Wednesday, 28 July 2010

புதிய அடையாளம்


நமது நாட்டிற்கு ஒரு புதிய அடையாளம். நமது பொருளாதார வீழ்ச்சியை இனி வெறும் அடையாளம் கொண்டே குறிப்பிடலாம்.
மிக விரைவாக பாகிஸ்தானும், இலங்கையும் தங்கள் பணத்தின் குறியீட்டை வெளியிடும் – கேரளம் தங்கள் பெயர் மாற்றியது போல.
இந்த அடையாளத்தை ஒரு தமிழன் வரைந்தான் என்பது ஒரு விதத்தில் பெருமைதான்.
ஆங்கிலமா, கிரேக்கமா அல்லது இந்தி – யா என்கிற குழப்பம் நம் பண மதிப்பு மற்றும் பொருளாதாரம் பற்றிய குழப்பம் போல வெகு நாளைக்கு நீடிக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
அடையாளம் தேவைதான் அதே சமயம் – அதில் இந்தியாவும் இந்தியனும் வெற்றி பெரும் அளவுக்கான பொருளாதாரக் கொள்கையும் தேவை.

Friday, 23 July 2010

இணையாக் கோடுகள் பிரிக்கும் உயிர்கள்


உலகின் மிகப்பெரிய இரயில்வேத்துறையில் தொடர்ந்து விபத்துகள் - 

லாலுவிற்குப் பிறகு வந்த ரயில்வே அமைச்சரின் கவனக் குறைவா அல்லது லாலுவின் காலத்தில் எல்லா இடங்களிலும் பணியில் நிரப்பப் பட்ட  பீகார் நண்பர்களின் கவனக் குறைவா – அல்லது இவர்களின் எப்போதையக் கவனக் குறைவையும் மீறி இரயில்கள் விபத்தில்லாமல் தப்பிக்கின்றனவா - நமக்குத் தெரியாது.

ஆனால் நம் அரசுக்கும் ஓட்டுனர்களுக்கும் உயிரின் மதிப்பைப் பற்றி கவலை இல்லை என்பது மட்டும் தெரிகிறது. விபத்து நடந்தவுடன் அரசு, அமைச்சர்கள், அதிகாரிகள் – திடீர் சோதனை – கூட்டங்கள் – விபத்து நடந்தவுடன் சில ஆயிரங்கள் இறந்தவர் குடும்பத்துக்கு – பிறகு யார் குற்றவாளியோ அவர் சஸ்பென்ட் – அப்புறம் ஒரு விசாரணைக் குழு – அதன் முடிவு வருவதற்குள் அடுத்த விபத்து – சில அவசர சட்டம் – சில நாட்களுக்கு கெடுபிடி – பிறகு வேறு ஏதாவது பிரச்சனை – அதற்கான விசாரணைக் குழு – கொடுமை சார் ...

மனித உயிர் அவ்வளவு கேவலமானதா? நிற்கின்ற இரயிலில் எவனாவது மோதுவானா  - சிவப்பு விளக்குகள் என்ன ஆனது? – ஒரு நிலையத்தைக் கடக்கிற போது ஓட்டுனரின் கண்கள் முன்னே இருக்க வேண்டாமா? நாம் எல்லாவற்றையும் “take it for granted” – என எடுத்துக் கொள்கிறோம். என்னை நம்பி இத்தனை உயிர்கள் இருக்கின்றன என்பதை ஓட்டுனர், நிலைய இயக்குனர், ... ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்பு பற்றி உணர வேண்டாமா? 

தங்கள் மேல் அளவுக்கு மீறிய நம்பிக்கை. எல்லாம் ஒழுங்காக நடக்கும் – எல்லோரும் கடமை உணர்வோடு பணியாற்றுகிறார்கள் – எல்லோரும் கவனமாகக் கடமை உணர்வோடு இருப்பார்கள் – எல்லாம் சரிதான் ஆனால் ஓட்டுனர்கள் மட்டும் எப்போதும் தன்னைத் தவிர வேறு யாரும் கடமை உணர்வோடு பணியாற்றுவது இல்லை என்று தான் எண்ண வேண்டும் – இதைத் திமிர் என்றாலும் பரவாயில்லை – தான்மட்டும்தான் கவனத்தோடு வண்டி ஓட்ட வேண்டும் வேறு யாரும் கவனத்தோடு வண்டி ஓட்டுவதில்லை என்றுதான் நினைக்க வேண்டும் – இதைக் கொழுப்பு என்றாலும் பரவாயில்லை – கடமை உணர்வும் பொறுப்புணர்வும் நிமிடம் அதிகரிக்காத வரை சாலைகளாகட்டும். தண்டவாளங்களாகட்டும் விபத்துக்கள் என்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் –

தெரியாமல் நடப்பதுதான் விபத்துகள் – தெரிந்தே நடந்தால் ...

தொடர்புடைய கட்டுரைக்கு கீழே சொடுக்கவும்.

சாலை மரணம் நவீனக் கொடை


"ஒரு வார" நோய் 

Friday, 16 July 2010

அன்புக்கு எல்லை இல்லை

மனிதர்கள் அன்பு இல்லை எனலாம்.

விலங்குகள் மிகுந்த அன்போடு இருக்கின்றன...

சிங்கம்...
எம் ஜி ஆர் சிங்கம் புலிகளோடு சண்டை போடும் போதெல்லாம், நாம் அவைகள் எவ்வளவு ஆக்ரோஷம் நிறைந்தவை என்று நினைத்திருப்போம்.

தேவர் படங்கள் வந்தபோதுதான் அவைகளை நிறைய பார்த்தோம்.

இராம நாராயணன் படங்களை பார்த்தபோது எப்புடி -- கப்சா --- என்று யோசித்திருக்கலாம்.

இதைப் பாருங்கள்:




Thursday, 8 July 2010

முட்டாள்கள் உலகம் முழுவதும்

உலகம் முழுவதும் கால் பந்து திருவிழாவில் அக்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியாவிட்டாலும் - ஆக்டோபஸ் ஜெர்மனி விளையாடும் விளையாட்டின் முடிவுகளை முன்கூட்டியே தெரிவிப்பதகாவும் 6 க்கு 6 முறை சரியான முடிவுகளை சொன்னதாக தெரிவிக்கிறார்கள்.

http://en.wikipedia.org/wiki/Paul_the_Octopus




Friday, 25 June 2010

தமிழ் மாநாடு

ஒரு நீண்ட பெரிய விடுமுறைக்குப் பின் தொடர்ந்து எழுதுவது குறித்து சிறிய மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

பலர் மத்தியில் இந்த உலக தமிழ் மாநாடு பெருத்த அலையை ஏற்படுத்தியிருக்கிறது.
இது போன்ற எந்த ஒரு மாநாடும் - மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியாது என்றாலும், காலப் போக்கில் எதையாவது செய்து விடாதா என்ற எதிர் பார்ப்பு ஒன்றைத் தான் இந்த மாநாடு செய்துவிட முடியும்.

முதலில் செய்ய வேண்டியது தமிழ் தமிழகத்தில் முதலிடம் பெற முடியுமா என்பதுதான். அதைச் செய்தாலே மிகப் பெரிய சாதனைதான்.

எல்லாப் பலகைகளும் முதலில் தமிழில் பெயர் தாங்கினால் போதும்.
தொலைக் காட்சி நிகழ்வுகளை நடத்துபவர்கள் தமிழில் பேசினால் எப்படி இருக்கும். - அசிங்கமா இருந்தாலும் ஒரு நல்ல தொடக்கமா இருக்குமல்லவா?

நாம் எழுதுவதிலும் பெசுவதுளும் மிகப் பெரிய சாதனையாளர்கள் தான்.
மாநாட்டில் எடுத்த தீர்மானங்களை நடைமுறைப் படுத்தினாலே போதுமானது. தமிழில் கையெழுத்து இடுவதும் தமிழில் பேசுவதும் நன்றாக இருக்கும்.

ஒன்றும் நடைமுறைப் படுத்த வில்லை என்றால் - செம் மொழி என்று சொல்லலாம் - அம்மொழி இருந்தது என்று சொல்லலாம் - அவ்வளவுதான்.

Tuesday, 1 June 2010

சாலை மரணம் - நவீன கொடை

முன்பெல்லாம் யாராவது இறந்தால் எப்போது இறந்தார் என்று கேட்பார்கள். அவர் காலையில் இறந்தார் அல்லது மாலையில் இறந்தார் என்று பதில் கிடைக்கும். இப்போது யாரவது இறந்தால் - எங்கே இறந்தார் என்கிற கேள்வியும் அதற்கு பதிலாக - சாலையில் இறந்தார், அல்லது ஓடு பாதையில் இறந்தார் அல்லது ரயில் பாதையில் இறந்தார் என்கிற பதிலே கிடைக்கிறது.

முன்பு இறந்தவர் - இயற்கை எய்தினார் என்று சொல்வோம். ஆனால் இப்போது நடப்பதையெல்லாம் பார்த்தால் இயற்கை எய்தினார் என்று சொல்வதற்கு மனம் ஒப்பவில்லை, ஏனெனில், பலரது வாழ்க்கை முடிதல் என்பது செயற்கையாகவே முடிகிறது அல்லது முடிக்கப்படுகிறது.

மானிட உயிர் விலை மதிப்பற்றது. ஆனால் ஏன்தான் நமது ஊர்களில் இப்படி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன என்பது தெரியவில்லை.

1. சாலை ஒழுங்குகள் இன்னும் சரிவர கடைபிடிக்கப் படுவதில்லை என்பதைக் காட்டிலும், அதை நடைமுறைப் படுத்துவதற்கு அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்கிற குற்றச் சாட்டை முதன்மைப் படுத்தலாம். உள்ள விதிகளை எல்லாரும் கடைப் பிடிப்பதற்கும் அல்லது அனைவரும் அறிந்து கொள்வதற்கும் எந்த முயற்சியும் எடுப்பதில்லை. எதெற்கெல்லாமோ இந்த அரசுகள் விளம்பரம் மேற்கொள்கின்றார்கள். அதைத் திறக்கிறார்கள், இதற்கு மாலையிடுகிறார்கள், அவருக்குப் பிறந்த நாள், இவருக்கு நினைவு நாள் - சாலை விதிகளை மதித்தது நடப்பது பற்றி விளம்பரம் குடுத்தால் குறைந்தா போவார்கள். சரி கஜானாவில் காசு இல்லையென்றால், உள்ள அனைத்து ஊடகங்களும் இதை வெளியிட வேண்டும் என்று ஒரு சட்டம் போட்டால் செய்ய முடியாதா என்ன?

2. சரி - ஒழுங்காக ஓட்டுனர்களுக்கான உரிமம் வழங்கப் படுகிறதா? அதுவும் இல்லை. இந்தியன் படம் வந்தபிறகு - ஒவ்வொருவனும் தங்களது உரிமம் எப்படிப் பெற்றார்கள் என்பதை நினைவு படுத்தி அதோடு அனைவரும் RTO அலுவலகம் எப்படி நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள உதவியும் செய்தது. ஆனாலும் இதுவரையும் RTO அலுவலகங்கள் அப்படித்தான் இருக்கின்றன. படிக்காதவர்களுக்கு உரிமம் மறுக்கப் படக் கூடாதுதான் - ஆனால் விதிகளே தெரியாமல் உரிமம் பெறலாம் என்கிற நிலை இருந்தால் எப்படி விதிகளை கடைப் பிடிப்பதைப் பற்றி பேச முடியும்?

3. சரி. சாலைகளில் விதிமுறைகளைக் கடைபிடிக்காத ஓட்டுனர்களை எப்படி சரிசெய்ய முடியும். காவல் துறை நண்பர்கள் - மிகவும் பாராட்டப் பட வேண்டியவர்கள். சென்னை சாலைகளில் - அனல் பறக்கும் வெயிலிலும் தார்ச் சாலையின் நடுவில் வியர்க்க வியர்க்க நிற்கும் அவர்களையும் மீறி
தங்கள் விருப்பம் போல வண்டி ஓட்டுபவர்களை நாம் என்ன செய்ய முடியும். எல்லாருக்கும்தான் அவசரம்.

4. அரசுப் பேருந்துகளை அதிகப் படுத்தி மக்கள் அவைகளைப் பயன்படுத்த ஊக்கப் படுத்த வேண்டும். சென்னையைச் சுற்றி எத்தனை கல்லூரிகள், எத்தனை தொழிற்சாலைகள் - ஒவ்வொன்றிற்கும் எத்தனை சொகுசுப் பேருந்துகள் - சென்னையின் போக்குவரத்து இப்படி இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் இப்படி ஆயிரக்கணக்கில் இயங்கும் பேருந்துகள்தான். இத்தகைய பேருந்துகளை தாம்பரம், பூந்தமல்லி எண்ணூர் போன்ற இடங்களுக்குப் பிறகு அனுமதிக்கக் கூடாது. அரசுப் பேருந்துகளையோ அல்லது மின்சார இரயிலைப் பயன்படுத்தி சென்னையின் போக்குவரத்து கூட்டத்தைக் கொஞ்சம் குறைக்கலாம். விதிகளை மீறி ஓட்டுவதிலும், தடம் மாறி ஓட்டுவதிலும், சொகுசுப் பேருந்து என்பதனால் அதிக இட ஆக்கிரமிப்புச் செய்வதிலும், அரசுப் பேருந்து நின்று செல்கிற இடங்களில் எல்லாம் இவர்களும் அவ்விடங்களை ஆக்கிரமிப்புச் செய்து...ஆனால் அவர்களிடமிருந்து வரும் பணத்திற்காக அரசு அதைச் செய்யாமல் இருக்கலாம் ?


5. எப்படித்தான் அனைவரையும் சாலை விதிகளை மதிக்கச் செய்வது - சாலை விதிகளை மதித்தால் விபத்துக்கள் தானாய் குறையும். ஒழுங்காகத் திட்டமிடுவது, நேரத்தோடு கிளம்புவது, சிறிது தாமதமானாலும் அடுத்த நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்திப் போடும் தைரியம், சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதனால் நமது பாதுகாப்பை முதன்மைப் படுத்துவது ... நாம் நினைத்தால் முடியும் - அரசு நினைத்தால் முடித்துக் காட்டலாம்...

சாலை விதிகள் மதிக்கப் பட்டால், சாலைகள் நன்றாய் இருந்தால், நாடும் வளம் பெரும் - நாமும் வளம் பெறலாம்.

Saturday, 22 May 2010

காலாவதி - நம் தலை விதி

இந்தியாவும் தமிழகமும் ஒரு போதும் திருந்துவதற்கான வாய்ப்பே இல்லை என்றுதான் தோன்றுகிறது.
இது அவ நம்பிக்கையின் குரல் அல்ல.
நடக்கிற
நிகழ்வுகளிலிருந்து கூட கற்றுக் கொள்ள மனமில்லாத நமது நிலையினைப் பார்த்து வெளிவரும் வேதனையின் குரல்.
நமது உலகம் பணத்தை முன்னிறுத்துகிறது. எல்லாவற்றிற்கும் பணம்.
பணமிருந்தால் மார்க்கமுண்டு.

என்ன செய்வான்? எல்லாரும் பணம் பெற முயல்பவனாகவே இருப்பான்.
சிறு வியாபாரி, பெரும் வியாபாரி, இந்திய முதலாளிகள், எல்லாருக்கும் இதுதான் ஒரே வழி என்று ஆகி விட்டது.
வெளி நாட்டு கம்பெனிகள் இந்தியாவிற்கு வருவது உண்மையாய்
இந்தியாவை முன்னேற்ற இல்லை என்பது நமக்குத் தெரியும்.
அவர்கள் அளவுக்கு அவர்கள் பணம் பெற முயல்கிறார்கள்.

இதில் லாபம் அதிகரிக்க பெரும்பாலனவர்கள் பயன்படுத்தும் உத்தி -
தரமான பொருட்களை வழங்குதல், உலகத்தரத்திற்கு பொருட்களை வழங்குதல்,
ஐ.எஸ். ஐ முத்திரை பெற்றது, நேர்மையான மனிதர்,
நூறாண்டுகள் பழமையான நிறுவனம் -
என்பதைப் பயன் படுத்துவதாக நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

உண்மை என்னவென்றால் மேற்சொன்னதெல்லாமே - வெறும் ஏமாற்றுதல் தான்.
உண்மையான உத்தி ஏமாற்றுதல் ஏமாற்றுதல் ஏமாற்றுதல்தான்.

இது தவறு என்று தெரிந்தாலும், இதைத் தவிர வேறு வழியில்லாமல் பணம் பெற முடியாது
என்கிற நிலைக்கு எல்லாரும் தள்ளப் பட்டிருப்பதால்,
இதை மிகவும் நேர்த்தியாக பயன் படுத்த அனைவரும் கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
சிறு வியாபாரி சிறு அளவில் செயல் பட்டால்
பெரும் வியாபாரி பெருமளவிலும்,
உலக நிறுவனங்கள் உலக அளவிலும்
தங்கள் ஏமாற்றுதலை செவ்வனே செய்கிறார்கள்.

விலைவாசி உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம்,
ஆற்றில் தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, போக்குவரத்து வசதியின்மை, பண வீழ்ச்சி -
இன்னும் எனாவேல்லாம் காரணமோ அனைத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.
வேறு வழி - எல்லாரும் இந்த நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள்.

இதில் இலாபம் இல்லாமல் யாரும் எந்தத் தொழிலும் செய்ய முடியாது
என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் எந்த அளவு என்பது ரொம்ப முக்கியம்.
இதற்குள் சென்றால் அதை வேறு கண்ணோட்டத்தில் அணுக வேண்டும்.
அதனால் அதை தற்காலிகமாய் தள்ளி வைப்போம்.

எனவே வேறு வழியில்லாமல் ஏமாற்றுவதன் வழியாய் பணம் பண்ண எல்லாரும் முயல்கிறார்கள்.

தண்ணீர் வாங்கிக் குடிக்கலாம் என்றால் - பாக்கெட் தண்ணீர் - அதில் ஐ.எஸ்.ஐ. முத்திரை இருக்கிறது.
அனால் தண்ணீர் சுத்திகரிக்கப் பட்டது என்பதற்கு எந்த சரி பார்த்தாலும் இல்லை என்பது நமக்குத் தெரிகிறது.
எப்படி அவர்கள் ஐ.எஸ்.ஐ. முத்திரை இடுகிறார்கள்
- அதைத் தடுக்க பி.ஐ.எஸ் என்ன சோதனைகளை மேற்கொண்டிருக்கிறது
என்பது நமக்கு இதுவரை தெரியாது.
எல்லாருக்கும் ஐ.எஸ்.ஐ முத்திரை பயன்படுத்த அனுமதி கொடுக்கிறார்களே ஒழிய
அதற்குப் பிறகு என்றாவது அது தரம் மிக்கது என்று உறுதி செய்திருக்கிறார்களா நமக்குத் தெரியாது.
அப்படியே வந்தாலும் பணம் கொடுத்தால் எல்லாம் சரியாகி விடும்.
சென்னை சென்ட்ரல் இரயில் நிலைய நடை மேடைகளின் ஓரத்திலேயே அமர்ந்து காலி பாட்டில்களில்
தண்ணீர் நிரப்பி பெவிகுய்க்ஸ் வைத்து மூடிகளை ஒட்டி வியாபாரம் ஜோராக நடக்கிறது.
அவன் அளவுக்கு அந்த ஏமாற்றல்.

சரி - கோகோ கால வாங்கலாம் என்றால் அவன் அளவுக்கு அவன்.
இனிமேல் நாமே வீட்டிலிருந்து தண்ணீரும் அல்லது கூடவே ஸ்டவும் எடுத்துச் செல்ல வேண்டும் -
ஆனால் ரயில்வே நிர்வாகம் அதையும் அனுமதிப்பதில்லை.

சரி - சாப்பிடப் போகலாம் என்றால் - அங்கே பழைய பொருட்கள் - பிரிட்ஜ் இல்லை
ஆனால் நேற்று செய்தது அதற்கு முன்பு செய்தது என்று ஒரு வார உணவுகள் -
அதையெல்லாம் சாப்பிட்ட பிறகும் நாமெல்லாம் எந்த சிக்கலும் இல்லாமல் இருக்கிறோம்
என்பதே நமது உடல் இந்த அளவிற்கு இவைகளுக்குப் பழகி விட்டது என்பதைக் காட்டும்.
இறந்த கோழி, செத்த மாடு, காக்காய், எல்லாம் -

சரி நாமே வீட்டில் சமைக்கலாம் என்றால் அதில், அரிசியில் கல், பருப்பில் மண், சர்க்கரையில் சுண்ணாம்பு, எல்லாம் -

உடம்பு சரியில்லை என்று மருத்துவ மனை சென்றால் போலி மருந்து - காலாவதியான மருந்துகள் -

ஒரே பஸ் பல்வேறு கட்டணங்கள் - ஆட்டோ ஓட்டுனர்களின் கறார் பயமுறுத்தும் கட்டணங்கள்,
பெட்ரோல் கலப்படம் , அளவு குறைப்பு -

கடுப்பாகி டாஸ்மாக் போனால் - சாமி அங்கே இல்லாத கலப்படமா!

அப்படி ஏதாவது வந்தால் காவல்துறைக்குப் பணம் - அந்தப் பணத்தை எடுக்க இன்னும் பெரிய ஏமாற்று வேலை.
இதுதான் சமயம் என்று காவல் துறை - எல்லா இடங்களிலும் சோதனை மேற்கொள்ளும் - இன்னும் பணம் சம்பாரிக்க.
வெள்ளையன் போன்றோர் - காலவதிப் பொருட்களை சோதனை செய்வதைத் தடை செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்துவர் -
காவல் துறை பணம் சம்பாரிக்கவே இப்படி செய்தால் அது தவறுதான் - ஆனால் அதற்காக சோதனை செய்யக் கூடாது என்றால் என்ன செய்ய முடியும்?
ஆமா? இதற்குப் பிறகாவது எந்த பெரிய நிறுவனங்களிடமாவது காவல் துறை சோதனை மேற்கொண்டிருக்கிரார்களா? முடியாது.

படிக்கப் பணம் - எனவே படித்த பிறகு அதை எடுக்க நோயாளிகளை ஏமாற்றுதல்.
தேர்தலில் நிற்கப் பணம் - எனவே அதை எடுக்க ஊழல்.

தங்கள் நாட்டில் சம்பளம் கொடுத்து கட்டுபடியாகாது என்று இங்கே வந்தவர்களும், தங்கள் நாட்டில் சோதனை அதிகமாக இருக்கிறது என்று இங்கே வந்தவர்களும் தரமற்ற பொருட்களுக்கு - மேலை நாடுகளுக்கு இணையாக பணம் வசூலிக்கிறார்கள். நமது நாட்டில் பொருட்கள் வாங்கி அதற்கு டாலருக்கு இணையாக நாம் பணம் கொடுக்கிறோம். அவனளவில் அவன் திருடன். வேப்ப இலையே தனக்குச் சொந்தம் என்றவன் எப்படி இருப்பான்?

ஏன் இவைகளெல்லாம் நடக்கின்றன - அரசிற்கு இவைகளல்லாம் தெரியாது.
தெரிந்தால் நடவடிக்கை எடுப்பார்கள். பாவம் முதல்வர் என்ன செய்வார் - திரைப் படத்திற்கு வசனம் எழுதவும்
அண்ணன் தம்பி சண்டைகளை சரி செய்யவே நேரம் சரியாக இருக்கிறது.
வேறு முதவர் வந்தால் - அதுவும் அப்படித்தான் - அவர்களுக்கு இது எப்படித் தெரியும் -

அவர்களுக்கே வலி வந்தால்தான் தெரியும்.

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாதுன்னார் பட்டுக் கோட்டை.
அது ரொம்பக் கஷ்டம்.
ஏன்னா - எல்லாருமே ஒரு விதத்தில் திருடனாகவும் ஏமாற்றுபவனுமாகவே இருக்கிறோம்.