Sunday 30 December 2018

எது சிறந்தது? அந்தி & விடியல்


எனக்கு இன்னல் 
என் கண்ணும் மனமும்தான் 










கண் உணர்வதை 
Courtesy: https://www.udemy.com/power-of-the-mind-in-health-and-healing/
மனம் பார்ப்பதில்லை 
மனம் உணர்வதை 
கண் பார்ப்பதில்லை

இன்றைக்கு -
எது அழகு என்பதில் 
இரண்டுக்கும் போட்டி

கண் பேசுகிறது
வெண்மை அழகுதான்
கருமை அதைவிட அழகு 
கருவெண்மையோ பேரழகு.

தனித்த இருப்புகசப்பு
இணைந்த இருப்பேசிறப்பு 
இவைகளை இமைக்காமல் 
இரசிப்பேன்

மனம் அதிசயமாய் 
அதை உணர்ந்து அங்கீகரிக்கிறது - ஆம்!

எனக்கும் அதுவே பிடிக்கும்
வார்த்தை மனிதம் ஆனதை 
திகட்டாமல் தியானிப்பேன்
கடவுள் கடவுளாய் 
இருப்பதை விட
கடவுளும் மனிதனும் 
இணைந்த இணைப்பே
என் இருப்பு 

மனதின் சிலாகிப்பு 
புரியாமலேயே
கண் தொடர்ந்தது 

இணைவதை இரசிப்பதால் 
தினமிருமுறை 
இருளும் பகலும்
இணைந்து முத்தமிடும் 
அந்தக் கலவையை
காண்பதே என் ஆவல்

அந்தியும், விடியலும் 
நோக்காமல் 
என் நாள் முடிவதும் இல்லை 
உதிப்பதும் இல்லை

அந்தியின் அற்புதமும்  
விடியலின் வண்ணமும் 
சொல்லியா தெரியனும்?

யாமத்தில் உறங்கி 
பகலில் எழும்
விழிகளுக்குத் தெரியாது 
விடியலின் சீர்மை 

பகலில் குளிர்அறை நுழைந்து
இருளில் வெளிவரும்
ஆளுக்குப் புரியாது 
அந்தியின் அருமை

மனம் ஆமோதித்தது

கண் தொடர்ந்தது 
அந்திப்பொழுது 
மாலை மயங்கி 
இருள் கவ்வும் நேரம் அது சுகமானதே – 
சாயும் சூரியனைக் 
காணக் கண்கோடி வேண்டும்

வைகறைப் பொழுது 
காலை விழித்து 
இருள் விலகும் நேரம்அது ஆனந்தமானது 
எழும் சூரியனைக்
கண்மூடிக் காண வேண்டும்.

மூடியிருக்கும் கண் 
திடீரெனத் திறந்து பார்த்தால் 
அந்தியும் வைகறையும் 
ஒன்றுதான்

செவ்-வான் 
இரண்டுக்கும் பொதுவானதே!

மனம்
கண்ணை உணராமல் 
கேள்வி ஒன்றைத் தொடுத்தது-
அந்தியா, விடியலா
எது சிறந்தது?

மனத்தின் ஞானம் 
கண்ணுக்கும் பரவியது
வினாடி கூட  விசனப்படாமல்
கண் சொன்னது
இதில் என்ன சிக்கல்?
விடியல் தான்.

அந்தி - பகலை முடித்து 
இருளைக் கொணர்கிறது
விடியலோ - இரவை முடித்து
வெளிச்சம் கொணர்கிறது.

செவ்வானம் 
இரண்டுக்கும் பொதுதான்
ஆனால் அது 
எதைக் கொணர்கிறது
என்பதிலேதான் சிறப்பு.

வெளிச்சம் வந்தால் தான் 
கண்களுக்கு வேலை
இருளில் இல்லை!

மனம் மீண்டும் 
ஆமோதித்து விளக்கியது 

அந்தி இருளைக் கொணர்கிறது
இருளின் வேளையில் 
விளக்குகள் ஆயிரம் எரிந்தாலும் 
அது இருளின் நேரமே
உறங்கும் நேரமே

ஏழைகளின் ஏக்கத்தை 
இருள் கனவாக்கி விடுகிறது.
கொள்ளையர்களின் 
கதவைத் திறந்து விடுகிறது.

விடியல் வெளிச்சம் கொணர்கிறது 
தகிக்கும் நேரம்
மேகக்கூட்டங்கள் மறைத்தாலும் 
அது பகலின் நேரமே 
உழைக்கும் நேரமே!
கொள்ளையர்களின் கோரத்தை கட்டவிழ்க்கிறது.
உண்மைதான் ...
ஆனால் ...

எது சிறந்தது என்பது
எது தொடர்கிறது 
என்பதைக் கொண்டே 
தீர்மானிக்கப் படுகிறதா?

அந்தியை விட வைகறை மேலானதா
இல்லை ... இல்லவே இல்லை ...

எது சிறந்தது என்பதை 
வெளிச்சம் தீர்மானிப்பதில்லை
பார்வை தீர்மானிக்கிறது.

மனம் பார்த்ததை
கண்கள் உணரவில்லை
ஆனாலும் மனம் தொடர்ந்தது

மக்களைப் பார்க்கிறேன் அவர்கள் 
மரங்களாய்த் தெரிகிறார்கள் என்பதே 
இரவின் அடையாளம்  

மக்களைப் பார்க்கிறேன் அவர்கள் 
மரங்களாயும் தெரிகிறார்கள் என்பதே இன்று 
பகலின் அடையாளம் 

மரங்களைப் பார்க்கிறேன் அவர்கள் 
மனிதர்களாய்த் தெரிகிறார்கள் என்பதே 
விடியலின் அடையாளம்

விடிவதால் வருவதில்லை விடியல் 
மனம் தெளிவதால் வருவதே விடியல் 

சூரியனைச் சுற்றும் பூமி
என் பக்கம் வந்தால் வெளிச்சம் நிச்சயம் 
மனிதனை இயக்கும் துடி 
என் நெஞ்சில் நின்றால் எழுவேனா நிச்சயம்?

விடியலில் எழுந்தால்
மரங்களைப் பாருங்கள்
மனிதர்களாய் பாருங்கள் 
மனிதர்களைப் பாருங்கள்  
இறைமக்களாய்ப் பாருங்கள் 
அதுவே விடியலின் அடையாளம்!

புரியாமலே
என் கண்கள் சிந்தித்தன
தொலைவில் ஒரு மரம் 
கையசைப்பதை அவை உணர்ந்தன 

இப்போது என் மனம் பார்க்கிறது
என் கண்கள் உணர்கின்றன

[கடவுளின் பிரதிநிதிக்காக எழுதப்பட்டது]