Saturday, 1 January 2011

புத்தாண்டு

புத்தாண்டு புதிய நம்பிக்கையை விதைக்கின்ற நாளாக இருக்கட்டும். வரலாற்றின் கடந்த பக்கங்கள் படிப்பினையச் சொல்லித் தரும் பாடங்கள். படிக்கிறவன் கற்றுக் கொள்கிறான். இல்லாதவன் பழைய தவறுகளையே மீண்டும் செய்கிறான்.
புதியது என்பது பழையதிலிருந்து ஊற்றெடுக்கும். அதைப் புரிந்தால் பழைய நல்லவைகள் தொடரும். பழைய குற்றங்கள் மறையும்.
நம்பிக்கையின்மை மறையவும், வெறுப்பு குறையவும், வாழ்வின் சரியான புரிதல் இன்னும் சற்று அதிகமாக எல்லா மதத்திலும், எல்லார் மத்தியிலும் இருக்கவும் விழைகிறோம்.
நீதிக்கான தாகமும், நேர்மைக்கான வேட்கையும்,  அடிமைப்படுத்தும் எண்ணம் தவிர்க்கவும், அன்பின் கண்கொண்டு பார்க்கவும் இந்த ஆண்டு உதவி செய்யும் என்கிற நம்பிக்கையும் நம்மிடம் இருக்க விழைகிறேன்.

வெளிக்கொண்டாட்டங்கள் உள்மன புரிதல்களின், வெளிப்பாடுதானே தவிர,  வெறும் வெளிக் கொண்டாட்டம் மட்டுமே அல்ல.
வெறும் காலண்டர் கொண்டாட்டமாக இல்லாமால் - உள்ளிருந்து வரும் உண்மைக் கொண்டாட்டமாக இருக்கட்டும்.

புதிய ஆண்டு - 2011

ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட நாள் புதிய நாள். பல்வேறு காரணங்களுக்காக அது அவ்வாறு இருக்கும். எனவே ஒவ்வொரு நாளும் புதிய நாள்தான். 
ஆனால் ஒரு குறிப்பிட்ட நாளை மட்டும் எல்லாரும் விமரிசையாகக் கொண்டாடுகிற நிலை ஒரு குழும உணர்வை - தான் தனித்து இல்லாமல் அனைவரோடும் இருக்கிறோம் - ஒரே மன நிலையில் இருக்கிறோம் என்கிற மகிழ்ச்சியைத் தருகிறது.

மகிழ்ச்சி நீடிக்கட்டும்.

ஆங்கிலப் புதிய ஆண்டை ஏறக்குறைய எல்லாரும் கொண்டாடுகிற போது அனைவரும் தங்களது குறுகிய மனநிலையத் தாண்டி ஒரே எண்ணத்தோடு இருக்கிறோம் என்பது இதின் பலம்.

ஆனால் - இந்த விழாக்கள் நிறைய வியாபார நோக்கிலேயே இருக்கின்றன. குழும உணர்வு என்கிறதைத் தாண்டி, அதன் பொருள் மாறி - உணர்வற்ற, பொருளற்ற, சத்தங்கள் எழுப்புகின்ற, சத்தங்கள் மட்டுமே எழுப்புகின்ற நாட்களாக மாறி விட்டன.

எதுவும் செய்வதற்கில்லை - இக்கடலில் கலப்பதைத் தவிர.


புத்தாண்டு வாழ்த்துக்கள்.
 

Tuesday, 7 December 2010

தொடர்ந்து பெய்து வரும் மழை

தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மக்கள் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கின்றனர். சென்னை ஏரிகளுக்கு நடுவில் இருப்பது மீண்டும் நிரூபணம் ஆகி இருக்கிறது. வானம் பார்த்த பூமிகளிலயும் நல்ல மழை.

பள்ளிகளுக்கு விடுமுறை - பல பாலங்கள் உடைந்து தண்ணீர் சாலையில் பெருக்கெடுக்கிறது.

மழை - இயற்கையின் கொடை - வரும் போது மழையைச் சேமித்து வைக்கும் பழக்கம் நமக்கு முற்றிலும் இல்லாமல் போய்விட்டது.
இருந்த குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் என அனைத்தும் நாம் வாசம் செய்யும் வீடுகளாகி விட்டன...

காடுகளை அழித்து அங்கே விலங்குகள் வாழ விடாமல் செய்தோம். பிறகு - விலங்குகள் ஊருக்குள் நுழைகின்றன என்று கூப்பாடு போடுகிறோம்...
தண்ணீர் இருக்கும் தாழ்வான பகுதிகளில், குளங்கள், ஏரிகளில் வீடுகள் கட்டிக் கொண்டு இப்போது வீடுகளுக்குள் தண்ணீர் - வெள்ளம் என்று வேதனைப் படுகிறோம்.

ஒன்று மட்டும் நிச்சயம் - இன்னும் சில மாதங்களில் நாம் தண்ணீர் பஞ்சம் - தண்ணீர் பற்றாக் குறை என்று நாம் அலைவோம் -
அதையும் இதே நாளிதழ்கள் வெளியிடும் -
அப்போது மழை பகவானே எங்களுக்கு மழையைக் கொடு என்று சாமியை முற்றுகை இடுவோம்...

Sunday, 28 November 2010

நவம்பர் இருபத்தி ஏழு

தமிழர்களை தலை நிமிர்த்தும் முயற்சியில் தனது இன்னுயிரை ஈந்த அந்த போராளிகளை நினைவு கூறும் போது, இருக்கும் தமிழர்கள் இன்னும் இன உணர்வோடு எழுந்து நிற்க இந்த நாள் துணை நிற்கும் என்பது மட்டுமல்ல, தியாகிகள் எப்போதும் வரலாற்றும் பக்கங்களிலும், நமது நினைவுகளிலும் நீங்காமல் இருப்பார்கள்.

Monday, 1 November 2010

மனத்திடம் வேண்டும்

டாவின்சி கோட்  புத்தகம் வெளி வந்த போது, திருச்சபைக்கு பெரும் அவதூறு வந்து விட்டது என்று தங்களின் கத்தோலிக்க விசுவாசத்தை பறை சாற்ற அந்தப் புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்றும், அந்தத் திரைப் படத்தை தடை  செய்ய வேண்டும் என்றும் கூக் குரலிட்டார்கள். என்ன ஆயிற்று? புத்தகமும் விற்றுத் தீர்ந்தது, படமும் வசூலை அள்ளியது.

சொல்லப்படும் செய்தி உண்மையானால், அதை ஏற்றுக் கொள்கிற பக்குவம் வேண்டும், இல்லையென்றால் மறுத்துச் சொல்கின்ற மனத்திடமும்உண்மைக் கருத்தை வெளியிடும் நுண்ணறிவும் வேண்டும்.

Angels and Demons   - இருந்த இடம் தெரியாமல் இருந்த புத்தகம்- மீண்டும் பதிப்பிக்கப் பட்டு, திரையிலும் வந்து திருச்சபைக்குள் இருக்கிற பழமை வாதத்தை எடுத்துச் சொன்னது.

இந்த நாவல்களை எல்லாம் தாண்டி, - பத்திரிகைகள் வத்திக்கான் மீது மிகுந்த பாசத்தோடு, என்ன நடக்கிறது என்பதை உன்னிப் பாய் கவனித்து வருகிறதுஅமெரிக்காவில், குருக்களின் பாலியல் தொடர்பான சர்ச்சைகள், சிறுவர்களின் மீது குருக்களின் பாலியல் கொடுமைகள் - பல மறைமாவட்டங்களை ஒட்டு மொத்தமாக ஒன்றுமில்லாத நிலைக்கு மாற்றியது. சொத்துக்களை எல்லாம் விற்று பணம் கொடுக்க வேண்டியதாயிற்று.

அயர்லாந்து இப்போது விழி பிதுங்கி நிற்கிறது. அதைத் தொடர்ந்து வத்திக்கானுக்கு பல நெருக்கடிகள்.

மணத்துறவை   மீண்டும் திருச்சபை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. மணத் துறவை இயேசு கட்டாயம் அனைவரும்மேற்கொள்ள வேண்டும் என்று சொன்னதாகவோ அல்லது அது குருக்களுக்கு அவசியம் என்று விவிலியம் சொல்வதாக நமக்குத் தெரியவில்லை.

தொடக்க காலத்து திருச்சபையும் இதற்கு முற்றிலுமாக உடன்பட்டதாகவும் சொல்வதற்கு இல்லை. அதற்கு நாம் இவ்வளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமா? -
Tradition . பாரம்பரியம் மிக அவசியம் ? ! ?

நன்றாக யோசித்துப் பாருங்கள்.
இன்றைக்கு மீடியாவின் அபரிமிதமான வளர்ச்சியும் அதன் கழுகுக் கண்ணும்தான்
திருச்சபையை தெருவுக்குஇழுத்து வருகிறது என்று சொல்வோமானால் நம்மைப் போல உலகம் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இதற்கு முன்பு செய்திகள் வெளியே வரவில்லை - இப்போது வருகின்றன.

எத்தனை துறவிகள் வசித்த கோட்டைகளுக்குள் நடந்தது என்ன என்பது நமக்குத் தெரியுமா? மணத் துறவை கடைபிடித்து திருமணம் செய்யாதவர்  கூட செய்ய யோசிக்கும் தவறுகள், குற்றங்கள் எவ்வளவு நடந்தன.

மீண்டும் பழையதைக் கிளறுவதால் ஒரு புண்ணியமும் இல்லை. இனிமேல் இருக்கும் திருச்சபையாவது ஒழுங்காக இருக்குமா?

இத்தனைக்குப் பிறகும் நான் ஏன் ஒரு கிறித்துவனாக இருக்கிறேன்?
மனிதர்கள் செய்கிற தவறுக்கு கடவுளை குறை சொல்ல முடியுமா? இவர்கள்தான் எனக்கு விசுவாசத்தைக் கொடுக்கிறார்களா என்ன?
பலர் செய்கிற தவறுகளுக்காக ஒட்டு மொத்தமாக எல்லாரையும் குறை சொல்ல முடியுமா ?
கடவுள் அவர்களைப் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கைதான். இந்த நம்பிக்கை மக்கள் மத்தியில் நிறைய இருப்பதால்தான் இவர்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ள மாட்டேன் என்கிறார்களோ?

சரி எல்லாரும் மதம் மாறிக் கொள்ளலாமா? எந்த மதம்?
எந்த மதத்தில் தவறுகள் இல்லை. பயத்தினால் ஒருவனை தவறு செய்ய விடாமல், தவறாமல் இருக்கிற மதங்கள் -
தனி மனிதர்கள் தங்களை கடவுள் என்று அறிவிக்கிற மதங்கள் -  

"கடவுள் இல்லை என்பவனை நம்பலாம்: இருக்குன்னு சொல்றவனையும் நம்பலாம்.
நான்தான் கடவுள்-ன்னு சொல்றான் பாரு அவனை மட்டும் நம்பவே கூடாது
- தமிழ் திரைப் படங்கள் கூட இது போல மேற்கோள் காட்டக்கூடிய வசனங்களை கொண்டுள்ளது ஆச்சரியம்தான்.

 

Sunday, 31 October 2010

தமிழ் வாழ்க - Airtel சூப்பர் சிங்கர்

எப்போதாவது தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க வாய்ப்பு கிடைக்கும் போது 
சூப்பர் சிங்கர் பார்ப்பது வழக்கம் - பார்த்தேன். இதற்கு முன்பு சிறுவர்களின் குரல்களும் பாடல்களும் அவ்வளவு அருமையாக இருந்தன - சிறுவர்களின் போட்டிகள் பற்றிய கருத்தை தெரிவிக்க இது தருணம் இல்லை.

இப்போது நடக்கும் போட்டியில் நடுவர்களின் மற்றும் வர்ணனையாளரின் தமிழ் பேச்சுதான் நமக்கு சிரிப்பை வரவழைக்கின்றன.
செம்மொழி நடத்தி முடிந்து விட்டது. இம்மொழியை மட்டும் இன்னும் மாற்ற முடியவில்லையே சாமி. இதில் நித்ய ஸ்ரீயின் தமிழ் நன்றாக இருந்தது என்பதையும் பதிவு செய்ய வேண்டும்.

[சவும்யா, ஷைலஜா மற்றும் மால்குடி சுபா]  நீங்க நன்னாப் பாடிநேள் - ஷேந்து வரும் - தெரியிறதா உங்களுக்கு - மேல போறச்சே - இவாளோட பாட்டைக் கேட்டுட்டு - ஷுபமாக இருக்கட்டும் -  நல்லா முன்னுக்கு வந்திருக்கேள் - நன்னா இருக்கு உங்க வாய்ஸ் - பாடுறச்சே - கவுந்து விழுந்துர்க்கேள் -

பாட வருபவர்கள் பலரும் தன் அடையாளத்தை வெளிப்படுத்த இப்படி அப்படியும் பேசுவதும் பேஷா இருந்தது. - நான் பாத்துண்டே இருப்பேன் -

எனக்குப் பிடித்தது கவ்ஷிக் என்பவரிடம் திவ்யாவின் கமெண்ட்... [இரு வாரங்களுக்கு முன்பு] -  "அய்யரா இருந்துகிட்டு அய்யங்கார் பாட்டு பாடி கலக்கீட்டீங்க." நடுவர்களுக்கு எந்த அளவுக்கு ஒருவனின் சாதீயை வெளிப்படுத்துகிறார்கள் பாருங்கள் -

- நல்லாக் குடுக்குறாங்கயா details ?

Saturday, 25 September 2010

டெர்ரி ஜோன்ஸ் - நவீன யூதாஸ் [கிறித்தவத் தீவிரவாதம்]

கிறித்தவர்களின் புனித நூலான புதிய ஏற்பாட்டில் இயேசுவின் வாழ்க்கை வரலாறும் அதில் இயேசுவைக்  காட்டிக் கொடுத்த யூதாஸ் பற்றியும் குறிப்புகள் உள்ளன.
யூதாஸ் இயேசுவை சரியாகப் புரிந்து கொள்ளாமல் காட்டிக் கொடுத்தவன்.  கிறித்துவைப் பின்பற்றுகிற பலர் இன்றும் வெறும் யூதாசாகவே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர் - டெர்ரி ஜோன்ஸ்.
உலக குர்ரான் எரிப்புத் திட்டம் - 9 / 11 என்கிற ஒரு தீவிரவாதத் திட்டத்தை டெர்ரி ஜோன்ஸ் முன்மொழிய உலகத்தின் பல மூலைகளிலும் இதற்கு எதிர்ப்பு வலுத்தது.
கிறித்துவ அடிப்படை வாதத்தின் முகம் பலருக்கு வெளியில் தெரியாமல் இருந்தது. இப்போது அது மிக நன்றாய் வெளியே தெரிய ஆரம்பித்து இருக்கிறது. அதற்குப் பிறகு அத்திட்டம் கைவிடப் பட்டதைச் சொன்னாலும் யாரோ ஒருவர் குரானை எரித்து விட பிடித்தது சூடு.

  • இது தீவிரவாதத்திற்கு எதிரானனது என்ற கதையை டெர்ரி ஜோன்ஸ் கட்டினாலும் இது இஸ்லாமியத்திற்கு எதிரான நவீன சிலுவைப் போர் என்பதையே இது காட்டுகிறது. 
  • இத்தகையே செயலே தீவிரவாதத்தின் அடித்தளம் தானே தவிர வேறொன்றுமில்லை. இதுமட்டுமில்லாமல் இததான் அடிப்படை வாதத்தின் ஆணி வேர்.
  • கிருத்துவத்தின் அடிப்படை நற்செய்தியைக் கூட புரிந்து கொள்ளாதவர் பாஸ்டர் என்றால் அவரை யூதாஸ் என்று சொல்லாமல் வேறென்ன வென்று சொல்வது.
  • இஸ்லாமியத் தீவிரவாதிகள்தான் "இரட்டைக் கோபுரங்களின்" தகர்ப்பிற்குகாரணம் என்று வைத்துக் கொண்டாலும் கூட - அதற்காக ஒரு மதத்தைத் தாக்குவது எந்த விதத்தில் நியாயம். ஒரு கிறித்தவன் தீவிர வாதச் செயலில் ஈடுபட்டால் ... பைபிளை எரித்தால் சரியாகிவிடுமா? 
  • ஒருவன் புகழ் பெற பல வழிகளைக் கடைப் பிடிக்கின்றனர் - சிலர் இதுபோல... ஆனால் எல்லாவற்றையும் பூதாகாரப் படுத்தி - காலை முதல் இரவு வரை காமெராவைத் தூக்கிச் சென்று அவனைப் பிரபலப் படுத்தும் அமெரிக்க ஊடகங்களும் இதற்குக் காரணம் - அவைகளுக்குத் தொழில் முக்கியம்.
  • இதனால் அறிவது என்னவென்றால்... மதம் எல்லாரையும் மதம் பிடிக்க வைக்கும் ஆற்றல் கொண்டது. அதை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பயன் படுத்தலாம்.