Saturday, 14 May 2011

தேர்தல் முடிவுகள் - அடுத்த தேர்தல் வரை நாம் மௌனிகள்

நேற்று விடியற்காலையில் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பு கொடுத்த தலைப்பு. எழுதிக்கொண்டிருக்கும் போதே அறுந்து போன தொடர்பு வருவதற்குள் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. சரி அதே தலைப்பு இருந்து விட்டுப் போகட்டுமே - எப்படி இருந்தாலும் அதுதானே உண்மை.

இன்று முழுவதும் காலை தொடங்கி இறுதி முடிவு வெளிவரும் வரை எல்லாத் தொலைக்காட்சிகளும், மைக் பிடித்துக் கொண்டு அல்லது மேசையைச் சுற்றி அமர்ந்துகொண்டு இறுதி முடிவு வரை பேசிக்கொண்டே இருந்து விட்டார்கள். நாம்தான் ஒன்றும் செய்யமுடியாமல் போய்விட்டது. blogger - க்கு நமது நன்றிகள்.

எல்லாருடைய எதிர்பார்ப்பிற்கும் மேலாகவே முடிவுகள் - அம்மாவே எதிர்பார்க்காத அசத்தலான முடிவுகள். ஏன் இப்படி ஒரு வெற்றி என்று அம்மாவுக்கே புரியாது. ஆனால் ஏன் இந்தத் தோல்வி என்று கலைஞருக்கு நன்றாகத் தெரியும்.

சீமான் மிக்க மகிழ்ச்சியோடு இருக்கலாம்.

வை.கோ அமைதி காத்ததன் மூலம், காமேடியனாக்கப் பட்டுவிட்டாரே என்று நான் எழுதினேன். ஆனால் தனது அமைதின் மூலம் இன்னும் அன்புச் சகோதரிக்கு அருகிலேயே இருக்கும் வாய்ப்பைப் பிரகாசப் படுத்திக் கொண்டார்.  சாணக்கியத்தனம் !

ஆட்சியில் பங்கு கேட்கமாட்டோம் என்று முன்கூட்டியே அறிவித்து விட்டதால் நாம் ஒரு காமெடி பார்க்கும் வாய்ப்பை இழந்து விட்டோம். கேட்டாலும் கிடைக்காது என்பதால் - "இந்தப் பழம் புளிக்கும்."

தனது வாயினாலேயே பேமஸ் ஆன வடிவேலு, அதாலேயே குட்டிச் சுவரைப் போய்விட்டார். ஒரு வேலை ரஜினியிடம் மண்டியிட்டால், மனோரமாவுக்கு வாய்ப்பு கிடைத்தது போல கிடைக்கலாம்! ஆனாலும் எழுந்து நடக்க முடியாது.

நாம் பல பேருக்கு நன்றி சொல்லவேண்டும். அதில் முதலாவது ஆற்காட்டார் - மின்சாரக் கடவுள். ராசா - தொலைபேசிக் கடவுள். காங்கிரஸ் - எமதர்மர்கள். இன்னும் நிறைய .....

தேர்தல் கமிஷன் - வெற்றி!

எது எப்படி இருந்தாலும், இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நாம் ஒன்றும் பேச முடியாது. ஒருவரா? ஒரு குடும்பமா? எதிர் பாராத சோகம் நிகழ்ந்தால் ஒழிய 2016 வரை நாம் மௌனிகள்தான்.

வாழ்க ஜனநாயகம்!

Wednesday, 11 May 2011

பட்டி மன்றமும் - நீதி மன்றமும்

  • சில நாட்களுக்கு முன்பு, கலைஞர் தொலைக் காட்சியில் ஒரு பட்டி மன்றம். உழைப்பாளர்களுக்கு களைப்பைப் போக்க பெரிதும் உதவுவது நாட்டுப் புறப் பாடல்களா அல்லது திரைப் படப் பாடல்களா? லியோனி எப்போது இந்தத் திரைப்படப் பாடல்களை விட்டு வெளியே வரப் போகிறார் என்று தெரியவில்லை. எப்போது பார்த்தாலும் திரைப் படம் தொடர்பான பட்டி மன்றம்தான். ஆனால் தமிழ் கூறும் நல்லுலகும் அப்படித்தானே இருக்கிறது. எல்லாமே நமக்குத் திரைப் படம் சம்பந்தப் பட்டவைகள்தானே. நாம் எப்போதுதான் அதைவிட்டு மீண்டு வரப் போகிறோம் என்றுதான் தெரியவில்லை. 
    • சரி அது இருந்து விட்டுப் போகட்டும். அன்றைய தீர்ப்பை முடிவு செய்ய உதவியது, கலைஞரின் பொன்னர் சங்கர் - அதாவது திரைப் படப் பாடல்கள். 
    • எந்தப் பட்டி மன்றங்களும், பேச்சாளர்களின் விவாதத்தை முன்வைத்து யார் மிகச் சிறப்பாக வாதடியிருக்கிரார்களோ அதை முன்னிறுத்தி ஒரு போதும் தீர்ப்பு வருவதில்லை. நீதிபதி - பட்டிமன்ற நடுவர் - என்ன நினைக்கிறாரோ அதுதான் எப்போதும் தீர்ப்பாக வருகிறது. பேச்சாளர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் ஒரு போதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படுவதில்லை என்பதுதான் கவனிக்கப் படவேண்டியது. 
    • மேலும், அன்றைய தினம் கலைஞர் அவர்கள் பட்டிமன்றத்தில் கலந்து கொண்டதாலும், அவரும் திரைப்படத்தோடு தொடர்பு கொண்டவர் என்பதாலும், அண்மையில் அவரது பொன்னர் சங்கர் வெளிவந்தது என்பதாலும், இந்தத் தீர்ப்பு கலைஞருக்கு பிடிக்கும் என்பதாலும் அந்தத் தீர்ப்பு என்றே கருத வேண்டியிருக்கிறது. 
  • நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்பும் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருப்பவர்களுக்குப் பிடிக்கும் விதத்திலேயே வழங்கப் படுகிறதோ என்று ஒரு சந்தேகம் - நீதி மன்றத்தை அவமதிக்கும் எண்ணமெல்லாம் நமக்கு இல்லை. நடக்கிற நிகழ்வுகளைப் பார்த்தால் அப்படித் தோன்றுகிறது என்பதால் இந்த அய்யம். பதினான்காம் தேதிதான் ஒரு தீர்ப்பு வரும் என்று சொல்லியிருக்கிறார்கள்  - இதைப் படித்தவுடன் எனக்கு அந்தப் பட்டிமன்றம்தான் நினைவுக்கு வந்தது. - ஏன் பதினான்காம் தேதி? 
    • தேர்தல் முடிவுகள் இந்தத் தீர்ப்பை நிர்ணயம் செய்யலாம்.  
    • பட்டிமன்றங்கள் போலத்தான் நீதி மன்றங்களும் இருக்கின்றன
கலைஞருக்கும் இது தெரியும் - அவரின் சக்திக்கு உட்பட்ட இடங்களில் அவரின் விருப்படியே தீர்ப்பு வருகிறது. அதுபோலவே இன்னும் அதிக சக்தி வாய்ந்தவர்கள் இருக்கும் இடங்களில் அப்படித்தான் இருக்கும் என்பதை அவர் அறிவார்.

Thursday, 5 May 2011

பின் லேடன் அழிப்பு (!) - இனிமேல் உலகம் அமைதியாய் இருக்குமா?

  • ஒபாமா தேர்தலுக்குத் தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்த போது, அவர் தன்னை இஸ்லாமியர்களிடமிருந்து வேறு படுத்திக் கொள்ளாமல் இருந்த தருணங்களில், ஒபாமாவை - ஒசாமா போல மீடியா சித்தரித்தது. "Justice is done" என்று ஒசாமைவைப் போட்டுத் தள்ளுவதை நேரில் பார்த்த பிறகு - எனது கட்டளைப் படி எல்லாம் நடந்தது என்று என்று சொன்னதன் வழியாய் தான் தீவிரவாதத்தின் எதிரி என்று நிலை நாட்டியிருக்கிறார்.
    • ஆனால் புஷ் சதாம் உசேனைப் பிடித்ததைச் சொன்ன போது அவரிடம் இருந்த கர்வமான சிரிப்பு ஒசாமைவைக் கொன்றதாகச் சொன்ன ஒபாமாவிடம் இல்லை. "JUSTICE" -
    • இவ்வளவு நாட்கள் இல்லாமல் திடீரென்று ground zero வுக்குச் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார் ஒபமா. 
    • இழந்த பாப்புலரிடியைப் பெற மனிதர்களின் emotion ஐத் தொடுவதையே எல்லா அரசியல் வாதிகளும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
  •  ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள் தங்களது பாதுகாப்பில் வைத்திருந்த பின் லேடனைப் பற்றிய தகவல்கள் எப்படி அமெரிக்காவிற்குத் தெரிந்தது என்றுதான் பாகிஸ்தானுக்கு ஒரே கவலை. இது பாகிஸ்தானுக்குத் தெரியாது என்று அந்த அரசு சொல்லுவதெல்லாம் நம்பும் படியாக இல்லை. இன்னைக்கு பந்த் இல்லை ஆனால் மவுன்ட் ரோடு காலியா இருந்தது அப்படின்னு சொல்றதை நம்புறவங்க வேண்ணா இதை நம்பலாம். இத்தனைக்குப் பிறகும், அமெரிக்கா பாகிஸ்தானுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டுதான் இருக்கும்.  இது இந்தியாவுக்குச் செக். 

  • அமெரிக்கா அடுத்த நாட்டின் எல்லைக்குள் அவர்களின் அனுமதி இன்றி எப்படி நுழைய முடியும் என்பதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை. உலகத்தின் அபாயகரமான தீவிரவாதியாக இருந்தால் கூட - தீவிரவாதிகளின் வன்முறையை விட இந்த அரசு அத்துமீறல் வன்முறைகள் ஆபத்தானவை. எங்கே தவறு நடந்தாலும், குற்றவாளி இருந்தாலும், தாங்களே தண்டிக்கப் பிறந்தவர்கள் என்கிற கர்வத்தை இது வளர்த்தெடுக்கும். இஸ்ரேலுக்கு இது அதிகமாக உண்டு. அமெரிக்காவும் அதற்குச் சளைத்தவர்கள் இல்லை. இத்தனைக்குப் பிறகும் பாகிஸ்தான் அமெரிக்காவுடன் கொஞ்சிக் குலாவும்.  இது இந்தியாவுக்குச் செக். 

  • உலகின் மிக அபாயகரமான  தீவிரவாதி இறந்துவிட்டான். இனிமேல் உலகம் அமைதியாய் இருக்கும் என்று சில பத்திரிகைகள் எழுதியிருக்கின்றன. பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

  • உலக வல்லரசு தான்தான் என்று மீண்டும் அமேரிக்கா நிலை நிறுத்தும் முயற்சியே இது. அமெரிக்க பிரஜைகள் குற்றவாளிகளாக இருந்தாலும், வேறு எந்த நாட்டிற்கும் அனுப்ப மறுக்கும் இந்த மனித உரிமையை மதிக்கும் இந்த மனிதர்கள், தங்களுக்கு வேண்டாதவர்கள் என்றால் எங்கேயும் சென்று அடிப்பார்கள். தாங்களே வளர்த்து விட்ட சதாம், மற்றும் பின் லேடன் தங்களுக்கு எதிராகத் திரும்பிய போதுதான் அவர்கள் தீவிரவாதிகளாகவும், அபாயகரமான மனிதர்களாகவும் தெரிகிறார்கள். இந்த சித்து வேலைகளை  எல்லாம் அமெரிக்கா நிறுத்தினாலே தீவிரவாதிகள் உலகில் குறைந்து விடுவார்கள். 

  • சதாமிடமிருந்து அமேரிக்கா ஒன்றைக் கற்றுக் கொண்டது.  இம்முறை அந்தத் தவற்றை செய்து விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்கள். எதற்கு ஒருத்தனை உயிரோடு பிடிக்க வேண்டும், அப்புறம் கோர்ட்டு கேசுன்னு அலையணும். போவோம் சுடுவோம். முடிஞ்சது. தமிழ் சினிமாவில் இராணுவ வீரர்களாக நடிக்கும் நடிகர்கள் யாரேனும் idea கொடுத்திருப்பார்களோ ?

  • கடைசியா ... எனக்கென்னமோ இறந்து போன வீரப்பனை சுட்டு தமிழக அதிகாரிகள் பேர் தேடிக்கொண்டது போல, கிட்னி செயலிழந்து இறந்து போன பின் லேடனை அமெரிக்கர்கள் சுட்டு பேர் வாங்குகிறார்களோ என்றுதான் சந்தேகம்.

    Monday, 2 May 2011

    இணையம் இல்லா உலகம் இணையற்ற உலகம்


    எல்லா நாடுகளும் நகரங்களும், ஒன்றோடு ஒன்று பிண்ணி இணையத்தால் பிணைக்கப்பட்டு இருப்பது உண்மையென்றாலும் கூட, எல்லா நாடுகளிலும், ஏதாவது கிராமம் இணையத்திற்கு அப்பாற்பட்டுதான் இருக்கிறது.

    அப்படி ஒரு கிராமத்தில் வருடத்திற்கு ஒருமுறை, நான்கைந்து நாட்கள் குடியிருக்க முடிவு செய்தால் மிக நன்றாக இருக்கும். அப்படி இணைக்கப்படாத கிராமத்தின் அழகும், மாசு படாத எழிலும், எந்த நாடாக இருந்ததாலும், மனத்தைக் கிறங்க வைக்கும்.

    அப்படியே இல்லாவிட்டாலும், இணையத்தால் இணைக்கப்படாமல் இருக்க நீங்கள் முடிவு செய்தால், நீங்கள் பார்க்கும் எந்த நகரமும் திடீரென்று வேறு விதமாகத் தோன்றும்.
    எல்லாவற்றிற்கும் மேலாக, எப்போதும், கணினியை இயக்கிக் கொண்டிருக்கும் கைகளும், மிக முக்கியமானதென்று நினைத்துக் கொண்டு எழுதும் இ-மெயில்களும், மொக்கைக் கட்டுரைகளும்...

    இதெல்லாம் இல்லாமல், கைகளும் மனதும் சிறகடித்துப் பறக்கும் அனுபவத்தை எல்லாரும் அனுபவிக்க வேண்டும்.
    உங்கள் blog- கிற்கு ஒரு நாள் விடுமுறை விடுங்கள் அப்படியே முடியுமெனில், இ-மெயிலிற்கு சில நாட்கள் விடுமுறை விடுங்கள். இன்னும் முடியுமென்றால், ஒட்டு மொத்தமாக கணினிக்கு ஒரு வாரம் ஓய்வு கொடுங்கள்.

    கணினிக்கும் கணினிக்கும் உள்ள இணைப்பைத் தாண்டி, இயற்கையின் இணைப்பில் இணைந்தால் அதனால் வரும் சுகம் தனிதான். மனதோடு பேசும், இயற்கையின் குரல் நம்மை வெகுவாய் ஈர்க்கும்.

    உலகம் பெரிதாய் ஒன்றும் மாறிவிடாது. நாம் எதையும் இழக்கப் போவதும் இல்லை. இணையத்தின் இணைப்பிலிருந்து விடுபட்ட இந்த மூன்று வாரங்கள் எனக்கு இனிதாய் இருந்தன. இந்த அனுபவம் எல்லாரும் பெற வேண்டும்.

    Saturday, 9 April 2011

    அன்னா ஹசாரேக்கு வாழ்த்துக்கள்

    வெற்றி பெற்ற 
    அன்னா ஹசாரேக்கு வாழ்த்துக்கள்.
    அரசின் வாக்குறுதி நிறை வேற்றப் படும் என்று நம்புவோம்.

    அன்னா ஹசாரேக்கு எதிராய் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் - ஊழலுக்கு ஆதரவாய்

    அன்னா ஹசாரே ஒரு தனி மனிதனாய் பல்வேறு கோரிக்கைகளுக்குப் பிறகும், பிரதமரோடு உரையாடிய பின்பும், இது ஒன்றும் நடக்கிற காரியம் இல்லை என்று, சாகும் வரை உண்ணா விரதம் இருக்கிறார். இது போராட்டம். களத்திலும் நாட்டிலும் மிக குறைவான எண்ணிக்கையிலேயே இப்போராட்டம் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறது.
    இணையத்தில் தமிழ் வலைப் பூக்களில் இது பெற்ற முக்கியத் துவத்தைக் கூட தமிழ் பத்திரிகைகள் பதிவு செய்யவில்லை என்பது வருத்தம்தான். 

    எத்தனை எத்தனைப் பத்திரிக்கைகள், தொலைக் காட்சிகள். எதெதெற்கோ நேரடி ஒளிபரப்புச் செய்யும் தொலைக் காட்சிகள் இதைச் செய்தால்தான் இப்போராட்டத்தை வலுப் படுத்த முடியும் என்பது திண்ணம். 

    வியாபார நோக்கம் கொண்ட பத்திரிக்கைகள், ஊழல் பின்புலம் கொண்ட அரசியல் வாதிகளின் தொலைக் காட்சிகள், வியாபார நோக்கம் கொண்ட விளையாட்டு தொலைக் காட்சிகள், உண்மையை இருட்டடிப்புச் செய்யும் மீடியாக்கள் இதற்கு ஒரு போதும் துணையிருக்காது.
    எல்லாக் கட்சியும் அயோக்கியக் கட்சிதான். அவைகளுக்குள்ள அதிகாரப் போதையைத் தெளிவு படுத்தவும், ஊழல் பற்றிய நினைவு வராமல் இருக்கவும், லோக் பால் சட்ட மசோதா நிறைவேற்றப் படவேண்டும் என்பதுதான் இந்த வீரரின் கோரிக்கை. 

    எதற்கும் ஒத்து வராத அனைத்து அரசியல் கட்சிகளும், இந்த  விஷயத்தில் ஒற்றுமையாய் இருக்கிறார்கள்.  அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் - ஊழலுக்கு ஆதரவாய். இவர்கள் அனைவரும் ஊழலுக்கு எதிராய் ஒன்றைக் குரல் கொடுப்பார்கள் அதில் ஏதாவது பெற முடியுமெனில்....
    அவநம்பிக்கை எதையும் சாய்த்து விடக் கூடாது. எல்லாத் தமிழ் வலைப் பூக்களின் முதற் பக்கத்திலும் அன்னா ஹசாரே பற்றிய கட்டுரைகள் முதற்பக்கத்தில் சில நாட்களுக்கு இருக்கும் படி செய்தாலே இந்தப் போராட்டத்தை இன்னொரு நிலைக்கு எடுத்துச் செல்ல முடியும்.

    சிறு தீப் பொறி காட்டை அழிக்கும். அன்னா ஹசாரேப் பொறி ஊழல் நாட்டை ஒழிக்கும்.


    விரிவான கட்டுரைகளுக்கு 
    http://truetamilans.blogspot.com/2011/04/40000-1000.html


    http://sakthistudycentre.blogspot.com/2011/04/blog-post_7097.html


    http://smuthukumaran.wordpress.com/2011/04/07/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87/

    http://tamilnanbargal.com/node/32566

    http://www.sangkavi.com/2011/04/blog-post_07.html

    http://www.giriblog.com/2011/04/hazaare-no-to-politicians.html



    Thursday, 7 April 2011

    தேர்தல் - இரு கட்சியா ஒரு கட்சியா?

    எதற்கெடுத்தாலும் அமெரிக்காவைப் பார் என்று சொல்லும் நாம் - இரு கட்சி தத்துவத்திற்கு ஏன் அதைப் பார்க்க மாட்டேன் என்கிறோம்?

    நம் நாட்டைப் பொறுத்த வரை, பல கட்சித் திட்டம்தான் அமலில் இருக்கிறது.மாறாகஅமெரிக்காவைப் பொறுத்த வரை, பல கட்சித் திட்டம் என்பது, நாட்டின் ஸ்திரத் தன்மைக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உகந்தது அல்ல. எனவே இரு கட்சித் திட்டம்தான் நாட்டிற்கும் அனைவருக்கும் நல்லது என்று நினைக்கிறார்கள். வாக்களிப்பது என்பது டெமாக்ராட் அணிக்கு அல்லது ரிபப்ளிக்கன் அணிக்கு. அதற்குப் பிறகு வேறு கட்சிகள் இல்லை [அப்படியே இருந்தாலும் இவைகள் எதையாவது சார்ந்துதான் இருக்க வேண்டும்].
    அதாவது, கட்சிகள் வலது, இடது என்கிற நிலையில்கவனிக்கப் படும்.

    தமிழகத்தைப் பொறுத்த வரை, எத்தனைக் கட்சித் திட்டம் இருக்கிறது?

    இந்தியாவின் உள் இருப்பதால், இதிலும் பல கட்சித்திட்டம் தான். ஆனால், தமிழகம் ஒரே கட்சித்திட்டத்தை மட்டும் கொண்டிருக்கிறது. இந்திய விடுதலைக்குப் பிறகு காங்கிரஸ் என்கிற ஒரே கட்சி, அண்ணாவிற்குப் பிறகு திராவிடக் கட்சி.
    பெரியார் தேர்தலில் போட்டியிட விரும்பாததால் அது முன்னேற்றக் கழகமாகியது.  அப்போது மட்டும்தான் காங்கிரசுக்கு மாற்றாக, கொள்கையளவில் ஒரு கட்சி உதயமானது. அதற்குப் பிறகு காங்கிரஸ் தேய்ந்து, திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் ஓங்கியது.
    ஏன் தமிழகம் வளராது இருக்கிறது அல்லது இன்னும் உண்மையான வளர்ச்சி அடையாமல் இருக்கிறது என்றால் அது இந்த ஒரு கட்சி ஆட்சி முறையினால்தான் என்றால் அது முற்றிலும் தவறல்ல.
    அண்ணாவின் கொள்கை தமிழ் நாடு என்று மாற்றுவதோடு முடிந்து விட்டது. அதற்குப் பின் எல்லாமே வெறும் கொள்கைகளாக மட்டும்தான் அதுவ தேவைப் படும்போது எடுத்து விடும் கோஷங்கள். அவ்வளவே.
    திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து, அ.தி. மு.க, பின்பு, ம.தி.மு.க. பிறகு கழகத்தோடு எந்தவிதத் தொடர்புமே இல்லாமல் தே.மு.தி.க. [சரியா?]. அதாவது எந்த வித கொள்கை வேறுபாடுகளுமின்றி, தனிமனித விரோதமும், பகையும் மட்டுமே முன்னிறுத்தப் பட்டு ஒரே கட்சியின் பல கிளைகள்.

    இதுதான் நம்மைப் பொறுத்த வரை பல கட்சிகள். இந்தத் தேர்தலில் இருக்கும் இரு பெரியக் கூட்டணிக் கட்சிகளின் கதாநாயகிகளின் [தேர்தல் அறிக்கைங்க] உள்ளடக்கத்தைப் பார்த்தாலே நமக்கு இது புலப்படும்.


    • இதனால் அறிவது என்னவென்றால், தமிழகம் இப்படிக் கேட்டுச் சீரழியக் காரணம் இந்த ஒரு கட்சி ஆட்சி முறையே. அமெரிக்காவில் பலர் இரு கட்சி முறைக்கு எதிராகக் குரல் எழுப்புகிறார்கள். நாம் இங்கே ஒரு கட்சி ஆட்சி முறைக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டியிருக்கிறது. 
    • எது சிறந்தது? பல கட்சியா அல்லது இரு கட்சி ஆட்சி முறையா. திண்ணமாய்த் தெரிந்ததெல்லாம் இதுதான் - மோசமானது ஒரு கட்சி ஆட்சி.