Showing posts with label அன்னா ஹசாரே. Show all posts
Showing posts with label அன்னா ஹசாரே. Show all posts

Tuesday, 31 December 2013

(நம்மாழ்வார்) இறுதியும் (ஆம் ஆத்மி) தொடக்கமும் 2013 - 4

வருடக்கடைசியில் முக்கியமான நிகழ்வுகள் குறித்து எழுதுவது 
மரபு என்பதனால் அதை மீற முடியவில்லை. 
(உருப்படியா ஒன்றும் எழுதவில்லை என்பதை எவ்வளவு நாகரிகமாக சொல்ல வேண்டியிருக்கிறது
அது போலவே இந்த வருடத்தில் ஏதாவது உருப்படியாகச் செய்தோமா 
என்றும் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.)
  • ஐ லவ் அமெரிக்கா நாட் தேவயானி 
    • இது போலவெல்லாம் நானே சொல்வேன் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் நடக்கும் நிகழ்வுகள் சொல்ல வைக்கின்றன. வெறும் தனது திறமையை மட்டும் ? வைத்து உயர் பதவியில் குளிர் காய்ந்து கொண்டிருக்கும் தேவயானி மற்றும் அவரது தந்தையையும் நமக்கு இதற்கு முன்பு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அவர் இந்த வயதில் பல முறை கேடுகளில் சிக்க ஒரு சிறு விஷயம் உதவி இருக்கிறது. விசா ஏமாற்று அதைத் தொடர்ந்து ஆதர்ஷ் குடியிருப்பில் வீடு வாங்கியது என்று நீண்டு கொண்டே போகிறது. இது அப்படியே இனிமேல் மறைக்கப் படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனாலும் சமாஜ்வாதி கட்சி MLA சீட் தர தயாராயிருக்கிறது - இயக்குனர்கள் யாரவது ஹீரோயின் அல்லது வில்லி வாய்ப்பு கூட கொடுக்கலாமப்பா...  
      • ஊழல் செய்தால் சீட்டு நிச்சயம். அப்துல்கலாமைத் தடவிப்பார்த்த போது இல்லாத தவிப்பு தேவயானிக்கு இருக்கும் பரபரப்பை பார்த்தால் - வடக்கில் பிறப்பது எவ்வளவு அவசியம் என்பதும், அப்படி முடியாத பட்சத்தில் ஓரளவு ஊழலாவது செய்வது அவசியம் என்றும் புரிந்து கொள்ள முடிகிறது.
  • மரணம் - அனுதாபங்கள்
    • Walker - ன் மரணம் மிகப் பாதிப்பை ஏற்படுத்தியது. அவரது திரைப்படத்தின் தலைப்பை போலவே வாழ்க்கை அவ்வளவு விரைவாய் முடிந்து போனது. இதுவே திரைப்படமாய் இருந்திருந்தால் நிச்சயம் அவர் தப்பியிருப்பார். மரணம் கொடுமையானது. திரைப்படத்தில் பல முறை உயிர் தப்பியவர் நிஜ வாழ்க்கையில் ஒரு முறை கூட தப்பவில்லை என்பது வேதனையே. 
    •  நெல்சன் மண்டேலா உடல் நிலை சரியில்லாத போதே இறந்து போனதாக முகநூலில் அஞ்சலி செய்தார்கள். இப்போதுதான் உண்மையான அஞ்சலிக்கு வேலை வந்தது. நிஜத்தில் பல முறை இறந்திருந்தாலும் எப்போதும் வாழ்பவர் அவர். 
      • இறப்பதோ ஒரு முறை. அதற்கு முன்பு கொஞ்சம் அகிம்சையை விதையுங்கள் மண்டேலா போல. 
      • இறப்பு எப்படியும் வரும். இங்கிலாந்துக்கு டயானா போல அமெரிக்காவிற்கு வாக்கர். டயானா போல கொஞ்சம் ஆசணத்தில் இருந்து இறங்கி வாருங்கள். 
      • இந்தியாவிற்கு காந்தி போல தென் ஆப்பிரிக்காவிற்கு மண்டேலா. சுடப்பட்டாலும் கொஞ்சம் அகிம்சையை விதையுங்கள் காந்தி போல. 
      • திடீரென இறந்தாலும், இயற்கையை நேசியுங்கள் நம்மாழ்வார் போல. இயற்கையோடு இயைந்து வாழுங்கள் அவர் போல!
    • நம்மாழ்வார் - திடீரென இறந்து இந்த ஆண்டின் சோகத்தை அதிகப் படுத்தி விட்டு சென்றார் என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் அவர் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும். இயற்கையை மட்டும் நம்பி, பாலை நிலத்தில் உறங்கிக் கிடந்த உயிரைத் தட்டி எழுப்பிய மகான்... போராட்ட நேரத்தில் மடிந்து பலருக்குள் உயிராய் கிளர்த்தெழுவார் என்று நான் நம்புகிறேன். விவசாய நாட்டுத் தலைவர்கள் நம்மாழ்வாரின் கருத்தை இப்போதாவது கேட்பார்களா? 
  • புதிய ஆண்டு 
  • ஜாதகம்
    • கணித மேதை ராமானுஜத்தை யாருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, கணக்கு பண்ணுவது மட்டும் எல்லாருக்கும் பிடிக்கிறது - உலகம் பூராவும். கணக்கு பிணக்கு என்றாலும் பொதுவாய் கணக்கிடுவது பிடிக்கிறது. கடந்த ஆண்டு பூராவும் மாயன் காலண்டர் பற்றி பேசினோம். வரப் போற ஆண்டைப் பற்றி அதற்குள் அடுத்த கணக்கு வந்துவிட்டது. 1947 ம் 2014 ம் ஒரே காலண்டராம்.. அதனால் அடுத்த விடுதலையைப் பற்றி எல்லாரும் அவதானிக்க ஆரம்பித்து விட்டார்கள். மோடிதான் அந்த விடுதலைப் போராட்ட தலைவர் எனவும், அடுத்த தேர்தல் முடிவுகள்தான் விடுதலை நாள் என்றும் பேச்சுகள் ஆரம்பித்து விட்டன. நானும் எனது பங்குக்கு ஏதாவது சொல்ல வேண்டாமா? 
      • விடுதலை சரிதான் 1947 நமது நாட்டில் பிளவு ஏற்படாமல் இருந்தால் சரி.
  • புதிய ஆண்டு
  • ஆம் ஆத்மி -
    • பெரியாரின் போராட்டக் கழகத்திலிருந்து தேர்தல் பாதையைத் தேர்ந்தெடுத்த அண்ணாவின் தி. மு. கழகம் போல - அன்னா ஹசாரேவின் போராட்டக் களத்திலிருந்து அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி புறப்பட்டிருக்கிறது. அண்ணாவின் தி. மு. க. மிகப் பெரும் வெற்றி பெற்றது போலவே மிகச் சிறந்ததொரு வெற்றியை டெல்ஹியில் பதிவு செய்திருக்கிறது ஆம் ஆத்மி. 
    • எந்த அளவுக்கு இன்றைய இளைஞர்கள், பெரியவர்கள் அனைவரும் மிகப் பெரும் விடுதலையை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று இதை வைத்தே கணிக்க முடியும். மக்கள் சார்பாக இப்போது போல எப்போதும் நிற்கும் என்று நிறைய எதிர் பார்க்கிறோம். ஒரு நாளைக்கு 700 லிட்டர் நீர், அரசு அதிகார்களின் மாணவர்கள் அரசுப் பள்ளியில் படிக்க வேண்டும் என்பது போன்ற நிறைய உத்திரவாதங்கள்... நல்ல தொடக்கம். இது போன்ற தொடக்கங்கள் தான் 2013 - ன் சோகங்களை பின்னுக்குத் தள்ளி நம்பிக்கையோடு வாழ வழி வகுக்கின்றன. 
    • தில்லியில் உள்ள ஆம் ஆத்மிக்கு கொடிகாத்த குமரனின் திருப்பூரில் ஒரு கிளை.... மக்கள் போராட்ட களத்தில் நிற்கும் உதய குமாருக்கு அழைப்பு என தமிழகத்திலும் ஏழை மக்களின் - (அரசு அதிகார எந்திரங்களுக்கு மத்தியில் சாதாரண மக்கள் எல்லாரும் ஏழைகள் தானே)- விடுதலைக்காய் உழைக்கும் தலைவர்கள் ஒன்று சேர வேண்டியது அவசியமாகவே படுகிறது. நிறைய மண்டேலாக்கள் - நிறைய நம்மாழ்வார்கள் - ஓரணி சேர வேண்டியது அவசியமாகிறது.
    • இப்போது 2014 இன்னும் ஒரு விடுதலை ஆண்டாய்தான் தெரிகிறது.
  • இன்னும் ஒரு உன்னதமான விடுதலையை அகிம்சை வழியாய் சாத்தியப் படுத்துவோம் என்ற நம்பிக்கையோடு புதிய ஆண்டில் காலடி எடுத்து வைப்போம். 
வாழ்த்துகள்!  

    Friday, 10 August 2012

    அன்னா ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும்



    அன்னா பற்றிய தொடர் செய்திகளைப் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இன்னும் செய்திகள் வந்த வண்ணம்தான் இருக்கின்றன. மேலெழுந்த வாரியாக படிக்கிற செய்திகள் நம்மையும் உள்ளே இழுக்கின்றன. ஆனால் நடந்துகொண்டிருக்கும் விவாதத்தின் கட்டமைவு பற்றிய சில கேள்விகளை இக்கட்டுரை முன்வைக்கிறது. 
    ஏன் அன்னாவை எதிர்க்கும் அருந்ததிராயைக் குறி வைக்கிறார்கள் ஆனால் சோ - வை விட்டு விடுகிறார்கள்?

    • ஆதரவாளர்கள்    


    அன்னா ஆதரவாளர்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம் [இன்னும் நுணுக்கமாகப் போனால் இன்னும் நிறைய என்றுதான் நான் கருதுகிறேன்]. 

    முதல் வகையில் குரல் கொடுப்பவர்கள் அன்னாவோடு ஒட்டி நின்று ஊழல் ஒழிய வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தோடு ஒன்று சேர்ந்தவர்கள். அதனால் அன்னா என்ன சொன்னாலும் சரி என்று சொல்லுகிறவர்கள். அதனாலேயே அவர் முற்றிலுமாகக் காந்தியவாதி என்பதை என்பிப்பதற்காகவே முழுவதும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்கள், பின்பற்றுபவர்கள். இதில் சிலர் அறிவு ஜீவிகள். பெரும்பான்மையானவர்கள் சாதாரண மக்கள், மற்றும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்கிற இளைஞர்கள்.
     
    ஆதரவாளர்களில் மற்றொரு வகை ஊழலுக்கு எதிர்ப்பு என்பது சரியானதுதான்; அன்னாவைப் பின்பற்றுவது அவசியம்தான் என்பதோடு, அதிலும் உள்ள சிக்கல்கள் களையப்படவேண்டும் என்று நினைப்பவர்கள். அது மட்டுமல்லாமல் ஊழல் என்பது மட்டுமே இந்தியாவின் முதன்மையான பிரச்சனை அல்ல; மாறாக அதுவும் ஒரு பிரச்சனை என்று நினைப்பவர்கள். இதில் பெரும்பான்மையானவர்கள் வலைப்பூக்களில் எழுதுபவர்கள் என்றே நான் கருதுகிறேன். பிரச்சனை என்னவென்றால் தள்ளி நின்று அண்ணாவை ஆதரிக்கும் இந்த வகை ஆதரவாளர்களையும் அன்னா எதிர்ப்பாளர்களாகவே முதல் வகை ஆதரவாளர்கள் கருதுவதுதான். 

    • எதிர்ப்பாளர்கள் 

    ஏன் இந்தச் சிக்கல்? இதைப் புரிந்து கொள்ள அன்னா எதிர்ப்பாளர்களையும் இரண்டு விதமாகப் பிரிக்கலாம். கொள்கை பிடிக்காததால் அன்னாவை எதிர்ப்பவர்கள் முதல் வகை. அவர் காங்கிரசின் கைக்கூலியோ என்பதனால் பிடிக்காமல் போனவர்கள் இரண்டாம் வகை. 

    முதல் வகையில், அருந்ததிராய், அருணா ராய் போன்றவர்களைக் குறிப்பிடலாம். இரண்டாவது வகை வெறுப்பாளர்கள் வரிசையில் ‘சோ’ போன்றவரைச் சொல்லலாம். குஜராத் முதல்வரைப் பற்றித் தவறாகச் சொன்ன ஒரே காரணத்திற்காக அவரை இவருக்குப் பிடிக்காமல் போய் விட்டது என்றே கருதுகிறேன். 

    இதில் முதல் வகை எதிர்ப்பாளர்கள் அவர்களுடைய கருத்துக்களுக்காக கவனிக்கப்பட வேண்டியவர்கள் - மிகவும் கவனிக்கப்பட வேண்டியவர்கள். அதேபோல இரண்டாம் வகை வெறுப்பாளர்கள் இன்னும் அதிகமாகவே கவனிக்கப் பட வேண்டியவர்கள். அண்ணாவோடு ஒட்டி நிற்கும் ஆதரவாளர்கள் தள்ளி நிற்பவர்களையும் எதிர்த்து நிற்பவர்களை மட்டுமே கவனித்து இந்த இரண்டாம் வகை வெறுப்பாளர்களை /எதிர்ப்பாளர்களைப் பற்றி அதிக அக்கறையோ அல்லது அவர்களை பெரிய எதிரியாகப் பார்ப்பதை விடுத்து அருந்ததிராயை மட்டுமே பிரதானப்படுத்துகிறார்கள். இதில் எந்த வித சிக்கலுமின்றி ‘சோ’ வகையறாக்கள் தப்பித்துக் கொள்கிறார்கள் [அல்லது தப்பிக்க ஆதரவாளர் அறிவு ஜீவிகள் உதவுகிறார்களா?]. 

    அருந்ததி ராய் கேட்கிற கேள்விகள் நியாயமானவை என்பதை எள்ளளவும் புரிந்து கொள்ள மனமின்றி அன்னாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை நியாயப்படுத்துகிறார்கள். இரண்டாவது சுதந்திரப் போர் என்பது இந்தியாவிற்குள் நடக்கும் முதல் சுதந்திரப் போர்தான் – அது அரசியல் வாதிகளுக்கு எதிராக நடத்தப்பட வேண்டுமா அல்லது சாதிய / இந்துத்துவத்துக்கு எதிராக நடத்தப்பட வேண்டுமா என்பதிலும், அல்லது பழங்குடியினரின் வாழ்க்கையைக் காப்பாற்றுவதற்காக நடத்தப்பட வேண்டுமா என்கிற கேள்விக்கும் பதில் இல்லாமல் இவர்களை அன்னாவின் மீதும் காந்தியத்தின் மீதும் அவதூறு செய்வதாக அவதூறு செய்கிறார்கள் முதல் வகை ஆதரவாளர்கள். இந்தச் சிக்கலில் அன்னா ஆதரவாளர்களில் இரண்டாவது வகையாளர்கள் அருந்ததிராயின் கேள்விகளோடு இன்னும் பல கேள்விகளையும் சிக்கல்களையும் முன்னிறுத்துவதனால், அன்னா ஆதரவாளர்களில் இரண்டாம் வகையும் அன்னாவின் எதிரிகளாகக் கட்டமைக்கப் படுகிறார்கள்.

    இதில்தான் அன்னா ஆதரவாள அறிவுஜீவிகள், இரண்டாம்வகை ஆதரவாளர்கள் மீதும், முதல் வகை எதிர்ப்பாளர்கள் மீதும் வெறியோடு இருக்கும் சூழலில் ‘சோ’ போன்றவர்கள் எளிதாகத் தப்பித்துக் கொள்ளுகிறார்கள். 

    • வேண்டுகோள் 


    எனவே அன்னாவை கொள்கையளவில் எதிர்க்கும் அருந்ததிராய் போன்றோரை கொடூரமானவராக சித்தரித்து, இந்துத்துவக் கொள்கை வெறியில் எதிர்க்கும் ‘சோ’ வை எந்த விதச் சிக்கலுமின்றி தப்பிக்க உதவும் முதல் வகை ஆதரவாளர்களே கொஞ்சம் விழித்தெழுங்கள் என்பதுதான் எனது வேண்டுகோள். 

    இன்னும் ஒரு கோணத்தில் பார்த்தால் இந்த அறிவு ஜீவிகள் ஏற்கனவே விழித்து எழுந்து விட்டார்களோ என்று தோன்றுகிறது. முதல்வகை அன்னா ஆதரவாளர்களும், இந்தியா இந்து என்கிற போர்வையில் மீண்டும் சாதியக் கட்டுமான மேலாதிக்கத்தை விதைக்க இந்த ஊழல் போராட்டத்தை ஆதரித்து சோ எதிர்ப்பின் வழியாய்ச் சாதிக்க நினைப்பதை இவர்கள் ஆதரவின் வழியாய்ச் சாதிக்க நினைக்கிறார்களோ என்றும் கருதுவதற்கான முகாந்திரம் இருக்கிறது. இருந்தாலும், இதில் சாதாரண மக்கள், பெருமளவில் எழுச்சியோடு கலந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் போது இந்த முகாந்திரம் களைந்து போகிறது. ஆனால் அறிவு ஜீவிகளின் அந்தக் கட்டமைவில்தான் இந்தச் சந்தேகம் வலுக்கிறது.


    Thursday, 22 September 2011

    அரசியல் உண்ணா விரதங்களும் - மக்கள் போராட்ட உண்ணா விரதமும்

    அன்னா ஹசாரே

    • தெரிந்தோ தெரியாமலோ வேண்டுமென்றோ - ஒட்டு மொத்த பத்திரிகை உலகமும் அன்னா ஹசாரேவின் உண்ணா விரதப் போராட்டத்திற்கு அதரவு அளித்து தினம் முழுப் பக்க செய்தியை வெளியிட, தொலைக்காட்சிகள் நேரடி காட்சிகளை ஒளிபரப்ப அதற்குப் பிறகு உண்ணா விரதப் போராட்டம் என்பது தனிநபரை முன்னிறுத்தும் ஒரு நல்ல விளம்பரம் என அரசியல் வாதிகளுக்கு மனதில் பட்டு விட அவர்கள் ஒவ்வொருவரும் உண்ணா விரதம் மேற்கொள்ளுவதை வழக்கமாகிக் கொண்டுவிட்டார்கள்.
    சங்கர் சிங் வகேலாவும், நரேந்திர மோடியும்,
    • சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி நரேந்திர மோடி உண்ணா விரதம். இதில் நரேந்திர மோடி மத நல்லிணக்கத்திற்கு எதிரான அவரது செயல்பாடுகளைப் பற்றியும், மதக் கலவரங்களை கண்டு கொள்ளாமல் இருந்தது பற்றியும், அவரது வேண்டுகோளின்றியே அனைத்துப் பத்திரிக்கைகளும் வெளியிட்டதாக ஞாபகம். இப்போது அதை மாற்றும் விதமாக அனைத்துப் பத்திரிக்கைகளிலும் அவரது உண்ணா விரதம் பற்றிய விளம்பரம் இருந்தது. காரணமின்றி இருக்கும் உண்ணா விரதத்ததிற்கு இந்தியா முழுவதுமான விளம்பரம் கிடைக்காது என்று அறிந்து அவராக விளம்பரம் கொடுத்துக் கொண்டு இந்தியா முழுவதுமான சரிந்து போன தனது இமேஜை சரிக் கட்டிக் கொள்கிறார் - அதாவது உண்ணா விரதம் என்கிற பேரில். இந்தியப் பிரதமராக தான் விஷ்வ ரூபம் எடுப்பதற்கான வாய்ப்பாக இவர் பயன்படுத்திக் கொண்டார். அவரைப் பொறுத்த வரை உண்ணா விரதம் என்பது தனது இமேஜை சரி செய்து கொள்ளுகிற ஓர் ஆயுதம்.
    • அதே பாணியைப் பின்பற்றி இப்போது பீகார் முதல்வர் ஐந்து மாதம் யாத்ரா தொடங்க இருக்கிறாராம். தனது திட்டங்களை பற்றி மக்களிடம் கருத்துக் கேட்க. இதென்ன கொடுமைடா? 
    • நம்ம முதல்வர்கள் எல்லாம் எதோ அரசர்கள் போலவும், நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாதது போலவும், யாத்ரா வைத்துத் தான் மக்களிடம் கேட்க வேண்டும் என்பதுபோலவும் - அப்படிக் கேட்கவேண்டும் என்றால் மாதம் மும்மாரி பொழிகிறதா என்று தங்கள் அமைச்சர்களை வைத்துக் கேட்க வேண்டியதுதானே - அப்படியே இல்லையென்றாலும், இரவில் மாறு வேடத்தில் போய் அறிந்து கொள்ள வேண்டியதுதானே.
    • இப்படி முதல்வர்களே உண்ணா விரதம் இருப்பது - எதற்காகவும் இல்லாமல் வெறும் விளம்பரத்திற்காக இருப்பது - தனி நபர் மையப் படுத்தலை மட்டுமே முன்னிறுத்துவது - இந்திய பிரதமாராக முன்மொழியப் பட அனைத்து மாநிலங்களுக்கும் தெரியச் செய்வதற்காக உண்ணா விரதம் இருப்பது - 
    • இதெல்லாம் தனி நபர் முன்னிருத்தலின்றி மக்களின் தேவைகளை நிறைவேற்றவும், அல்லது மக்களுக்கெதிரான கொடுமைகளை அழிக்கக் கோரி இருக்கும் போராட்டங்களை கேவலப் படுத்துகிற செயலாகவே தோன்றுகிறது. 127 பேரின் உண்ணா விரதத்திற்கு கொடுக்கப் பட்ட முக்கியத்துவத்தை விட ஒருவரின் [பொது] நோக்கமற்ற ஒரு உண்ணா விரதத்தை முன்னிறுத்துவது அநாகரிகமானது. இவர்கள் இந்திய அளவில் தலைவர்களானால்  பாவம் மக்கள்.
    சில கற்பனை உண்ணா விரதங்கள் 
    • பேசாமல் ஊழலை ஒழிக்க திரு. மன்மோகன் சிங் மூன்று நாட்கள் உண்ணா விரதம் இருக்கலாம். அதையும் நாம் எல்லாரும் தூக்கிப் பிடிப்போம். யாருக்கு எதிராக என்றெல்லாம் கேட்கக் கூடாது. மோடி யாரிடம் சமூக நல்லிணக்கம் வேண்டுமென்று உண்ணா விரதம் இருந்தார். நாம் ஏதாவது கேட்டோமா? பிரதமரும் இருந்து விட்டுப் போகட்டுமே ! 
    • அல்லது தமிழக காவல் துறை ஆணையர் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட மூன்று நாட்கள் உண்ணா விரதம் இருக்கட்டும். 
    • அல்லது காங்கிரஸ் அமைச்சர்கள் எல்லாரும் சேர்ந்து பெட்ரோல் விலை உயர்வை குறைக்க உண்ணா விரதம் இருக்கட்டும். இருந்தாலும் இருப்பார்கள் அவர்கள். ராகுல் காந்தி விவசாய வேஷம் போடுரவரா ஆச்சே. நாமலே ஐடியா குடுக்குரோமே இது நமக்குத் தேவையா?
    பதவியில் இருப்பவர்கள் உண்ணா விரதம் இருந்தால் தங்கள் பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என்கிற சட்டம் இயற்றினால் நல்ல இருக்கும். 
    • ஏன்னா - இப்படி முதல் அமைச்சர்களும், அதிகாரத்தில் இருப்பவர்களுமே உண்ணா விரதம் இருந்தால் - (ஒன்று) அவர்களுக்கு அவர்கள் மேல் நம்பிக்கை இல்லை; அல்லது, (இரண்டு) தங்களது அதிகாரத்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்று அவர்கள் நம்புகிறார்கள் - அல்லது (மூன்று) தங்கள் அதிகாரத்தை வைத்து எதை வேண்டுமானாலும் செய்யலாம். அப்புறம் ஒரு உண்ணா விரதம் இருந்து நாம் நல்லவர்கள் என்று காட்டிக் கொள்ளலாம் என்று நம்புகிறார்கள். 
    • அவர்களுக்கு அவர்கள் மேலேயோ அல்லது அதிகாரத்தை வைத்தோ ஒன்றும் செய்ய முடியாது என்று அவர்கள் நம்புகிறவர்கள் அல்ல. அப்படியெனில் எப்போதோ அவர்கள் தங்கள் பதவிகளைத் தூக்கி எறிந்திருப்பார்கள். எனக்கென்னவோ அவர்கள் மூன்றாவதைத் தான் நம்புகிறார்கள் என்று தோன்றுகிறது.
    கூடன்குளம் அணு உலைக் கெதிரான போராட்டம் மக்கள் போராட்டம். பல்வேறு அச்சுறுத்தல்களுக்குப் பிறகும்; பல ஆண்டுகள் தொடர் அறிவுருத்தளுக்குப் பிறகு, அதன் தீமைகளை எல்லாம் எடுத்துச் சொல்லி பல அரசுகள் செவி மடுக்காத நிலையில் இன்று ஒன்று பட்ட போராட்டமாக உருவெடுத்து முதல்வரைப் பார்த்து எடுத்துச் சொல்லுகிற நிலைக்கு அது வந்திருக்கிறது. அதில் பல்வேறு நபர்கள் அங்கே நேரடியாக வந்து [மேதா பட்கர் ] தங்களது ஆதரவை தெரிவித்து இருக்கிறார்கள். 

    இதுதான் ஒரு போராட்டத்திற்கான வரையறை. ஏறக்குறைய நூற்றி ஐம்பது பேர் உண்ணா விரதப் போராட்டத்தில் பங்கேற்கவும், ஆயிரக் கணக்கான மக்கள் பந்தலில் காலை முதல் இரவு வரை உண்ணாதிருந்து தங்கள் எதிர்ப்பையும் இத்தனை நாட்கள் காட்டி அதில் ஏறக்குறைய வெற்றியும் பெற்றிருப்பது தனி நபரின் ஆதாயத்திற்காகவோ அல்லது புகழ் வேண்டியோ அல்ல. 

    இத்தகையப் போராட்டங்கள் தான் தேவையே தவிர - தனி நபர் அல்லது ஆட்சியில் இருக்கும் நபர்கள் நடத்தும் நாடகங்களை முதலிலேயே வேரறுக்க வேண்டிய அவசியம் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு.

    நமக்குத் தேவை நடிகர்கள் அல்ல - மக்கள் விழித்தால்தான் அரசியல்வாதிகள் நடிப்பதை நிறுத்துவார்கள். 
    முன்பு நடிகர்கள் அரசியலுக்கு வந்தார்கள். இன்றைய சூழலில் அரசியல் வாதிகள் நன்றாகவே நடிக்கிறார்கள்.  
    --
    கூடங்குளம் போராட்டம் ஏறக்குறைய எதிர் பார்த்த ஒரு வெற்றி நிலையில் இருக்கிறது. இதில் வலைப் பதிவர்களின் பங்கை நாம் பாராட்டியே ஆக வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒருவர் பற்றி எழுதினோம். இந்தப் போராட்டம் தொடங்கியது முதல் "இன்குலாப் ஜிந்தாபாத்" மட்டுமே சொல்லிக் கொண்டிருந்த சூர்ய ஜீவா நினைக்கப் பட வேண்டியவர். எல்லா பதிவுகளையும் தொகுத்துக் கொடுத்த ராஜேஷ் : வைரை சதீஷ்:   நண்டு நொரண்டு:    மனோ போன்ற எல்லாரையும் - எல்லாப் பதிவர்களின் பெயரையும் குறிக்க முடியாமைக்கு வருந்துகிறேன் - மற்றும் கூடங்குளம் பற்றி எழுதிய எல்லாப் பதிவர்களுக்கும் வணக்கங்களும் பாராட்டுதல்களும். 
    • இது எதற்கெனில் தமிழக பத்திரிகைகளுக்கு முன்னரேயும், அப்போராட்டம் தொடங்கிய நாட்கள் முதற்கொண்டு பதிவர்கள் காட்டிய அக்கறைக்காக. விளம்பரம் அல்லது சென்சேஷனல் என்றால் தான் பத்திரிக்கைகள் ஆர்வம் காட்டும். ஆனால் பதிவர்கள் நிலைப்பாடு எடுக்கிறவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்திருப்பதற்காக. 
    --
    எதிரும் புதிரும்.
    மோடிக்கான ஆதரவை இட்லிவடையும் - அவரின் நாடகத்தை அரங்கேற்றும் சிந்திக்கவும் 

    Friday, 2 September 2011

    சிறு துளி - 02092011


    விஜய் தொலைக்காட்சியில் வரும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் - உலக அளவில்
      • உலகம் எவ்வளவு சின்னதுன்னு தெரியனும்னா அதில் திவ்யா 'இம்முறை உலக அளவில்' னு சொல்லுறப்ப அவங்க கையப் பாருங்க. உலகம் அவ்வளவு சின்னதான்னு தோணும். 
      • அதிலேயே - கோபிநாத் 'உலக அளவில்' னு சொல்லும்போது அந்தக் குரல் அழுத்தமும், கையைக் காட்டும் விதத்தையும் பார்த்தா உலக அவ்வளவு பெருசான்னு தோணும். 
    மரண தண்டனைக் குறைப்பு
      • முடியவே முடியாதுன்னு சொன்ன அம்மா, நீதிமன்றம் எட்டு வாரம் தடை விதித்த அந்த நேரத்துல தீர்மானம் நிறைவேற்றப் போய் - பாருக் அப்துல்லா நாங்களும் ஒரு தீர்மானம் நிறைவேற்ற முடியுமான்னு அப்சல் குருவுக்காக ன்னு ஒரு கேள்வியை கேட்குறாரு?
      • இந்தியா ரொம்பப் பெருசுன்னு நினைச்சேன். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எப்படி ஒன்றாய் இருக்கிறோம் பாருங்கள். - தேசிய நீரோட்டம். ஏற்கனவே தமிழக சபையின் தீர்மானம் இலங்கையினால் கேள்விக்குட்படுத்தப் பட்டது. உலகம் ரொம்பச் சின்னதுதானா? 
    பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்
      • சிறைப்பிடிக்கப்பட்ட தமிழர்கள் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இருப்பதால் அவர்கள் விடுதலைக்கு வழில்லாமல் செய்திருக்கிறார் இலங்கை அதிபர். 
      • இந்தத் தடுப்புச் சட்டம் - இந்தியா தொடங்கி இலங்கை வரை நீடிக்கிறது. உலகம் இதைவிடப் பெரிதல்லவா? 
    கேரளா மார்க்சியம்
      • அமெரிக்க அரசிடமிருந்து உதவி பெற மார்க்சியத் தலைவர்கள் எல்லாரும் ஆர்வம் காட்டியதை விக்கி லீக்ஸ் சொல்லியிருக்காம். இதுல என்ன தப்பு இருக்குன்னு அவர்கள் கேட்டார்களாம். ஆனால் அதுக்காக எங்கள் கொள்கையில் சமரசம் எதுவும் செய்து கொள்ள மாட்டோம் -னு சொல்லியிருக்காங்க. 
      • முதலாளித்துவப் பணம் வேணும் ஆனால் கொள்கையில் உறுதியாய் இருப்போம்னா... அமெரிக்கவரைக்கும் போகுது. 
    ஊழல் எதிர்ப்பு

      • அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாகவும், வன்முறையில் இங்கே இறங்கி ஊழலை எதிர்ப்போம் என்று சொன்னவரும், கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று குரல் கொடுத்தவருமான குரு பாபா ராம்தேவ் மீது கருப்பு பண வழக்கு தொடரப் பட்டிருக்கிறதே.
      • ஸ்காட்லாண்டுக்குப் பக்கத்தில் ஒரு குட்டித்தீவே அவருக்கு சொந்தமா இருக்காம்?பாருங்க திவ்யா சொல்றமாதிரி உலகம் ரொம்பச் சின்னதாத்தான் இருக்கு.

      • அன்னா ஹசாரே போராட்டத்துக்கு இவ்வளவு விரைவாக பதில் கிடைத்திருக்கிறதே.
     

        Thursday, 25 August 2011

        அன்னா ஹசாரே - காந்தியா? கடவுளா?

        அன்னா ஹசாரே - இன்றைக்கு ஒரு கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்ட ஒரு சிம்பல் - அடையாள நிலைக்கு உயர்த்தப் பட்டிருக்கிறார். அவரைப் பற்றி ஏதாவது சொல்லவேண்டுமென்றால் பயந்து பயந்துதான் சொல்ல வேண்டியிருக்கிறது. பாரத மாதாவை யாரும் எப்படி எதுவும் சொல்லிவிடக் கூடாதோ, காந்தியை எப்படி யாரும் விமர்சித்து விடக் கூடாதோ – தோனியை – தென்டுல்காரை யாரும் எப்படி விமர்சனம் செய்யக் கூடாதோ [இந்த ஒப்புமைக்கு மன்னிக்கவும்] அப்படி இன்றைக்கு அன்னா உயர்ந்திருக்கிறார்.

        இது ஒரு நல்ல தொடக்கமா என்பது தெரியவில்லை. அன்னாவைப் பொருத்தவரைக்கும் மிகப் பெரிய மக்கள் இயக்கத்தை கட்டி எழுப்பும் ஆற்றல் அல்லது சரியான நேரத்தில் சரியான ஒன்றைத் தொடங்குதல் அல்லது முன்னெடுத்தல் என்பது தொடங்கி - மிகச் சரியாக மீடியாவின் துணை என்று பல விதங்களில் இந்தப் போராட்டம் கவவனிக்கப் படவேண்டியது. இத்தகைய - எல்லாவற்றிலும் மிகச் சரியாக அமைதல் என்பது எல்லாருக்கும் வாய்க்காது - அல்லது வாய்க்க வைப்பதற்கான சக்தி இருக்காது. [அது எதுவாக வேண்டுமானாலும் கூட இருக்கலாம் - கார்ப்பரேட் சக்திகளாகக் கூட இருக்கலாம்] - அன்னாவிற்கு அது வாய்த்திருக்கிறது. இது ஒரு மக்கள் சக்தியாக உருவெடுக்கும் பட்சத்தில் - தனி நபர்களாக செய்ய முடியாத காரியத்தை ஒரு இயக்கத்தின் வழியாகச் செய்ய முடியும் என்று சேர்ந்து இணைகிற மக்கள் சக்தியை நாம் பாராட்டத்தான் வேண்டும்.

        அதே சமயத்தில் சிலர் கார்ப்பரேட் கம்பெனிகளில் வேலை செய்வோர் இவ்வியக்கத்தில் இணைவதையும் அதற்கு அதரவு தெரிவிப்பர்களை கிண்டல் செய்வதும் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை - நல்ல சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கிற இளைஞர்கள் வெறும் சம்பளம் ஆட்டம் பாட்டம் என்று இல்லாமல் தன்னைச் சுற்றியிருக்கிற சூழலையும் மாற்றுவதற்கு தங்களது நேரத்தையும் பணத்தையும் செலவு செய்யத் தயாராக இருக்கிற பொது நலம் அதிகமாகிக் கொண்டு வருகிறது மிகவும் ஆரோக்கியமான சூழல் என்றே படுகிறது. தங்களால் முழு நேரத்தையும் இதற்காகச் செலவு செய்ய முடியாது என்கிற போது செய்பவர்களோடு இணைய வேண்டும் என்கிற ஆர்வம் நல்லது என்றே படுகிறது. இதற்கு முன்பு ஈழத் தமிழர்களின் நலனிலும் அவர்கள் அக்கறை கொண்டு செயல்பட்டதும் நினைவில் கொள்ள வேண்டும்.

        சரி இப்போது விஷயத்திற்கு வருவோம் - அன்னா ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தைக் கட்டி எழுப்புகிறார் என்பதற்காக அவர் செய்வது எல்லாம் சரி என்று பேசாமல் நாம் இருக்க வேண்டுமா? - அல்லது ஜன்லோக்பாலில் உள்ளது எல்லாம் சரி என்றோ அல்லது அவைகளைப் பற்றி பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று அமைதி காப்பது நல்லதா, அல்லது அது கருத்துச் சுதந்திரத்தைப் பாதிப்பாகாதா என்பதே கேள்வி. அருந்ததிராய் சில கேள்விகள் எழுப்பி விட்டார் என்பதற்காக அவரை தேசத் துரோகி என்றோ அல்லது அவர் அரை நிர்வாணப் படம் வெளியுட்டு நாவல் எழுபவர்தானே என்று கிண்டல் செய்வதோ சரியா என்றே படுகிறது. இன்னும் நாம் கருத்துச் சுதந்திரங்களுக்குத் தயாராக வில்லை என்பதுதான் தெரிகிறது.

        மக்களாட்சியை விரும்புகிற நேசிக்கிற ஒரு அரசில் தனிப் பட்ட முழுச் சக்தி வாய்ந்த ஒரு 'சுதந்திர அமைப்பு' எந்த அளவுக்கு அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் அல்லது பணபலம் உடையவர்கள் கையில் செல்லாது என்பதைக் கேட்கிற உரிமை எல்லாருக்கும் உண்டு. இன்றைக்கு அன்னா – சரி- நாளைக்கு - மக்களால் தேர்ந்தெடுக்கப் படுகிற ஒருவனே ஹிட்லராக மாறிவிடும் சமயத்தில் - இந்த அமைப்பு மக்களாட்சி தத்துவத்திற்கு விரோதமாக இருக்கிறது என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள் –

        அல்லது மற்ற மக்கள் இயக்கப் போராட்டங்களில் போராடுகிறபோது இந்த அளவுக்கு மீடியாக்களின் பங்கு இல்லையே என்று கேட்பதற்கான உரிமை ஒருவனுக்கு உண்டு. மீடியா மக்கள் நலனை மையைப் படுத்தும் புள்ளி என்றால் - மக்களின் உயிருக்கே பங்கம் விளைவிக்கும் அணு மின் நிலையம் பற்றியும், மற்ற இடங்களில் விரட்டி அடிக்கப்பட்டு கூடங்குளத்தில் அமைக்கப் பட்டிருக்கும் அணுமின் நிலையப் பாதுகாப்பு முதற்கொண்டு உண்ணாவிரதம், போராட்டம் என்று அதில் ஈடு பட்டிருக்கும் மக்கள் கேட்பதற்கான உரிமை இருக்கிறது. அதை அவர்களோ அல்லது அவர்கள் சார்பாகவோ கேள்வி எழுப்பும் பட்சத்தில் அதில் உள்ள உண்மைகளைக் குறைந்த பட்சம் கேட்பதற்கான திறந்த மனது வேண்டும்.

        ஏன் திறந்த மனது என்று பேசுகிறேன் - எல்லா அறிவு ஜீவிகளுமே - 'தாங்கள் எது சரி என்று நினைக்கிறார்களோ’ அதுதான் சரி என்கிற அளவில்தான் சிந்திக்கிறார்கள், எழுதுகிறார்கள். தங்களுக்குத் தேவை என்றால் பிறர் சதி என்று எழுதுகிறார்கள். காந்தியைப் பற்றி யாராவது விமர்சித்தால் இந்தியாவைத் துண்டாட அமேரிக்கா சதி என்று எழுதுகிறார்கள். காங்கிரஸ் இதைப் பி.ஜே.பி. யின் சதி என்றால் ஏற்றுக் கொள்ள மனம் வரலை. [இந்திராகாந்திக்குப் பிறகு ? ? ?] காங்கிரசில் ஜன நாயகம் இல்லை அது பிரித்தாளுகிறது –

        காந்தி கடவுளாக இருக்கலாம் - அதற்காக அவர் செய்தது எல்லாம் சரி என்று சொல்லுகிற அளவிற்குத் தான் நாம் இருக்க வேண்டும் என்றால் அது நாம் தனி மனித கடவுளர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்றுதான் பொருள்.

        தனக்கு வேண்டுமென்றால் மிகப் பெரிய அடையாளமாக இருக்கக் கூடிய நபர்களைக் கட்டுடைப்புச் செய்வது, தனக்குப் பிடித்த நபரை யாராவது கட்டுடைப்புச் செய்தால் அதை சதி என்பதும் 'திறந்த மனது என்பது' இருக்கிறதா என்றே தோன்றுகிறது.

        அருந்ததி ராயைப் பிடிக்காமல் இருக்கலாம் - அருணா ராயைப் பிடிக்காமல் போகலாம் - அதற்காக அவர்கள் எழுப்பும் கேள்விகளில் நியாயம் இருப்பதை குறைந்த பட்சம் பார்க்காவாவது செய்ய வேண்டும்.

        முதலில் இது வரட்டும் பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்பதெல்லாம் சரியா என்று தெரியவில்லை. வராற்றின் தவறுகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். ஒருவர் சொன்னார் - முதலில் சாதியை ஒழிப்பதற்கு வழியப் பாருங்கள் பிறகு விடுதலையைப் பற்றிப் பேசலாம் - இல்லை உன் வாயைப் பொத்து இதைப் பத்திப் பின்னாடிப் பேசிக்கலாம்னு சொன்னாங்க. அல்லது சில பேரு தனியாப் போகணும்னாங்க - இல்ல இப்ப ஒண்ணா இருப்போம் பின்னாடிப் பாத்துக்கலாம்னாங்க - வடக்கும் தெற்கும் எல்லாம் ஒன்னு - வளர்ச்சி மட்டும் வடக்கே - தெற்கு - எதுவாக இருந்தாலும் தெற்கு நிறைய வருமானத்தை கொடுக்கிறது - இரயில்வே சிறு உதாரணம் - ஆனால் வளர்ச்சி மட்டும் வடக்கேயாவா என்று சில பேர் கேட்டார்கள் - பேசாம இரு முதலில் இந்தி கத்துக்க பின்னாடிப் பார்க்கலாம். எவ்வளவு உயிர் போகிற பிரச்சனைகள் இருக்கு இங்கேன்னா - முதல்ல பேசாம இரு பின்னாடிப் பாத்துக்கலாம்னா - அது கூடப் பரவாயில்லை - அதுக்காக கேள்வி எழுப்புறவனைப் பத்தி மட்டமா விமர்சித்தால் நல்லா வளரும் பத்திரிகை சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் - ஜனநாயகமும்.

        ஊழல் ஒழிக்கப்பட வேண்டியதுதான். அன்னா வின் முயற்சிப் பாராட்டப்பட வேண்டியதுதான் - அரசின் அடாவடித் தனங்களுக்கும் ஊழலுக்கும் எதிராக அன்னாவோடு சேர்ந்து போராடலாம்தான் - போராடனும்தான் - அதற்காக ஜன்லோக்பாலை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதோ -

        அதைக் கேள்வி கேட்டால், கேட்பவன் சமூக அக்கறை இல்லாதவன் என்று முத்திரை குத்தப் படுவதோ, அல்லது அவன் ஊழலை விரும்புகிறான் என்பதோ - நாம் சமத்துவத்தையும், பல்வேறு தரப்பு நியாங்களுக்கும், பார்வைகளுக்கும் மதிப்பளிக்கத் தெரியாத மனிதர்களாய் இருக்கிறோம் என்றுதான் பொருள். அதனால் தான் அன்னாவோ, அண்ணாவோ, யாரும் ஒரு சிம்பலாக்கப் படுவதை - ஐடல் -ஆக்கப் படுவதை எதிர்க்க வேண்டியிருக்கிறது.

        Monday, 22 August 2011

        அன்னா ஹசாரே மற்றும் அரசியல் வாதிகள்

        அன்னா ஹசாரே - இந்தியாமுழுவதும் உச்சரிக்கப்படும் மந்திரம். இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இவரைத் தவிர வேறு யாரும் நமது கண்ணுக்குத் தெரியப் போவது இல்லை.

        இந்தியா ஊழலற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்காது. ஊழல் பெருச்சாளிகளைத் தவிர எல்லாரும் அதை விரும்புவர். எனவே இப்போது நடந்து கொண்டிருக்கும் இந்த இரண்டாவது சுதந்திரப் போராட்டம் - ? பற்றி பெரிய அபிப்பிராயம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஊழலற்ற நாட்டிற்கான விதையை யார் விதைத்தால் என்ன? நாம் வேண்டும் என்று விரும்புவதை யாராவது ஒருவர் செய்யும் போது அவர்களுக்கு ஆதரவுக் கரம் கொடுக்க கை தானே எழுகிறது.
        அன்னா பற்றி முதலில் மீடியாக்கள் செய்தி கொடுத்த போது எனக்கு அப்படித் தான் தோன்றியது. இன்றும் ஒன்றும் பெரிதாய் மாற்றம் இல்லை. ஆனால் சில கேள்விகள் கூடச் சேர்ந்து கொண்டன. இனிமேல் எனக்குள்ளும் மாற்றம் வரலாம் -

        • ஜன் லோக்பால் தாக்கல் செய்யப் பட - ஏதோ காங்கிரஸ் கட்சி மட்டும் எதிர்ப்புத் தெரிவிப்பதாக ஒரு மாயை எல்லா இடத்திலயும் இருந்து எழுப்பப் படுகிறது. அவர்கள் இப்போது ஆட்சியில் இருப்பதால் இது தவிர்க்கப் பட முடியாது என்றாலும் எந்த அரசியல் கட்சியும் இதற்கு பெருத்த ஆதரவு தருவது போல இல்லை - பி . ஜே. பி. யும் பின் வாங்கிவிட்டது. இதுவரை மிகக் குறைந்த ஆண்டுகளே ஆட்சியில் இருந்த ஒரு கட்சியே இதற்கு ஆதரவு தராத போது இத்தனை ஆண்டுகள் பதிவியிலேயே ஊறித் திளைத்த ஒரு கட்சி எப்படி ஆதரவு தரும். எந்த அரசியல் வாதியும் இதற்கு ஆதரவு தர விரும்ப வில்லை. அதனால் அடிப்படையிலேயே நமது அரசியல் அமைப்பில் ஏதோ குறை இருக்கிறது.


        முதலில் பகடி -
        ஏன் இந்த அரசியல்வாதிகள் இதை எதிர்க்கிறார்கள்?
        அவர்களுக்கு நாட்டின் மீது உள்ள பற்றுதான். குழம்பாதீர்கள் -
        ஜன லோக்பால் நிறைவேறிவிட்டது என்று வைத்துக் கொள்வோம்.
        அரசியல் வாதிகளை விடுங்கள் - அது எல்லாரும் ஓட்டு மொத்தமாக எல்லா அரசியல் வாதிகளும் உள்ளே போக வேண்டியதுதான். ராசா வின் குற்றச் சாட்டை எடுத்துக் கொண்டால் பிரதமர் உட்பட எல்லாரும் உள்ளே  -
        அப்புறம் பழைய அரசு என்று பார்த்தாலும் - எல்லாக் கட்சியிலிருந்தும் உள்ளே போவார்கள்.
        இதில் அரசு அதிகாரிகள் - எந்த அரசு அலுவலராக இருந்தாலும் - ஒரு பக்கம் காசு வாங்காமல் எதையும் நகர்த்துவது இல்லை.
        "அன்னா லோக் பால் " சொல்லுவதுபடி பார்த்தால் எல்லா அரசு அலுவர்களும் - சிறு மட்டம் தொடங்கி பெரு மட்டம் வரை - எல்லாரும் ஊழல்வாதிகள்தான். ஏன்னா யாரு வேண்டுமானாலும் யாரைப் பற்றி வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம். அப்ப ஒட்டு மொத்தமாய் இரண்டு ஆண்டுகளுக்கு விசாரணை நடந்து தீர்ப்பு வழங்கப் படும். அப்படியெனில் - பால் நிறைவேறிய நாள் தொடங்கி வெறும் கைது படலம்தான்.
        அப்படிப் பார்த்தால் குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு - அப்புறம் தண்டனை கிடைக்கும் பட்சத்தில் சிறு பியூன் தொடங்கி -
        ஒவ்வொரு மட்டத்திலும் வெகு சிலர் தவிர -
        மேல்மட்டம் வரை எல்லாரும் உள்ளே போக வேண்டியதுதான். எல்லாரும் உள்ளே போகும் பட்சத்தில் நாட்டில் எதுவும் நடைபெறாது. அரசியல் வாதிகள் உள்ளே போனால் பரவாயில்லை.
        ஆனால் அரசு இயந்திரம் முழுவதுமாகப் பாதிக்கப் பட்டால் என்ன ஆவது - எது ஊழல் - பெரிய லெவல் மட்டும் இல்லை - சின்னதும்னு ஜன் லோக்பால் சொல்லுது. - அதில் லஞ்சம குறைந்த பட்சம் உள்ளே வரும் - நமக்கு வர வேண்டிய காசை ஒரு அரசு அலுவலர் தராமல் விட்டால் - அதை அவர் எடுத்துக் கொண்டால் - அல்லது ஒன்றைத் தருவதற்கு எதாவாது பதிலாகக் கேட்டால் - அது லஞ்சம் / ஊழல் -
        அப்படின்னா முதல்ல மக்கள் புகார் குடுப்பது [சென்னையில் பேருந்து கண்டக்டர்கள் மேலதான்] அவர்கள் தொடங்கி எல்லாரும் உள்ளே போயிட்டா எப்படிப் பஸ் ஓடும் - ஆட்டோக்கள் சொல்ல வேண்டாம் [அவர்கள் அரசு அலுவலர்கள் இல்லை]- அப்புறம் அலுவலகம் - அப்புறம் ஒன்னொன்னா மேல பொங்க - இப்படி எல்லாரும் உள்ள போயிட்டா நாட்டின் ஸ்திரத் தன்மை பாதிக்கப் படும்னுதான் -
        எல்லா அரசியல் வாதிகளும் ஜன் லோக் பாலை எதிர்க்கிறார்கள். இப்போது புரிகிறதா அவர்கள் நாட்டு பற்று....

        அப்புறம் மீடியா
        தாங்கள் ஒன்று நினைத்தால் எதையும் சாதித்து விட முடியும் என்பதற்கு இவர்கள் தான் - இது வரைக்கும் எத்தனை எத்தனையோ போராட்டங்கள் - நியாயமான போராட்டங்கள் - இவர்கள் நினைத்தால் சப்போர்ட் உண்டு இல்லையென்றால் ஒன்றும் இல்லை. முல்லைப் பெரியாறு அணை - பழங்குடியினர் போராட்டம் / நியாயமான போராட்டங்கள் பலவும் மறைக்கப் படுவதும் - தேவையான அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் - இதுதான் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்று சொல்வது வேதனைக்குரியதுன்னு ஒரு பத்திரிக்கயாளர் [Tehelka] சொல்லியிருக்கார். இணைப்பில் பாருங்க - [ஆங்கிலம்]

        http://www.youtube.com/watch?v=hYbhpbdkWhg

        • எந்த ஒரு தொழிலும் இப்போது நேர்மை இல்லை - அடிப்படை அரசியல் பொருளாதார மாற்றங்களில் நாம் கவனம் செலுத்தாமல் - மேலோட்டமாக - ஒரு நபரை முன்னிறுத்தி செயல்படுத்தப் படும் போராட்டம் - அதில் உள்ள நிறை குறைகள் பற்றிய பொது விவாதம் - இவைகளுக்கு எல்லாம் இன்னும் வழி வகுத்தால்தான் எதற்குமே நல்லது. ஒரு சுதந்திரமான ஊழல் ஒழிப்பு நிறுவனம் என்பது இப்போது பிரகாசமாகத்தான் தோன்றுகிறது. முதலில் அப்படித்தான் பல விஷயங்களுக்குத் தோன்றியது.

          •  மக்கள் நல்ல தலைவர்களைத் தேர்ந்தெடுக்க முடியும் என்றுதான் வாக்குரிமை பெற்ற போது நினைத்தோம். நல்லவர்கள் யாரையாவது தேர்ந்தெடுக்க முடிந்ததா..

          • நிலா உச்ச வரம்பு சட்டம் கொண்டு வந்த பிறகு - பண்ணையார்கள் எல்லாம் குறைந்து விட்டார்களா? வேறு விதத்தில் பண்ணையார்கள் வர வில்லையா.

          •  T V S பார்சல் சர்வீஸ் எல்லாம் எப்படி வந்தன? 

        • எல்லாம் சரிதான் ஒவ்வொரு முறையும் ஒன்றைச் சரி செய்ய ஒருதலைவர் வரும் வரை காத்திருப் பதை விட அடிப்படை மாற்றங்கள் பலவற்றைச் சரி செய்ய வேண்டியிருக்கிறது.

        சரி இந்த ஊழல் அரசு அலுவலகங்கள் - அரசு ஊழியர்களுக்கு மட்டும்தானா - கார்பரெட் நிறுவனங்கள்  - ஆட்டோக் காரர்கள் இவர்களுக்கெல்லாம் லோக்பால் கிடையாதா?

        Saturday, 9 April 2011

        அன்னா ஹசாரேக்கு வாழ்த்துக்கள்

        வெற்றி பெற்ற 
        அன்னா ஹசாரேக்கு வாழ்த்துக்கள்.
        அரசின் வாக்குறுதி நிறை வேற்றப் படும் என்று நம்புவோம்.

        அன்னா ஹசாரேக்கு எதிராய் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் - ஊழலுக்கு ஆதரவாய்

        அன்னா ஹசாரே ஒரு தனி மனிதனாய் பல்வேறு கோரிக்கைகளுக்குப் பிறகும், பிரதமரோடு உரையாடிய பின்பும், இது ஒன்றும் நடக்கிற காரியம் இல்லை என்று, சாகும் வரை உண்ணா விரதம் இருக்கிறார். இது போராட்டம். களத்திலும் நாட்டிலும் மிக குறைவான எண்ணிக்கையிலேயே இப்போராட்டம் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறது.
        இணையத்தில் தமிழ் வலைப் பூக்களில் இது பெற்ற முக்கியத் துவத்தைக் கூட தமிழ் பத்திரிகைகள் பதிவு செய்யவில்லை என்பது வருத்தம்தான். 

        எத்தனை எத்தனைப் பத்திரிக்கைகள், தொலைக் காட்சிகள். எதெதெற்கோ நேரடி ஒளிபரப்புச் செய்யும் தொலைக் காட்சிகள் இதைச் செய்தால்தான் இப்போராட்டத்தை வலுப் படுத்த முடியும் என்பது திண்ணம். 

        வியாபார நோக்கம் கொண்ட பத்திரிக்கைகள், ஊழல் பின்புலம் கொண்ட அரசியல் வாதிகளின் தொலைக் காட்சிகள், வியாபார நோக்கம் கொண்ட விளையாட்டு தொலைக் காட்சிகள், உண்மையை இருட்டடிப்புச் செய்யும் மீடியாக்கள் இதற்கு ஒரு போதும் துணையிருக்காது.
        எல்லாக் கட்சியும் அயோக்கியக் கட்சிதான். அவைகளுக்குள்ள அதிகாரப் போதையைத் தெளிவு படுத்தவும், ஊழல் பற்றிய நினைவு வராமல் இருக்கவும், லோக் பால் சட்ட மசோதா நிறைவேற்றப் படவேண்டும் என்பதுதான் இந்த வீரரின் கோரிக்கை. 

        எதற்கும் ஒத்து வராத அனைத்து அரசியல் கட்சிகளும், இந்த  விஷயத்தில் ஒற்றுமையாய் இருக்கிறார்கள்.  அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் - ஊழலுக்கு ஆதரவாய். இவர்கள் அனைவரும் ஊழலுக்கு எதிராய் ஒன்றைக் குரல் கொடுப்பார்கள் அதில் ஏதாவது பெற முடியுமெனில்....
        அவநம்பிக்கை எதையும் சாய்த்து விடக் கூடாது. எல்லாத் தமிழ் வலைப் பூக்களின் முதற் பக்கத்திலும் அன்னா ஹசாரே பற்றிய கட்டுரைகள் முதற்பக்கத்தில் சில நாட்களுக்கு இருக்கும் படி செய்தாலே இந்தப் போராட்டத்தை இன்னொரு நிலைக்கு எடுத்துச் செல்ல முடியும்.

        சிறு தீப் பொறி காட்டை அழிக்கும். அன்னா ஹசாரேப் பொறி ஊழல் நாட்டை ஒழிக்கும்.


        விரிவான கட்டுரைகளுக்கு 
        http://truetamilans.blogspot.com/2011/04/40000-1000.html


        http://sakthistudycentre.blogspot.com/2011/04/blog-post_7097.html


        http://smuthukumaran.wordpress.com/2011/04/07/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87/

        http://tamilnanbargal.com/node/32566

        http://www.sangkavi.com/2011/04/blog-post_07.html

        http://www.giriblog.com/2011/04/hazaare-no-to-politicians.html