Showing posts with label சாதி. Show all posts
Showing posts with label சாதி. Show all posts

Wednesday, 12 November 2014

நான் ஒரு பிராமணன்

நான் ஒரு பிராமணன். நான் பிராமனாய் இருப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். என்றும் எப்போதும், பிராமணராக வாழ்வதில் அக்கறை கொள்கிறேன் என்று உறுதி மொழி எடுக்கும் விதமாய் பேசி இருக்கிறார், மேன்மை தங்கிய சுப்புரமணி சாமி அவர்கள்.

எந்த ஒரு காலத்திலும், பிராமணர்கள் சொல்லுவதையே ஆட்சியில் இருப்பவர்கள் கேட்டிருப்பதாகவும், அதுவே அவர்களது தொழில் என்பது போலவும் பேசியிருக்கிறார். தான் சொல்லுவதை  கேட்பதாகவும், இது மற்ற இலாகாக்களை விட மேலானது என்றும் சொல்லியிருக்கிறார். அதாவது எப்பொழுதும், இந்தியப் பிராமணர்களும், படித்தவர்களும் பதவி வகித்ததில்லை என்றும், தான் சொல்லுவதை மற்றவர்கள் கேட்பதே தனக்குப் போதும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

அது மட்டுமல்ல இன்னும் ஒரு படி மேலே சென்று, மோடி அவர்களுக்கு பிராமணிய குணங்கள் இருப்பதால் அவரை பிராமணராக நியமிக்கிறேன் என்றும் தனது ட்விட்டீரில் மொழிந்திருக்கிறார்.

நான் என்ன நினைக்கிறேன்னா?


  1. எப்பவும் தலித்திய கட்சிகளைக் குறை சொல்லும் மகராசன்கள், சாதியம் ஒன்று இல்லை என்றும், தலித்துகள் பிராமணர்கள் பற்றி சொல்லுகிற கூற்று அனைத்தும் தவறு அல்லது அருதப் பழசு என்று சொல்லுபவர்கள் இதைக் கொஞ்சம் படிக்கணும்னு தோணுது.
  2. சுப்ரமணிய சாமி மேல பிராமணர்கள் கேஸ் போட்டா நல்லா இருக்குமான்னு சொல்லுங்க - பிராமணர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் பிரமனர்களைப் பற்றி தவறாக, எல்லாரையும், ஆட்டுவிக்கும் கருவிகளாக மட்டுமே சித்தரித்தது தவறு என்று சொல்ல வேண்டிய கட்டாயம்.
  3. இல்லை அவர் சொல்லியது சரி என்றால், பிராமணர்கள் அல்லாதவர்கள் அறிவற்றவர்கள் என்று ஆகி விடுகிறது. பதவிக்காக ஆசைப் படுபவர்கள் எல்லாம் பிராமணர்கள் அல்லாதவர்கள் என்கிற ஒரு கருத்தையும் திணிப்பது, மற்ற எல்லாரையும் தவறாக சித்தரிப்பதற்கு சமம். அதனால் மற்றவர்கள் அவர் மீது வழக்குத் தொடுப்பது சாத்தியமா என்று யோசிக்கலாம்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சுட்டவும் - மோடி பிராமணர் 

நான் இலாகா இல்லை என்பதானால் வருத்தப் படவில்லை. 


°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

எம். எஸ். எஸ் பாண்டியனின் மரணத்திற்கான இரங்கல்.

இப்படி பிரமணித்தின் மேலாண்மை குறித்த விவாதம் மீண்டும் சூடு பிடித்துக் கொண்டிருக்கும் போது, உயர்திரு பாண்டியனின் மரணம் பேரிடியாய் வந்திருக்கிறது.

பிரமணியம், தலித்தியம், மற்றும், சாதியத்தின் பல்வேறு வகையான ஆதிக்கம் பற்றி ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்த ஒரு எழுத்தாளர். சுப்ரமணிய சுவாமி போன்றோர் உரத்துக் குரல் எழுப்பும் வேளையில், பாண்டியன் போன்றோர் இன்னும் அதிமாகவும், உரத்த குரலிலும் உண்மையை பதிவு செய்யவும், எதிர்ப்பைத் தெரிவிக்கவும் வேண்டியிருக்கிறது.

 அது வெறும் பிரமணிய எதிர்ப்பாக மட்டுமல்ல சாதியத்திற்கெதிரான எதிர்ப்பாகவும் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

எஸ். வி. ராஜதுரை அவர்களின் கட்டுரை





Thursday, 11 July 2013

கொலைகார்கள் நாங்கள்

  • உத்திரகான்ட்டில் ஒரே நாளில் ஆயிரம் உயிர்கள் ஒன்றாய் விழுந்தபோது கூட நான் கலங்கிப் போகவில்லை.  ஆனால் ஆயிரம் ஆண்டுகளாய் உன் போன்றோர் ஒவ்வொருவராய் இறக்கும் போதுதான் நான் வெறுத்துப் போகிறேன். 
  • உன் இறப்பு கொலையோ தற்கொலையோ எனக்குத் தெரியாது ஆனால் கொலைகாரர்கள் யாரென்று தெரியும் ... வேறு யார் நாங்கள்தான்... 
இளவரசனின் தற்கொலைச் செய்தியை - சில தமிழ் பத்திரிக்கைகள்... தர்மபுரி கலவரத்திற்குக் காரணமான இளவரசன் தற்கொலை என்று செய்தி வெளியிட்டு இருந்தன... கலவரத்திற்குக் காரணமான பல அய்னாக் கைகள்  சுதந்திரமாய் இருந்தது மட்டுமல்ல அதை நியாப்படுத்தவும் செய்து களிப்பில் மிதந்து கொண்டு இருக்கும், இறந்து போன இளவரசனை காரணம் காட்டும் சாதி வெறியர்கள் நாங்கள் கொலைகாரர்கள்தானே... 


தனி மனித உரிமை பேசும் நாங்கள், திருமணத்திற்கு மட்டும் சாதிக்குள் உரிமை பேசி அதை எங்கள் உரிமையாகவும் பேசி உன்னைக் கலகக்காரனாக்கின நாங்கள் கொலைகாரர்கள் தானே!

தீண்டாமை பாவச்செயல் உரக்க சொல்வோம் நாங்கள் ஆனால் அது எழுத்தில் மட்டும் இருக்க வேண்டும் என்பதில் இறுதிவரை உறுதியாய் இருக்கும் நாங்கள் ...

இன்னும் பேசுவோம் மனித உரிமை.... இன்னும் பேசுவோம் தீண்டாமை பாவச் செயல் ... இன்னும் பேசுவோம் காதல் வாழ்க... 

ஆனால் இளவரசன்களை மட்டும் வாழ விடுவதாய் இல்லை...
வாழ்க காதல் ...  வாழ்க மனித உரிமை ... வாழ்க சுதந்திரம்...

Sunday, 12 May 2013

உண்மையான தேச பக்தர்கள் - கைதிகளே

தேச பக்தி கைதிகள்

  • பாகிஸ்தானிய சிறையில் கடந்த வாரம் சக கைதிகளால் தாக்கப்பட்ட சரப்ஜித்சிங் மரணமடைந்தார். எதனால் பாகிஸ்தானிய கைதிகள் அவரை தாக்கினார்கள்? அரசின் தூண்டுதலாக இருக்கலாம் அல்லது தற்செயலாக  நடந்த ஒரு நிகழ்வாக கூட இருக்கலாம்.
  • இந்த செய்தி வந்த உடனேயே ஜம்மு சிறையில் இருந்த பாகிஸ்தானிய சனாவுல்லா இந்தியக் கைதிகளால் தாக்கப் பட்டிருக்கிறார். இது நிச்சயமாக அரசின் தூண்டுதலின்றி  நிகழ வாய்ப்பே இல்லை. ஆனால் இதை யாராலும் நிரூபிக்க முடியாது. ஆனால் எதனால் இந்தத் தாக்குதல்கள் இங்கே நடந்தது? இந்திய தேசத்தின் மீது மிகுந்த பற்று கொண்ட பல பாரத மகன்கள் தவறாக தீர்ப்பளிக்கப் பட்டு சிறையில் இருக்கிறார்கள் போல தெரிகிறது. பாகிஸ்தான் சிறையில் கொல்லப்பட்ட ஒரு கைதிக்காக ராணுவ வீரர்கள் கூட கொதித்தெழாத நிலையில் இந்த சிறைமகன்கள்  உடனே பழி வாங்கினால் இவர்களைக் காட்டிலும் தேச பக்தி மிகுந்தவர்கள் யாராவது உண்டு என்று சொல்ல முடியுமா? இவர்களுக்குத்தான் நாட்டின்  குடிமகன்களுக்கான விருதைக் கொடுக்க வேண்டுமென நமது குடியரசுத் தலைவரை வேண்டி விருபிக் கேட்டுக் கொள்கிறேன்.
  • பாகிஸ்தான் சிறையில் கொல்லப்பட்ட இந்தியப் பிரஜைக்கு ஆதரவாக பாகிஸ்தானை வம்புக்கு இழுத்த அனைத்து அரசியல்வாதிகளும், இந்தியப் பிரதமரும் பாகிஸ்தானிய கைதி இந்தியச் சிறையில் இறந்ததற்காக "இந்தியா ஒரு காட்டு மிராண்டி அரசு" என்று சொல்ல  முன்வருவார்களா வர முடியுமா? ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு என்று சொல்லுவார்கள். 
வடக்கே ஒருவிதமான பக்தி என்றால் தெற்கே வேறு விதமான பக்தி நடக்கிறது.  வடக்கே சிறைக்குள் கலவரம் என்றால் இங்கே சிறை வைத்ததால் வெளியே கலவரம்.  அப்பா தியாகிகள் உள்ளே இருக்கிறார்கள் கலவரக் காரர்கள் வெளியே இருக்கிறார்கள் என்று அர்த்தமா? தெரியவில்லை.

பா.ம.வை ஒழிக்க சதி என்று அதன் முக்கிய நிறுவனர் சொல்லுகிறார். ஆளுநரிடம் மனு கொடுக்கிறார்.
தமிழக மக்களை ஒழிக்க சதி செய்கிறார் அவர் என்று நாம் யாரிடம் மனு கொடுப்பது?

எனக்கு ஒரு பட்டுதான் நினைவுக்கு வருகிறது...
தாஸ் தாஸ் சின்னப்பா தாஸ் தாஸ் ... பள்ளிக் கூடம் போகமலே பாடங்களை .... அவர் கூட மனசு மாறினதா பாரதிராஜா சொல்றாரு... பள்ளிக்கூடம் போய்  பாடம் படிச்சு மருத்துவராகி.... ரத்தம் எல்லாம் ஒண்ணுன்னு பார்த்தவங்க இன்னும் சாதி சாதின்னு பேசுறாகளே இதென்ன படிச்சு வாங்கின பட்டமா...

இதுக்காக சிறைச்சாலை போற மாதிரி செயல்கள் செய்து, பேசி... அந்தப் பக்தியை நிலை நாட்டுறாக ... அப்படியாவது தினமும் அவர்களைப் பற்றி நாம் எல்லாரும் பேசுறோம்லையா ...

Saturday, 4 May 2013

"முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்?" - அரசு மரியாதை செய்யுங்கள்


  • "முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்?" என்று ஒவ்வொருவரும் கிளம்பினால் தனது சரிந்த செல்வாக்கை மீண்டும் உயர்த்திக் கொள்ளலாம் என்றே நினைக்கிறார்கள். அப்படியே கைது செய்யப்பட்டால் காந்தியின் நிலைக்கு உயர்ந்து விடலாம் அல்லது ஹிட்லைரைப் போலவாவது இருந்து விடலாம் என்றெல்லாம் கனவு காணுகிறார்கள் - பாவம் அப்துல்கலாம் ... எதெற்கெடுத்தாலும் இந்தக் கனவு காணுங்கள் படாத பாடு படுகிறது!

  • எண்பது மற்றும் தொன்னூறுகளில் கொஞ்சம் கொஞ்சமாய் எல்லாரது கவனத்தையும் தங்களது பக்கமாய் திருப்பினார்கள்... பசுமை தரும் மரங்களை வெட்டி சாலையில் இட்டு தங்களது செல்வாக்கை விரித்த போது, கொஞ்சம் வாக்கு வங்கிகளைத் தன பக்கம் கொணர்ந்து, அதை தமிழக அரசியலில் ஒரு மிகப் பெரிய சக்தியாக மாற்றிவிட முடியும் என்றும் அதனால் அது திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக இருக்குமோ என்று தோன்றியது. வெறும் சாதியை முன் வைத்து அனைவரது கவனத்தையும் தங்கள் பக்கம் நிச்சயமாய்த் திருப்பினார்கள்.
  • சாதியைத் தாண்டி வந்தது போலக் காண்பித்தது நல்ல மாற்றமாகவே தெரிந்தது. அந்த சமயங்களில் அவர்கள் நடத்திய தமிழர் வாழ்வுரிமை மாநாடு என்பதும், அதைத் தொடர்ந்து வெளிவந்த புத்தகங்களும் உண்மையிலேயே தமிழரின் பெருமையை வெளிக் கொண்டுவந்தன என்பதும், சாதியத்தைக் கடந்து ஒரு மாற்று அரசியலை முன்வைக்கிற ஒரு சக்தியா அது வளர்வதையும் பார்த்து சிறு மகிழ்ச்சி அடைந்ததென்னவோ உண்மைதான்.

  • ஆனால் அது கொள்கைகளின்றி தேர்தலுக்குத் தேர்தல் தாவியதைப் பார்த்து  வெறுப்பு வந்தாலும் சரி கட்சியை வளர்க்கிற வரை இது தேவைப்படும் யுத்தியாகக் கருதிக் கொள்வோம் என்று வெறுப்பை மறைத்து வைத்தேன். அதன் பிறகு அதைக் கண்டு கொள்ளவும் இல்லை வெறுப்பும் இல்லை.

  • யாருமே கண்டு கொள்ளப்படாத சக்தியாக இல்லை என்கிற போது  சாதிக் காரர்களை எல்லாம் ஒருங்கிணைக்கிற மேதாவியாக இருந்து கொள்ளாலாம் என்று ஒவ்வொரு மாவட்டமாய்ச் சென்று சாதியத்தை விதைக்கிற மனப் பான்மை - முப்பது வருடங்களுக்கு முன்பு அவர்கள் செய்த யுத்திகளை மீண்டும் கையில் எடுக்கிற வித்தை என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.
  • ஊர் ஊராய்ச் சென்று மாநாடு நடத்தி எல்லாருக்கும் எதிராய்ப் பேசுவார்கள், பாதகம் விளைவிப்பார்கள், பிரிவினையை ஆழப்படுத்துவார்கள், அப்போதெல்லாம் மனித நேயம், உரிமை பற்றிப் பேசாத ஐ.நா. வரை சென்று வந்த மனித நேய ஆர்வலர்கள் என்று சொல்பவர்கள் எல்லாம் ஒருவரைக் கைது செய்த பின் அராஜகம் அக்கிரமம் என்று சாதி புத்தியை வெளிக் கொண்டு வருகிறார்கள்.

  • சாதி அரசியல் என்பது சாக்கடை அரசியலே... அதைத் தவிர வேறொன்றும் சொல்லவதற்கில்லை. பேருந்தைக் கொளுத்துவது - மரத்தை வெட்டுவது - கல் விட்டு எறிவது - இவைகளாலெல்லாம் எதையும் மீட்டு விட முடியாது. 
************************
சரப்ஜித் சிங் - பாகிஸ்தானிய சிறையில் அடைக்கப்பட்ட இந்தியர். பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவர் எனக் கூறி பாகிஸ்தானிய சிறையில் அடைக்கப்பட்ட ஒருவரை -
                                                   தியாகி என்று சொல்கிறார்கள் - 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறார் - மூன்று நாள் அரசு விடுமுறை விடப்படுகிறது - ஒரு கோடி இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப் படுகிறது .... அரசியல்வாதிகள், அதிகாரிகள் பங்கேற்கிறார்கள் என பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம்.

1991 ஆம் ஆண்டு கைது செய்து சிறையிலடைக்கப்பட்டு 2013 வரை சிறையில் இருந்த ஒரு மனிதன் இறந்ததற்கு இந்திய அரசும், ஊடகங்களும் நடத்தும் தேசிய உணர்வும், முதல் பக்க செய்திகளும், எனக்கு ஒரு பக்கம் மிகுந்த வேதனையைத்தான் தருவிக்கிறது. சரப்ஜித் சிங் சிறையில் கொடூரமாய்த் தாக்கப்பட்டது வருத்தம்தான். இந்தச் சமயத்தில் அவரைப் பற்றி எழுதுவது வேதனையாக இருந்தாலும் வேறு வழியில்லை.   

இந்திய அரசின் உளவாளி  என்று அவரை பாகிஸ்தான் குற்றம் சாட்டியிருக்கிறது. இந்தியா இல்லை என்றும், அவரது குடும்பத்தினர் குடிமயக்கத்தில் பாகிஸ்தானுக்குள்ளே சென்றுவிட்டார் என்றும் சொல்லுகிறார்கள். இந்தியாவின் உளவாளி அவர் இல்லையென்றால் "அவர் இந்தியாவின் வீர மைந்தர்" என்று இந்தியப் பிரதமர் ஏன் சொன்னார் என்று தெரியவில்லை. என்ன செய்து இந்தியாவின் வீரத்தைக் காண்பித்தார் என்றுதான் தெரியவில்லை.


இந்தியாவில் பாகிஸ்தானிய உளவாளிகள் செய்வது தவறென்றால் அங்கேயும் நமது உளவாளிகள் குழப்பம் விளைவிப்பது தவறுதான். சரி சிங் உளவாளி இல்லையென்றால் ஏன் அவர் வீர மைந்தர்? அநியாயமாக தண்டனை கொடுக்கப் பட்டிருக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகள் இந்தியா என்ன செய்து  கொண்டிருந்தது? {இரண்டு நாட்களாக சோனியா விட்டு முன்பு சீக்கியர்கள் நடத்தும் போராட்டம் இறந்த சிங்குக்கு அனவருக் கொடுக்கும் அனுதாபத்தின் முன்பு ஒன்றுமே இல்லாமல் போய் விட்டது - 3000 சிங்குகள் கொல்லப் பட்ட வழக்கில் இருந்து முன்னாள் காங்கிரஸ் எம்.பி சஜ்ஜன் சிங் விடுதலை செய்யப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெரிவித்து சீக்கியர்கள் நடத்துப் போராட்டம்}

தவறாய்க் கைது செய்யப் படுவது தடுக்கப் பட வேண்டும் என்றால், மற்ற நாடுகளில் இந்தியப் பிரஜைகள் இறப்பது இந்தியாவின் வீரம் என்றால், அடிக்கடி சுட்டுக் கொள்ளப்படும் தமிழக மீனவர்கள்தான் இந்தியாவின் வீர மைந்தர்கள்.

ஆனால் இலங்கையினால் கொல்லப்படும் தமிழர்களை யாரும் வீர இந்தியர் என்று சொல்வதில்லையே  ஏன்? {இந்தியர்கள் என்றே சொல்லுவதில்லை அப்புறம் என்ன வீர இந்தியர்}

குண்டுகள் முழங்க அரசு அடக்கம் செய்திருக்கிறார்களா?

ஊடகங்கள் முதல் பக்க செய்திகளையாவது வெளியிட்டு இருக்கின்றனவா?  இவர்கள் அப்பாவிகள் இல்லையா? இலங்கை காட்டுமிராண்டி அரசு இல்லையா? 

அநியாயமாய்ச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை {ஏறக்குறைய முப்பது மீனவர்களை } விடுவிக்க வேண்டி தங்கச்சி மடத்தில் நடத்திய போராட்டம் பற்றி சிங்கின் மரணம் குறித்து முதல் பக்கத்தில் வெளியிட்ட பத்திரிக்கை கடைசிப்பக்கத்தில் கூட இந்தச் செய்தியை வெளியிட வில்லை.  நல்ல ஊடகங்கள்.

எந்த அரசும் இதைக்  கண்டுகொள்வதும் இல்லை. ஒருவேளை இறப்பது சிங் என்றால் தான் கண்டு கொள்வார்களோ? அல்லது சுடுவது பாகிஸ்தான் என்றால்தான் இறப்பவர்கள் வீரர்கள் ஆவார்களோ என்னவோ... நல்ல அரசுகள்.

குடிமயக்கத்தில் போனால் வீரர்கள் --- தொழிலுக்குப் போனால் திமிர் பிடித்தவர்கள்... பாகிஸ்தான் செய்தால் கொடூரம் -- இலங்கை செய்தால் பாதுகாப்புக் காரணங்கள்...

ஆக மொத்தம் ---- சாதி அரசியலுக்கும் மத அரசியலுக்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை... பாதிக்கப்படுவதும் பிரிக்கப் படுவதும் தமிழர்கள்தான்.

Friday, 7 October 2011

சாமியின் மூன்று படிப்பினைகளும் ஐந்து இலக்குகளும்


சுப்பிரமணி சாமி எப்படியும் தன்னை எப்போதும் மீடியாவின் பார்வைக்குள் வைத்திருக்கும் ஒரு வசியக்காரர். சில சமயம் காமெடியன் போலப் பேசுவார் - சில சமயம் மந்திரக் காரர் போலப் பேசுவார் - சில சமயம் விசயக் காரார் போலப் பேசுவார். இந்தியா தீவிர வாதிகளிடமிருந்து காப்பாற்றப் பட வேண்டுமென்பதில் நாம் என்ன படிப்பினைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தனது ஐந்து strategic திட்டங்களையும் ஒரு கட்டுரையாக [சூலை பதினாறு] வடிக்கப் போய் வழக்கை எதிர் நோக்கியிருக்கும் ஒரு ... தீவிர வாதி?

அப்படி என்ன குழப்பத்தை விளைவிக்கும் அளவுக்கு அதில் இருந்தது என்பதை சுருக்கித் தந்திருக்கிறேன். ஆங்கிலத்தில் படிக்க கீழ்க்கண்ட இணையத்தில் படிக்கலாம். 
சில முன்முடிவுகளோடு தான் அவர் தொடங்குகிறார். தீவிரவாதிகள் இஸ்லாமியர்கள் மட்டுமே. அவர்கள்தான் எல்லாவற்றிற்கும் காரணம்.

இதில் எழுதப் பட்டிருப்பவை அனைத்தும் சுப்பிரமணி சாமியின் கருத்துக்களே - எனது கோணக் கேள்விகள் மட்டும் சிவப்பில்.
அவரின் கட்டுரைக்கு  ஆதாரம்:
http://www.dnaindia.com/analysis/comment_analysis-how-to-wipe-out-islamic-terror_1566203-all

அவரது படிப்பினை ஒன்று -
இஸ்லாமிய தீவிர வாதத்தில் ஒரு இந்து இறந்தால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்துவும் கொஞ்சம் கொஞ்சமாய் இறக்கிறான். எனவே இந்துக்கள் கூட்டு மன நிலையோடு இந்து என்பதில் ஒன்றிணைய வேண்டும். இதில் இஸ்லாமியர்களும் தங்களது முன்னோர்கள் இந்துக்கள் என்பதை உணர்ந்து இதில் ஒன்றிணைய வேண்டும். அப்படி எல்லாரும் சேர்ந்து இந்து ஆட்சியை நிறுவ வேண்டும்.
ஒவ்வொரு இஸ்லாமியனும் இறக்கும் போதும் எல்லா இஸ்லாமியர்களும்தானே இறக்கிறார்கள். நீங்கள் சரியென்றால் அவர்களும் சரிதானே?
 

இரண்டாவது படிப்பினை
எது நடந்தாலும் இஸ்லாமியத் தீவிர வாதத்தின் மிரட்டலுக்குப் பணியக் கூடாது.
சரி

மூன்றாவது படிப்பினை
எவ்வளவு குறைவான தீவிர வாதமாக இருந்தாலும் இந்திய இந்துக்கள் முழுவதும் ஒன்றிணைத்து தங்களது முழு எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். உதாரணத்திற்கு, அயோத்யா கோவில் தாக்கப் பட்டத்திற்கு உடனே அங்கே ராம் கோவில் கட்டியிருக்க வேண்டும்.
இஸ்லாமியர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து அதே இடத்திலேயே மசூதி கட்டனுமா?

பரிந்துரைக்கும் ஐந்து STRATEGIC இலக்குகள்

ஒன்று - ஜம்மு காஷ்மீர் விவகாரம் - இதில் அரசு அதற்குக் கொடுத்திருக்கிற சிறப்பு ஸ்டேடசை ரத்து செய்து விட்டு அங்கே முன்னாள் ராணுவ வீரர்களை குடியமர்த்தி அதை இந்துக்களின் இடமாகவும், தொடர்ந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதத்திலும் அமைக்க வேண்டும்.
பாகிஸ்தான் பார்டரில்  இந்துக்களைக் குடியமர்த்தலாம் - நீங்கள் முதல் ஆளா? ராஜ பக்ஷே அங்கே பண்றதுக்கும் இதுக்கும் பெர்ய வித்யாசம் இல்லையே. அவர்தான் உங்கள் குருவா?
இரண்டு - கோவில்களில் வெடிவைத்து இந்துக்களைக் கொள்ளும் அவர்களின் முயற்சிகளுக்கு பதிலடியா இந்துக்கள் கோவில்களுக்கு அருகில் உள்ள ஏறக்குறைய முன்னூறு மசூதிகளை உடனடியாக அகற்றுதல்.
அப்படியே இஸ்லாமியர்களும் தங்கள் மசூதிக்கு அருகில் உள்ள 300 கோவில்களை அகற்றலாமா?
மூன்று - இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற முயற்சிக்கும் அவர்களது முயற்சிக்கு -
எல்லாருக்கும் ஒரே மாதிரியான சட்ட நடைமுறையை முன்னிறுத்தி, தங்களது முன்னோர் இந்துக்கள் என்று ஏற்றுக்கொள்ளுகிரவர்களுக்கு மட்டும் வாக்குரிமை அளித்து இந்தியா என்பதை ஹிந்துஸ்தான் என்று மாற்ற வேண்டும்.
எங்கள் முன்னோர்கள் புத்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால் ஓட்டுரிமை இல்லையா? எங்கள் முன்னோர்கள் மதங்களற்ற வானரங்கள் என்று ஏற்றுக் கொண்டால் ஓட்டுரிமை இல்லையா?
நான்கு - குடும்பக் கட்டுப் பாட்டுக்கு ஒத்துழைக்காத அந்த முஸ்லிம்களுக்கு - பதிலடியாக மத மாற்றத்தைத் தடை செய்வது - ஆனால் இந்துக்களாக யாரும் மாறுவதற்கு தடை விதிக்கப் படக் கூடாது. சாதி என்பது பிறப்பால் அல்ல மாறாக அது ஒழுக்க நெறி என்று அறிவிப்பது. இந்துக்கள் அல்லாதவர்கள் மீண்டும் இந்துக்களாக வரும் போது அவர்கள் விரும்பும் சாதியைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைக் கொடுப்பது.
உங்கள் அறிவிப்பில் எல்லாம் சரியாகி விடுமா? அப்பா சாதி ஒழியக் கூடாது - அதுதானே உங்கள் நோக்கம்.
ஐந்தாவது - இந்து மன நிலையை வேகமாக வளரச் செய்வது.
அதாவது சாதி மன நிலை அப்படித்தானே?

முடிவில் -
"Even if half the Hindu voters are persuaded to collectively vote as Hindus, and for a party sincerely committed to a Hindu agenda, then we can forge an instrument for change. And that is the bottom line in the strategy to deter terrorism in a democratic Hindustan at this moment of truth." - சுப்ரமணிய சுவாமி


இது நூற்றி ஐம்பதாவது பதிவு

Saturday, 5 February 2011

தச்சூரில் போராட்டம்

22 ஜனவரி இறந்த வேளாங்கண்ணி என்பவரை முன்னிறுத்தி மீண்டும் தச்சூரில் போராட்டம் தொடங்கியிருக்கிறது.
இதை எப்படி அணுகுவது? அது கிருத்தவ மக்களுக்குள் நடந்த இரு அணிகளுக்கிடையேயான ஒரு பிரச்சனை என்று சொல்லலாம். ஆனால் இதை அங்கிருக்கிற ஒரு சிறு பிரச்சனையாக மட்டுமோ அல்லது கிருத்தவர்களுக்குள்ளேயான   ஒன்றாகக் குறுக்கிவிட முடியாது.

இறந்தவர் தலித் என்பது செய்தி. இறந்த தலித் ஒருவரை ஆலய வளாகத்திற்குள் புதைக்கலாமா இல்லையா என்பதுதான் பிரச்சனை. இது வெறும் கல்லறைப் பிரச்சனையாக மட்டும் பார்த்துவிட முடியாது. திருச்சியில் - நகரமயமாக்கப் பட்டிருக்கிற ஒரு ஊரிலேயே கல்லறைகளுக்கிடையில் உள்ள சுவற்றை அகற்ற முடியாத அவலம் இருக்கிற போது ஒரு கிராமத்தில் இந்தப் பிரச்சனை சர்வ சாதாரணம் என்று சொல்லிவிட முடியாது.

இதில் மிகவும் கொடுமையான செய்தி - தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுக்கும் போது நிச்சயம் பாதிப்பு இருக்கும். உயிரைக் கூட கொடுக்குமளவுக்கு இருக்கும். ஆலய வளாகத்திற்குள் புதைப்பதற்கு குழி தோண்டிய இராஜேந்திரன் என்பவரை ஆதிக்க எண்ணம் கொண்ட உயர்ந்த சாதி என்ற எண்ணம் கொண்ட கும்பல் வெட்டிக் கொன்றுவிட மீண்டும் அங்கே விஸ்வரூப பிரச்சனை.



 இது ஒரு ஊருக்கான பிரச்சனை மட்டுமல்ல - இது பிரச்சனையும் அல்ல. இது போராட்டம். சில உயிர்களைக் கொடுத்துத் தான் பின் வரும் சந்ததிக்கென சமத்துவ சமுதாயத்தை நிலை நாட்டும் நீதிக்கான போராட்டம் - உரிமைக்கானப் போராட்டம்.
சாதி இல்லை என்பவர்களும் - சமத்துவ சமுதாயத்தில் வாழ்கிறோம் என்பவர்களும் மீண்டும் வெட்கித் தலை குனிய வேண்டிய செயல்.

அகன்ற கண்கொண்டு  எழுதுபவர்கள் எல்லாம் இச்செய்தி பற்றி ஒன்றும் எழுதாமல் இருப்பது எதைக் காட்டுகிறது? இந்தக் கொடுமைஎல்லாம் அவர்கள் கண்களுக்குத் தெரிகிறதா இல்லையா?

மனிதன் ஒன்றாக வாழத் தான் முடியவில்லை - செத்த பிறகும் கூட அருகருகே புதைக்கக் கூட முடியவில்லை என்றால், அதை என்னவென்று சொல்வது. கல்லால் எறிவதே பாவம் என்றவன் இயேசு - இங்கே கல்லும் கொண்டு, ஆளையும் கொள்வது மிகக் கொடுமை.  வழக்கம் போல நீங்கள் செய்வதியே செய்யுங்கள் என்று அமைதி நிலைநாட்டிகள் சொல்வது அதைவிடக் கொடுமை. தீண்டாமை ஒரு பாவச் செயல் என்று புத்தகங்களில் மட்டும் எழுதுவது மிகக் கொடுமை.     

Wednesday, 18 August 2010

சாதி

தமிழ் வலைப் பதிவுகளில் சாதி ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. இதை உசாதீனப் படுத்தி விட்டு யாரும் பதிவுகளை எழுதி விட முடியாது.


இப்பக்கத்தில் கடந்த மாதங்களில் வந்த சில கட்டுரைகளை கொடிட்டிருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒரு மாதிரி. சில விரும்பப் படலாம் அல்லது வெறுக்கப் படலாம்.

விரும்பினால் உங்கள் கருத்தை நீங்களும் எழுத ஒருவேளை இது தூண்டுதலாயும் இருக்கலாம்.

----------------------------------------------------------------------------



***  இந்து மதத்தில் மட்டும்தான் தலித்தா?


*** இந்து மதத்தில் மட்டும்தானா -இரண்டு

------------------------------------------------------------------------------------------------


------------------------------------------------------------------------------------------------


*** மகளிரின் சாதி ஆர்வம்


*** சாதியக் கணக்கெடுப்பு

-------------------------------------------------------------------------------------------------


--------------------------------------------------------------------------------------------------



*** குற்ற உணர்வு தவிர்

*** சாதி உணர்வோடு முற்போக்காளனாக இருக்க முடியுமா?

*** தினமணியில் கார்ட்டூன்

Friday, 13 August 2010

சாதி குறித்து சில வினவுகள்

சாதி குறித்து சில வினவுகள்

இது நமது மண்ணிலிருந்து அவ்வளவு சுலபமாய் மறைந்து விடுமா என்ன?
நீண்ட நெடிய வரலாறு - அது மறையாது என்றால் அதை ஏற்றுக் கொள்வதும் - அதைப்பற்றி கேலி, கிண்டல் மற்றும் பகடி செய்வதும் - சாதிப் பிரச்சனை ஒழிகிறதோ இல்லையோ நமது இரட்டை வேடத்தையாவது கலைக்கும் அல்லவா?

சில வாரங்களுக்கு முன்னாள் திரு -ஜெயமோகனின் பக்கங்களில் படித்த சில கட்டுரைகள் பல நாட்களாக என் மனதிற்குள்ளேயே ஓடிக்கொண்டிருந்தது. அதைப் பற்றி சில கேள்விகள் - சில விளக்கங்கள் தேவைப் பட்டன. அவரிடம் கேட்பதற்கு முன்பு எனது கேள்விகளைப் பதிவு செய்துகொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டதாலும் - கேள்விகளை ஒழுங்காக கோர்த்துக் கொள்வதற்கு அவகாசம் தேவைப் படுவதாலும் - இப்போதைக்கு இங்கே பதிவு செய்வது மட்டுமே உத்தேசம் எனப் படுகிறது.

அதுமட்டும் அல்லாமல் -  ஒரு கருத்தைப் பற்றிய பல பார்வைகள் உள்ளன - இதில் யார் சரி யார் தவறு என்பது அல்ல - ஜெயமோகன் கூறியுள்ள கருத்துக்கள் பல ஒரு மாற்றுப் பார்வையை வைக்கிறது என்பதில் சந்தேகமில்லை. எனவே சரி தவறு என்கிற விவாதத்திற்குள் செல்லாமல் இன்னோர் பார்வையை பதிய வேண்டிய தேவை உள்ளதால் அதைப் பதிகிறேன்.

இதற்கு முன்னோட்டமாக இந்தக் கட்டுரையை வாசிப்பது அவசியம்.

katturai 1 

சிறில் அலெக்ஸ் சொல்லிய ஒரு கருத்துக்கு மாற்றாக ஜெயமோகன் அவர்கள் எழுதிய கட்டுரை இது - அலெக்ஸின் இரண்டு கருத்துக்கள்: சாதிபற்றி கிண்டல் செய்வது உயர் சாதிகளுக்கே உரித்தானது - மற்றவர்கள் இதுபற்றி வெளியில் பேச மாட்டார்கள் - இரண்டாவது சாதி மறைய வேண்டியது எனவே அது பற்றி பேசிக்கொண்டிருக்கக் கூடாது .....

கேரளாவில் இன்னும் சாதிப் பெயர் சேர்த்துதான் சொல்கிறார்கள் - தமிழகம் இதை மறந்து விட்டது என்று சொல்கிறபோதும்  சாதியின் உணர்வுகள் அதிகமாக ஆகியிருக்கிறது என்று சொல்கிற போதும் அதை நம்மால் மறுக்க முடியவில்லை. அவர் சொல்லுவது சரிதான். கேரளாவில் சாதி பற்றி பகடி பண்ணுகிற அளவிற்கு அவர்கள் வளர்ந்திருக்கிறார்கள் - அதனால் சாதி இருந்தாலும் அதை வெளியில் காட்டினாலும் பகடி பண்ணுவது சதி உணர்வுகளிலிருந்து மீண்டு வர நல்ல வழி என்று ஜெயமோகன் இக்கட்டுரையில் முன்வைக்கிறார்.

 இதில் தமிழ் மக்கள் இரட்டை வேடம் போடக் கற்றுக் கொண்டுள்ளோம் என்று அவர் சொல்லுவது முற்றிலும் உண்மை. சாதி பற்றி வெளியே பேசத் தயங்குகிறோம் ஆனால் எல்லாமே சாதியின் வட்டத்திற்குள் தான் தீர்மானிக்கப் படுகிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

சாதியைப் பற்றிய புறவய உண்மையான வரலாறு இல்லை என்பதைப் பற்றி வருத்தப் பட்டு பின்வருமாறு கூறுகின்றார்.
"உதாரணமாக தமிழினி மாத இதழில் ராமச்சந்திரன் அவர்கள் வேளாளர்களைப்பற்றி எழுதி வரும் கட்டுரை. புறவயமான ஓர் ஆய்வு அது. ஆனால் அதன்பொருட்டு இதழாளருக்கு மிரட்டல்கள் வந்தன. அந்த வகையில் தமிழக பிற்படுத்தப்பட்ட ஏதாவது சாதிகளைப்பற்றி எழுதியிருந்தால் எழுத கை இருந்திருக்காது. அத்தகைய பல முன் நிகழ்வுகள் இங்கே உள்ளன."

சிலர் ஒன்றுமில்லாத பெருமிதங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் - அதைச் சரி செய்ய வரலாறு உதவும் என்று சொல்வது சரிதான் - ஆனால் யார் ஒன்றுமில்லாத பெருமிதங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவு படுத்தப் பட வேண்டிய ஒன்று.

வரலாறு - தெரிந்த வரலாறு - ஒரு மிகப்பெரிய எண்ணிக்கையிலான ஒரு சாரார் - ஒரு சாதியைச் சார்ந்தவர்கள் என்பதனால் அவர்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளானார்கள் என்கிற போது அத்தகைய கொடுமைகளுக்கு ஏதோ ஒருவிதத்தில் நாமும் பொறுப்பு மிக்கவர்களாக உள்ளோம். சில வரலாற்றுக் கொடுமைகள் தவறு என்று சொல்கிற அளவிற்கான உண்மையை - ஏற்கனவே சொல்லியிருந்தாலும் - ஒவ்வொரு புதிய கட்டுரையிலும் அதைக் கோடிட்டுக் காட்டுவது அவசியம் - இல்லையெனில் சாதி என்பதை இவ்வாறு பகடி செய்யலாம் என்று சொல்லுவது நமக்குச் சுலபமான விஷயம்.

"அவர்கள் அதை எங்கும் விவாதிப்பதில்லை. ஆகவே எங்கும் அது மறுபரிசீலனைக்கு ஆளாவதுமில்லை. இது ‘உயர்’சாதி முதல் ‘தாழ்ந்த’ சாதி வரை எல்லாருக்கும் பொருந்தும்." உயர் மற்றும் தாழ்ந்த என்கிற சொற்களை மேற்கோள் இட்டு - அவைகள் உயர்ந்தவை சில தாழ்ந்தவை என்கிற உண்மையை மீண்டும் முன்மொழிகிற பொறுப்பு தெரிகிறது. வரலாற்றில் சில உயர்த்தப் பட்டன - பல தாழ்த்தப்பட்டன என்பதை மீண்டும் உணர்த்துவது அவசியம் என்பதையும் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.

ஆதிக்க நிலையில் இருப்பவர்களுக்கு சாதியைப் பகடி செய்யும் நிலை இயல்பாய் வருகிறது.

அதே சமயத்தில் சாதியைக் கடந்து செல்ல அதை மறைப்பதும் - ஒதுங்கி ஓடுவதும் சரியல்ல என்பதை - ஜெயமோகன் அவர்களோடு சேர்ந்து ஆமோதிக்கிறோம் -

சாதியைப் பற்றி பகடி செய்ய வேண்டும் என்று சொல்கிற ஆசிரியர் - "தாழ்த்தப் பட்ட சாதிகளைப் பற்றி எழுதியிருந்தால் எழுத கை இருந்திருக்காது" என்று சொல்கிற போது சில சாதிகள் இப்படித்தான் என்கிற பகடி நன்றாகத்தான் இருக்கிறது.

ஆனால் இறுதியில் ஜெயமோகன் சொல்லுவது போல - சாதியை பற்றி நவீன மனிதன் பெருமையோ இகழ்ச்சியோ கொள்ள முடியாது என்கிற நிலை வரும் என்று நாம் எதிபார்க்க முடியுமா என்பதுதான் புரியவில்லை - ஒன்று இருக்கும் ஆனால் அது பெருமைக்கு உரிய விஷயமாகவோ அல்லது இகழ்ச்சிக்கு உள்ள விஷயமாகவோ இருக்காது என்பது எப்படி?

"சாதி என்றும் அழியாது. நவீன முதலாளித்துவம் மூலம் சாதியின் அடுக்குமுறை காலப்போக்கில் பொருளிழக்கும்போது பண்பாட்டு நீட்சி என்ற முறையில் அது மேலும் முக்கியத்துவம் பெறும் என்றே நான் நினைக்கிறேன். உலகம் எங்கும் ஏதேனும் முறையில் மனிதர்களிடம் பிறப்பு சார்ந்து உருவாக்கப்படும் பண்பாட்டுச்சின்னங்கள் நீடிக்கத்தான் செய்கிறன. அவற்றை உணர்ச்சிகள்சார்ந்து ஆராயாமல் அறிவார்ந்து அணுகும் முறை மட்டுமே புதிதாக உருவாகி வரும். அன்று எவரும் சாதிகுறித்து வெட்கவும் மாட்டார்கள் பெருமிதம் கொள்ளவும் மாட்டார்கள்."

பிறப்பு சார்ந்து உருவாக்கப் படும் பண்பாட்டுச் சின்னங்கள் - சாதியும் - கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது.  பிறப்பினால் ஒருவன் ஒரு சாதிக்குரியவனாகவே இருப்பான் - ஆனால் அதைப் பற்றிய இகழ்ச்சியோ புகழ்ச்சியோ இருக்காது ----


ஆனால் பண்பாட்டுச் சின்னங்கள் சாதி சார்ந்து இல்லாத நிலை இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்.


இதைச் சார்ந்த இன்னும் பல கேள்விகள் உண்டுதான். அதைத் தொடர்ந்து உள்ள இந்த இரண்டாவது கட்டுரையையும் வாசியுங்கள்...

Katturai 2


இந்தக் கட்டுரையையும் அதற்குப் பின் வந்திருக்கிற பின்னூட்டங்களையும் பார்க்கிற போது - ஏறக்குறைய அதில் பெரும்பான்மையானோர்   - 'உயர்' குடிமக்கள்  - அவர்களே ஜெயமோகனின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டது போலத் தெரிகிறது. அவரவர்களுக்குத் தான் வெளிச்சம்.


தலித் நண்பர்கள் மிகவும்  புண்படும் நிலையிலேயே தங்களைப் பார்க்கிறார்கள் என்கிற ஜெய மோகனின் கருத்து சரிதான் - இது பல நூற்றாண்டுகளாக உருவாக்கப் பட்ட வடு  - அதற்காக பார்ப்பனரும் தங்களை புண்படும் நிலையிலேயே இருக்கிறார்கள் என்பதும் உண்மையானால் - அதிகாரப் பீடத்தில் இருந்தவருக்கு புண்படும் நிலை வந்தால் - அடிபட்டவன் அவ்வளவு எளிதாய் வெளிவர முடியாது....


பின்னூட்டங்களைப் பாருங்கள் -


ஜெயமோகனின் கருத்துக்கு மாற்றுக் கருத்து எழுதியவருக்கு பல பேர் வசை பாடுவதைப் படிக்க இதையும் பாருங்கள்...



Dondu Blogspot


சாதி - அதைப் பற்றி எப்படி எழுதினாலும் எதிர்வினைகள் இல்லாமல் இருக்க முடியாது. எவ்வளவு முயற்சிகள் நடந்தாலும் அது நம் கண் முன்னே இல்லாதது போலத் தோன்றினாலும் எல்லாவற்றிலும் அதன் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது. 


என்ன சொல்லமுடியும் - சாதி தேவையற்றது என்று வீரவசனம் பேசலாம் - ஆனால் நாம் அதற்குள்ளேயே தான் இருக்கிறோம். தலித் எழுச்சி பார்த்து கலங்குகிற சிலர் - சாதி பற்றிய பேச்சு தேவையில்லை என்று கூடச் சொல்லலாம் - சாதியற்றவர்களின் ஒரு அடையாளம் இப்போது சாதியாய்த் தெரிகிறது.


உயர்சாதிக் காரர்கள் கூட தங்கள் சாதி அடையாளத்தை விட முன்வரலாம் ஆனால் தலித்துகள் அவ்வளவாக இல்லை என்று சொல்லலாம் - அடையாளம் அற்றவனாய் இருந்தபோதும் அவன் அமைதியாய் இருக்க வேண்டும் அடையாளம் கொள்ளும் போதும் அவன் அதை இழக்க வேண்டும் என்பது மேட்டிமை எண்ணம் தானோ?


சாதி அடையாளம் பற்றிப் பேசுகிற போது தலித்துகள் மனம் புண்படுவது போல பல பார்ப்பனர்கள் தங்கள் உரிமை மறுக்கப் படுவதை உணர்கிறார்கள் - உண்மைதான் - வரலாறு ...



மாற்றுக் கருத்து - புதிய பார்வை என்று சொல்லும் போது கூட மறு எதிர்வினையைக் கூட புரிந்து கொள்ள முடியாத நிலையில்தான் "உயர்" குடிமக்கள் இருக்கிறார்கள் - ஆனால் வாருங்கள் தோழர்களே நாம் மட்டும் நம்மைப் பகடி செய்து கொள்வோம்.