Wednesday, 8 August 2012

ஒலிம்பிக் - ஐந்து வளையங்கள்

௦ ஐரோப்பிய நாடுகளில் பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நாடாகவும் அதல பாதாளத்தில் இருக்கிற நாடு கிரீஸ்: ஏறக்குறைய கடைசியில் இருக்கிற அந்த நாடு ஒலிம்பிக் தொடக்க விழாவில் [எல்லா ஒலிம்பிக்குகளிலும்] முதலாவது வந்து தொடங்கி பொருளாதார பாதாளத்திற்கு பாலன்ஸ் செய்கிறார்கள்... ஏனெனில் முதலில் வருவது பெருமை.  

௦ ஒலிம்பிக் விழாவில் மிகவும் கவனிக்கப் பட வேண்டிய விடயம் - ஐ. நா. வின் பட்டியலில் இடம்பெறாத நாடுகளைக் கூட ஒலிம்பிக் ஏற்றுக்கொண்டிருப்பது  மிகவும் பாராட்டப் படவேண்டியது.  பாலஸ்தீனம் போன்ற நாடுகள் இடம் பெற்றிருப்பது மிகவும் பாராட்டப் பட வேண்டியதுதானே. ஈழம் சகோதர சகோதரிகள் - முன்னமேயேஒலிம்பிக் விழாவில் பங்கேற்று இருக்கலாம் என்றே தோன்றுகிறது. நாடு கடந்த தமிழீழ அரசிலிருந்து ஈழ  சகோதரர்கள் இப்போது கூட முயற்சி செய்யலாமே என்றும் தோன்றுகிறது. ஒருவேளை அதற்கான முதல் அங்கீகாரம் ஒலிம்பிக்கில் கூட கிடைக்கலாம்.

௦ இந்த ஒலிம்பிக் இன்னொரு விதத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது வரை நடந்து முடிந்த எந்த ஒலிம்பிக்கிற்கும் இல்லாத சிறப்பு இந்த ஒலிம்பிற்கு கிடைத்திருக்கிறது. பங்கேற்கும் அனைத்து நாடுகளிலிருந்தும் பெண் வீரர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். இது மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வு... எல்லா நாடுகளிலும் பெண்கள் பங்கேற்பதற்கு இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அதில் இந்தியாவுக்கு மட்டும் கூடுதல் பெருமை - வீரர்கள் பட்டியலிலேயே இல்லாத பெண் கூட வீரர்கள் அணிவகுப்பில் வரும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது...

௦  லண்டன் தொடக்க விழாவில் எப்படி இயற்கையோடு இருந்த நிலையிலிருந்து, தொடர்ந்து கருவிகள், ஆலைகள், தொழில் நுட்ப வளர்ச்சி என்று மிக அட்டகாசமாக காண்பித்தார்கள். தங்கள் நாடு பிடிக்கிற ஆசையில் உலகம் முழுவதும் சென்று வெறித்தனமாக நிறைவேற்றிய அராஜகங்கள் மட்டும் மிஸ்ஸிங்... ஐ திங் தட் திஸ் அம்னீசியா டிசர்வ்ஸ் ய கோல்ட் மெடல்!


௦ தொடக்க விழாவில் வீரர்கள் அணிவகுப்பில் முதலில் கிரேக்கம் வருவது போல கடைசியில் ஒலிம்பிக்கை நடாத்தும் நாடு வருவது பெருமைக்குரிய விஷயமாம். எனக்குள்ள சந்தேகம் - முதலில் வருவது பெருமையா  கடைசியில் வருவது பெருமையா? இரண்டும் என்றால் - இந்தியா பதக்கப் பட்டியலில் கடைசியில் வரும் என்று நினைத்திருந்தேன். அந்த பெருமை கை நழுவிப் போனதில் எனக்கு மிக வருத்தமாகவே இருக்கிறது. 





Monday, 30 July 2012

பேசும்படம்

 சில சமயங்களில் படங்கள் நமது எழுத்தை விட அதிகமாக பேசும்...

முதல் படம் நேற்று டோக்கியோவில் அணு உலைகளுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம்..




விபரம்: http://kgmi.com

இந்த கூட்டம் அங்கேயே பத்து நாட்களுக்கு முன்பு நடந்தது.

மேலும் விபரம்:
http://www.dianuke.org/



விபரம்:

http://www.theaustralian.com.au/

Thursday, 26 July 2012

மக்கள் கார்...

 ஹிட்லர் பல விஷயங்களுக்காக அடிக்கடிப் பேசப் படுகிற நபர். சாதாரண மக்கள் பயன்படுத்தக் கூடிய அளவுக்கு மிகக் குறைந்த விலையில், "மக்களுக்கான வாகனம்" தயாரிப்பதில் மிக மும்முரமாக முப்பதுகளில் இறங்கினார். 


"போல்க்ஸ்  வாகன்" என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார். இது "நானோ" ப்ராஜெக்ட் மாதிரி - ஆனால் வேறு மாதிரி... அப்போது ஏறக்குறைய வெறும் இருநூற்றி ஐம்பது அமெரிக்க டாலர்களுக்குள் மக்கள் வாங்கக் கூடிய அளவில் இருக்க வேண்டும் என்பதுதான் அவரின் எண்ணமாம். "போல்க்" [volk] என்றால் சாதாரண குடிமகன் [folk] என்று பொருள்.   

விஷயம் என்னவென்றால், அதற்கு முன்பாகவே ஹிட்லர், தனது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தவும், மக்குளுக்கான வேலை வாய்ப்பைப் பெருக்கவும், நகரங்களை இணைக்கவும், நெடுந்தூர 'இருபுற' நால் வழிச் சாலைகள் அமைப்பதில் மிகப் பெரிய ஆர்வம் காட்டினார்.  

"வோல்ப்ஸ்புர்க்"  என்கிற இடத்தில் வோல்க்ஸ் வாகனின் தலைமை நிறுவனம் இருக்கிறது. மிகப் பெரிய நிறுவனம். வெளியில் இருந்து பார்த்தேன். அந்த நிறுவனத்தினுள் சென்று பார்க்க வேண்டும் என்கிற ஆசையை, "ஹனோவர் " வோல்க்ஸ் வாகனின் நிறுவனத்திற்குள் சென்று பார்க்கும் வாய்ப்பில் சரிக்கட்டிக் கொண்டேன். ஏறக்குறைய 'நான்கு' கிலோ மீட்டர்கள் நடந்து பார்த்தோம். உள்ளே புகைப் படங்கள் எதுவும் எடுக்க கூடாது என்பதனால் எதுவும் முடிய வில்லை.

எல்லாமே ரோபோ இயந்திரங்களால் ஒரு நிலையிலிருந்து மறு நிலைக்கு மாற்றப்படுகின்றன. கடைசி கட்ட வேலைகளை மட்டும் மனிதர்கள் செய்கிறார்கள். அதைப் பற்றிய விவரத்திற்காக - ஒரு வீடியோ.


"ஹானோவரில்" மட்டும் இப்போது ஏறக்குறைய பன்னிரெண்டாயிரம் ஆட்கள் வேலை செய்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு இது இருபத்திஎட்டாயிரம் என்று சொன்னார்கள். இயந்திரங்கள் வந்து மனிதர்களின் வேலையைப் பறித்துக் கொண்டது. இங்கே 'டிரான்ஸ் போர்ட்டர்' வகைக் கார்களை மட்டும் உற்பத்தி செய்கிறார்கள். ஒரு நாளைக்கு 'எழுநூறு' கார்கள் உற்பத்தி செய்யப் படுகின்றனவாம். ஒரு மாதத்திற்கு ஏறக்குறைய இருபத்தி ஒன்ராயிரம்......

'வோல்க்ஸ் வாகன்' மிக முக்கியமான நிறுவனம். நிறைய ஜெர்மானியர்கள் அதைத் தான் வைத்திருக்கிறார்கள். மற்றவைகளை விட விலை குறைவுதான்........ ஆனால் தரமானவை.........

இந்தியாவிலும் மக்கள் கார்கள் வந்துவிட்டன... 
ஆனால், தரம், சாலைகள், சாலை விதிகள் இவைகள்தான் இன்னும்  இல்லை.... 

Friday, 6 July 2012

ஏட்டிக்குப் போட்டி

 கடந்த ஆறு நாட்களாக இராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கைக் கடற்ப படையினரின் அட்டகாசங்களை எதிர்த்தும், மீன்களுக்கான விலையை நிர்ணயம் செய்யக் கோரியும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையில், மதுரை கொழும்பு இடையே விமானப் போக்குவரத்து துவங்கும் என்று அறிவிப்புச் செய்யப் பட்டதற்கு வணிகர்கள் வரவேற்பும் பாராட்டும் செய்திருக்கின்றனர்.

Monday, 18 June 2012

குப்பை அள்ளேல்


சென்னையின் அக்கினி பிரவேசம் முடிந்து - பள்ளிக்கரனை புகை மண்டலப் பிரவேசம் அதிகமானதில் சென்னை முழுவதும் குப்பைக் கூளங்கள் எல்லா வீதிகளிலும் இருக்க அது மிகப் பெரிய பிரச்சனையாகிப் போனது. 

இந்த எப்.எம் ரேடியோக்கள் போட்டி போட்டுக் கொண்டு இந்த குப்பைக் கூளங்களுக்கு யார் காரணம் என்று மாத்தி மாத்தி கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணிட்டாங்க. அதுல நிறையப் பேரு காரணம் நாமதான் - எல்லாரும் பொறுப்பில்லாம ரோட்டில குப்பை போடுறோம். சின்னப் பிள்ளைகளை  பொறுப்பா வளக்கிறது இல்லை. நமக்கு சிவிக் சென்ஸ் இல்லைங்கிற ரேஞ்சுங்குப் பேசுறாங்க.

சிவிக் சென்ஸ் உள்ள ஐயாக்களே, நடு ரோட்டில குப்பை கிடந்தா சரி.. இந்த நாட்களில் குப்பை கிடப்பது குப்பைத் தொட்டிகளில் . அவைகள் நிரம்பி அதில் போடுவதற்கு இடமில்லாமல் அதன் அருகில் வைத்த குப்பைகள் தான் மலை போல் குவிந்து இருந்தன. அதில் உணவுப் பண்டங்கள் மக்கி புதிய உயிரினங்கள் உருவாகி எவலூஷன் சரி என்று வாதித்துக் கொண்டிருந்தன... நாற்றம் மக்களை அந்தப் பாதையில் கூட அனுமதிக்க வில்லை. 

புதுக்கோட்டை இடைத் தேர்தலுக்காக முப்பத்தி இரண்டு அமைச்சர்கள் தான் சென்னையைக் காலி பணிவிட்டதாகக் கேள்வி. அதென்ன முனிசிப் பாலிட்டி ஊழியர்களும் புதுக்கோட்டைக்குச் சென்று விட்டார்களா?

இப்ப நமது மக்கள் எல்லாரும் அரசை விட்டுவிட்டு நம்மை நாமே குறை சொல்ல ஆரம்பித்து விட்டோம்.  அரசில் உள்ளவர்கள் என்னதான் செய்கிறார்கள் ?

வாரத்துல மூணு நாலு நம்ம ப்ரைம் மினிஸ்டர் "பண வீக்கம்" மிகுந்த கவலை அளிக்கிறது அப்படின்னு சொல்றார். இதை நம்ம சொன்னா சரி பதிவில இருந்துகிட்டு அவர் சொல்லலாமா ? ஒருவேளை பண வீக்கம் நமக்கு சிவிக் சென்ஸ் இல்லாததால்தான்  பணத்தின் மதிப்புக் குறையுதோ?

--- புதுக்கோட்டையிலிருந்து ஊழியர்கள் திரும்பி வந்து விட்டார்கள் போல! சிலை சாலைகள் மிளிர்கின்றன ---

நண்பர்களே ...
 வந்துட்டேன்! வந்துட்டேன்! வந்துட்டேன்! 
இன்னும் இரண்டு மாதங்களுக்கு கொஞ்சம்  நேரம் கிடைக்கும் என்று கருதுகிறேன். 
நல்லா இருக்கிங்களா?


 

Tuesday, 21 February 2012

மாயன் காலண்டர், மாய உலகம், மணல் வீடு


மாயன் காலண்டர்
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி உலகம் அழிந்து விடும் என்று சொல்லியிருக்கிறது.

மாயன் காலண்டறென்ன மாயன் காலண்டர்
நம் பெரம்பலூர் சாமியார் வேறு சொல்லியிருக்கிறார்
இந்த ஆண்டு உலகம் அழிந்து விடும் என்று...
முழுதும் அழியா விட்டாலும் முக்கால்வாசியாவது அழுந்து விடும் அப்படியே இல்லையென்றாலும் அரைவாசியாவது அழிந்து விடும் என்கிறார்கள்.

அறிவியல் வயப்பட்டு இன்றைய அறிவியல் அறிஞர்கள் சொல்லுவது மட்டுமே சரி என்று வாதிட்டுக் கொண்டிருக்கிற மேற்குலக நாடுகளின் அறிஞர்கள், பழங்கால மக்களின் ஞானம், நம்பிக்கைகள், அவர்களது விஞ்ஞான அறிவை மூட நம்பிக்கை என்று சொல்லும் இந்த மேற்குலக வாதிகள் இந்தக் காலண்டரின் குறிப்பில் ஆழ்ந்து இருப்பது - அது நிச்சயம் நடக்கும் என்று எதிர்பார்த்திருப்பதை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது புரியவில்லை.

என்னதான் நம்பிக்கை இல்லை என்றாலும் சில விஷயங்கள் நம்மை மீறி நம் மனதுக்குள் சென்று விடுகின்றன.
பகுத்தறிவு பேசினாலும் மஞ்சள் துண்டு தேவைப்படுவது மாதிரி..
திராவிடக் கட்சியின் தலைவி என்றாலும் சோவின் தயவில் இருப்பது மாதிரி...
சில விஷயங்கள் நம்மை அறியாமலே உள்ளே சென்று விடுகின்றன..
மாயன் காலண்டர்  மீதான நம்பிக்கையும்தான்..
அளவுக்கு அதிகமான நம்பிக்கை இருப்பதனால்... உலகம் அழிவதைத் தடுப்பதற்கான முயற்சியில் இறங்கி விட்டார்களா என்ன? இல்லை.
ஒருவர் படமெடுத்தார்... நல்ல வரவு... அவருக்கென்ன...
...
மனிதர்கள் எப்போது உலகில் வாழத் தொடங்கினார்களோ 
அப்போதே உலகம் முடியத் தொடங்கி விட்டது.
ஒருவன் கண்ணை மூடும் போது உலகம் முடிந்து போகிறது. 
அவ்வளவுதான். அதில் மேற்கொண்டு விவாதிக்க ஏதுமில்லை.
என்று நான் முடிகிறேனோ அன்றே உலகம் முடியத் தான் போகிறது.
மாயன் என்ன மாயாண்டி என்ன...
என் உயிர் பிரியும் நேரம் நான் உலகைப் பிரியும் நேரம்
அல்லது
உலகம் என்னைப்பிரியும் நேரம்.

உலகம் முடிவதும் தொடர்வதும் அதன் கையில்...
அதைக் காப்பாற்ற நாம் தேவையில்லை.
அதற்காக நாம் அதை அழிக்கத் தேவையில்லை.
எனக்கான உலகம் என்னோடு முடிகிறதென்பதால்
இந்த உலகை என்னோடு முடிக்க வேண்டிய அவசியமில்லை.
அணு உலைகள் அதை அவசரமாய் அழிக்கும்.
அணுகுண்டுகள் அழிக்கும்,
எப்போதும் இந்த உலகம் இருக்காதேன்பதற்காய்
விரைவாய் அழிக்க வேண்டுமா.


எல்லா நாட்களும் நல்ல நாட்களே.
எல்லா வருடங்களும் நல்ல வருடங்களே.
நல்லவைகளும் தீயவைகளும்
மனிதர் நம் கையிலே.


மாய உலகம்
"என்ன ராஜேஷ் ஏன் இந்த முடிவு? வாருங்கள்...  மீண்டும் ... விரைவில் ..." என்று மாய உலகம் ராஜேஷின் பின்னூட்டத்தில் ஜனவரி மாதம் இரண்டாம் தேதி பின்னூட்டம் இட்டேன். ஆனால் நண்பர் மீண்டு இங்கு வரமுடியாத தூரம் சென்றதாக அறிந்த செய்தி மனதை காயப்படுத்தியது. அவரது இறுதிப் பதிவின் பாடல்கள் எல்லாம் மாய உலகத்தை நினைவுபடுத்துவதாகவே இருந்தது.
இந்த பதிவை அவருக்குச் சமர்பிக்கிறேன்.

மணல் வீடு -

கடற்கரையில் நாமே கட்டிய வீட்டை நாமே இடிப்பதில்லையா? பத்திரமாய் நெடுநாள் இருக்கும் என்று எண்ணுவோம். ஆனால் எதிர் பாராத நேரத்தில் அலை வந்து அடித்துப் போகும். கட்டிவிட்டு திரும்பிப் பார்த்தால் ஜாலியாக யாரோ அதை உதைத்து  விட்டுப் போவதையும் காண நேரும். மாய[ன்] உலகத்தைப் பற்றி நினைக்கும் போது கடற்கரை மணல் வீடு ஞாபகத்திற்கு வருவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை.


Tuesday, 31 January 2012

நிபுணத்துவமும் பன்முகப் பார்வையும்

நிபுணத்துவமும் பன்முகப் பார்வையும் என்ற இந்தப் பதிவு சில விளக்கங்களைத் தருவதற்காக. எழுதி சில மாதங்கள் ஆனாலும் இப்போதுதான் பதிவிடுகிறேன்.

நிபுணத்துவம் என்பதும் ஒன்றில் ஆழ்ந்த பார்வையும் அவசியம் என்பது உண்மைதான். ஆனால் நிபுணர்களின் கருத்துக்கள் ஒட்டு மொத்த அல்லது பன்முக நிலைகளில் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டியது அவசியம். 
  • ஒரு சிறு துறையில் பாண்டித்தியம் பெற்ற ஒரு மருத்துவர் நிச்சயமாக அதிகமாக விரும்பப்படுவார் - உதாரணத்திற்கு இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் அவ்வாறே மதிக்கப் படுவர். சிறுநீரகக் கோளாறு மற்றும் பல் மருத்துவர் என்கிற பலரும் தேவைதான். இல்லை என்று மறுப்பதற்கில்லை. ஆனால் சிறுநீரக மாற்று அறுவை செய்தவனுக்கு பல்மருத்துவர் அவராக பல்லில் பிரச்சனை என்று பல்லைப் பிடுங்கி விட முடியாது. அப்படித்தான் எனக்குத் தெரிந்த ஒருவர், இதனால  பெரிசா ஒன்னும் பிரச்சனை வராது அப்படின்னு பல்லைப் புடுங்கினாறு - அதோட சேர்த்து அவரோட வாழ்க்கையையும் புடிங்கிட்டாறு. ச்பெசலிச்டுகள் ஒட்டுமொத்த நோயாளியின் வரலாற்றையும் எடுத்துக்கொண்டுதான் ட்ரீட்மென்ட் செய்ய முடியும்.

பொருளாதார வல்லுனர்கள் மனித வாழ்வின் மேம்பாடு என்பது பொருளாதார வாழ்வு மட்டுமே என்று சிந்திப்பதில் தவறில்லைதான். ஆனால் அதிலும் அது தனித்து விடப்பட்ட பார்வைதான் தவறு. அனைத்து சமூக உறுப்பினர்களின் தேவைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பொதுவாக கணக்கிடுவது ஒரு முகப் பார்வைதான். அதுமட்டுமல்ல, பொருளாதார வளர்ச்சி என்பது மேல்நாட்டு முன்னாதரணம் அல்லது அந்நிய முதலீடு  மட்டுமே என்பது அடுத்த கடிவாளக் குதிரைப் பார்வை. இதைச் சொல்லுவதற்கு புள்ளி விவரங்களோ அல்லது ஒருவர் பாண்டித்துவம் பெற வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன்.

பொருளாதார வளர்ச்சி என்கிற ஒன்றை மட்டும் இது அப்படி இருந்தால் இதில் வளர்ச்சி உண்டு என்று சொல்லுகிறவர்கள் - இதுவரை அது எப்படி இருந்தது என்று பார்ப்பதும் அவசியம். அந்நிய முதலீடு என்பது சரி என்றாலும் அது எப்படி சரியாகும் என்கிற கேள்வியை வைப்பது சரிதானே.
  • இன்றைக்கு முதலாளித்துவத்தின் உதவியால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் மக்களின் வாழ்க்கைத் தரம் என்பது மேலை நாடுகளின் பொருளாதார முன்னுதாரணத்தைக் கொண்டிருப்பது தவறே என்று கருத வேண்டியிருக்கிறது.
அமெரிக்காவின் வால்மார்ட்டிற்கு அங்கே தேவை இருக்கிறது. மிகப் பெரிய நாடு. மக்கள் சிதறி இருக்கிற நாடு. சில முக்கியமான நகரங்களை விட பிரிந்திருக்கிற பல கிராமங்களைக் கொண்ட நாடு. ஒரு இடத்திலிருந்து மறு இடத்திற்கு செல்வதற்கு - காரின்றி அங்கே அமையாது உலகு... எனவே பொருட்கள் ஓரிடத்திலும் மொத்தமாகவும் குவிக்கப் படவேண்டியது அவசியம். எனவே செயின் நிறுவனங்களுக்கான தேவையும் மொத்தமாக வாங்கும் அவசியமும், வருடத்தில் பல மாதங்கள் வெளியும் செல்லுவதற்கு கடுமையான தட்ப வெட்ப நிலை என்று பலவற்றைக் கொண்டு அவைகளின் தேவை அதிகமாக இருக்கிறது.  எனவே அவர்களுக்குத் தேவையான பொருட்கள் ஒரே இடத்தில் கிடைக்காது. சில மாதங்கள் எதுவும் பயிரிட முடியாது என்பதில், குளிரூட்டப் பட்ட இடத்தில் பதனிடப்பட்ட பொருட்களின் தேவைகள் அங்கே இருக்கின்றன.
  • நமது நாட்டிற்கு அப்படி தேவை என்ன என்பது புரியவில்லை. அப்படியே அது தேவை எனினும், இவர்கள் நம் நாட்டின் முதலாளித்துவ முதலைகளின் துணை கொண்டு செய்ய முடியும் என்பதை சிந்திக்க முடியாதா? இந்தியாவின் சிறு வணிகர்கள் ஒழுங்காக வரி கட்டுவதில்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு முதலாளிகள்தான் அதிக அளவு ஏய்க்கிறார்கள் என்பதும் உண்மைதானே. அப்படி எனில் உலகம் முழுவதும் பழம் தின்னி கோட்டை போட்ட முதலாளிகள் எந்த அளவுக்கு இருப்பார்கள்?
வால் மார்ட் இங்கே வந்தால் லட்சக் கணக்கில் வேலை கொடுப்பார்கள் என்று சொல்லுகிறார்கள். அப்படி அது மிகப் பெரிய செலவு செய்தால் எப்படி அதற்கு குறைந்த விலையில் பொருட்கள் கொடுக்கக் கட்டுபடியாகும். இரண்டு வழிகளில் செய்ய முடியும். முதலில் குறைந்த விலைப் பொருட்களை அதிக விலைக்குக் கொடுப்பது. அல்லது தரமற்ற பொருட்களைக் குறைந்த விலைக்குக் கொடுப்பது. தரம் வேண்டுமெனில் அதிக விலைக்கு வாங்க வேண்டும் என்கிற மறை முக நிர்ப்பந்தத்தை கொடுப்பது. அல்லது வேலை செய்யும் ஊழியர்களுக்கு, குறைந்த ஊதியம் கொடுத்து தனது லாபத்தைப் பேருக்கும் வழி ஒன்றில்தான் அது கட்டுபடியாகும்.
  • விண்டோஸ் நிறுவனர் செய்த முதலீடுக்கு மேல் பல மடங்கு - ஆயிரக்கணக்கான மடங்கு இலாபம் சம்பாதித்து விட்டார். ஆனால் மார்க்கெட்டிற்கு வரும் எந்த புதிய ஒ. எஸ். அல்லது வோர்ட் தயாரிப்புகளும் குறைந்த விலைக்கு வருவதில்லை. அதனால்தான் ஒவ்வொரு நாளும் அளவுக்கதிகமான சொத்துக்கள் அவருக்குச் சேர்ந்த வண்ணம் இருக்கின்றது.
எல்லாரையும் கொஞ்சம் வசதி படைத்தவர்களாக்குவதிற்குப் பதில் சிலரை மட்டும் அது வளர்த்து விடுகிறது.
பன்னாட்டுச் சந்தை மற்றும் பன்னாட்டுக் காப்புரிமை என்கிற பெயரில் அவர்கள் அடிக்கும் கூத்து - நம் நாட்டில் இருக்கும் வேப்ப மர நலன்கள் அல்லது மஞ்சளின் மகத்துவம் பற்றி எவனாவது காப்புரிமை பெற்றிருக்க இங்கே நாம் அவனுக்கு கப்பம் கட்ட வேண்டும்.
இப்போது நவீனக் கப்பம் பல்வேறு வழிகளில் கட்ட வேண்டும். ஒரு பன்னாட்டு நிறுவனம் வந்தால், அரசு அவர்களுக்கு நிலம் ஒதுக்கிடு செய்வது, மற்றும் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றுவது என்று வாரி கட்டிச் செய்கிறது. ஆனால் இங்கு உள்ள ஒரு குடிமகன் ஒரு கடை தொடங்க அலையாய் அலைய வேண்டியிருக்கிறது.

  • என்னைப் பொறுத்தவரை அந்நிய முதலீடுகள் சரியா தவறா என்பதைத் தாண்டி, இங்குள்ள அரசுகள் இங்குள்ள மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த சரியான வழிமுறைகளை யோசிப்பதில்லை என்பதுதான் மிகப் பெரிய குற்றச் சாட்டாக இருக்கிறது. 

கொசுறு

ஏறக்குறைய பதினைந்து நாட்களுக்குப் பிறகு இந்தப் பக்கம் வந்திருக்கிறேன். இன்னும் ஆறு மாதங்களில் கட்டாயம் முடிக்க வேண்டிய பணி ஒன்று என் கவனத்தை ஈர்த்திருப்பதால் பதிவுலகத்திற்கு வர இயலவில்லை. இன்னும் ஆறு மாதங்களுக்கு இதே நிலைதான் என்று எண்ணுகிறேன். மாதம் ஒன்று என்பதே மலைப்பாக இருக்கும். இணையத்தில் வரும் போது நண்பர்களின் வலைப் பக்கங்களுக்கு வருகிறேன்.