Wednesday, 2 March 2011

கல்வி -

கல்வி கடைச்சரக்காகி விட்டது அல்லது வியாபாரப் பொருளாய் மாறிப் போய்விட்டது என்கிற குற்றச் சாட்டு எல்லார் மத்தியிலுமே உண்டு. 
உண்மையிலேயே கல்வியின் நோக்கம்தான் என்ன?

கல்லாதவன் கல்லுக்குச் சமமானவன் என்பது உண்மையா? 
கற்றலும் கற்றுக் கொடுத்தலும் மனிதன் வேலைக்குச் செல்லும் வாய்ப்பினை அதிகப் படுத்தும் நோக்கம் ஒன்றுதான் பிரதானமாக இருக்கிறது.  
அதாவது, படிப்பதற்குப் பணம் செலவு செய்ய வேண்டும் - பிறகு அந்தப் படிப்பைக் கொண்டு சம்பாரிக்க வேண்டும். கல்விக் கூடங்கள் பணம் பெரும் வணிகக் கூடங்கள். எனவே அவைகள் தங்கள் வணிகக் கூடங்களுக்கு வருபவனுக்கு அத்தகைய வாய்ப்பை அதிகப் படுத்துகின்றன. பொருளாதாரக் கட்டுமானம்தான் நமது கல்வியின் அடித்தளம். மார்க்சியக் கருத்துக்களையெல்லாம்   நான் இங்கே பேசவில்லை. அப்படிப் பார்த்துக் கொள்ளவும் செய்யலாம்.
அறிவியல் என்ன சொல்லுகிறது? இந்த உலகப் பொருட்களின் தன்மை, அவைகளின் விதிகள், வெறும் வேதியலின் கூட்டுத் தன்மை - என்ன ஆகிறது? அந்த விதிகளை எப்படிப் பயன்படுத்த முடியும் - அதைக் கொண்டு மனித வாழ்வை மேம்படுத்த முடியும் என்கிற அளவில் அவைகளைப் பற்றிய அறிவு நமக்குத் தேவைப் படுகிறது. ஆனால் அப்படி நமது மாணவர்கள் செய்கிறார்களா? அதுகூட இப்போது தேவையற்றது. மிக முக்கியமானது -
அறிவியல் என்பது அறவியல் அற்றதாக மாறிப் போயிருக்கிறது.  நம் தேவைக்கென, நமது விருப்பத்திற்கென்று, அழிப்பதும், ஒழிப்பதும்தான் நமக்கு மிஞ்சியிருக்கின்றது.
புவியியல் அதன் தன்மை பெட்ரோலியப் பொருட்களை சுரண்டுவதற்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. அதாவது உலகம், அதன் அணுக்கள், மரங்கள், நிலங்கள், மழை எதுவும் உணர்வற்ற, ஜடங்களாக நமக்குச் சொல்லப் படுகிறது. அதாவது - அவைகள் எல்லாம் நமக்காக - நமக்காக மட்டுமே என்ற உணர்வில் அவளிடம் இருந்து நம்மை அன்னியப் படுத்தும் போக்கைத்தான் அது நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.

கணிதம் என்பது - நாம் பணம் எண்ணுவதற்கும் வரவு செலவு பார்ப்பதற்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறது. வரவு என்ன செலவு என்ன - இன்னும் சொல்லப் போனால் - கடன்களை வைத்து - வரவின்றி எப்படிக் கடனாளிகளாக இருப்பது என்பதைச் சிறப்பாகச் செய்கிறது.

வரலாறு - என்ன தேதியில் என்ன நடந்ததது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளக் கற்றுக் கொடுத்திருக்கிறது.  அதனால் என்ன வந்தது.? வரலாற்றின் தவறுகள் சுட்டிக்காட்டப் படுவது மட்டும்தான் அதன் நோக்கம் தவிர அது கொடுக்கும் அறவியல் சிந்தனைகள் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை.  
செய்த தவற்றை மீண்டும் செய்யாமல் இருப்பது பற்றியோ அல்லது வரலாற்று நிகழ்வின் மதிப்பீடுகள் பற்றியோ - அது உண்மையா இல்லையா என்பது பற்றிய திறனாய்வோ எதுவுமின்றி தேதிகளை மனப்பாடம் செய்யக் கற்றுக் கொடுக்கிறது.

இயற்கை வெறும் கனிமங்களின் கூட்டுச் சேர்வையாகவும், நோக்கமற்றதாகவும் அறியப் படுதலால் அதனோடு நமக்குள்ள தொடர்பு ஒன்றும் அற்றதாகவே உணரப் படுகிறது. ஆனால் நம் உள் மனத்தில் அதற்கான ஆசை இருக்கிறது. "அவதார்" வந்தால் மிகுந்த ஆர்வத்தோடு பார்த்து நம் ஆசையைப் பூர்த்தி செய்து கொள்கிறோம்.  இயற்கை உறவு பற்றி அவதார் உணர்த்திய அளவிற்குக் கூட நமது கல்விக் கூடங்கள் உணர்த்தவில்லை.

கணிதம் என்பது இயற்கையோடு தொடர்புடையதாக அல்லது அனைத்திற்கும் அடித்தளமாகவே பார்க்கப்பட்டது - ஆனால் இன்று அது தனித்து விடப்பட்டிருக்கிறது. 
வாழ்வியல் கூறுகளைக் காட்டிலும் வசதியாய் வாழ்வதற்கான ஒரு கருவியாய் நம் கல்வி நிறுவனங்கள் மாறிப் போய் விட்டன. 

---
இந்த நூற்றாண்டு மனிதர்களுக்கு கணணி பற்றித் தெரியும், கணக்குப் பண்ணத் தெரியும் - பல நாடுகளின் தலை நகரம் தெரியும், பல நாடுகளுக்குச் சென்றுவந்து உலகம் மிகப் பெரியது என்று தெரியும் - அல்லது அதைப் பற்றிய விவரங்கள் பாடங்களாய் தெரியும் - 
தெரியவில்லை என்றால் - அவன் கற்கால மனிதன் / ஆனால் வாழ்வியல் பற்றித் தெரியாது. இன்றைக்கு பலபேர் கணணியோடு தொடர்பு கொண்டு இருக்கிறார்கள். அதனால் ஏதாவது மாற்றம் இருக்கிறதா? கணனியால் நல்லவைகள் இல்லை என்பதில்லை. ஆனால் கணணியின் பயன்பாடு வேகத்தை அதிகரித்திருக்கிறது. அவ்வளவே! 

ஒரு குட்டிக் கதை - படித்த ஒருவன் படகில் பயணம் செய்யும் போது, படகோட்டிக்கு அது தெரியுமா இது தெரியுமா என்று கேட்டு அவன் வாழ நாளில் பாதியை இழந்துவிட்டான் என்று சொல்லும் போது, படகோட்டி கேட்டானாம் - உனக்கு நீந்தத் தெரியுமா? 'இல்லை' என்றவுடன் அவன் சொன்னானாம் - உன் வாழ்க்கை முழுவதியுமே இப்போது இழக்கப் போகிறாய். படகில் ஓட்டை விழுந்து விட்டது." 

வடிவேலுவின் ஒரு ஜோக்.  "கிளின்ட்டன் தெரியுமா" "சச்சின் தெரியுமா" - ன்னு.

அந்த மாதிரிதான். நமக்கு நம்மைச் சுற்றி வெளியில் இருப்பது பற்றிய விவரம் தெரிகிறது - அதில்  இருக்கும் நமது வாழ்வின் நோக்கம் என்னவென்று கற்றுக் கொடுக்கப் படாமலேயே இருக்கிறது. 

இதற்கு முன்பு படிப்பது என்பது வாசிக்கக் கற்றுக் கொள்வதும் கையெழுத்திடுவதும்தான். இப்போது படிப்பு என்பது கணணி கையாளத் தெரிவது. அவ்வளவே.
நமக்கு முன்னாள் இருந்தவர்கள் - நமது பார்வையில் படிக்காதவர்கள்தான் - ஆனால் அவர்களுக்கான வாழ்வின் நெறிமுறையில் இயற்கையோடானா தொடர்பு இருந்தது. அது நம்மிடத்தில் இல்லை. நம்மைக் காட்டிலும் அவர்கள் கற்றவர்கள் - நம்மைக் காட்டிலும் மேலானாவர்கள். 

No comments:

Post a Comment