண்ணம்தான் என்பதும் உண்மைதானே... 

எனவே வெளி நாட்டு கட்டளைகளை  ஏற்று பொருளாதார சீர் திருத்தம் என்ற பேரில், வெளி நாட்டு நிறுவனங்களுக்கும், தொழில் நுட்பம் என்ற பேரில் நாட்டை அழிவுப் பாதிக்கும் கொண்டு செல்லும் இந்த மன நிலையில் கொஞ்சம் மாற்றம் வந்தாலே போதும் பல ஆயிரக் கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்ற முடியும். 

 சரி ஒரு மாதத்திற்கு முன்பே அறிக்கை தரக் கூடிய வானிலையின் மாற்றத்தைக் கண்டு பிடிக்க முடியாமலேயே இந்திய மக்கள் இப்படி ஆயிரக் கணக்கான மக்கள் இறந்து போயிருக்கிறார்களே ... சொல்லாமலே வரும் விபத்துகளை... [அணு உலை] அது கொண்டு வரும் விபரீதங்களைப் பற்றி நாம் யோசிப்பது கூட இல்லை என்பது வேதனைதான்... அதனால் முன்பே 
நாம் தமிழக மக்களுக்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வோம்.

அனுதாபங்களை இறந்தவர்களுக்கு மட்டும்தான் சொல்ல வேண்டும் என்பதில்லை - இறக்க இருக்கிறவர்களுக்கும் சொல்லலாம். நான் செய்தது தவறென்றால்....

குஜராத் மாநில காங்கிரஸ், உடல்நலக் குறைவோடு இருக்கிற நெல்சன் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறது. 
நெல்சன் மண்டேலாவுக்கும் காந்தியின் அஹிம்சாவுக்கும் நிறையத் தொடரபு இருக்கிறது என்பதை உலகம் அறியும். அந்த நெருக்கத்தில்தானோ என்னவோ வேறு யாரும் அனுதாபம் தெரிவுக்கும் முன்பே குஜராத் மாநில காங்கிரஸ் ரொம்ப வேகமாகவே அவர் இறப்பதற்கு முன்பே அனுதாபத்தைத் தெரிவித்திருக்கிறது. அதனால் அனுதாபம் தெரிவிப்பதில் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.






Wednesday, 12 June 2013

"மூணு படம் நாலு விஷயம்"

ஜெர்மன் சமாச்சாரம் என்றால் நம்பி வாங்கலாம் என்று எல்லாரும் நினைப்பது உண்டு. இன்றைக்கும்  ஜெர்மன் குவாலிடி பற்றி நிறைய தம்பட்டம்  உண்டு. ஆனால் என்ன செய்வது..  தொடர்ந்து பெய்து வந்த  நீர்   ஜெர்மனியில்  அணை  உடைந்து ஊருக்குள் வந்து விட்டதாம். இயற்கையின் சக்திக்கு முன்பு எந்த தொழில் நுட்பமும் ஒன்றும் இல்லை.
இது திரு நாராயண சாமியின் கவனத்திற்கு.....



இந்தியாவும்  பாகிஸ்தானும் தொடர்ந்து அடிச்சிக்குது. ஆனால் வாரம் இருமுறை செல்லும் இரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் லக்கேஜ்ஜை ஸ்கானர் செய்யும்   இயந்திரம் பழுது ஆகி ரொம்பநாள் ஆயிடுச்சாம். என்னத்த சரி பண்ணினாலும் நடக்குறது கட்டாயம் நடக்கும்.  நடக்காதது கட்டாயம் நடக்காதுன்னு அதைச் சரி பண்ணாமலேயே விட்டுட்டாங்களாம்.


அமெரிக்காவின் 29 வயது எட்வர்ட் ஸ்நோடவுன் அமேரிக்கா எப்படி எல்லார் தலைக்கும் மேல பம்பரம் விடுதுன்னு ஹாங்காங் போய் உலகத்துக்கு எல்லாம் தெரியப் படுத்தி இருக்காரு. அதாவது இன்டர்நெட் மூலமாக எல்லாரின் கணக்குகள்  எல்லாவற்றையும், எல்லார் பேசுவதையும் ஒட்டுக் கேட்கிறதாம். அது மட்டுமல்ல மற்ற நாடுகளோடு போட்டிருக்கிற  ஒப்பந்தங்களைக் கூட சீரியசாக எடுத்துக் கொள்வது  இல்லையாம்.  உரிமை பேசுற நாட்டுல இப்படி நடக்குது... இதைக்கேட்டு ஐயையோ ஆனந்தமே ன்னு பாட்டு பாடுறத விட்டுட்டு - ஷாக் ரியாக்ஷன் குடுத்தாராம் நம்ம நாட்டு மேதை ...  இங்க அப்புடி ஒன்னும் நடக்காத மாதிரி... ஒருவேளை உண்மையா இருக்குமோ... பார்டர் விட்டு பார்டர் போற வண்டிகளையே ஒழுங்க நாம பாக்குறதில்லை இதுல போய்  யாராவது டெலிபோன  ஒட்டுக் கேப்பாங்களா என்ன?





இந்தியாவில ராஜஸ்தான் மாநிலத்தில் ஒருவருக்கு - படிக்காத படிப்புக்கு, விண்ணப்பிக்காத தேர்வுக்கு, தேர்வு எழுத மத்திய அரசுத் தேர்வாணையம் ஒபாமா புகைப்படத்தோட தேர்வு அனுமதிச்  சீட்டு வழங்கியிருக்கிறதாம்... இதக் கேட்டா ஒபாமா ஷாக் ஆவாரா மாட்டாரா...




ஏன்  இப்புடி? தொழில் நுட்பம் பல சமயங்களில் கேவலமாய் பிய்த்துக்  கொள்ளும் என்பதற்கான சமீபத்திய உதாரணங்கள் இவைகள்...





Sunday, 29 August 2010

இயற்கையின் கொடூரமும் - இஸ்லாமிய எதிர்ப்பும்

1926 க்குப் பிறகு பாகிஸ்தானை சிதறடித்திருக்கிற காட்டாற்று வெள்ளம் இது. ஏறக்குறைய 20 மில்லியன் மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். 1.2 மில்லியன் வீடுகள் அழிக்கப் பட்டிருக்கின்றன.   பாகிஸ்தானின் மொத்தப் பரப்பில் ஏறக்குறைய 20 சதவீதம் அதாவது 160,000 சதுர கிலோமீட்டர்கள் பாதிக்கப் பட்டிருக்கின்றன. உடனடி தேவையாக 460 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவை என் ஐ. நா. கூறியிருக்கிறது.

ஆனால் - மற்ற எந்த நாடுகள் இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்டாலும் - உடனடியாக எல்லா நாடுகளின் உதவியும் எளிதாகக் கிடைத்து விடும்.
இப்போதும் எல்லா நாடுகளும் உதவி செய்கின்றன - ஆனால் மிகவும் மெதுவாக நடை பெறுகின்றன.

என்ன காரணம்?
  1. இறப்பு எண்ணிக்கை மிகவும் குறைவு- ஏறக்குறைய 1200 பேர் இறந்திருக்கலாம்.  சுனாமியினால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். அல்லது ஹெயிட்டியில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.ஒரு வேளை, இறப்பின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிற போது மட்டுமே மக்களின் இதயங்கள் திறக்கின்றன என்பது உண்மையாக இருக்கலாம்.
  2. ஐரோப்பிய நாடுகள் - பாகிஸ்தானுக்கு அனுப்பப் படுகின்ற பணம் தீவிரவாதிகள் கையில் கிடைத்து விடுமோ என்று அஞ்சுகின்றன. அதனடிப்படையில், தங்கள் பணத்தைக் கொண்டே தங்களை மீண்டும் தாக்குவதற்கு அவர்கள் சக்தி படைத்தவர்களாக ஆகி விடுவார்களோ என்கிற பயம் - சாதாரண மக்களிடத்தில் கூட இருக்கின்றது.
  3. தங்கள் நாட்டில் இவ்வளவு வறுமையும் அடிப்படைத் தேவைகளும் இன்றி மக்கள் இருக்கின்ற போது எதற்கு பாகிஸ்தான் பணத்தை அணு குண்டு வெடிப்பிற்குச் செலவு செய்கிறது. தங்கள் நாட்டின் அடிப்படைத் தேவையை நிறைவேற்றாமல் வெடி குண்டுகளுக்குச் செலவிடுகிற ஒரு நாட்டிற்கு, நான் உதவி செய்ய வேண்டுமா என்கிற ஒரு ஐரோப்பியனின் கேள்விக்கு என்ன பதில் சொல்லலாம்?
  4. பாகிஸ்தான் அரசில் நடக்கின்ற ஊழல் மிகப் பெரிது - என்று சில இஸ்லாமியப் பத்திரிக்கைகளும் தொலைக் காட்சிகளுமே கூட சொல்கிற அளவிற்கு இருப்பதனால் நமது உதவி சரியாய் சென்று சேருமா என்கிற ஐயம்.
  5. எல்லாவற்றிற்கும் மேலாக - ஒரு வேலை இஸ்லாமிய எதிர்ப்பின் வெளிப்பாடோ என்று என்ன வைக்கிறது.
  6. ஐரோப்பிய நாடுகளை விடுங்கள். அருகிலுள்ள நமது நாடு உடனடியாக இருபத்து மூன்று மில்லியன்களை கொடுத்த போது பாகிஸ்தான் ஏற்கத் தயக்கம் காட்டியது. உதவியை ஏற்றுக்கொள்ள ஒரு நாடு தயக்கம் காண்பிக்கிற போது, மற்றவர்கள் உதவி செய்யத் தயங்குவது சரியோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
  7. ஆனாலும், நமது நாட்டின் மக்களின் எண்ணம் எந்த அளவுக்கு பாகிஸ்தான் இஸ்லாமியர்கள் மீது இருக்கின்றது என்பது கேள்விக்குரியது. ஆப்ரிக்க நாடுகளில் நடக்கும் இயற்கை வன்முறைக்கு கூட நமது மனம் இரங்கும் - ஆனால் அது பாகிஸ்தான் என்கிறபோது மனம் கூட இறங்க மறுத்து விடுகிறது. ஒரு குரூர மனம் - ஏதோ இயற்கையே இந்தியர்களின் சார்பாக போரிட்டது போலவும் அதில் அவர்கள் சிதறடிக்கப் படுவது மிகவும் ஆறுதலாக இருப்பது போலவும்...
  8. அந்தவிதத்தில் ஐரோப்பியர்கள் மேலானவர்கள்தான் - அவர்களைக் காட்டிலும் நாமும் இஸ்லாமியர்களை எதிர்க்கிறோம். அது இந்தக் கொடூர நிகழ்விலும் வெளிப்படுவதுதான் வேதனை.