Wednesday, 2 February 2011

கடவுச்சீட்டும் நானும் - நண்பருக்கு அர்ப்பணம்

கடவுச்சீட்டும் நானும் - ஓர் இனிய அனுபவம்.

எங்கோ படித்தது - "அனுபவம் தலை வழுக்கையானவுடன் கிடைக்கும் சீப்பைப் போன்றது."  உண்மையா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஒவ்வொரு அனுபவமும் அடுத்த போராட்டத்திற்கு நம்மைத் தயார் படுத்துகிறது.

இப்படிச் செய்திருந்தால் அப்படி நடந்திருக்காது -  இதைச் சொல்லியிருந்தால் அது நேர்ந்திருக்காது - என்று எல்லாம் நடந்த பின்னரே நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அப்படிச் சொல்லியிருந்தாலும் நடந்தவைகள் நடந்திருக்கலாம். நடக்காமலும் இருந்திருக்கலாம். யார் அறிவார்?

ஆனால் பழைய காலம் படிப்பினைகளை நமக்கும் பிறருக்கும் தருவிக்கிறது  என்பது மட்டுமல்ல பல சமயங்களில் புதிய பாதையைத் தோற்றுவிக்கிறது. புதிய படைப்புத் திறனுக்கு வழிவகுக்கிறது.

கடவுச்சீட்டும் "க்ஹானும்".
புதிய படைப்புத் திறனுக்கு வழி வகுக்கிறது என்பது மட்டுமல்ல அதே சமயத்தில் தனது தரப்பு வாதத்தை மிக நேர்த்தியாக முன்வைக்கவும் கலைகள் உதவுகின்றன என்பதற்கு "My Name is Khan" [ஏன் க்ஹான் என்பவர்கள் திரைப்படம் பார்க்க வேண்டும்] திரைப்படத்தையே முன்னுதாரணம் காட்டலாம். 2009 ஆகஸ்ட் மாதம் பதினாறாம் தேதி அமெரிக்காவிற்கு சென்ற போது சில மணி நேரங்கள் காக்க வைக்கப்பட்டது நமக்குத் தெரியும்.  க்ஹான்  என்கிற பெயரால் என்ன நடந்தது என்பதுதான் அன்று நடந்தது:

அதுவே பிற்பாடு படத்தின் தொடக்கமாகவும் வருகிறது. அமெரிக்காவின் ஹோம் லான்ட் செக்கியூரிட்டி - ரொம்பப் பிரபலம். அதாவது அவர்களின் அதிகாரம் ரொம்ப பிரபலம். எனவே அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு உதாரணம். நம்ம அப்படி மாட்டியதில்லை.ஆனால், சில சமயங்களில் அவர்களின் பார்வையும், பேச்சும், [குடியேறல் பகுதியில்] மிக மோசமானதாக இருக்கும். சிலர் மிக மரியாதையோடு நடத்துவதும் உண்டு.

இதோடு தொடர்புடைய படம் - "The Terminal ". மிக அற்புதமான படம். இது திரைப்பட விமர்சனம் இல்லை என்பதால் இத்தோடு விட்டு விடுகிறேன்.

அமெரிக்கா என்று இல்லை எல்லா நாடுகளும் இப்படித்தான். இதில் ஒரு விதிவிலக்கு நமது தமிழகம்தான். அவர்கள் உண்மையிலேயே officers தானா அல்லது அவர்களுக்கு பதிலாக வேறு யாரும் வேலை செய்கிறார்களா என்கிற அளவுக்கு இருக்கும்.அவர்களுக்கென்று சீருடை கூட கிடையாது. சரி விஷயத்திற்கு வருவோம்.

கணணியும் கடவுச்சீட்டும்.

மில்லேனியம் இரண்டாயிரம் வருவதற்கு முன்பு, ஒரு மிகப் பெரிய பிரச்சினை ஒன்று எல்லா நாடுகளிலும் பரபரப்பாகப் [உபயம் சன் டி.வி.] பேசப்பட்டது - Y2K.

ஒரு நாட்டிற்கு மட்டும் அது ஒரு பெரிய பிரச்சனையாகவே இல்லை - நமது தாய்த்திரு நாட்டிற்குத்தான். அதற்குப் பிறகும் பெரிய பிரச்சனையாகவே அது இருந்திருக்க வாய்ப்பு இல்லை.
ஏனெனில், நான் 2002 - ல் கடவுச் சீட்டு வாங்கிய போதும் கையில்தான் ["வேறு எதில்" என்று விதண்ட வாதமெல்லாம் பேசக்கூடாது ] எழுதிக் கொடுத்தார்கள்.
அப்புறம் எப்படி நமக்கு Y2K பிரச்சனை வரும். நம் நாட்டிற்கு அது வரவே வராது. அந்தக் கடவுச் சீட்டை வைத்திருக்கும் நமக்குத் தான் வரும். சில சமயம் அதைப் பார்த்து விட்டு சில குடியேறல் பகுதியில் நம்மைப் பார்த்து சிரிக்கிற போது - ....

ஏதோ வேண்டுமென்றே நாம் நாடு ஏழை நாடு என்று தோற்றம் கொடுப்பதற்காக இப்படிச் செய்கிறார்களோ என்னவோ என்று எண்ணம் தோன்றும்.
நானும் என்னுடன் இன்னொரு நண்பரும் முதல் ஐரோப்பியப் பயணம் - ஜெர்மனி வழியாகப் பயணப் பட வேண்டியிருந்தது. அவர் நல்ல மனிதர்  - பெரிய மனிதரும் கூட.  ஜெர்மனியில் [ப்ராங்க்போர்ட்] அவர் கடவுச் சீட்டு விரைவாகப் பயணப் பட - என்னுடைய கடவுச் சீட்டை "லென்ஸ்" கொண்டு பார்க்கிறார் அந்த அதிகரி. ரொம்ப நேரம்.
நண்பர்  'சொல்லிக்கொள்ளாமல்' மிக வேகமாக போய் விட்டார்.
முதல் பயணத்திலே என்னுடைய கடவுச் சீட்டு என்னைக் காத்திருக்க வைத்தது. புதிதாய் இருக்கும்போதே இப்படியெனில் இன்னும் பழதானால். ...  பிரச்சனைகள் தொடர்ந்து வருவதற்கான முன்னோட்டம் இது என்று எனக்கு அன்றைக்குத் தெரியவில்லை.

அமெரிக்க அணை - பாதுகாப்பு -கடவுச் சீட்டு 
அமெரிக்காவில் நியூயார்க், பென்சில்வேனியா மற்றும் நியூ ஜெர்சி மாநிலங்களின் பார்டர் என்று நினைக்கிறேன். ஒரு அணையைப் பார்ப்பதற்காக எனது நண்பரோடு சென்றிருந்தேன். மலை முகடுகளில் வழி தெரியாமல் அருகிலே இருந்த ஒரு வீட்டில் விசாரிக்கச் சென்றோம். நன்றாகத்தான் பேசினார்கள். வெளியில் வந்து வழி காண்பித்தார்கள். வெளியில் வந்து ஏன் பேசினார்கள் என்று இரண்டு நாட்கள் கழித்துதான் தெரிய வந்தது.
என்னைக் காரில் அழைத்துச் சென்ற நண்பர் இந்தியா சென்றுவிட, அவர் இல்லத்தைத் தேடி போலிஸ் வந்தது. எதற்காக அணைக்குச் சென்றீர்கள்? யார் யார் சென்றீர்கள்? கடவுச் சீட்டைக் கொடு என்று ஒரே விசாரணைதான்.
வழி சொல்ல வெளியே வந்த அமெரிக்கர் எங்களை தீவிர வாதிகள் லிஸ்டில் வைத்து உடனடியாக கார் நம்பரை 911 ஐத் தொடர்பு கொண்டு சொல்ல அவர்கள் எங்கள் வீடு வரை வந்து என் கடவுச்சீட்டை மேலும் கீழும் பார்த்துச் சென்றார்கள்.

உடனடியாய் சந்தேகப்படும் நபர்களை பற்றிய செய்தியை எங்கே சேர்க்கவேண்டுமோ அங்கே சேர்க்கிறார்கள் என்பது ஒரு செய்தியை இருந்தாலும், அமெரிக்கா பயத்தில் இருக்கிறது என்பது மற்றொரு செய்தியாகவும் இருக்கிறது. எதிலும் எப்போதும் பயம். அதிலும் வேறு ஒரு நாட்டைச் சார்ந்தவன் என்றால் சொல்லவே வேண்டாம்?

அமெரிக்காவில் விமான நிலைய குடியேறல் பகுதியில், நாம் ஒரு கொலைகாரர்கள் போல பார்க்கப் படுவோம். நமது கருவிழிகள் பதிவு செய்யப் படும். நமது கை ரேகைகள் பதிவு செய்யப்படும். அதன் பிறகும் விசாரணைகள் அவ்வப்போது தொடர்வது ஆச்சரியம் தான். என்ன செய்வது சென்று வருகிறோம்?
இதில் கடவுச் சீட்டினால் நான் தப்பித்தேன் என்பது ஒரு நல்ல செய்திதான்.

போலி பல்கலைக் கழகம் - கால் விலங்கு
இதாவது பரவாயில்லை - அமெரிக்க அலுவலர்கள் இந்திய மாணவர்களை என்ன பாடு படுத்துகிறார்கள் என்பதை இரண்டு நாட்களாக செய்தித் தாள்களில் படிக்கிற போது அவர்களின் அட்டகாசம் புரியும். சான் பிரான்சிஸ்கோவிற்கு அருகிலுள்ள "ட்ரை-வாலி" என்கிற பல்கலைக் கழகத்தை மூடியதற்குப் பிறகு இந்திய மாணவர்கள் பலருக்கு "கால் விலங்கு" [கனமான radio-tag] அவர்களை கண்காணிப்பதற்காக வைத்திருக்கிறார்கள் என்றால் இந்தக் கொடுமையை என்னவென்று சொல்வது.


பல்கலைக் கழகம் போலி என்றால் அது அமெரிக்க அரசின் குற்றம். சென்றவர்கள் அந்தப் பல்கலைக் கழகத்தில் படிக்கச் செல்வதற்கு visa வாங்கிச் சென்றார்கள் என்றால் வழங்கிய அமெரிக்கத்  தூதரகங்களின் குற்றமும், அவர்களது கடவுச் சீட்டில் முத்திரை குத்தி உள்ளே செல்ல அனுமதியளித்த குடியேறல் அதிகாரிகளின் குற்றமும். போலி விசா என்றால் கரு விழி / மற்றும் கை ரேகைகளை எதற்கு தூதரகங்களிலும் மற்றும் குடியேறல் பகுதியிலும் எடுக்கிறார்கள் - தூதரகங்கள் மற்றும் குடியேறல் பகுதியின் தரவுகள் இணையத்தின் வழியாக இணைக்கப்பட்டு உறுதி செய்வதற்குத் தானே!
அப்படி இருக்கின்ற போது எப்படி 'போலி விசா' என்று சொல்ல முடியும் என்று தெரிய வில்லை.
அந்தப் பல்கலைக் கழகம் யாருக்குச் சொந்தம். எப்படி அதற்கு அரசு அனுமதியளித்தது. எப்படி அங்கே உள்ள பல்கலைக் கழக மாணவாகளுக்கு விசா வழங்கலாம் என்று அமெரிக்க அரசின் பல்கலைக் கழகங்களின் பட்டியலில் இது சேர்ந்தது. அவர்களுக்கு என்ன தண்டனை? அவர்கள் அமெரிகர்களா - இந்தியர்களா. இந்தியன் அங்கே ஒரு பல்கலைக் கழகம் நடத்த முடியுமா? 

அப்படியே "போலி விசாவாகவே" இருந்தாலும், இப்படிக் கால் கட்டுப் போடுவது எதற்கு என்று புரியவில்லை. இந்தியா ஒன்றும் செய்ய முடியாது.
"எங்களை எல்லாரும் கேவலமாகப் பேசுவார்கள் - பார்த்து அதை எடுத்து விடுங்கள் என்று கெஞ்சலாம். கெஞ்சினால் மிஞ்சுவார்கள். "அவர்கள் சுதந்திரமாக இருப்பதற்காகத்தான் இதை அணிவித்திருக்கிறோம் அதில் தவறு ஒன்றுமில்லை என்று தெனாவெட்டாக இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் தெரிவித்திருக்கிறார்.
தங்கள் தவறுகளை மறைக்க இந்தியர்களுக்குத் தண்டனை - அதுதான் அமெரிக்கா.


கண் தெரியாத அலுவலரும் என் கடவுச்சீட்டும்
 இத்தாலியஅலுவலகம் ஒன்றில் குடியேறல்சீட்டு பெறுவதற்காக இந்தப் புதிய ஆண்டில் சென்ற போது அங்கிருந்த அலுவலர் உன் கடவுச்சீட்டில் இருப்பதை  என்னால் படிக்க இயலவில்லை- போய் புதிய கடவுச்சீட்டு ஒன்றோடு வா என்கிறார். நானும் எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறேன். என்னால் படிக்க முடிகிறதே!

அது உன் பெயர் அதனால் படிப்பாய் என்கிறார். என்னவோ சரியாய்த் தெரிந்தாலும் என் பெயரை அவர்களால் ஒழுங்காய் உச்சரித்து விடுவது போல...
மீண்டும் மீண்டும் நான் சொல்லச் சொல்ல கடுப்பான அந்த அதிகாரி என்னிடம் இருந்து அதைப் பிடுங்கிக் கொண்டு எனக்குப் பின் உள்ள இருவரிடம் காட்டி இதை உங்களால் படிக்க முடியுமா? என அவர்கள் பயத்தில் இல்லை என்று சொன்னார்கள். படிக்க முடியும் என்று சொன்னால், அவர்களது விண்ணப்பம் ஏதாவது காரணத்தினால் நிராகரிக்கப் படலாம். பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்?
உண்மைக்கு குரல் குடுக்க சொந்த நாட்டிலா இருக்கிறோம். சொந்த நாட்டிலேயே அவனவன் அவனது பிழைப்பைப் பார்த்துக் கொண்டு போகிறான்.
 கடவுச்சீட்டில் இப்ப்போதெல்லாம் அச்சிடப் படுவதால் அந்தப் பிரச்சினை இருக்காது என்று நினைக்கிறேன்.

எனவே நான் இந்தியத் தூதரின் அலுவலகம் செல்ல நேர்ந்தது.

இந்தியக் கடவுச் சீட்டும் - இந்தியத் தூதரகமும்

இந்தத் தமிழ் புத்தாண்டு முடிந்த சில நாட்களில் நான் அங்கே செல்ல நேர்ந்தது. என் கடவுச்சீட்டு இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் முறையாக பயன்படுத்த முடியும் என்கிற போது எதற்காக புதியது ஒன்றை பெற வேண்டும் என்ற கோபம் வேறு.

வெளிநாட்டில் வாழ்கிற மக்கள் போக விரும்பாத அல்லது கூடாத இடம் என்றால் அது இந்தியத்தூதரகங்களோ என்று நினைக்கிற அளவுக்கு அங்கே இருந்தது அந்தத் தூதரகம். வேறு சில நாடுகளிலயும் பார்த்திருக்கிறேன். ஏன் அப்படி என்று புரிந்து கொள்ளவே முடியவில்லை. பிற நாடுகளின் அதிகாரிகள்தான் நம்மை மதிப்பதில்லை என்றால் இங்கே விண்ணப்பம் கொடுக்கும் பியூன் கூட நம்மை மதிப்பதில்லை. பிரச்சனைகளை சொல்வதற்குக் கூட ஆட்களைத் தேட வேண்டியிருக்கிறது.
பல ஆயிரம் மைல்கள் தள்ளி இருந்தாலும், நமது நாட்டில் ஒரு அலுவலகத்திற்கு சென்று வந்த அனுபவம் எனக்கு.
ஒன்பது மணி அலுவலகம் ஒன்பது முப்பதிற்குத் திறப்பது - நாற்றமடிக்கும் அலுவலகம் - "Poor India Photo" என்று பிரபு ஒரு படத்தில் கேட்பது போல போட்டோ வேண்டுமென்றால் இந்தியாவுக்கெல்லாம் அவர்கள் வரவேண்டும் என்ற அவசியமில்லை - அவர்கள் நாட்டிலேயே இருக்கும் நம் தூதரகங்களுக்குச் சென்றாலே போதும். 
அங்கே சென்று எனது கடவுச் சீட்டின் நகல் ஒன்றில் சான்றொப்பம் பெற்று மீண்டும் இத்தாலிய அலுவலகம் வந்தேன்.

கண் தெரிந்த அலுவலரும் - கடுப்பான நண்பரும்
மறுநாள் இத்தாலிய அலுவலகம் நண்பர் அ.பிரபாகரனோடு வந்தேன். இத்தாலியன்  பேசுவதற்காக அழைத்து வந்தேன். இரண்டு மணிநேரத்திற்குப் பிறகு உள்ளே சென்றபோது வேறொரு அதிகாரி இருந்தார். அவரிடம் கடவுச் சீட்டையும் - இந்தியத் தூதரகத்தில் சான்றொப்பம் பெற்ற நகலையும் கொடுத்த போது - அவரும் எங்களை ஒரு மாதிரி பார்த்தார். இது என்ன? நண்பர்தான் விளக்கிச் சொன்னார் -
"இது நன்றாகத் தானே தெரிகிறது என்ன பிரச்சனை" என்று அவரே கேள்வி எழுப்பி அவரே சென்று மேலதிகாரியிடம் புகார் செய்து விட்டு வந்தார்.

அனைத்தும் சுபமாய் முடிந்தாலும் கடுப்பான என் நண்பர்விடுவதாய் இல்லை. ஒரே ஒரு கேள்வி - கண் தெரியாத அந்த அதிகாரியைப்  போல மோசமானவர் யாரும் இல்லைதானே ? என்று எங்களுக்கு உதவி செய்த அந்த அதிகாரியைக் கேட்டுத் துளைக்க அவராய்  "ஆம்" என்று ஒப்புக் கொள்ளும் வரை அவர் விடவே இல்லை.


இப்போது தேய்ந்து கொண்டிருக்கும் என் கடவுச் சீட்டோடு, குடியேறல் சீட்டுப் பெற காத்திருக்கிறேன்.
கடவுச் சீட்டு பெறுவது பெரிதில்லை - 
இவர்களையெல்லாம் கடந்து செல்தல்தான் பெரிது.


பின்குறிப்பு:
மாக்ஸ் வெபர் [Max Weber] தனது பதின்மூன்றாவது வயதில் தன் பெற்றோர்களுக்கு கிருஸ்துமஸ் பரிசாக இரண்டு கட்டுரைகளைக் கொடுத்தார். 
எனக்குத் துணை வந்த நண்பர் இன்று பல பேரின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம்.  "அவர் கேள்வி கேட்டது போல," இன்று அவரை இரண்டு  பேர் கேள்வி கேட்டுத் துளைத்தார்கள்?
எனக்குத் துணையாய் வந்த கேள்விஎழுப்பிய அஞ்சா நெஞ்சன் அ.பிரபாகரன் வெற்றிகரமாய்த் தன் தேர்வினை முடித்ததற்காய் என் பரிசு இக்கட்டுரை.

 இது ஆய்வுக் கட்டுரை அல்ல. மேலும், எனக்கு வயது பதின்மூன்றும் இல்லை. அவருக்கு என் பெற்றோர் வயதும் இல்லை.
இந்த கடவுச் சீட்டின் பயணத்தில் அவரும் பங்கு கொண்டதால்  இன்று அவர் வெற்றிகரமாய் கடந்து சென்றதற்கான நினைவுப் பரிசு.


No comments:

Post a Comment