Showing posts with label கருத்து சுதந்திரம். Show all posts
Showing posts with label கருத்து சுதந்திரம். Show all posts

Saturday, 9 November 2013

ஐரோப்பிய யூனியன் - ஒரே எழுத்துரு - ஒரே மொழி


ஐரோப்பிய யூனியன் உருவானதற்குப் பிறகு அவர்களுக்கான பொது மொழி என்ன என்பதில் மிகப் பெரிய சிக்கல். அந்த சிக்கல் இன்னும் முடிந்த பாடில்லை. ஏனென்றால் கூட்டம் நடத்தினால் எந்த மொழியில் நடத்துவது என்று ஒரே பிரைச்சனை. ஜெர்மனில் நடத்தினால் பிரெஞ்சு மொழி பேசுறவனுக்கு ஒன்னும் புரியாது. அதுல பேசுனா இத்தாலியன் பேசுறவனுக்கு ஒன்னும் புரியாது. இதுதான் அவங்களுக்கு பெரிய சிக்கல்.
இந்த யூனியனில் இன்னும் பல நாடுகள் சேருகின்ற போது இந்தச் சிக்கல் இன்னும் அதிகமாகும். அந்த ஆவணங்களை மொழி பெயர்க்க கடந்த ஆண்டு மட்டும் ஏறக்குறைய 100 கோடிக்கும் மேல் செலவு செய்திருக்கிறார்கள். அது என்னமோ வருமானத்தில் ஒரு சதவீதம் என்று சொன்னாலும் பல சிக்கல்கள் இருக்கின்றன.

இதனால் ஆங்கிலத்தை மட்டும் பொதுவான மொழியாக அங்கீகரிக்கலமா என்ற கேள்வி வந்தது. 
அதென்னமோ எந்த மொழி பேசுபவர்களும் மற்ற மொழியை அவ்வளவு எளிதாக ஒத்துக் கொள்வது இல்லை. செலவைக் குறைக்க ஆங்கிலத்தில் மற்றும் பிரெஞ்சில் மட்டும் ஆவணங்களை மொழி மாற்றம் செய்யலாம் என்று யோசனையெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. 

என்னதான் இருந்தாலும் ஜெர்மன், பிரெஞ்சு, டச்சு, இத்தாலியன் எல்லா மொழிகளும் ஆங்கில எழுத்துருவில்தான் எழுதப்படுகின்றன. இருந்தாலும் ஏன் மற்ற மொழிக் காரர்கள் யாரும் இதை ஒத்துக் கொள்வது இல்லை என்று தெரியவில்லை. ஒரே எழுத்துருவில் இருந்தாலும் இரண்டு மொழிகளின் வேறு பாடு அறியாமல் அவ்வளவு சுலபமாக இன்னொரு மொழியை வாசித்து விட முடியாது என்பதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மன அழுத்தத்திற்கு ஆளாவதாகக் கேள்வி.

ச என்ற சத்தத்திற்கு சில மொழிகள் s என்பதையும் சில மொழிகள் c என்பதையும் பயன் படுத்திகின்றன. இத்தாலிய மொழியில் chi என்று எழுதியிருப்பதை கி என்று வாசிப்பார்கள். சின்னப் பொண்ணு என்று ஆங்கிலத்தில் chinnapponnu என்று எழுதினால் அவர்கள் அதை கின்னப்பொண்ணு என்றுதான் வாசிப்பர்கள். போல்லோ என்கிற இத்தாலிய வார்த்தைக்கு கூகுல் உபயத்தால் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்தால் chicken என்று வரும். ஆங்கிலம் தெரியாத இத்தாலியர் ஒருவர் சிக்கன் சாப்பிடுவீர்களா என்று கேக்க ஆசைப்பட்டு நீங்க கிக்கன் சாப்பிடுவீங்களா என்று கேட்டாராம். நல்ல வேளை, கிச்சன் சாப்பிடுவீங்களா என்று கேட்கவில்லை.

இது ஒரு சின்ன உதாரணம். ஆனால் ஆங்கிலத்தில் இந்த சிக்கல் எல்லாம் இல்லை. ச வுக்கு சில சமயம் s, சில சமயம் c. 'எப்' என்ற உச்சரிப்பிற்கு சில சமயம் f, சில சமயம் ph. க என்பதற்கு சில சமயம் c, சில சமயம் K என்று எல்லாக் குழப்படிகளும் உண்டு.  இ என்பதை ஆங்கிலத்தில் e என்றும், ஜெர்மன் மற்றும் இத்தாலிய மொழிகளில் (மற்றும் பல மொழிகளில்) i என்றே எழுதுவார்கள். ஆனால் ie என்பதை ஜெர்மனில் ஈ என்றும் அதையே இத்தாலியனில் 'இயெ' என்று சொல்லுவார்கள்.
பிரெஞ்சு மொழியைப் பற்றி சொல்லவேண்டியதில்லை - பத்து எழுத்து இருக்கும் ஐந்து எழுத்தைத் தான் வாசிப்பார்கள்.

எனவேதான் ஒரே எழுத்துரு இருந்தாலும் மற்ற மொழிக்காரர்கள் ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்வது இல்லை. ஏனெனில் ஆங்கிலம் என்பது பிற்பாடு வந்த கலவை என்கிற எண்ணமே மேலோங்கி நிற்கிறது.

இனிமேல் கற்பனை. - ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே சுட்டவும்.

பல பிரச்சனைகளுக்கு மத்தியில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கிற நாடுகள் எல்லாம் ஆங்கிலத்தை பொது மொழியாக ஏற்றுக் கொண்டன. ஆனால் ஐந்து வருடத்தில் ஆங்கிலத்தை சீரமைக்க வேண்டும் என்கிற நிபந்தனையோடு....

முதல் வருடத்தில் மென் 'ச' வுக்கு இனிமேல் c என்பதற்கு பதிலாக s என்பதைப் பயன்படுத்துவது -  sertainly this will make sivil servants happy. அதுமட்டுமல்லாமல் க என்பதைக் குறிக்க இனிமேல் c என்கிற வார்த்தையைப் பயன்படுத்தாமல் K என்பதைப் பயன்படுத்துவது.  This will klear up some konfusion and allow one key less on keyboards.

இரண்டாம் வருடத்தில் there will growing publik enthusiasm  - ஏனெனில் அந்த வருடத்தில் 'ph' என்ற வார்த்தைக்குப் பதில் 'F' என்ற வார்த்தைப் பயன்பாடு தொடங்குவதால். இது PHOTOGRAPH என்கிற வார்த்தையை 20 சதவீதம் குறைத்து FOTOGRAF என்று சுலபமாக வாசிக்க வைப்பதனால் பேச்சாளரின் மனச் சுமை குறைக்கப் படுகின்றது.

மூன்றாம் வருடத்தில் இன்னும் KOMPLIKATED மாற்றங்களை PUBLIK AKSEPT பண்ணி EKSPEKT பண்ணுவார்கள்.
இதற்குப் பிறகு, தொடர்ந்து வரும் இரண்டு வார்த்தைகள் தேவையற்றவை என அறிவிக்கப்படும் - ஏனெனில் அவைகள் தான் AKURAT SPELING எழுத தடையாக இருப்பதானால்.
அதற்குப் பிறகு AL WIL AGRE THAT THE HORIBLE MES OF THE SILENT 'E' IS DISGRASFUL (ஆல் வில் அக்ரீ தட் த ஹாரிபில் மெஸ் ஆப் த சைலன்ட் 'இ' இஸ் டிஸ்கிரேஸ்புல்)...
நான்காம் வருடத்தில் 'th' என்பதற்குப் பதில் 'Z' மற்றும் 'W' என்பதற்குப் பதில் 'V' என்பதைப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லுவார்கள்.

அதனால் During ZE FIFZ YER, ZE UNESESARY 'O' KAN BE DROPD FROM VORDS KONTAINING 'OU' AND SIMILAR CHANGES VUD OFKORS BE APLID TO OZER KOBINATIONS OF LETERS. (த பிப்த் யியர், த அன்னெசெசரி 'ஓ' கேன் பி டிராப்ட் ப்ரம் வோர்ட்ஸ் கன்ட்டெய்னிங் 'ஓஉ' அண்ட் சிமிலர் சேஞ்சஸ் வுட் அப்கோர்ஸ் பி அப்ளைட் டு அதர் லெட்டர்ஸ்).

ஐந்தாம் வருடத்திற்குப் பிறகு -
VE VIL HAV A RELI SENSIBL RITEN STYL (வி வில் ஹாவ் ய ரியலி சென்சிபிள் ரிட்டன் ஸ்டைல்).

ZER VIL BE NO MOR TROBLS OR DIFIKULTIS AND EVRION VIL FIND IT ESI TO UNDERSTAND ECH OZER. ZE DREM VIL FINALI KAM TRU
(தேர் வில் பி நோ மோர் ட்ரபுள்ஸ் ஆர் டிபிகல்டிஸ் அண்ட் எவுரிஒன் வில் பைண்ட் இட் ஈசி டு அண்டர்ஸ்டாண்ட் ஈச் அதர். த ட்ரீம் வில் பைனலி கம் ட்ரூ).

°°°°°°°°°°°°°°°°°°°°°

இதே போல தமிழ் எழுத்துக்களை ஆங்கில எழுத்துருக்களைப் பயன்படுத்தி எழுதினால் பல குழப்படிகளைக் களைய இயலும். ந, ன மற்றும் ண என்பதற்கு 'na' என்று எழுதுவதன் மூலம் பல குழப்பங்களைக் களைய இயலும்.

'la' என்ற ஒரு வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலம் ல, ள, ழ என்று மாணவர்களுக்கு மனச்சுமையை கூட்டும் எழுத்துக்கள் குறைக்கப் படும்.

'ra' வார்த்தைகளை 'ர' மற்றும் 'ற' என்பவைகளுக்குப் பயன் படுத்த இயலும்.

இதுப்போல புரட்சி செய்வதன் மூலம் 247 எழுத்துக்கள் என்பதை 24 எழுத்துக்களாக (NO c and X) குறைக்க முடியும்.

இப்படிச் செய்வதன் வழியாக மாணவர்களின் மனப்பாரத்தை மட்டுமல்ல தமிழையும் அழியாமல் காப்பாற்ற முடியும். அது மட்டுமல்லாது இப்படி எழுதும் போது தமிழிலக்கியத்தை உலக அரங்கில் எல்லா மக்களும் வாசிக்க ஆர்வம் அதிகம் ஆவதால் வருடத்திற்கு ஐநூறு மட்டுமே விற்கக் கூடிய புத்தகங்கள் இனிமேல் ஐம்பதாயிரம் விற்கும். தமிழ் எழுத்தாளர்கள் யாரும் கஞ்சிக்கு அலைய வேண்டியதில்லை. தமிழை வாழ வைத்த பெருமையும் அவர்களுக்கு மிஞ்சும்.

குறிப்பு:
இதைப் படித்து நீங்கள் எப்படி எதிர் வினை ஆற்றுகிறீர்கள் என்று சோதிப்பதெல்லாம் எனது நோக்கம் அல்ல. ஆங்கில எழுத்துருவை அனுமதித்து தமிழை நீங்களெல்லாம் வாழ வைப்பீர்கள் என்ற நம்பிக்கைதான் எனக்கு.





Monday, 4 February 2013

கமல், கடன், கருத்து



  • கமல் தான் கடன் வாங்கி படம் எடுத்ததாகவும் அதனை சொன்ன தேதியில் வெளியிட முடியாது போனதால் தனது இல்லத்தை இழக்கும் நிலை வந்திருப்பதாகவும், தமிழகத்தை விட்டு மதச் சார்பற்ற ஒரு மாநிலம் தேடுவதாக –காஷ்மீரிலிருந்து கேரளா வரை ஏதாவது ஒரு இடம் தேடப் போவதாவும் வெளியிட்ட அறிவிப்பைப் பார்த்து மனமுடைந்த ரசிகர்கள் பணம் அனுப்பவதாகக் கேள்வி – ம்  ம் - ரசிகர்கள்!
  • கமல் அப்படி ஒரு இடம் தேடினால் அவர் சொன்ன இரு மாநிலங்களிலும் அவர் வசிக்க முடியாது. இரண்டுக்கும் உள்ள காரணங்கள் அவருக்கே தெரியும். எனக்குத் தெரிந்து அன்பும் அமைதியுமே உருவான, மதச்சார்பற்ற [!?] திரு. மோடி ஆட்சி செய்யும் இடமாக அது இருக்கலாம்! ஆனால் அங்கே போக அம்மையார் விட மாட்டார். வேறு எங்கே போக முடியும்? தேவையற்ற விரக்தியில் ஏடாகூடமாய் மீண்டும் தன் வாயைக் கொடுத்தே மாட்டிக் கொண்டார்.
  • சினிமா என்பது வெறும் தொழிலா அல்லது அதையும் தாண்டி அந்தக் கலைஞர்களுக்கு வேறு ஏதாவது பொறுப்பு என்று உள்ளதா என்பதைக் கலைஞர்கள் புரிந்து கொள்ளும் தருணம் என்பதாக இதை எடுத்துக் கொள்ள வேண்டும். தொழிலில் இழப்பு, கடன் தொல்லை என்பதெல்லாம் சரியான வாதமா என்பது தெரியவில்லை. இது வெறும் தொழில்தான் என்றால் ஒவ்வொரு தொழிலிலும் எதிரிகள் தடைகள் உண்டு என்கிற விதத்தில் சில அணுகு முறைகளை மேற்கொள்வது அவசியம். இல்லை இது தொழில் இல்லை என்றால் அவர்களின் பொறுப்புகளை உணர்ந்து படம் எடுக்க வேண்டும். இரண்டு விதத்திலும் கமலின் நிலை என்ன என்பது குறித்த சந்தேகமே எழுகிறது. கிங்க்பிஷர் விமானங்கள் நஷ்டத்தில் ஓடுவதாகவும் அதனால் மஞ்சள் பத்திரிக்கை கொடுக்க வேண்டும் என்ற போது எல்லாரது உள்ளத்திலும் எழுந்த கேள்வி இதுதான் – உன்னைய யாரு ஓட்டச் சொன்னா? அதே கேள்வியை இப்போதும் கேக்கலாமல்லவா?
  • நீதிமன்றச் சர்ச்சையில் சிக்குவதில் நமக்கு உடன்பாடு இல்லைதான். பண இழப்பு என்பதைக் காரணம் காட்ட முடியாது – நாட்டின் ஒற்றுமையும் நாட்டு அமைதியும்தான் முக்கியம் என்று நீதிபதிகள் சுட்டிகாட்டி தடையை நீட்டித்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஆயிரக் கணக்கான மக்களின் உயிருக்கும், பின் வரும் சந்ததிக்கும் மிகப் பெரிய பேராபத்து காத்திருக்கும் கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரத்தில் பண இழப்பை மட்டுமே முன்னிருத்தியதாக எனக்கு நினைவு. என்ன நடக்கிறது  இங்கே!
  • சுமுகமாய் பிரச்சனை முடிந்திருப்பதாக சொல்கிறார்கள். இனிமேலாவது உலக நாயகன் உஷாராய் இருப்பார் என்று நம்புவோம். ரசிகர்கள் மகிழ்வார்கள்.
குறிப்பு:
என்னுடைய முந்தய பதிவைப் பார்த்து விட்டு என்னை ஒரு நண்பர் பிடி பிடி என்று பிடித்து விட்டார். ஏதோ நான் கமலின் ரசிகன் என்பது போலவும், அவருக்கு நான் ஏதோ கடன் கொடுத்து அது வராதே என்கிற கவலையில் தடை தவறு என்று நான் எழுதியதாக நினைத்து விட்டார். ஒரு வேளை அந்த தொனியில் அந்தப் பதிவு இருந்ததோ என்னவோ!
ஆனால் அதே சமயம் எந்த வித தொடர்பும் இன்றி ஒரு விடயத்தில் ஒரு கருத்தைப் பதிவு செய்வதும், அதே கருத்தை எல்லாச் சூழ்நிலைகளிலும் ‘சந்தர்ப்ப வாதியாக’ இல்லாமல் பதிவு செய்வதும் அவசியம். நமக்குத் தமிழ் பற்று அதிகம் இருப்பதினால் டேம் 999 ஐத் தடை செய்வது சரி என்றும், இன்னொரு படத்தைத் தடை செய்வது தவறு என்றும் சொல்வது சரி இல்லை என்றே படுகிறது. [ஆனாலும் இன்னொசென்ஸ் ஒப் முஸ்லீம்ஸ் ஐ தடை சொல்வது சரி என்று எழுதியிருந்தேன். அதற்கான காரணம் வெறும் காழ்ப்புணர்ச்சியில் எடுக்கபட்ட படம் என்பதனால்].

அதிசயம் ஆனால் உண்மை. இட்லி வடையில் எப்போதும் இல்லாமல் திடிரென்று ‘சோ’ வின் சந்தர்ப்ப வாதத்தை எடுத்து விட்டிருக்கிறார்கள். அதில் சோவின் சந்தர்ப்ப வாதத்தை பற்றியா தி.மு.க. வின் சந்தர்ப்ப வாதமா என்று புரியவில்லை. அதற்குள் சோவின் பேட்டி - இரண்டு பக்கமும் சால்ரா அடிக்கும் சோ வைப் பார்க்க பாவமாய்த் தான் இருக்கிறது.

Sunday, 27 January 2013

தடை: விஸ்வரூப வெற்றி


கமல்ஹாசன்
ஒவ்வொரு திரைப் படம் எடுக்கும் போதும் 
ஏதாவது ஒரு சிக்கல், தடை என்று ஏடாகூடமாக 
மனிதன் மாட்டிப் போகிறார். 
அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல 
எனக்கு ஒண்ணுமே ஆகுறதில்ல - ன்னு 
சொன்ன மனுஷனுக்குத் தான் இப்படி ஆகுது.

  • சண்டியர், ஹே ராம், விஸ்வரூபம் - வரிசையா வந்து மாட்டுது. ஒவ்வொன்றின் பின்புலத்திலும் உள்ள சிக்கல்கள் வெவ்வேறு என்றாலும், இந்த நேரத்தில் ஒரே ஒரு செய்திதான்.  திரைப்படங்களுக்குத் தடை என்பது நமது நாட்டிற்கு ஒன்றும் புதிதில்லை. 
  • திரைப்பங்களையே தடை செய்வதே நல்லதாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். என்னைப் போல பல பிரபல அரசியல் வாதிகளும் நினைப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆனாலும் அது சாத்தியப் படாது என்பதனால் சில திரைப் படங்களை தடை செய்வோம் அல்லது சில வாரங்கள் தடை செய்வோம் என்றெல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு வருகிறார்கள். இது நல்ல எண்ணத்தினால் அல்ல - அரசியல் தந்திரம், மற்றும் வியாபார நஷ்டம், அரசியல் பழி வாங்கல் என்பதெல்லாம் இதன் பின் அடக்கம். 
  • இதில் கமல் 'நல்லவரா கெட்டவரா' என்பதெல்லாம் இந்த விவாதத்திற்கு உட்பட்டதல்ல. இந்தத் திரைப் படத்திற்கு தடை சரியா இல்லையா என்பதுதான். டாம் படத்திற்குத் தடை என்ற போதும் எனது கருத்து இதுவாகவே இருந்தது. கேரளா அரசின் கொள்கை, அது விரிக்கும் வலை தவறு என்பது தெரிந்தாலும் அதற்கானத் தீர்வு என்பது படத்தை தடை செய்வதில் இல்லை, அல்லது தீர்வு அது இல்லை என்றே சொல்லியிருந்தோம்.
  • ஒரு படத்தை தடை செய்வதினால் இஸ்லாமியர்களின் சுதந்திரம் இங்கே பாதுகாக்கப் பட்டு விடுமா? இந்தத் திரைப் படத்தை தடை செய்வதினால் இஸ்லாமியர்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் என்று நினைத்து விட முடியுமா? அதுதான் உண்மையெனில் அயோத்திக்கு எப்போதோ தீர்வு கிடைத்திருக்கும். அரசியல்வாதிகள் மக்களை ஒரு மாயையில் வைப்பதற்கு இது போன்ற உப்புச் சப்பில்லாத விஷயங்களை கையில் எடுத்துக் கொண்டு இஸ்லாமியர்களின் கருத்துக்குச் செவி கொடுக்கிறோம் என்ற ஒரு செய்தியை வெளியில் செய்து விட்டு மறைமுகமாய் தங்களது அரசு இயந்திரங்களை அவர்களுக்கு எதிராய் முடுக்கி விடுவார்கள். திரைப் படங்களைத் தடை செய்வதோடு நமது தார்மிகக் கடமை முடிந்து விட்டது என்று நாமும் ஒதுங்கிப் போவோம். இதைத் தானே அவர்கள் நினைக்கிறார்கள். இனி அடுத்த முறை தேர்தலில் இஸ்லாமிய நண்பர்களின் ஒட்டு ஒட்டு மொத்தமாய் மோடியின் சகோதரிக்கு கிடைக்கும்.
  • இன்னொசென்ஸ் ஒப் முஸ்லீம்ஸ் என்ற ஒரு கேவலமான ஒரு படத்தை அமெரிக்க நிறுவனம் தயாரித்த போது அதில் நபிகளை மிகவும் தவறாகச் சித்தரித்து இருக்கிறார்கள் என்பதில் ஒரு நியாயம் இருந்தது. அது எந்த விதமான தயாரிப்பும் இன்றி, அசிங்கமாக சித்தரிக்கப் பட்ட படம் என்பதில் அதன் தடையை நாம் நியாயப் படுத்த முடியும். எந்த விதமான காத்திர முகாந்திரமும் இன்றி கமலின் திரைப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்பது எந்த விதத்தில் சரி என்பது தெரியவில்லை. 
  • ஒரு படத்தில் ஒரு மதத்தவரை எப்போதும் திவிரவாதிகளாகக் காட்டுவது தவறு. ஆனால் ஒரு திரைப் படத்தில் ஒரு விஷயத்தை சொல்லி விட்டால் அது அப்படியே உண்மை என்ற அர்த்தம் இல்லை. அல்லது இந்திய இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் படங்கள் வந்தால் அதற்கான எதிர்ப்புக் குரல் நிச்சயமாய் எல்லாரிடமிருந்தும் வரும். 
  • சரி ஒரு கேள்வி - இந்தியத் தமிழக அரசியல் வாதிகள் எல்லாரையும், கேவலமான பொறுக்கிகளாக, லஞ்சத்தில் ஊறிப் பெருத்த பெருச்சாளிகலாக காட்டும் திரைப் படங்கள் அனைத்தும் உண்மைதானே.   காவலர்கள் பெரும் கேடிகளா...அப்புறம் ஏன் எல்லாத் தமிழ் படங்களையும் தடை செய்யச் சொல்லி எந்த அரசியல்வாதியும் வரிந்து கட்டுவதில்லை?
  • எல்லாருக்கும் எல்லாருடைய கருத்துக்களோடும் உடன்பாடு இருப்பதில்லை. கமலின் பல கருத்துக்கள் எனக்கு உடன்படாதவைகளே. பல திரைப் படங்களின் கருத்துக்கள், அதன் கருத்து இவைகளோடு கூட உடன் பாடு இல்லைதான். அதற்காக அந்த மனிதன் ஒரு கருத்தை சொல்லக் கூடாது என்கிற உரிமை நமக்கில்லை என்றே கருதுகிறேன். அதே சமயத்தில் அந்தக் கருத்தை எதிர்க்கும் உரிமையும் எல்லாருக்கும் உண்டு. ஆனால் எதிர்ப்பு என்பது தடையில் இல்லை... 
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இந்த நேரத்தில கமல் பாடின இந்தப் பாட்டை
பாக்கணும் போல இருக்கு,
"அடமேன்ட்டா நாங்க நடை போட்டா 
தடை போட நீங்க கவர்ன்மெண்டா 
தடா உனக்குத் தடா" 

இதே நேரத்தில் கமலைப் பார்த்து 
இந்தப் பாடலைப் பாட வேண்டும் போல இருக்கிறது.

"போனா போகுதுன்னு விட்டின்னா 
கேனன்னு ஆப்பு வப்பாண்டா"
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
குறிப்பு: 
பதிவு என்ன ஒரே குழப்பமாக இருக்கிறது என்பவர்கள் இதைக் கமல் பற்றிய பதிவு என்பதை மனதில் இருத்திக் கொள்வது நல்லது.
[அவசரத்துல ஒழுங்கா எழுதலை என்பதை மறைக்க என்னவெல்லாம் சொல்ல வேண்டியிருக்கிறது.]

தொடர்புடைய சில பதிவுகள் :

அன்பின் வன்முறை இன்னொசென்ஸ் ஒப் முஸ்லீம்ஸ் பற்றியது 

டாம் படத்தை தடை செய்தது தவறு


Monday, 24 September 2012

அன்பின் வன்முறை ....

இஸ்லாமியர்களின் ஒட்டு மொத்தக் குரல் உலகம் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. ஏறக்குறைய ஒரு வாரத்திற்கு மேலாகியும் அது குறைவதாய்த் தெரியவில்லை. அநேகமாக இன்னும் அதிகமாகலாம்.

அமெரிக்காவைச் சேர்ந்த முறையான அடையாளம் இல்லாத ஓர் அமெரிக்க யூதர் இஸ்லாமியர்களின் மீது மிகுந்த வெறியோடு, எந்தவிதமான அடிப்படைத் தரவுகளுமின்றி மிக மோசமான ஒரு குறும் படத்தை இயக்கப் போக உலகமெங்கும் இருக்கிற இஸ்லாமியர்கள் ஒட்டு மொத்தமாக அமெரிக்காவிற்கு எதிராகத் திரும்பியிருக்கிறார்கள். 

லிபியாவில் அமெரிக்க தூதர் கொல்லப் பட்டதாகவும் அவரோடு இணைந்து மேலும் இருவரும், பாகிஸ்தானில் இதுவரை பத்தொன்பது நபர்களும் கொல்லப்  பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் பாகிஸ்தானில் கொல்லப்பட்டவர்கள் அமெரிக்கர்கள் இல்லை - அவர்களும் பாகிஸ்தானியர்கள் என்றே நினைக்கிறேன்.

இதோடு இணைந்து இந்த சமயத்தில் பிரெஞ்சு பத்திரிகை ஒன்று நபிகளின் கார்ட்டூன் ஒன்று வெளியிட இந்தப் பிரச்சனை இன்னும் அதிகமாகிறது. மத சம்மந்தப் பட்ட கோட்பாடுகளில் கைய வைக்கிற யாரும் மிகக் கவனமாய் இருக்க வேண்டியது அவசியம். ஒரு தீப் பொறி ஒரு காட்டை அழிக்கும் வல்லமை படைத்தது என்பதை இந்த நிகழ்வு சுட்டிக் காட்டுகிறது. அமெரிக்கர்கள் கிறித்தவக் கடவுளைக் கிண்டலித்து பழகிப் போனவர்கள். இப்போது அவர்களின் கோபம் இஸ்லாமியர்கள் பக்கம் திரும்பியிருக்கின்றது. இதை அவர்கள் கருத்துச் சுதந்திரம் என்று நியாயப் படுத்தலாம். ஆனால் இது அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்ளப் படாது. ஏற்றுக் கொள்ளவும் முடியாது.

உலகின் எல்லா நாடுகளும் ஒருங்கே அமெரிக்காவின் கருத்துச் சுதந்திரம் என்கிற கோட்பாட்டை அவர்கள் பாணியில் யாரும் புரிந்து கொள்ள முடியாது. அப்படி எல்லாரும் அதே விதமாகத்தான் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஏற்றுக் கொண்டதாகத் தான் அது இருக்கும். 

ஒரு மனிதனின் தவறான கருத்தை கடுமையாக எதிர்க்க வேண்டியது அவசியம்தான். ஆனால் அதற்காக வன்முறை எதிப்பை ஒரு போதும் நியாயப் படுத்த முடியாது.  

அடிப்படையில் எல்லாம் சமயங்களும் 
அன்பைப் போதிப்பவைகளாகவே இருக்கின்றன. 
ஆனால், அதில் இருக்கும் உறுப்பினர்கள்
தாங்கள் போதிக்கும் அன்பே உயர்ந்தது என்று சண்டையிடப் போய் 
அவர்கள் அனைவரும் 
தாங்கள் போதிக்கும் அன்பிற்கு எதிரானவர்களாகவே ஆகி விடுகின்றனர். ஆனால் இதை அவர்கள் உணராமல் இருப்பதுதான் 
பிரச்சனையின்  ஆணிவேரே.

கொசுறு:

இன்னொசென்ஸ் ஆப் முஸ்லீம்ஸ் - முழு ஸ்கிரிப்ட் - சொடுக்கவும்.



Saturday, 11 August 2012

டெசோ +ஈழம் + கருத்து சுதந்திரம்


டெசோ மாநாடு பற்றி எல்லாரும் எழுதி எழுதி கிழித்து எரிந்து விட்டார்கள். கலைஞர் மட்டும் வலைப்பூக்களைப் படிப்பவராக இருந்தால், எழுதியிருப்பதை படித்து இருந்தால் அவர்மேலே அவருக்கு வெறுப்பு ஏற்பட்டிருக்கும். நிறையப் படிப்பவர் அவர். அதனால் பத்திரிகைகளில் வந்திருப்பதைப் பார்த்தும் அவர் மேலேயே அவருக்கு வெறுப்பு வந்திருந்தால் கூட கொஞ்சமாவது மாற்றம் தெரிந்திருக்கும். அதற்கெல்லாம் அசருபவர் அல்ல. சரி இது கலைஞர் பற்றிய கட்டுரை அல்ல.  அதுமட்டுமல்லாமல் டெசோ மாநாடு நடத்தும் அருகதை, கலைஞருக்கோ அல்லது வேறு யாருக்கோ இங்கே இருக்கிறதா என்பதைப் பற்றியும் நான் எழுதப் போவதில்லை.

ஆனால் டெசோ மாநாடு நடத்துவதற்கான எதிர்ப்பு ஆள்பவர்களிடமிருந்து வருவதைக் கண்டுதான் எழுதவேண்டுமென்று ஆசைப் படுகிறேன்.

டெசோ மாநாட்டை புறக்கணிப்பதற்கான உரிமை எல்லாருக்கும் உண்டு. அது இதுவரை அவரை நம்பிக் கேட்டோம் என்பது தொடங்கி பல்வேறு காரணங்கள் இருக்கலாம். எனவே இதை மறுப்பதற்கான உரிமை எல்லாருக்கும் உண்டு. 

ஆனால் அனுமதி மறுப்பதற்கான உரிமை அரசிடம் இல்லை என்றே கருதுகிறேன். ஈழம் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று ஒரு அரசு சொல்லுமேயானால், அது எந்த அளவுக்கு இலங்கையின் மீது அனுசரணையோடு இருக்கிறது என்பதை மீண்டும் எடுத்துக் காட்டுகிறது. காங்கிரஸ் கலந்து கொள்ளாது என்று நாராயண சுவாமி சொல்லியிருக்கிறார். கலந்து கொண்டு இரட்டை வேடம் போடுவதற்கு இதுவே மேல்தான். ஆனால் பார்த்துக் கொண்டே இருங்கள் இந்த இலங்கைக்கு கைகட்டும் காங்கிரஸ் அங்கே சீனா வந்து ஆட்டம் போட்ட பிறகுதான் ஆஹா சூடு வைத்துக் கொண்டேமே என்று யோசிக்கும்.

எல்.டி. டி. யை ஆதரிப்பது குற்றம் என்றும் சொன்ன போதும் கூட எல்.டி.டி. ஐ ஆதரித்துப் பேசக்கூடாது என்றுதான் அப்போது சொன்னார்கள். அந்த வார்த்தையைப் பயன்படுத்துவது தவறு என்று சொன்னார்களா என்று தெரியவில்லை.

இப்போது ஈழம் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்வது அந்த வார்த்தை எந்த அளவுக்கு சக்தி வாய்ந்ததாக இருக்கிறது என்பது புரிகிறது.  கலைஞர் வேடதாரி என்பது எல்லாருக்கும் தெரியுமானால், எதற்கு இந்த அரசாங்கங்கள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு இதை எதிர்க்கின்றன என்றுதான் புரியவில்லை. இலங்கை அரசு அங்கே பங்கேற்கும் நபர்களை தான் தனியாக கவனிப்பேன் என்கிறது. சிலருக்கு அங்கிருக்கிற இந்தியத் தூதரகம் விசா வழங்க மறுக்கிறது. இந்திய அரசு 'ஈழம்' என்பதை பயன்படுத்தக் கூடாது என்கிறது. தமிழக அரசு சென்னையில் இதை நடத்தக் கூடாது என்கிறது. 

ஆகமொத்தம் காரணம் ஒன்றுதான்: ஈழம் பற்றிப் பேசினால் அதன் விடுதலைக்காக குரல் கொடுக்கும் தமிழர்களின் எண்ணிக்கை வளர்ந்து விடக் கூடாது என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. 

இதில் நாம் கலைஞரை விமர்சிக்கிறோம் என்று இந்த மாநாட்டின் எதிர்ப்பில் -  "ஈழம்" மீது நமக்கு இருக்கும் வேட்கையை குறைத்து விடவும்,இனி யாருமே அந்த வார்த்தையைப் பயன்படுத்த முடியாமல் போகும் நிலையயைத் தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். நாளைக்கு வேறு யாரும் கூட ஈழ மாநாடு என்கிற ஒன்றை நடத்த முடியாது. உண்மையான ஈழ ஆதரவாளர்கள் கூட. 

அரசியல்வாதிகளில் பச்சோந்திகள் தவிர வேறு யாரும் இல்லை. இதில் கலைஞர் மட்டும் விதிவிலக்கா? ஒவ்வொருவருக்கும் வயதுதான் வித்தியாசமே தவிர வேறு ஒன்றும் இல்லை. அம்மாகூட தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதனால் அவர்கள் ஈழ ஆதரவாளர் ஆகிவிட்டாரா? அம்மாவைப் பாராட்டி ஒருவர் மாற்றி ஒருவர் பேசி, பாராட்டி, .... கொஞ்ச நாளிலேயே அம்மா எல்லாருக்கும் ஆப்பு வைத்தார்கள். அதே அம்மா புரானிகள் கூட இப்போது அமைதியாக இருக்கிறார்கள். 

கலைஞர் மாநாடு நடத்த வேண்டும் என்றோ, கூடாது என்பதெற்கெல்லாம் அப்பாற்பட்டு நான் சொல்ல விரும்புவது இதுதான். 

சுதந்திர நாட்டில் ஒருவன் தான் விரும்பிகிற, நம்புகிற கொள்கையை வெளிப்படுத்துவதற்கான உரிமை எல்லாருக்கும் உண்டு. அதை மறுப்பவர்கள் அரக்கர்கள் - அஹிம்சாவாதிகள் என்று சொல்லிக்கொண்டால் கூட.

இந்தக் கருத்துச் சுதந்திரம் மிதிக்கப் படும் நேரத்தில் அது கலைஞருக்கு எதிரானது என்று நாம் மகிழும் வேளையில், மிதிக்கும் கால்கள் நமது தலையின் மேல் இருப்பதை கவனிக்க மறக்கிறோம்.

கருத்துச் சுதந்திரம் கூட இல்லாத இந்த இந்தியா நாடு விரைவில் 
சுதந்திர தினம் கொண்டாட இருக்கிறது.