Sunday 20 June 2021

நானும் அவரும் - 1 காலம் தவறாதவர் - கடமை தவறாதவர் சூசைமாணிக்கம் - என் அப்பா

 நானும் அவரும் - 1

காலம் தவறாதவர் கடமை தவறாதவர் - சூசைமாணிக்கம்

அப்பா !!!

தந்தையர் தினத்தன்றுதான் தந்தையைப் பற்றி நினைக்க வேண்டும் என்பதில்லை.  ஆனாலும் அவரைப்பற்றி இன்னும் ஆழமாகவும் சிறப்பாகவும் நினைப்பதற்கான ஒரு தருணத்தை அது கொடுக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஒவ்வொருவருக்குமே அவரது அப்பா என்பவர் மெச்சப்படக்கூடியவர்தான். அவரைப்போல ஓர் அப்பாவைப் பார்க்க முடியாது என்றே சொல்லுவோம். அப்படி சொல்லுவதற்கான காரணம் அவரது தகுதியோ, செல்வமோ, புகழோ அல்லது வேறெதுவுமோ இல்லை. அவர் நமது வாழ்விற்காக விளம்பரம் தேடமல் செய்கிற செயல்களும் அதற்கு அடிப்படையாக இருக்கிற அவரது கரிசனையும் அன்பும். இளவயதில் தனது தந்தையை வெறுப்போடு பார்க்கிற ஒரு மகன் கூட, கொஞ்சம் வயதான பிறகு தனது தந்தையைப் பற்றி அன்போடும் மதிப்போடும் சிலாகிப்பார். அப்போதுதான் தனது தந்தையைப் பற்றி புரிந்து கொள்ளும் அனுபவத்தையும் அவர் பெறுகிறார் என்று சொல்லலாம். ஆனால் வாழ்நாள் முழுவதுமாக தனது தந்தையை வெறுக்கிற மனிதரை நான் வெகுசிலரையே கண்டிருக்கிறேன். அவர்கள் கூட தன்னைத் தனியாக தவிக்க விட்டுவிட்டுச் சென்ற தந்தையாகத் தான இருக்குமே தவிர கூட வாழ்ந்த தந்தையை வெறுக்கிற மனிதரை நான் பார்த்ததில்லை. 

எல்லாரையும் போல நானும் கூட இப்போது உலகத்தின் மிகச்சிறந்த அப்பா என்றே என் தந்தையயும் நான் சொல்வேன்.

மணி

அப்பாவை மணி என்றால்தான் ஊரில் தெரியும். ‘சூசைமாணிக்கம்’ எல்லாம் அலுவலகம் மற்றும் பொது இடங்களில்தான். அவரது அப்பா கொத்தனார். அவரது அம்மா ஊர் ஊராகச் சென்று கூடையில் கருவாடு விற்றவர். அவராக விரும்பி அரசுப்பள்ளியில் படித்தவர். ஓடிப்போன அண்ணன் அனுப்பிய கொஞ்சப் பணத்தைப் பத்திரப்படுத்தி, மேல்படிப்பு படித்து, ஆசிரியராக பணி நியமனம் பெற்றவர். எப்போதும் அயர்ன் செய்த வேட்டி மற்றும்  சட்டை, பனியன் தெரிய, மேல் பட்டனிடாத சட்டை. கர்ச்சீப்பை விட சற்றே பெரியதான சிறிய துண்டு. படியத் தலைவாரிய, தினமும் தாடி மழிக்கப்பட்ட முகம். எப்போதும் கையில் ஒரு கேஷ் பேக். வீட்டில் இருக்கும் போது எதாவது படித்துக் கொண்டே இருப்பார். ஆட்கள் வந்தால் பேசிக் கொண்டே இருப்பார். பேச்சில் கிண்டலும் நையாண்டியும் கலந்து இருக்கும். பர பர வென இருப்பார். ஒரு இடத்தில் கால் நிற்காது. சுருக்கமாய்ச் சொன்னால் - கலகலவென ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் மணி போல.


சைக்கிள்

அப்பா அரசுத் தொடக்கப் பள்ளி ஒன்றில் ஓராசிரியப்பள்ளியில் ஆசிரியராக இருந்தார். பின்பு இன்னொரு ஆசிரியர் வர, தலைமை ஆசிரியர் ஆனார். ஹெர்குலிஸ் மிதிவண்டி ஒன்று வைத்திருந்தார். அந்த வண்டி அவ்வளவு கனமாக இருக்கும். அதில்தான் குரங்குப் பெடல் போட்டு, சைக்கிள் ஓட்டக் கற்று கொண்டேன். அடி வாங்கிக் கற்றுக் கொண்டேன். அவர் பள்ளிக்குச் செல்ல ஏறக்குறைய ஒன்பது கிலோமீட்டர்கள் செல்ல வேண்டும். போக வர 18 கிலோ மீட்டர்கள். அதன் பிறகு இன்னொரு மிதிவண்டி வாங்கினார். ஆனால் புதிய மிதிவண்டி ரொம்ப லேசானது. ஒரே கம்பெனியில் தரம் எப்படிக் குறைகிறது என்று சொல்லிக் கொண்டிருப்பார். அவரிடமிருந்து உழைக்கும் மனதைக் கற்றுக் கொண்டேன். சைக்கிள் கற்றுக் கொண்டேன். மற்றும் டெக்னாலஜி வளர வளர தரம் எப்படிக் குறைகிறது என்பதையும் சேர்த்துத்தான்.

கிணறு

காலை தனியார் கிணறு ஒன்றிற்கு அழைத்துச் செல்வார். மழை பெய்து கண்மாய் நிரம்பினால் அங்கே குளியல், இல்லையென்றால் கிணற்றில்தான். சிறு வயதிலேயே அவர் கைகளில் தவழ்ந்து தான் நீச்சல் அடிக்கக் கற்றுக் கொண்டேன். பயப்படாதே என்று சொல்லியும், நீந்தவில்லை என்றால் அடி வாங்கி, அழுது கொண்டும் கற்றுக் கொண்டேன். கிணற்றுக் குளியல் என்பது தனி சுகம்தான். கற்றுக் கொண்ட பிறகு சனி, ஞாயிறுகளில் பல மணி நேரம் நண்பர்களுடன் கிணற்றுக் குளியல்தான். நீந்தக் கற்றுக் கொண்டேன்.

சரியான பயணம்

அவர் சிகரெட் பிடிக்க மாட்டார். மது அருந்த மாட்டார். எங்கேயும் சொல்லாமப் போயிட்டாருன்னு அம்மா சொல்லி நான் கேட்டதே இல்லை. அவருக்குத் தெரிந்தது, வீடு, கடை, பள்ளி, மார்க்கெட், புதுகை, தஞ்சை, அங்கு உள்ள திரையரங்குகள். 

கெட்ட பழக்கம் என்று எதுவும் இல்லை. உறவுகளுக்கு மதிப்புக் கொடுப்பார். அவரது அக்கா பிள்ளைகளைத் தன் பிள்ளைகள் போலப் பார்த்துக் கொண்டார். அவர்களை விடுதியில் சந்திக்க ஒவ்வொரு வாரமும் தஞ்சை செல்வார். அதிகமாக அவர் திரைப்படம் பார்ப்பார். அவர் வழி உறவுகளைக் காட்டிலும், என் அம்மா வழி உறவுகள் மீது அப்படி அன்பைப் பொழிவார். பெரியம்மாவின் பிள்ளைகள் அவரைச் சித்தப்பா, சித்தப்பா என்று அழைப்பதிலேயே அந்த அன்யோன்யம் புரியும். அம்மாவின் தம்பி, ஒரு வங்கியில் மேனஜராக இருந்ததால் இந்தியாவின் பல பகுதிகளில் பணி புரிந்தார். அவர் இருந்த எல்லா ஊர்களுக்கும் சென்றிருக்கிறார். தங்குவது, இடம் சுற்றிப் பார்ப்பதெல்லாம் கிடையாது. அவர்களைப் பார்ப்பார், உடனே திரும்புவார். தேவையில்லாமல் ஊர் சுற்ற வேண்டாம் என்பதைக் கொஞ்சம் அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன்.

ஜெர்மன் மனிதர்

நேரம் தவறாதவர். ஜெர்மன் நேரம்தான். ஒன்பது மணிக்குப் போக வேண்டும் என்றால், 8.50 க்கு தயாராகி விடுவார். இருக்கிற யாரையும் சும்மாவும் விட மாட்டார். அவர் தயாராக உட்கார்ந்து கொண்டு கூப்பிட்டுக் கொண்டே இருப்பார். என் நண்பர்களிடம் இதை நான் எதிர் பார்ப்பதால் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறேன். 10. 00 மணின்னா முன்ன பின்ன தான் இருக்கும் - 10. 00 மணிக்கேவா கிளம்ப முடியும் என்பார்கள். எனக்குக் கோபம் வந்து முன்னே  இருந்தா பிரச்சனை இல்லை எப்போதுமே பின்னே தானே இருக்கிறது என்று கத்துவேன். நேரத்தில் என்ன இருக்கிறது என்று சொல்லி விட்டு என்னை கோபக்காரன், பொறுமையில்லாதவன் என்று சொல்வார்கள். அது நேரம் தவறாமை - என் முதல் ஆசிரியரிடமிருந்து நான் கற்றுக் கொண்டது என்று எனக்கு அப்போது தெரியவில்லை. இப்போதுதான் அது புரிகிறது.

மார்க்கெட்

எனக்குத் தெரிந்து அம்மா கடைக்குச் சென்று காய்கறிகள் வாங்கியதில்லை. கீரை வரும்போது வாங்குவர்கள். அல்லது அவசரத்திற்கு உப்பு / தக்காளி / வெங்காயம். அவ்வளவுதான்.  எப்போதும் இவர்தான் வாங்குவார். காய்கறிகள் வாங்குவதைப் பற்றி ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. பல ஆசிரியர்கள் அதைக் கௌரவக் குறைச்சலாகப் பார்ப்பார்கள். புதுக்கோட்டை மார்க்கெட் சென்று, அங்கிருந்து பேருந்துப் பயணம். இரண்டு கையிலயும் பை தூக்கி வருவார். பல சமயங்களில் தஞ்சைக்கு சென்று பெரியம்மா வீட்டில் காய்கறிகள் வாங்கிக் கொடுத்துவிட்டு உடனே திரும்பி வருவார். நான் ஒருமுறை மார்க்கெட் வருகிறேன் என்று சொல்லி சென்று வாந்தி எடுக்காத குறைதான். குறைந்தது மார்க்கெட்டுக்குள்ளே இரண்டு கிலோ மீட்டருக்கு மேலாக நடக்க வேண்டும். ஒவ்வொன்றுக்கும் ஒரு கடை வைத்திருப்பார். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொன்றாய் வாங்கி, அதைத் தூக்கிக் கொண்டே அவர் பின்னால் செல்ல வேண்டும். அவ்வளவுதான் என்று சொல்லி விட்டு இறுதியில், ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்று டிபன் சாப்பிடுவோம். 

ஓட்டலில் சாப்பிடுவது என்பது அன்றைக்கு ரொம்ப ரொம்ப அரிது. ஓட்டலில் சாப்பிடுவதை பெற்றோர் ஒரு போதும் அனுமதித்ததில்லை. நண்பர்கள் பரோட்டா, குஸ்கா சில ஓட்டல்களில் நன்றாக இருக்கும் என்பார்கள். ஒருமுறையாவது சாப்பிட்டு விட வேண்டும் என்று கங்கனம் கட்டிக் கொண்டு வீட்டிற்குத் தெரியாமல் சாப்பிட்டிருக்கிறேன். சைக்கிள் துடைத்தால் 5, 10, 15 காசு என்று அவரது மனதைப் பொறுத்துக் கொடுப்பார். ஒருமுறை 15  / 25 காசு சேர்ந்தவுடன் கொட்டகைக்குப் பக்கத்தில் உள்ள ஒரு பரோட்டக் கடையில் பரோட்டா சாப்பிட்டேன். இன்னமும் அந்தப் பரோட்டா நினைவில் இருக்கிறது. 

ஊரில் யாரும் யாருக்கும் தெரியாம எங்கேயும் போக முடியாது? இன்னார் பையந்தானே? இங்கே என்ன பன்ற? வீட்டுல சொல்லிட்டு வந்தியா? என்று துளைச்சு எடுத்துறுவாங்க. ஒரு விதத்தில் அதனால்தான் ஊர் ஊராக இருந்தது. இன்றைக்குச் சென்னையில் அனானிமிட்டி என்பதுதான் வாழ்க்கை என்றாகி விட்டது. பக்கத்து வீட்டுக்கு பத்து பேர் குடி மாறிப் போயிருப்பான். அதுல ஒருத்தனைக் கூடத் தெரியாது. என்ன செய்வது?

கண்டிப்பு

வீட்டை விட்டுத் தேவையில்லாமல் வெளியில் செல்லக் கூடாது. ஒழுங்காப் படிக்க வில்லை என்றால் அடி விழும் - ஸ்கேல் அல்லது நல்ல குச்சி அல்லது வெயிலில் நிற்க வைப்பது - பட்டினி கிடப்பது ரோஸ் கலர் - ரான்க் கார்டில் கையெழுத்து வாங்கும் நாள்தான் பிரச்சனை. அடிக்கோடிடப் பட்டிருக்கும் ரான்க் கார்டில் கையெழுத்து வாங்குவதுதான் சிக்கல். அன்றைக்கு நிச்சயமாய் அடி விழும். படிக்காததற்கு மட்டுமல்ல. ஒழுங்கீனம் என்பதற்கும் சேர்த்துத்தான். 

அதைச் செய்வதற்கு அவருக்கு உரிமை இருந்தது. கரெஸ்பாண்டன்ஸ் ல நிறையப் படித்தார். ஒவ்வொரு விடுமுறையிலும் ஏதாவது பரிட்சை எழுதிக் கொண்டே இருப்பார். வேலை பாக்கிறப்ப ஏன் இவர் லீவை ஜாலியா செலவிடாமல், ப்லாக் அண்ட் ஒயிட் புத்தகத்தைப் படிச்சிகிட்டு இருக்காறேன்னு நினைப்பேன். அந்தக் கரெஸ்பாண்டன்ஸ் புக்கப் பாத்தா உஙளுக்குத் தெரியும், ஒரு படம் இருக்காது. படிக்கிற மாதிரி இருக்காது. பாத்தாலே தூக்கம் வரும். நமக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு நான் நினைப்பேன். ஆனால் பள்ளியில படிக்கிற பசங்களுக்கு இதைவிட வேறென்ன முன்மாதிரி வேண்டும்?

கரிசனை

நான் அரசுப் பள்ளியில்தான் படித்தேன். பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு இரண்டு நாளுக்கு முன்பு எனக்கு அம்மை நோய் வந்தது. தேர்வு எழுதாவிட்டால் ஒரு வருடம் வீணாகி விடுமே படிக்காமலேயே தேர்வு எழுதச் சென்று விட்டேன். உள்ளே போன உடனேயே தேர்வாளர் கண்டு பிடித்து ஒரு மூலையில் அமரச் செய்து தேர்வு எழுத அனுமதித்து விட்டார். தேர்வு முடிந்தவுடன், மறு நாளிலிருந்து தேர்வுக்கு வரக் கூடாது என்று கண்டிப்பாய்ச் சொல்லி விட்டார். அப்பாதான் என்னை மிதிவண்டியில் அழைத்து வந்திருந்தார். மறு நாளிலிருந்து ஆசிரியர் நான் தேர்வெழுத வரக்கூடாது என்று சொன்னார் என்று சொன்னவுடன், என்னை வீட்டில் விட்டு விட்டு, உடனே புதுகை சென்று DEO வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று அனுமதிச் சீட்டு வாங்கி வந்தார். மறுநாள் பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியரைப் பார்த்து அனுமதிச் சீட்டை கொடுத்தவுடன் எனக்கு உதவித் தலைமை ஆசிரியர் அலுவலகத்தை ஒதுக்கினார்கள்.  

அப்பா ஒரு வாரம் முழுவதும் விடுமுறை எடுத்துக் கொண்டு மீதி இருந்த அனைத்துத் தேர்வுக்கும் அழைத்து வருவார். நான் அறைக்குச் சென்றவுடன் அங்கே உள்ள ஒரு திண்டில் அமர்ந்து கொள்வார். அங்கேயிருந்து என்னைப் பாத்துக் கொண்டிருப்பார். அரை மணிக்கொருதரம் இள நீர், தண்ணீர், என்று கொண்டு வந்து கொடுப்பார். இடையில் நான் காப்பி அடிக்கிறேனா என்று அடிக்கடி அருகில் உள்ள ஆசிரியர்கள் அறையிலிருந்து யாராவது பார்த்துக் கொண்டே இருப்பார்கள். நான் படிக்காமல் தேர்வு எழுதியது கூடப் பெரிதில்லை. அப்பா அங்கே அவ்வளவு பொறுமையாயும் அமர்ந்திருப்பது தான் எப்போதும் என் கண்முன்னே இருக்கும். அதற்கு முன்பு வரை ரொம்பக் கண்டிப்பானவராகப் பார்த்துப் பார்த்து அந்த அனுபவம் தான் அவரை வேறுவிதமாக உணர வைத்தது. அந்த ஆண்டு அவர் அப்படி ஒரு அனுமதி பெறவில்லை என்றால் என் வாழ்க்கை வேறுவிதமானதாக இருந்திருக்கும். அவரது முடிவுதான், எனக்கான இந்த வாழ்க்கைக்கான காரணம் - இந்த அனுபவம் - இத்தகைய நண்பர்கள். இந்த வாழ்க்கை முறை. இந்த எழுத்து. 

அதன் பிறகு எனக்கு வீட்டில் இருக்க வாய்ப்பு இல்லாததால், மாதத்திற்கு ஒரு முறை பார்ப்பது என்று தொடங்கி பிறகு, சென்னைக்கு வந்த பிறகு 6 மாதத்திற்கு ஒரு முறை என்று வீடு செல்தல் மாறியது. சென்னையில் இருக்கும் போது மணி ஆர்டர் அனுப்பத் தவற மாட்டார். மாதம் ஒரு கடிதம் எழுதுவார். திடீரெனக் கிளம்பி சென்னைக்குப் பார்க்க வந்து விடுவார். வந்து பார்த்த உடனேயே சரி என்று கிளம்பி விடுவார். திருவள்ளுவர் பேருந்தில் கூட ஏற மாட்டார். மாவட்டப் பேருந்துகளில் ஏறி, மாறி வந்து, பார்த்துவிட்டு உடனே கிளம்பி விடுவார்.

சார்பின்மையும் தாராள குணமும்

யாரையும் தான் சார்ந்து வாழக்கூடாது என்று நினைக்கிற கவரிமான் அவர். எங்கே சென்றாலும், ஒரு டீ சாப்பிடாலும், டிபன் சாப்பிட்டாலும், அவர்தான் காசு கொடுப்பார். அவரது நண்பர்களோ, உறவினர்களோ, அவருக்காகா யாரும் எப்போதும் காசு கொடுத்து விடமுடியாது. அப்படியே இருந்தாலும் அதை எப்படியாவது இரண்டு மடங்காக எப்படியாவது எப்போதாவது திருப்பிக் கொடுத்து விடுவார். அப்போதுதான் அவருக்கு நிம்மதி. கொடுப்பதில் இன்பம் பெறுவதில் இல்லை என்பதாலா, எனக்கு யாரும் செலவு செய்து விடக்கூடாது என்கிற பிடிவாதமா தெரியாது. எதனால் அந்த வைராக்கியம் என்று பலமுறை கேட்டிருக்கிறேன். பதில் கிடைக்கவே இல்லை. அவர் பிடிவாதக் காரர். பல விஷயங்களுக்குப் பதில் வாங்க முடியாது. ஊரில் தனக்கான கல்லறையக் கூட அவரே முன்பே கட்டிக் கொண்டார். கேட்டதற்கு யாரும் எனக்காக எதையும் செய்யக் கூடாது என்றார். அதற்காக யாராவது கல்லறை கட்டுவார்களா? ஆனால் அவரை அதில் புதைக்க முடியவில்லை. நான் வீட்டில் இருக்கும் போது சில்லறைக் காசுகள் கூட அளந்துதான் கொடுப்பார். நான் சென்னை வந்த பிறகு மணி ஆர்டர் வரும். ஐம்பது ரூபாய் வந்தால் அதில் நன்பர்கள் நாங்கள் ஐந்து பேர் படம் பார்த்து, பேருந்து பயணமும் முடிந்து விடும். 100 ரூபாய் வந்தால் சொல்லவே வேண்டாம். சூசைமானிக்கம் வாத்தியாரின் மணிஆர்டர் எங்களுக்கு வரப்பிரசாதம்தான். 

ஆன்மிகம்

அப்பா கோவிலுக்கு செல்வதை விரும்புவதில்லை. ஆனால் ஆன்மிகம் இல்லை என்பதெல்லாம் இல்லை. தினமும் தலைகுளித்து, தலைக்கு நல்லெண்ணெய் தடவி தலை சீவி முடித்த பிறகு, இடைவிடாத சகாய மாதா, இருதய ஆண்டவர் படங்களுக்கு ஊதுவர்த்தி ஏற்றி, ஒரு நிமிடம் கை குவித்து வேண்டுவார். என்ன வேண்டுவார் என்று கடைசிவரை சொன்னதில்லை. எனக்குத் தெரிந்து ஒரு சனிக்கிழமை கூட காலையில் அவர் சாப்பிட்டதில்லை - சர்க்கரை நோய் வந்த பிறகு கூட. உடலுக்கான விரதம் இல்லை - இது ஆன்மிக விரதம். நான் சென்னைக்கு படிக்க வந்த பிறகு, எனக்கு அவப் பெயர் வந்து விடக்கூடாதே என்பதற்காக தவறாமல் ஞாயிற்றுக் கிழமைகளில் திருப்பலி செல்வார். அதுவும் அவரது வழிபாட்டுப் பழக்கமானது. கடைசிக் காலங்களில் ஆட்டோவில் சென்று வந்தார்.

அதற்கு முன்பு அவர் ஈஸ்டர் விஜில்கூட சில சமயங்களில் செல்ல மாட்டார். அப்போது திருத்தந்தையின் திருப்பலியை Doordarshan - ல் ஒளிபரப்புச் செய்வார்கள். நள்ளிரவுக்குப் பிறகுதான் அதை ஒளிபரப்புச் செய்வார்கள். அதைத்தான் பார்ப்பார். நாங்கள் திருப்பலிக்குச் சென்று வந்து தூங்கிவிட்ட பிறகும் அவர் அதைப் பார்த்துக் கொண்டிருப்பார். என் அம்மா மிக மௌனமாக சொல்லுவார் - ‘இங்க கோவில்ல பூசை நடக்குது. அதை விட்டுட்டு டிவி யில பூசை பாத்துக்கிட்டு’ என்று சொல்லிவிட்டு அவர் தூங்கச் சென்றுவிடுவார். மொழி புரியாவிட்டாலும் அவருக்கு அதைப் பார்ப்பதில் அவ்வளவு ஆர்வம். உலகத் திருஅவையின் மீதான ஒன்றிப்பு!. ஆனால் அப்போதெல்லாம் அந்தத் திருப்பலியைப் பார்த்தால் பரிபூரணபலன் உண்டா? அவரது ஆசீர்வாதத்திற்கு உண்டு [1985லிருந்து]- திருப்பலிக்கு உண்டா?

விபத்து

2000 மாவது யூபிலி ஆண்டில், அப்பா பள்ளிக்குச் செல்லும் போது மண் லாரி மோதி, அப்பாவும், அவரது துணை ஆசிரியரும் தலையில் அடிபட்டு, பல மணி நேரம் கழித்து, மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். செல்போன்கள் அப்போது இல்லை என்பதால் இரவுதான் எனக்குச் செய்தி வந்து மருத்துவமனைக்குச் சென்றேன். அப்பாவின் பின்னால் அமர்ந்து இருந்த, இளம் வயது, திருமணமாகி சில ஆண்டுகளே ஆன அந்த ஆசிரியர் இறந்து போனார். அப்பா நான்கு நாட்கள் கழித்து தன்னுணர்வு பெற்றவுடன் அந்த ஆசிரியருக்கு என்ன ஆயிற்று என்று கேட்டுக் கொண்டே இருந்தார். அவர் இறந்து போன செய்தியை அவருக்கு பல மாதங்கள் கழித்து தான் சொன்னோம். அதற்குப் பிறகுதான் அவர் அடிக்கடி அழுவதைப் பார்த்திருக்கிறேன். திடீர் திடீரென அழுவார். அதன் பிறகு எப்போது சாவோம் என்று சாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர் போலவே கடைசி வரை இருந்தார்.  

மெதுவாக நடக்கத் தொடங்கி, இறுதிவரை மாத்திரையிலேயே வாழ்க்கையைக் கழித்தவர். சர்க்கரை நோய் வேறு. அடிக்கடி மயங்கி விழுந்து அடிபட்டு, ஒவ்வொரு முறையும் ஆம்புலன்சில் அழைத்து வர வேண்டியதாயிற்று. அடிக்கடி மயங்கி விழுந்து பார்ப்பவர்கள் சொல்லி, அதன் பிறகு ஆம்புலன்ஸ் தேடி ஓடுவதால் அவரை நகரத்திற்கு அழைத்து வரலாம் என்று முடிவு செய்தோம். அவரது அப்பாவும், அதன்பிறகு அவர் பெரிதுபடுத்திய சொந்த வீட்டையும் வித்தால்தான் அந்த ஊரை விட்டே வருவேன் என்று அடம்பிடித்து, எங்கள் அனைவரின் கையெழுத்துக்களைப் பெற்று வீட்டை குறைந்த விலைக்கு விற்று, ஊரை மாற்றினோம். அவருக்காக அவர் கட்டிய கல்லறையும் விட்டுவிட்டு.

மருந்து மாத்திரையும் தனிமையும்

மருந்து மாத்திரை மற்றும் அம்மா மற்றும் உதவியாளர்களின் கவனிப்பில், ஏறக்குறைய 18 ஆண்டுகள் உயிரோடு இருந்தார். இந்தக் காலத்தில்தான் அவர் தன்னையே முழுவதும் மாற்றிக்கொண்டார். வாழ்வதற்கே பிடிப்பு இல்லாதவர் போலவே பேசுவார். பாசிட்டாவான விஷயங்கள் எதையுமே பேச விடமாட்டார். யாரையும் பார்க்க விரும்ப மாட்டார். வெள்ளை வேட்டியைக் கட்ட விரும்ப மாட்டார். வெளியில் சென்றால் கூட கைலி என்று மாறினார். தாடியை மழிப்பதை அவர் விரும்பவில்லை. பரபரவென அவரால் இயங்க முடியவில்லை. துருதுவென இருக்க முடியவில்லை. இவர் தேடித் தேடிப் பார்த்தவர்கள் எல்லாம் இவரைத் தேடி வரும்போதெல்லாம் அதை ஒருபோதும் அவர் அதை விரும்பியதே இல்லை. தன்னால் அவர்களைப் போய்ப் பார்க்கவில்லை என்கிற இயலாமைக்குள் அவர் சென்று விடுவார். சிலசமயம் விருந்தினர்களிடம் நேரடியாகவே கோபமாகப் பேசுவார். அவரை அனைவரும் மதிக்கிறார்கள். அவரை அன்பு செய்கிறார்கள் என்பதையெல்லாம் அவர் புரிந்து கொள்ளவே விரும்பவில்லை. அவரைக் கொண்டாட நாங்கள் அனைவரும் செய்த எல்லா முயற்சிகளையும், அவர், “தான் கொடுக்க வேண்டியவர்கள் எனக்குக் கொடுக்கிறார்களே” என்கிற வேதனையில் நிராகரித்தது போல இருந்தது.  

அவர் மீது மற்றவர்கள் கொண்டிருந்த அன்பை, அவரது இயலாமையோடு பொருத்திப் பார்த்தாரா, தெரியவில்லை. ஆனாலும் அவர் பழக்கமும் பல மதிப்பீடுகளும் தொடர்ந்து இருந்தன. அவருடைய வேலைகளை அவரே இன்னமும் செய்தார். தோள் துண்டும், கை பேக்கும் மாறவில்லை. வீட்டில் உள்ளவர்களைக் காட்டிலும் அவருக்கு உதவும் ஆட்டோக்காரர்கள் நெருக்கமானார்கள். வீட்டில் உள்ளவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது. எனக்கு இன்னமும் காசு கொடுக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். ஒவ்வொரு முறையும் 500 கொடுப்பார். கடைசியாக 100 ரூபாய் கொடுத்தார். ‘மெட்ராஸிலிருந்து வர்றீங்க - பெட்ரோல் போட வச்சிக்கங்க என்பார்.” திடீரென்று 10 ரூபாய் கொடுத்து உங்க போன்கிட்ட இருக்கிறவருக்கு [புஷ்பராஜ் - ன்னு  ரிசப்ஷனிஸ்ட்] குடுங்க என்பார். 

விபத்து இன்றி இருந்தால் அவர்தான் உறவினர் குடும்பத்தின் எல்லா விழாக்களிலும், இடங்களிலும் பர பரவென இயங்கும் ஹீரோவாக இருந்திருப்பார். வரவேற்பதில் இருந்து, மொய் எழுதுவது தொடங்கி, கணக்கு வழக்கு முடிப்பது வரை. நல்லா சத்தப் போட்டுப் பேசுவார். எல்லாரையும் வம்பு இழுப்பார். அனைத்தும் அடங்கி ஆளே மாறிப் போய் விட்டார். தனிமை. யாரும் பார்க்க வரக்கூடாது. யாரையும் பார்க்கக் கூடாது. விசேஷங்களுக்குப் போகக்கூடாது என்று மாறிவிட்டார். சுருங்கச் சொன்னால் விபத்திற்குப் பின் கனீர் கனீரென ஓசையிடும் கலகல மணி காணாமல் போய்விட்டது.’

இறுதி நாள் - இரவு 3.00 மணி

2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு நாள் அலை பேசியில் செய்தி எனக்கு செய்தி வந்தவுடன் சென்னையிலிருந்து புறப்பட்டு செல்வதற்குள் மருத்துவமனையில் அவரது பல்ஸ் குறைந்து இருந்தது. எனது பெயரைச் சொன்னவுடன் கண் விழித்துப் பார்த்தார். அவருக்குத் தெரிந்ததா என்று தெரியவில்லை. அங்கே இருந்த மருத்துவர் - அவரது இறுதி நேரம் வந்துவிட்டது. வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள் என்றார். இதுதான் நல்லது என்றார். உடனே இரவு 10 மணிக்கு அருகில் உள்ள ஆண்டவர் மருத்துவமனையில் அருள்சகோதரிகள் உதவியோடு, ஆக்சிஜன் உதவியோடு இருந்தார். 12 மணிக்கு நண்பர் குரு அவஸ்தை கொடுத்தார். நான் சற்று நேரம் அயர்ந்து தூங்கினேன். தொலைபேசி - இரவு 2.50. எழுந்து மருத்துவமனைக்குச் சென்றேன் - ஏறக்குறைய அதிகாலை 3. 00 மணி.  அப்பாவின் உயிர் பிரிந்து கொண்டிருந்தது. அவர் இறக்கிற போது அவரது கையைப் பிடித்துக் கொண்டிருந்தேன்.

இறுதிச்சடங்குக்கு உறவினர்கள் வந்து இருந்தார்கள். 18 ஆண்டுகள் முன்பு இருந்து மணி - என்ற மனிதரை மறக்காதவர்கள்தான் அவர்கள் அனைவரும். 18 ஆண்டுகளில் அவரிடம் சொல்லடி பட்டாலும், அவரின் இளவயது அன்பை மறக்காதவர்கள். சிலர் சொல்லடி பட்டாலும் உறவை மதிப்பதால் வந்தவர்கள். இன்னும் பலர் அவரைச் சுத்தமாகத் தெரியாமல் எனக்காக மற்றும் என் சகோதரர்களுக்காக வந்தவர்கள். 

சொல்லப்பட்ட சரியான நேரத்தில் அவரது உடல் எடுக்கப்பட்டது. சொல்லப்பட்ட நேரத்தில் திருப்பலி தொடங்கியது. சொல்லப்பட்ட நேரத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவருக்குச் செய்த சரியான மரியாதை அதுதான் என்று நான் நினைப்பதுண்டு.

ஏன்?

அப்பாவைப்பற்றி இவ்வளவு எழுதுவதற்கான காரணம் ஒன்று உண்டு. அவரைப்பற்றித் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள என்றெல்லாம் இல்லை. என்னோடு பழகியவர்கள்  பலர் என் அப்பாவை கடந்த 18 ஆண்டுகளில்தான் பார்த்திருக்கலாம், அறிந்திருக்கலாம். அவரது கோபம் அவர்களின் மனங்களைக் காயப்படுத்தியிருக்கலாம். உங்கள் மனதைக் காயப்படுத்தியிருக்கலாம். நான் அவரைப் பற்றி விலாவாரியாக எழுதக் காரணம், கடைசிக் காலங்களில் இருந்த மணி என்பவர் உண்மையானவர் இல்லை என்பதைச் சொல்லுவதற்காகத்தான். உண்மையானவர் 18 ஆண்டுகளுக்கு முந்தையவர். 18 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல அவர் இருந்திருந்தால் இன்னும் அதிகமான உறவுகளைத் தன்பால் ஈர்ப்பதற்கான ஆற்றலைப் பெற்றிருந்த தேன்கூடு. 

கடைசிக் காலங்களில் அவர் மோசமானவராகத் தன்னைக் கட்டமைத்துக் கொண்டார். தன்னைப் பார்க்க வருவதனால், அவரைத்தேடி வருபவர்களுக்கான பொருள் இழப்பை அவர் விரும்பவில்லை என்பதனால் அவர்மீது மற்றவர்களுக்குக் கோபம் வரும்படி தனது செயல்பாடுகளை மாற்றிக் கொண்டார். அவரது நலம் விரும்பிகள் அவரது துன்பத்தினால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே யாரையும் நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டார். அவரது கோபமும், திட்டலும் அன்பின் வெளிப்பாடுதான். நான் அப்படித்தான் பார்க்கிறேன். யாருக்கும் பாரமில்லாமல் இருக்க வேண்டுமென்றவருக்கு பிறரை துன்புறுத்துகிறோமோ என்கிற எண்ணம் அதிகமாக அதிகமாக, அவர் எல்லாரிடமும் இருந்து விலகி நிற்க விரும்பினார். இது அவரது அன்பின் வெளிப்பாடு. உங்களை யாரு வரச்சொன்னது? என்று கேட்டது - ஏன் இவ்வளவு சிரத்தை, ஏன் இவ்வளவு பண விரயம்? என்கிற அக்கறையின் வெளிப்பாடுதான். தலைமுறை இடைவெளிகளில் நமக்கு இது புரிவதில்லை. 

இவரைப் பற்றி எழுதுவதற்கு வேறொரு காரணமும் உண்டு. என்னையோ என் தந்தையயோ அறியாதவர் கூட இதை வாசித்துக் கொண்டிருக்கலாம். உங்கள் தந்தையும் ஒருவேளை இப்படி இருந்தால், இருந்திருந்தால் அவரைப் புரிந்து கொள்ளுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுவதற்காகத்தான். கால மாற்றங்களில், விபத்துக்களில் தன்னால் ‘தானாக’ இருக்க முடியவில்லை என்கிற சூழலில் அவர்களது செயல்பாடுகளில், கோபத்தில், அவர் உங்கள் மீது கொண்டிருக்கிற அன்பைப் பாருங்கள் என்று சொல்வதற்காகவும் இந்தப் பதிவு. கால இடைவெளியில் அவர்களுடைய மதிப்பீடுகள் நம்முடையதாக இல்லாத போது அவர்கள் படும் வேதனைக் கோபங்களை புரிந்து கொள்ளுங்கள் என்று சொல்வதற்காகவும்தான் இக்கட்டுரை. 

கொண்டாடுங்கள்

அப்பாக்கள் எப்போதும் எதிர்காலம் பற்றி சிந்திக்கிறவர்கள். தனது பிள்ளைகளுக்கான, தனது குடும்பத்திற்கான எதிர்காலம் பற்றி சிந்திக்கிறவர்கள். தன் பிள்ளைகள் சமூகத்தில் மதிப்போடு வாழ வேண்டும் என்பதற்காகவே தனது பிள்ளைகளைக் கண்டிக்கிறவர்கள். மதிப்பீடுகளைச் சொல்லிக் கொடுக்கிறவர்கள். தாங்கள் சிறுவயதில் அனுபவிக்காத இன்பத்தை நமக்குத் தரவேண்டுமென்று விரும்புகிறவர்கள். பணத்தைக் கொடுப்பதில் அவர்கள் சிக்கனம் காட்டுகிறார்கள் என்றால் நாம் சிக்கனத்தோடு வாழக் கற்றுக் கொடுக்கிறார்கள் என்று பொருள். உழைத்துக் காட்டுகிறார்கள் என்றால் நாமும் உழைக்க வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று பொருள்.

பிள்ளைகளே, அப்பாக்களைக் கொண்டாடுங்கள். நீங்கள் பேசுவது அவர்களுக்குப் புரியும் போதே அவர்களிடம் அவர்களது அன்பை அனுபவித்ததைச் சொல்லுங்கள். நாம் பேசுவது அவர்களுக்குக் கேட்காத நாளில், அவருக்குப் புரியாத காலங்களில் அவரைக் கொண்டாடுவதால் யாருக்குப் பயன்? அல்லது  அவர் இறந்த பிறகு அவரைக் கொண்டாடுவதால் யாருக்குப் புண்ணியம்? 

அப்பாக்களே, உங்கள் பிள்ளைகள் உங்களைக் கொண்டாடுவதை அனுமதியுங்கள். பிள்ளைகள் அப்பாக்களைக் கொண்டாடுவதை மனதில் ரசித்தாலும், வெளியில் தான் அவர்களுக்கு பாரமாக இருக்கிறோமோ என்கிற தவறான எண்ணம் கொள்ளாதீர்கள். உங்களது கோபம் எப்படி உங்கள் அன்பின் வெளிப்பாடோ, அவர்களின் தாங்குதலும் அன்பின் வெளிப்பாடுதான். பாரமாய் நினைத்து அவர்கள் உங்களைத் தாங்குவதில்லை. வாழ்வைக் கொடுத்த சாமியாய், கற்றுக் கொடுத்த ஆசிரியராய் நினைத்து அன்பால் தாங்குகிறார்கள். 

கொரோனா காலம் அதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

அன்பைக் கொண்டாடுங்கள். கொண்டாடுவதை ஏற்றுக்கொண்டு இரசியுங்கள். எல்லாரையும் ஏற்றுக் கொண்டவுடன், எல்லாவற்றையும் இரசிக்கத் தொடங்கியவுடன் மனது மிக இலேசாகிவிடும். வாழ்க்கையும் அப்படித்தான்.

கொசுறு!

என் அப்பா குறைகள் இல்லாத மனிதர் ஒன்றும் இல்லை. அவரைப் புனிதராகக் கட்டமைக்கவும் நான் நினைக்கவில்லை. உங்கள் அப்பாக்களில் புனிதத்தின் தன்மையத் தேடுங்கள் என்றுதான் சொல்கிறேன்.

இன்னொரு கொசுறு!

நான் அவரைப் போலவே இருக்கிறேன் என்று என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். நான் அப்படி எல்லாம் இல்லை என்று மறுத்துக் கொண்டே இருப்பேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப் பட்ட என் புகைப்படத்தைப் பார்த்த பிறகுதான், நான் அச்சுப் பிசகாமல் அப்படியே இருப்பதைப் பார்த்தேன். நேர்மையாளரான சூசையைப் போல இருப்பதில் எனக்குப் பெருமைதானே!