நேர்மை + எளிமை = கலாம் ! ?
- அ. பிரபாகரன்
அப்துல் கலாம் குறித்து எனக்கு எப்போதுமே பெரிய ஈடுபாடு இருந்தது இல்லை. உங்களில் சிலருக்கு அவர் ஆதர்சமாக இருக்கலாம். ஆனால் எனக்கு இல்லை. எனக்கு எப்போதுமே மனிதர்கள் அதீதமாக சிலாகிக்கப்படுவதில் உடன்பாடு இருந்ததில்லை. அதனால்தானோ என்னவோ எனக்கென்று பிடித்த தலைவர் என்றோ, நடிகர் என்றோ, கட்சி என்றோ யாரும் இல்லை. எல்லா மனிதர்களுமே குறைகளோடும் நிறைகளோடும் வாழ்ந்து செல்கிறார்கள். சிலர் தம் குறைகளை நேர்மையான விதத்தில் அணுகுவதாலேயே உயர்ந்து நிற்கின்றார்கள்.
அப்துல் கலாம் சில மாதங்களுக்கு முன் எம் கல்லூரியில் விழா ஒன்றிற்கு வந்தார். அவர் வருகை குறித்து எங்கள் நிறுவனம் மிகவும் பரபரப்பாயிருந்தது. பல முன்னேற்பாடுகள் நடந்தன. அவர் வருவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பே அவரது பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் வந்து பார்த்து சென்றார்கள். அவர் வருவதற்கு சில மணி நேரங்கள் முன்பிருந்தே மெட்டல் டிடெக்டர்களோடும், பயமுறுத்தும் மோப்ப நாயோடும் வந்து நின்று எல்லோரையும் சோதித்துக் கொண்டிருந்தனர். அவர் உரை நிகழ்த்தப்பட்ட அரங்கின் வாயிலில் தற்காலிக சோதனை வாயில்கள் அமைத்து, உடல் முழுவதையும் தடவிப் பார்த்து அனுப்பினர். முழுவதும் நிரம்பியிருந்த அரங்கத்தில் அங்கு பயிற்றுவிக்கும் எங்கள் எல்லோருக்கும் முதல் வரிசை ஒதுக்கப்பட்டிருந்தது.
நான் ஏதோ ஒரு விதத்தில் கொஞ்சம் பரபரப்பும், நிறைய அலட்சியமுமாக அமர்ந்திருந்தேன். குறித்த நேரத்திற்கு கொஞ்சமும் தவறாமல் இந்திய நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் வந்தார். மேடையில் ஏறியவுடனேயே தனக்கென்று தனியாகப் போடப்பட்டிருந்த வி. ஐ. பி. நாற்காலியை கோபத்துடன் பார்த்து அதை அப்புறப்படுத்தச் சொன்னார். மேடையில் மற்றவர்களுக்குப் போடப்பட்டிருந்த சாதாரண நாற்காலி கொண்டுவரப்பட்டது. எல்லோரும் அதிசயித்தார்கள் 'எவ்வளவு எளிமையாய் இருக்கிறார்' என்று. எனக்கு இதில் ஆச்சர்யப் படுவதற்கு ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. நான் இப்படிப்பட்ட gimmick களை வியப்போடு பார்ப்பதில்லை. காரணம், சமூகத்தில் உங்களது அந்தஸ்து உயர உயர உங்களது எளிமை பாராட்டப்படும். காரணம் காலப்போக்கில் அதுவே உங்களது ஆளுமையின் மூலதனமாகிவிடும். சமூக அடுக்கின் கீழ்நிலையில் உள்ளவனின் எளிமை தரித்திரமாகப் பார்க்கப்படும். காந்தியின் வெற்றுடும்பு ஆராதிக்கப் படுவதும், ஒரு தலித்தின் வெற்றுடம்பு கேவலப்படுத்தப் படுவதும் இச் சமூகத்தின் அருவருப்பான நகை முரண்களில் ஒன்று.
கலாமின் ஆளுமை குறித்து ஏதோ ஒரு விதத்தில் விமர்சன மனநிலையோடு உட்கார்ந்திருந்த என்னை அவரது பேச்சு ஈர்த்தது. அன்று அவர் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு பற்றிப் பேசினார். ஏறத்தாழ ஒருமணிநேரம் நிகழ்த்தப்பட்ட உரையில் நான் முழுவதுமாக மூழ்கிப் போனேன். நான் என் வாழ்க்கையில் மிகவும் ஈடுபாட்டோடு கவனித்த உரைகளில் ஒன்றாக அது அமைந்தது. பிறகு யோசித்துப் பார்த்தபோதுதான் உண்மை புலப்பட்டது.
அவரது உரையின் ஈர்ப்புக்குக் காரணம் அதில் அடிப்படையான நேர்மை இருந்தது. வெறுமனே கோசங்களாக அமையாமல் அவரது நம்பிக்கைகளின் வெளிப்பாடாக அவரது பேச்சு இருந்தது. பலருக்கும் அவரது உரை பிடித்திருந்தாலும் எனக்கு அதில் ஈர்ப்பு ஏற்பட்டது இப்போதும் வியப்புதான். பிறகு விழா இறுதியில் அவரோடு குழுவாக புகைப்படம் எடுக்க அவரருகில் வந்தபோது புன்னகைத்தார். அதுவும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
இப்போது அந்த கலாம் கடந்த வாரம் கூடங்குளம் சென்று அதே போன்ற ஓர் உரையைப் பத்திரிகையாளர்கள் முன்பு செய்திருக்கிறார். அதற்கு கண்டனங்களும் ஆதரவுக் குரல்களும் மாறி மாறி வந்து கொண்டேயிருக்கின்றன.
கூடங்குளம் பற்றி நான் பேசப்போவதில்லை. அதுகுறித்த உள் விவகாரங்களில் நான் சென்று விவாதிக்கிற அளவுக்கு எனக்கு விபரமில்லை. அதை மக்கள் மேல் உண்மையிலேயே அக்கறையுள்ள நிபுணர்களுக்கு விட்டுவிடுவோம். இப்போது நான் சொல்ல வந்தது கலாமின் கருத்து பற்றி.
கலாம் சொன்ன கருத்துகளில் எனக்கு கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை. காரணம் ஏனென்று (16 . 11 11 ) தினமணியில் வந்திருந்த நெடுமாறனின் கடிதத்தையும், கடந்த வாரம் கல்கியில் வந்திருந்த ஞாநியின் கடிதத்தையும் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். இருப்பினும் கலாமின் இந்தப் பேட்டியிலும்கூட ஒரு நேர்மை இருப்பதாக உணர்கிறேன். கருணாநிதியும் ஜெயலலிதாவும் இந்தக் கருத்து உள்ளவர்கள்தான். ஆனால் சொல்ல மாட்டார்கள். கலாம் நேர்மையாகத் தன கருத்தைச் சொல்லியிருக்கிறார். ஆனால், அவரைச்சொல்லவைத்தவர்கள் நேர்மையில்லாதவர்கள். அடிப்படையில் நாணயமோ மக்கள் கரிசனையோ இல்லாதவர்கள். தாங்கள் சொல்லும் ஒரு கருத்தை இப்படி அடிப்படை நாணயமில்லாமல் மக்கள் மத்தியில் பிரபலமான பிம்பங்களைக்கொண்டு சொல்ல வைப்பது ஜனநாயகத்தில் அபத்தமானதும் ஆபத்தானதுமாகும். கலாம் போன்ற பிம்பங்கள் இதற்குதான் பயன் படுத்தப்படுகிறார்கள்.
மத்திய அமைச்சர் நாராயணசாமி (அவரது முகத்தை தொலைக்காட்சியில் பாரத்தால் ........................ என்னால் தவிர்க்க முடியவில்லை) காரசாரமாகப் பேட்டி கொடுக்கிறார். கொஞ்சம்கூட நேர்மையற்றதாகவும் அருவருப்பானதாகவும் இருக்கிறது அவரது பேட்டி. இந்திய ஜனநாயகம் எவ்வளவு பாரபட்சமானது என்பதைச் சொல்லுவதாக அவரது பேட்டி அமைகிறது. கூடங்குளம் போராட்டத்தின் பின்னணியில் உள்ளவர்களின் கணக்கு வழக்கை ஆராயவேண்டும் என்கிறார். இப்படிப் பேட்டி கொடுக்கின்ற அந்த நொடியில் அவரது கணக்கு வழக்கை ஆராய்ந்தால் ஒரு அரசியல்வாதியான அவரிடம் எவ்வளவு பொய்கள் இருக்கும்! ஆனால் அதிகாரம் தந்த கொழுப்பிலும் இந்திய ஜனநாயகத்தின் பாரபட்ச அமைப்பிலும் நம்பிக்கைகொண்டு எந்த லஜ்ஜையுமின்றி திராணியோடு பேசுகிறார்.
கூடங்குளத்தை எதிர்ப்பவர்களின் கணக்கைதோண்டுவதைபோலவே ஆதரிப்பவர்களின் கணக்கையும் தோண்டுவோமா? எல்லா காங்கிரஸ்காரர்களின் வருமானவரியையும் கொண்டு வாருங்கள். பாப்போம்.
என்னைப் பொறுத்தவரையில் கூடங்குளத்தின் நியாயம் எளிமையானது.
அது நம் நாட்டின் ஜனநாயகம் சம்பந்தப்பட்டது.
இந்தப் பிரச்சினையை நாம் ஒரு ஜனநாயகப் பிரச்சினையாக அணுகவேண்டும்.
அணுமின்நிலையம் வேண்டுமா, வேண்டாமா என்பது ஒரு புறம் இருக்க, இதைப் பத்து லட்சம் (சொல்லப் போனால் 17 லட்சம்) மக்களின் ஜனநாயகப் பிரச்சினையாகவும், வாழ்க்கைப் பிரச்சினையாகவும் பார்க்கவேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில் பத்து லட்சம் மக்கள் உரேனியம் பயத்தோடே அன்றாடம் தூங்கி எழுந்து, பல் துலக்கி, கடலுக்கும், வயலுக்கும் இன்ன பிற காரியங்களுக்கும் சென்று வந்து வாழ வேண்டுமென்பது எவ்வளவு கொடுமை. இந்தப் பயமெல்லாம் தேவையற்றது என்று அணுமின்நிலையத்தை ஆதரிப்பவர்கள் சொல்லக்கூடும்.ஆனால், பெரும்பான்மையினர் அங்கு அப்படிதானே நினைக்கிறார்கள்.
அவர்களெல்லாம் முட்டாள்கள் அறியாமையினால் சொல்கிறார்கள் என்று நீங்கள் வாதிட்டீர்களேன்றால் அது முடியாது. பெரும்பான்மையினர் குரலை நீங்கள் மதிக்கத்தான் வேண்டும். ஜனநாயகம் என்பதே நம் நாட்டில் பெரும்பான்மை வாதம்தான். இந்தப்பெரும்பான்மையினரின் அறியாமையினால்தானே நாரயணசாமி போன்ற .... களெல்லாம் ஜெயித்து அமைச்சராகி பேட்டி எல்லாம் கொடுக்க முடிகிறது. கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த், இலங்கை கொலைப் புகழ் சோனியா, பேடி எல்லாம் அதிகாரத்தை சுவைக்க முடிகிறது. அப்போது மட்டும் பெரும்பான்யினரின் அறியாமை இனிக்கிறது, இப்போது கசக்கிறதா?
பி. கு. இப்படியெல்லாம் நான் சொல்லுவதால் அணு எதிர்ப்புக்கு வலு சேர்க்க வேறு கருத்து இல்லையென்று தவறாகப் புரியாதீர்கள்.
- அ. பிரபாகரன்
அப்துல்கலாமைப் பார்க்கச் சென்ற உங்களைத் தடவிப் பார்த்தார்கள். அமேரிக்கா சென்ற அப்துல்கலாமை அங்கே தடவிப் பார்த்தார்களாம்ல...