இந்த வார இதழின் தலைப்பை என் நண்பர் ஒருவர் சு....த்தம் என்று படித்தார். சுத்தம் என்பதற்கும், சு...த்தம் என்பதற்கும் பல வித்தியாசங்கள் உண்டு. அதை அவ்வளவு எளிதாகச் சொல்லிவிட முடியாது.
இந்தியாவை சுத்தப் படுத்துவது எளிது.
ஆம் ஆத்மி கட்சியின் துடைப்பத்தை கையில் எடுத்து அந்தக் கட்சியைப் பார்க்கும் போதெல்லாம், மாண்புமிகு மோடியின் நினைவு வரும் படி செய்து விட்டது அவரது பலம்.
இந்தியாவைச் சுத்தப் படுத்துதல் நல்லது என்பது உண்மைதான். அது தேவையும் தான்.
சுத்தமான இந்தியா இருந்தால் மருத்துவமனையற்ற இந்தியா என்று வரும் வாய்ப்பும் உண்டு.
ஆனால் முதலில் சுத்தப்படுத்த வேண்டியது ரோட்டையல்ல, நாட்டை. ஊழல் என்பது ஒழிக்கப் பட வேண்டும் என்பதில், முக்கியத்துவம் தர வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுத்திருக்கிறதா இந்த அரசு?
சுவிஸ் வங்கியில் இருக்கும் பணத்தைக் கொண்டு வர வேண்டும் என்று போராடிய இதே கட்சி அத்தகைய சுத்தப் படுத்துதலை முன்னெடுக்குமா?
அத விடுங்க....
இன்றைக்கும் ரோட்டை, மலத்தைச் சுத்தப்படுத்தும் தொழிலார்களின் நிலையையோ, அள்ளும் மக்களின் அவலம் பற்றியோ பேசிவிடாமல், அதெப்படி சுத்தம் பற்றி பேச முடியும் என்பது தெரியவில்லை.
இந்த வியாபார உலகத்தில், நாட்டைச் சுத்தப்படுத்தல் வெறும் விளம்பரமாக மாறி விடாமல் இருந்தால் சரி.
ஆனால் நமக்கு இந்த விளம்பரம் தான் பிடிக்கிறது. நாட்டைச் சுத்தம் செய்ய பணித்துவிட்டு, நோயாளிகளின் அத்தியாவசிய மருந்துகளுக்கான அரசுக் கட்டுப்பாட்டை தளர்த்தி விட்ட பெருமகனாரைப் பற்றி யாரும் பேசாமல் இருப்பது நல்லாதா?
புற்று நோய், மற்றும் ஹச் ஐ விக்கான மருந்துகள் இப்போது பதினான்கு மடங்குகள் உயர்ந்து விட்டதாக சொல்லுகிறார்கள். எட்டாயிரத்திற்கு விற்ற மருந்து இப்போது இந்த அரசுக கட்டுப்பாட்டைத் தளர்த்திய பிறகு) ஓர் லட்சத்தி ஆறாயிரம் என்று சொல்லுகிறார்கள்.
பன்னாட்டுக் கம்பெனிகளை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள்.
பாரத நாடு வளம் பெற்று விடும். சுத்தமாயிரும்.
இப்படியே போனால் சு...த்தம்.
No comments:
Post a Comment