Sunday, 29 August 2010

இயற்கையின் கொடூரமும் - இஸ்லாமிய எதிர்ப்பும்

1926 க்குப் பிறகு பாகிஸ்தானை சிதறடித்திருக்கிற காட்டாற்று வெள்ளம் இது. ஏறக்குறைய 20 மில்லியன் மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். 1.2 மில்லியன் வீடுகள் அழிக்கப் பட்டிருக்கின்றன.   பாகிஸ்தானின் மொத்தப் பரப்பில் ஏறக்குறைய 20 சதவீதம் அதாவது 160,000 சதுர கிலோமீட்டர்கள் பாதிக்கப் பட்டிருக்கின்றன. உடனடி தேவையாக 460 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவை என் ஐ. நா. கூறியிருக்கிறது.

ஆனால் - மற்ற எந்த நாடுகள் இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்டாலும் - உடனடியாக எல்லா நாடுகளின் உதவியும் எளிதாகக் கிடைத்து விடும்.
இப்போதும் எல்லா நாடுகளும் உதவி செய்கின்றன - ஆனால் மிகவும் மெதுவாக நடை பெறுகின்றன.

என்ன காரணம்?
  1. இறப்பு எண்ணிக்கை மிகவும் குறைவு- ஏறக்குறைய 1200 பேர் இறந்திருக்கலாம்.  சுனாமியினால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். அல்லது ஹெயிட்டியில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.ஒரு வேளை, இறப்பின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிற போது மட்டுமே மக்களின் இதயங்கள் திறக்கின்றன என்பது உண்மையாக இருக்கலாம்.
  2. ஐரோப்பிய நாடுகள் - பாகிஸ்தானுக்கு அனுப்பப் படுகின்ற பணம் தீவிரவாதிகள் கையில் கிடைத்து விடுமோ என்று அஞ்சுகின்றன. அதனடிப்படையில், தங்கள் பணத்தைக் கொண்டே தங்களை மீண்டும் தாக்குவதற்கு அவர்கள் சக்தி படைத்தவர்களாக ஆகி விடுவார்களோ என்கிற பயம் - சாதாரண மக்களிடத்தில் கூட இருக்கின்றது.
  3. தங்கள் நாட்டில் இவ்வளவு வறுமையும் அடிப்படைத் தேவைகளும் இன்றி மக்கள் இருக்கின்ற போது எதற்கு பாகிஸ்தான் பணத்தை அணு குண்டு வெடிப்பிற்குச் செலவு செய்கிறது. தங்கள் நாட்டின் அடிப்படைத் தேவையை நிறைவேற்றாமல் வெடி குண்டுகளுக்குச் செலவிடுகிற ஒரு நாட்டிற்கு, நான் உதவி செய்ய வேண்டுமா என்கிற ஒரு ஐரோப்பியனின் கேள்விக்கு என்ன பதில் சொல்லலாம்?
  4. பாகிஸ்தான் அரசில் நடக்கின்ற ஊழல் மிகப் பெரிது - என்று சில இஸ்லாமியப் பத்திரிக்கைகளும் தொலைக் காட்சிகளுமே கூட சொல்கிற அளவிற்கு இருப்பதனால் நமது உதவி சரியாய் சென்று சேருமா என்கிற ஐயம்.
  5. எல்லாவற்றிற்கும் மேலாக - ஒரு வேலை இஸ்லாமிய எதிர்ப்பின் வெளிப்பாடோ என்று என்ன வைக்கிறது.
  6. ஐரோப்பிய நாடுகளை விடுங்கள். அருகிலுள்ள நமது நாடு உடனடியாக இருபத்து மூன்று மில்லியன்களை கொடுத்த போது பாகிஸ்தான் ஏற்கத் தயக்கம் காட்டியது. உதவியை ஏற்றுக்கொள்ள ஒரு நாடு தயக்கம் காண்பிக்கிற போது, மற்றவர்கள் உதவி செய்யத் தயங்குவது சரியோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
  7. ஆனாலும், நமது நாட்டின் மக்களின் எண்ணம் எந்த அளவுக்கு பாகிஸ்தான் இஸ்லாமியர்கள் மீது இருக்கின்றது என்பது கேள்விக்குரியது. ஆப்ரிக்க நாடுகளில் நடக்கும் இயற்கை வன்முறைக்கு கூட நமது மனம் இரங்கும் - ஆனால் அது பாகிஸ்தான் என்கிறபோது மனம் கூட இறங்க மறுத்து விடுகிறது. ஒரு குரூர மனம் - ஏதோ இயற்கையே இந்தியர்களின் சார்பாக போரிட்டது போலவும் அதில் அவர்கள் சிதறடிக்கப் படுவது மிகவும் ஆறுதலாக இருப்பது போலவும்...
  8. அந்தவிதத்தில் ஐரோப்பியர்கள் மேலானவர்கள்தான் - அவர்களைக் காட்டிலும் நாமும் இஸ்லாமியர்களை எதிர்க்கிறோம். அது இந்தக் கொடூர நிகழ்விலும் வெளிப்படுவதுதான் வேதனை.

No comments:

Post a Comment