Tuesday, 10 November 2015

தீபாவலியா - தீபாவளியா - தீப/ஒளியா ?

படித்தேன் ரசித்தேன்

"தீபாவளிக்கு ஆகும் செலவைப் பார்த்தால்
பேசாமல் கிருஷ்ண பகவான் நரகாசுரனை
மன்னித்து இருக்கலாம் என்றே தோன்றுகிறது." யாரோ எழுதியது.



- தீபாவலி இதுதான்

)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))


பீகாரை மையம் கொண்ட
சூறாவளி
இந்தியா முழுதும் அடிக்கும்
என்று எதிர்பார்க்கப் படுகிறது............


இது  தீபா - வளி

)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))



காவிரி ஆற்றில் ஒரு சொட்டுக் கூட
கொடுக்க முடியாது
என்று கர்னாடகா
கை விரித்த நேரத்தில்
வந்த மழை
எம் விவசாயிகளுக்கு  மிகப் பெரிய ஒளி

))))))))))))))))))))))))))))



Saturday, 5 September 2015

அப்துல்கலாம் நினைவிடம்

அப்துல் கலாம் அடக்கம் செய்யப்பட்ட அன்று இராமேஸ்வரம் செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை
என்பது மிகப்பெரிய மனக்குறையாகவே இருந்தது.

அந்தக்குறை இன்று தீர்ந்தது.

ஆசிரியர் தினமான இன்று ஐயா அப்துல் கலாம் அவர்களின்
நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்த கிடைத்த
வாய்ப்பு மிகப் பெரிது.
ஆகச்சிறந்த ஆசிரியர்களில் அவரது இடம் மிகச்சிறந்தது
என்ற எண்ணம்கூட இந்தப் பயணத்தை சாத்தியமாக்கியது என்று சொல்லலாம்.

கனவு காணுங்கள்.





Tuesday, 4 August 2015

எதற்காகத்தான் போரிட முடியும்?

போகிற போக்கைப் பார்த்தால் நம் நாட்டில் _____________ வாழ்க என்கிற பேரணிகளிகளுக்கு மட்டும்தான் பாதுகாப்பும் பந்தோபஸ்தும் கிடைக்கும் போலத் தெரிகிறது.

இன்னும் ஒன்றிற்கும் அந்தப் பாக்கியம் உண்டு. –எங்கள் வீதியில் டாஸ்மாக் இல்லை. அங்கே வேண்டும் என்ற போராட்டம் நிச்சயமாய் அனுமதிக்கப் படுவதுமட்டுமல்லாமல் பாதுகாப்போடு நிச்சயமாய்க் ஏசி பாரோடு கூடிய கடையும் கிடைக்க வாய்ப்பு உண்டு. இதைத் தவிர வேறொன்றுக்கும் இங்கு அனுமதியும் இல்லை அவசியமும் இல்லை.

ஏறக்குறைய ஒருமாதத்துக்கும் மேலாய் இரு சக்கர வாகனத்தில் செல்கிற நண்பர்கள் அல்லோலப்பட்டு, சில பேர் காவல்துறை அதிகாரிகளிடம் இன்னும் மாட்டாமல் டபாய்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். ஹெல்மெட் அணிந்து கொண்டு செல்வது தவறில்லைதான். ஆனால் வேகாத வெயிலில் மதுரவாயலில் இருந்து கோயம்பேடு வரை பள்ளம மட்டுமே உள்ள ரோட்டில் போவது சாதனைதான். 

விபத்தினால் உயிர் இழந்தது ஹெல்மெட் அணியாததால்தான் என்று ஒரு வழக்கை விசாரிக்கப் போய் நீதிபதிகள் இத்தக கட்டாயமாக்கி இருக்கிறார்கள். ஒழுங்கான சாலைகள் இல்லாததால்தான் விபத்துக்களே நடக்கின்றன என்று அரசுக்கு செப்டம்பர் ஒன்றுக்குள் அந்த நீதிபதிகள் கெடு வைக்கலாமே. நிற்க.

வெறும் தூண்களோடு நின்று போன மேம்பாலப் பணிகள், சாலை செப்பனிடாமல் பள்ளம் உள்ள சாலைகள், இதையெல்லாம் பார்த்து வெறுத்துப் போன மக்களும் வணிகர்களும், பல மனுக்களைக் கொடுத்த பிறகும் அரசு செவிசாய்க்காமல் இருந்ததால் அவர்களே ஏழு லாரிகளில் தார் ஜல்லி தயாராக வைத்து சாலை போடப் போனால், அவர்களைக் கைது செய்து உள்ளே வைத்தது மட்டுமல்லாமல் அந்த ஏழு லோடும் ஸ்வாகா ஆனது. 
ரோடு போட்டது ஒரு குத்தமா. உங்களைய ரோடு போடச் சொன்னாதான் குத்தம். நாங்களா போட்டாலும் குத்தமா?

பள்ளிக்கு அருகில் இருக்கும் சாராயக் கடையை மாத்தச் சொல்லி நீதி மன்றம் அந்த உத்தரவைப் பிறப்பித்து, அதற்கும் செவி சாய்க்காமல், சசி பெருமாளின் உயிரைக் குடித்த பிறகு அதைப் பூட்டியிருக்கிரார்கள். 

மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற போராட்டத்தில் ஈடு பட்டிருக்கும் அனைவருக்கும் சிறை. நீதி மன்ற உத்தரவை ஒரு இடத்தில் மட்டும் நிறைவேற்றத் தயங்கும் காவல்துறை, தமிழக அளவில் ஹெல்மெட் விஷயத்தில் ஆர்வம காட்டுவது மட்டும் ஏன்?

ஒரு விஷயத்தில் சட்டத்தை மதிக்கும் காவல் துறை மறு விஷயத்தில் ஏன் அமைதி காக்கிறது?
ஒரு விஷயத்திற்கு மட்டும் தானாக வந்து சட்டம் போடும் நீதி மன்றம் இந்த விஷயத்தை தானாக எடுக்க ஏன் தயங்குகின்றது.?
 வருமானம் வரும் விஷயத்திற்கு மட்டும்தான் சட்டமா?




Monday, 27 July 2015

அப்துல்கலாம்

சற்று நேரத்திற்கு முன்பு, உயர் திரு அப்துல் கலாம் இறந்து போனார் என்ற துயரச் செய்தியைக் கேட்டபோது அவரது அன்பான, கனிவான முகம் கண்முன்னே வந்து நின்றது. அவரைப் பற்றி எழுதலாம்  என்று அமர்வதற்குள் அத்துனை  கட்டுரைகள் வந்து விட்டன. 

எஸ் எம் எஸ்கள்  / வாட்ஸ் அப்  செய்திகள், வீடியோக்கள் பரிமாற்றம் என தேசம் முழுவதும் அவரைப் பற்றி பேசும் ஒன்றே அந்த மனிதர் மாமனிதர்  என்பதற்கு சாட்சியாகும். ஒரு அரசியல் தலைவர் திடீரென இறந்து போனால் கூட இத்தகைய பரிமாற்றங்கள் நிகழத்தான் செய்யும். ஆனால் இந்த பரிமாற்றம், மாநிலம் கடந்து, மதம் கடந்து, கட்சி கடந்து நடக்கிறபோதும், பகிர்ந்து கொள்ளப்படும் செய்திகளைப் பார்க்கிற போதும், எவ்வளவு மாசில்லாத மனிதராக அவர் வாழ்ந்திருக்கிறார் என்பதையும் மற்ற தலைவர்களைக் காட்டிலும், எவ்வளவு  மேலானவர்,என்பதையும் உணர்ந்து கொள்ள முடிகிறது. 

ஒரு மனிதன் இவ்வளவு உயரத்திற்கு சென்ற பிறகும் இவ்வளவு தாழ்ச்சியோடு இருக்க  முடியும் என்பதற்கு, நம் காலத்தில் இவரை விடச் சிறந்த ஒரு உதாரணத்தைத் தர முடியாது. 

அவரது அறிவிற்கும், படைப்புத்திறனுக்கும் இந்தியத துறையில் அவர் ஆற்றிய பணிகள் சான்றாக  இருக்கும்.

தமிழ்வழிக் கல்வியில், தன் பயணத்தைத் தொடங்கிய அவர் தொட்ட உச்சம் ஒன்றே போதுமானது - தாய் மொழிக் கல்வி ஒன்றும் எந்த விதத்திலும் குறைந்தது இல்லை என்று காட்ட.

தனது பதவிக் காலத்தில், குடியரசுத் தலைவருக்கு உண்டான பகட்டைக் களைந்து விட்டு மக்கள் தலைவராக இருந்ததை ஒரு போதும் மறக்க முடியாது.

எத்தனை குறைகள் நம்மிடத்தில் இருந்தாலும் நேர்மறையான விடயங்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு இந்தியா முதன்மையான நாடு என்று சொல்லும் அந்த மனிதரின் பாஸிடிவ் அணுகுமுறை நம் ஒவ்வொருவருக்குமே இன்று தேவைப்படுகிறது.

பிரம்மச்சார்யம் உலகிலுள்ள எல்லார் மேலும் அன்பு காட்ட உதவும் என்பதற்கும் சான்றே அப்துல்கலாம்.

அவர் செல்லாத பள்ளிகள்,  கல்லூரிகள் மிகக் குறைவே. ஒவ்வொரு முறையும், சில குழந்தைகளையாவது ஊக்கப் படுத்துவதில் அயராது இருந்தார் என்பதற்கு சான்றாகவே பேசிக் கொண்டிருக்கையிலேயே அவர் உடல் தளர்ந்தது.

நீங்கள் விஞ்ஞானியாய், இந்தியராய், ஆசிரியராய், எழுத்தாளராய், பேச்சாளராய், அன்பான மனிதராய், உண்மைப் பற்றாளராய் எல்லாருக்கும் ருக்கும் உத்வேகம்  தந்திருந்தாலும், எங்களுக்கு நீர் தமிழராய் இருக்க வும் உத்வேகம் தந்திருக்கிறீர் என்பதும் மிகப் பெருமையே. 
எங்கு சென்றாலும் தமிழின்  பெருமையையும், தமிழ் இலக்கியங்களையும் உலகிற்குச் சொன்னவரே, உங்கள் நம்பிக்கை உங்களை வாழ்விக்கும்.




Saturday, 4 July 2015

காக்கா முட்டை


காக்கா முட்டை  சென்னை ஒரு சேரியில் வாழும் இரண்டு குட்டிப் பையன்களின் கதை. அதில் அம்மக்களின் அன்றாட வாழ்க்கையின் உண்மையான நிலையையும் , வாழ்க்கையின் தேடலையும் சேர்த்து மிக நுண்ணியமாய் படமாக்கி உள்ளார் இயக்குனர். 

இரண்டு மணி நேரம் படம் பார்த்து முடித்தவுடன் நமக்கு அவர்களோடு வாழ்ந்த அனுபவம் ஏற்படுகிறது. எத்தனை முறை நாம் அச்சேரிகளுக்கு அருகில் பயணித்து இருந்தாலும் ஏன் இப்படிப்பட்ட நகரத்தைப் பார்க்காமலே இருந்திருக்கிறோம் என்று நம் மேல் ஒரு கோபம் ஏற்படுகிறது. என்ன மனிதர்கள் நாம்? சுற்றி என்ன இருக்கிறது? என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய பிரக்ஜை இல்லாமல் எப்படி நம்மால் இருக்க முடிகிறது?

அப்படியே அந்த சேரியைப் பார்த்திருந்தாலோ அல்லது வழி தெரியாமல் சேரிக்குள் நுழைந்திருந்தாலும், நாம் ஏன் இவர்களைப் பார்த்து முகம் சுளித்திருக்கிறோம் என்று நினைவுகள் வேகமாய் வந்து நம்மை விசனப்படவும் வைக்கும். சின்ன காக்காமுட்டை, பெரிய காக்காமுட்டை, அம்மா, பாட்டி, பழரசம், காயலான்கடை மக்கள் என்று ஒவ்வொரு கதா பாத்திரத்தையும் எதார்த்தத்தோடு படம் பிடித்திருக்கிறார்.

காக்கை முட்டை என்கிற வார்த்தையை முதலில் கேட்டால் சிலருக்கு சிரிப்பு வரும். சிரிப்பு - அனுபவங்களின் நினைவில், நானும் அதை உண்டிருக்கிறேன் என்பதனால் சிரிப்பு வரும் அல்லது உண்டவர்களோடு கூட இருந்த அனுபவமாவது அந்தப் புன்னகைக்கு காரணமாக இருக்கும். ஆனால் பலருக்கு அந்த வார்த்தையைக் கேட்டவுடன் முகம் சுளிக்கத் தோன்றும். அதெல்லாம் தொடக்கூடாது அசிங்கம் என்பதனால் முகம் சுளிக்கலாம். முகம் சுளிக்கும் அதில் பலர், உண்பதற்கு பணம் உள்ளவர்களாக இருப்பார்கள் என்பதுதான் உண்மையாக இருக்கும். இருக்கப்பட்டவன் ஏன் சமுதாயத்தில் நல்லதென கொண்டாடப்படாததை எல்லாரும் பார்க்கும்படி உண்ணப் போகிறான்.

காக்கை முட்டை காசில்லாதவர்களின் புரதச்சொத்து. அதை மிகவும் எதார்த்தத்தோடு அனுகியிருப்பதில்தான் இயக்குனரின் வாழ்க்கை அனுபவமும், ஒரு விஷயத்தை எப்படி கலை நயத்தோடு அணுகவேண்டும் என்கிற கலை அனுபவமும் ஒரு சேர இருக்கின்றது.

இது விவேக்கின் காக்கா பிரியாணி காமெடி போல இல்லை. இதில் இருக்கும் காமெடிகள் மிக இயல்பானவைகள். இதில் மிகக் குறைந்தது மூன்று இடங்களிலாவது சிரிக்கவில்லைஎன்றால் அந்த உம்மானா மூஞ்சியை யார் வந்தாலும் சிரிக்க வைக்க முடியாது என்றே பொருள். இடைவேளைக்குப் பின் சிறிதே இழுத்தாலும் அந்தப் பையன்கள் அதை வேகமாய் நகர்த்துகிறார்கள்.

===

இது படம் பார்த்தவுடன் எழுதி வைத்தது. இன்னும் முடிக்கக் கூட முடியவில்லை. நீண்ட நாட்கள் அதை பதிவேற்றம் செய்யாமலே வைத்திருக்க மனமில்லை... எனவே பாதியானாலும் பரவாயில்லை  பதிவேற்றியாயிற்று .

===



Friday, 3 April 2015

விவசாயிகளின் பெரிய வெள்ளி

நிலம் கையகப் படுத்தும் சட்டம்- இதை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்ற முடிவோடு பா.ச.க அரசு இருப்பது, தனக்கான அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதைத் தவிர வேறொன்றம் இல்லை.

இந்த சட்டத்தினால் விவசாயிகளின் தற்கொலை குறையும் என்பது மட்டுமல்ல விவசாயிகளின் நலன் பெருகும் - கிராமப்புரங்கள் மேம்படும் என்று உயர்திரு கட்கரிசொல்லியிருக்கிறார். அது எப்படி என்று யாராவது விளக்கம் சொன்னாள் எனக்கு நன்றாக இருக்கும்.

இந்திய நாடு விவசாய நாடு என்பதை நாம் மறந்து விடக் கூடாது. ஆசை காட்டி, ஐந்து மடங்கு விலை தருகிறோம் என்று தனியார் நலன் கருதி நிலங்கள் கையகப் படுத்தப்படுவது நம்மை நாமே கார்பொரேட் நிறுவனங்களுக்கு விற்பதற்கு சமம்.

நமது அடுத்த தலைமுறை சொத்திற்கும் சோத்திற்கும் வழியில்லாமல் பிச்சை எடுக்க நாம் எடுக்கும் முதல் வழியே இந்தக் கையகப் படுத்தும் சட்டம்.

Tuesday, 24 February 2015

இந்தி. வாழ்க. தமிழ் இந்து வின் கட்டுரை

இந்தி மொழிக்குக்கூடப் பயன்படாத இந்தியாவின் மொழிக்கொள்கை! இதை வைத்துக்கொண்டு என்ன செய்வார் மோடி?
தமிழர்கள் என்றால் இந்தியை எதிர்த்துத்தான் பேச வேண்டுமா என்ன? நஹி. உலக தாய்மொழிகள் நாளான இன்று, எல்லா தாய்மொழிகளுக்கும் ஆதரவாகப் பேசலாமே! குறிப்பாக, இந்திக்கு ஆதரவாக. அதுவும் இது மோடி அரசின் கணக்குப்படி இது ‘மாத்ரிபாஷா திவஸ்’ அல்லவா? 
கடந்த வாரம் ட்விட்டரில் இந்திய மொழிகளுக்கான ஹேஷ்டேகுகள் புதிய போக்கை உருவாக்கின. உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வென்றவுடன், #ஜெய்ஹிந்த் என்கிற இந்தி வாசகம் ட்விட்டரின் (இந்தியப் பதிப்பில்) டிரெண்டிங் பட்டியலில் முதலாவதாக வந்தது. ஆனால், மறுநாளே தமிழ்ப் பயனர்கள் #தமிழ்வாழ்க என்றொரு ஹேஷ்டேகை ட்விட்டரில் வெளியிட்டு அதை ட்விட்டர் டிரெண்டிங் பட்டியலில் முதலிடத்துக்குக் கொண்டுவந்தார்கள். இது வேறு ஒரு விளையாட்டு! 
இந்தியின் மீது தமிழர்கள் சற்றுக் கரிசனம் காட்ட வேண்டும் என்று தோன்றுகிறது. பாவம், இந்தி! இந்தியாவில் இந்தியை முதல் மொழியாகப் பேசுவோர் 18 கோடிப் பேர் என்றும், இரண்டாம் மொழியாகப் பேசுவோர் 30 கோடிப் பேர் என்றும் மத்திய இந்தி இயக்குநரகம் சொல்கிறது. இவ்வகையில், உலகில் ஏழாவது பெரிய மொழியாக இந்தி இருக்கிறது. ஆனால், வட இந்தியாவின் சில தனிப்பட்ட மொழிகளை இந்தியின் கிளைமொழிகளாகக் காட்டி, 26 கோடிப் பேர் அதைப் பேசுவதாக மற்றொரு கணக்கும் உண்டு. இந்த அடிப்படையில், எத்தனோலாக் என்கிற அமைப்பின் புள்ளிவிவரப்படி சீனம், ஆங்கிலம், ஸ்பானிஷ் ஆகியவற்றுக்கு அடுத்து உலகின் நான்காவது பெரிய மொழி இந்தி. 
வெற்றிகரமான மொழியா இந்தி? 
மொழிகளின் மதிப்பை அதன் வளர்ச்சி, சந்தை மதிப்பு, அவற்றினூடாக வெளிப்படும் அறிவுச்செல்வங்களின் மதிப்பு, பயன்பாட்டு மதிப்பு போன்றவற்றின் மூல மாகவே நாம் அளவிட முடியும். இந்திய அரசும் இந்தி மாநிலங்களின் அரசியல் தலைவர்களும் சுதந்திரத் துக்கு முன்பிருந்தே இந்தியை இந்தியாவின் ஆட்சி மொழியாக, தேசிய மொழியாக ஆக்குவதற்காகப் படாத பாடுபட்டார்கள் என்பதை அறிவோம். ஆனால், அவர் களால் இந்தியை ‘வெற்றிகரமான ஒரு மொழியாக’ இன்னமும் ஆக்க முடியவில்லை. உலக மொழிகளின் மத்தியில் தலைநிமிர்ந்து நிற்கும் தகைமை பெற்றிராத ஒரு மொழியாகத்தான் இந்தி மொழி இன்றும் இருந்து வருகிறது என்கிற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்? 
இந்தியின் இன்றைய பெறுமதி என்ன? விக்கிபீடியாவில் 287 மொழிகளில் கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆங்கிலம் முதலாவது இடத்தில் சுமார் 47 லட்சம் கட்டுரைகளோடு இருக்கிறது. இந்தப் பட்டியலில் இந்தி 49-வது இடத்தில்தான் வருகிறது. வளர்ந்த மேலைநாட்டு மொழிகளை விட்டுவிடுங்கள், வளரும் நாடுகளின் மொழிகளான துருக்கி, கசாக், ஆர்மீனியன், இந்தோனேஷியன் போன்ற மொழிகள்கூட இந்திக்கு முன்னால் இருக்கின்றன. 1.17 லட்சம் கட்டுரைகள் மட்டுமே இந்தியில் உள்ளன. (சுமார் 67 ஆயிரம் கட்டுரைகளோடு 61-வது இடத்தில் தமிழ் இருக்கிறது. மற்ற இந்தியத் துணைக்கண்ட மொழிகள் இதற்கும் கீழேதான் இருக்கின்றன). இந்தப் புள்ளிவிவரத்துக்குப் பின்னால் எத்தனையோ தோல்விகள் ஒளிந்துகொண்டிருக்கின்றன. 
3,700 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள உலக மொழிபெயர்ப்புத் துறை மற்றுமொரு மறைமுக ஆதாரம். இந்தச் சந்தையில் இந்தி உட்பட எல்லா இந்திய மொழிகளையும் சேர்த்தாலும் உலகச் சந்தை மதிப்பில் ஒரு சதவீதம்கூட அவை வராது. பெரும்பாலான தகவல் தொழில்நுட்பங்களும் இணையச் சேவைகளும் இந்தியாவில் இந்தி உட்பட எந்த மொழிகளுக்கும் உள்ளார்ந்த ஏற்பை (நேட்டிவ் சப்போர்ட்) அளிப்பதில்லை. இந்திய மொழிக் கொள்கை அதை உத்தரவாதப்படுத்துவதில்லை. இது சீனாவில் நடக்காது. அதனால்தான் சீனாவில் தனியார் சந்தையின் தேவைக்கான சீன மொழிபெயர்ப்பாளர்களில் பதிவுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 10 லட்சத்தைத் தாண்டுகிறது. இந்தியாவில் இந்திக்கு அது சில ஆயிரங்களைத் தாண்டாது. 
5 ஆயிரமும் 26 கோடியும்! 
கடந்த ஆண்டு புதுடெல்லி பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியின்போது, 50 ஆண்டு கால அனுபவமுள்ள இந்திப் பதிப்பாளர் ஒருவரிடம் கேட்டேன்: “இந்தியில் ஒரு புத்தகம் பெஸ்ட் செல்லர் என்றால், எத்தனை பிரதிகள் விற்கும்?” அவரது பதில்: “அதிகபட்சம் 5 ஆயிரம்.” 
26 கோடிப் பேர் 5,000 பிரதிகள். தமிழ்ப் பதிப்பாளர்களே, சந்தோஷப்படுங்கள்! இந்தி மொழியில் இணையதளங்களின் நிலைமை என்ன? நல்லது. இதைப் பற்றிப் பேசாமலேயே விட்டுவிடுவோம். அமேசானில் இந்தி மின்னூல்களின் கதி என்ன? மன்னிக்கவும். 
கோடிக் கணக்கில் கொட்டி அழுது, மற்றவர்கள் தலைமீது திணித்தும்கூட, இந்தி நவீன உலகில் ஒரு கேட்பாரற்ற மொழியாகத்தான் இருக்கிறது. அதற்குக் காரணம், வேறு யாரும் அல்ல, இந்திய அரசுதான். டெல்லியில் அதிகாரத்தைக் குவித்துவைப்பதற்கான ஒரு அதிகார உத்திதான் இந்தியாவின் மொழிக்கொள்கையே தவிர, மற்றபடி அது எந்த மக்களுக்கும் - இந்தி பேசும் மக்கள் உட்பட - பயன்தரக்கூடிய ஒரு மொழிக் கொள்கை அல்ல. தொடக்கம் முதலே இந்தி ஒரு அரசியல் கருவியாகவே இங்கே பயன்படுத்தப்பட்டது. அதுவும் ஒரு சமூக ஆதிக்கக் கருவியாகவே அது வடிவமைக்கப்பட்டது. அதனால்தான் பிற நாடுகளைப் போல இந்தியாவில் ‘வட்டார மொழிகள்’ மட்டுமல்ல ‘தேசிய மொழி’கூட வளரவில்லை. 
சம்ஸ்கிருதமயமாக்கப்பட்ட ராஷ்ட்ரபாஷா! 
இதிலும்கூட இந்தியாவையும் சீனாவையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். 1950-களில், சீனாவில் சீன மொழியை ஆட்சிமொழியாக ஆக்கும்போது, அந்த மொழியை எளிமைப்படுத்துவதிலிருந்துதான் மாவோ அரசு தொடங்கியது. ஆனால், நேரு அரசு என்ன செய்தது? பாமர மக்களின் இந்துஸ்தானியை சம்ஸ்கிருதமயமாக்கி, அதைப் பண்டித மக்களின் மொழியாக அவரது அரசு ஆக்கியது. அதன் விளைவாக இந்தி பேசுகிற மக்களுக்கே ராஷ்ட்டிரபாஷா இரண்டாம் மொழியாக மாறிவிட்டது. அதுமட்டுல்ல, போஜ்புரி, மைதிலி, மகதி, சத்தீஸ்கரி, கார்வாலி, ராஜஸ்தானி போன்ற 50-க்கும் மேற்பட்ட தனித்தனி மொழிகளை (அவற்றில் பல இந்தியைவிட மூத்தவை, செவ்வியல் மரபுகளை உடையவை) வலுக்கட்டாயமாக இணைத்து, அவற்றின் மீது சம்ஸ்கிருத ஞானஸ்நானம் செய்து, அதன் கையில் அரசியல் சாசனக் குண்டாந்தடியைக் கொடுத்து, என்னவெல்லாமோ செய்துபார்த்தார்கள். இறுதியில் பல கோடி மக்கள் பேசிய இந்துஸ்தானியையும் சக மொழிகளையும் ஊனமாக்கியதுதான் மிச்சம். 
இந்தியைப் பரப்புவதில் நமது பிரதமர் அலாதிப் பிரியம் காட்டுகிறார் என்பதை நாம் அறிவோம். ஆனால், அவருக்கு அதிர்ச்சியூட்டக்கூடிய ஒரு செய்தி, சில நாளிதழ்களில் ஜனவரி 2-ம் வாரம் வெளிவந்தது. செய்தியின் சாரம்சம் இதுதான்: உத்தரப் பிரதேசத்தில் வாராணசியில் புகழ்பெற்ற பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜீவ் சங்லா, மருத்துவம், பொறியியல் துறைகளுக்கான பாடநூல்களை போஜ்புரி, மைதிலி, மகஹி ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்து இணையதளத்தில் வெளியிட்டார். வாராணசியில் உள்ள அந்தப் பல்கலைக்கழகத்துக்கு வரக்கூடிய மாணவர்களில் பெரும்பாலானோர் கிழக்கு உத்திரப் பிரதேசம், பிஹார் ஆகிய இடங்களிலிருந்து வருகிறார்கள் என்றும் அவர்களுக்கு ஆங்கிலமோ இந்தியோ சரிவரத் தெரியவில்லை என்றும், அந்த மொழிகளில் பாடம் நடத்தினால்கூட அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் சங்லா குறிப்பிடுகிறார். எனவே, வேறு வழியின்றி பூர்வாஞ்சல் என்று அழைக்கப்படுகிற அந்த பகுதி மக்களின் உண்மையான தாய்மொழிகளான போஜ்புரி உள்ளிட்ட மொழிகளில் அவர் பாடங்களை மொழிபெயர்த்திருக்கிறார்! 
‘இந்திக்காரர்களுக்கு’ ஆங்கிலம் தெரியவில்லை என்றால் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது, இந்தியிலும் அவர்களால் பாடம் படிக்க முடியவில்லை என்றால்? அதுவும் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழக மாணவர்களால்? மண்டையில் பளீரென இறங்கவில்லையா இந்தச் செய்தி? 
‘இந்தியே இந்தியாவின் தேசிய மொழி’, ‘இந்தியே இந்தியாவில் பெரும்பான்மையோர் பேசும் மொழி’, ‘உத்தரப் பிரதேசத்திலும் பிஹாரிலும் இந்திதான் பேசுகிறார்கள்’ என்கிற எல்லா ‘உண்மை’களையும் இந்தச் செய்தி உடைத்தெறிகிறதே! 
மோடிஜி, பூர்வாஞ்சலிகளின் மொழிகளை இனியாவது மதித்து, அவற்றை அங்கீகரியுங்கள். இல்லையென்றால், உங்கள் தொகுதியான வாரணாசியில் ஓர் இந்திப் பிரச்சார சபாவையாவது தொடங்குங்கள்! #இந்திவாழ்க. 
- ஆழி செந்தில்நாதன், 
தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், தொடர்புக்கு: zsenthil@gmail.com