Thursday, 24 December 2020
Thursday, 11 June 2020
பாக்கியம்
அம்மா!
உன் உலகம்
உன் வீடு
உன்னில் பாதி.
பாதியை இழந்தவனின்
பாதிப்பைச் சொல்லி மாளாது
உன் அம்மா பாக்கியம்மாள்
உன்னோடு இல்லை என்பது
பாக்கியமில்லைதான்!
தன்னில் பாதியை இழப்பதை
பாக்கியம் எனச் சொல்ல முடியுமா?
ஆனாலும் ஒன்று சொல்லவா?
அம்மா மடியில் சாய்வது
எல்லாக் குழந்தைக்கும் கிடைக்கும்
குழந்தையின் மடியில் சாய்வது
எந்தத் தாய்க்குக் கிட்டும்?
எந்தக் குழந்தைக்குக் கை கூடும் அந்தப் பாக்கியம்.
மகனின் மடியில் மரணம்
வெகு சிலருக்கே அந்தப் பாக்கியம்.
உன் அம்மா பாக்கியம்
உன் மடியில் மரணித்ததை
பாக்கியம் என்று சொல்லாமல்
வேறென்ன சொல்வது?
----
பாக்கியம்மாள்
நண்பர் ஜான் துரை அவர்களின் தாய்
இன்று [11 ஜூன்] விடியும் முன் இறந்து
இரவு தொடங்கும் முன் அடக்கம் செய்யப்பட்டார்கள்.
அவர்களின் ஆன்மா இறைவனில் இளைப்பாறட்டும்.
Monday, 27 April 2020
இந்த வார சிந்தனைகள் - 2003 - ல் எழுதியது
2003 - ல் எழுதியது.
தேதிகள் மாறி இருந்தாலும், இந்த வார நற்செய்திகளை ஒட்டிய சிந்தனைகள்.
படிக்க இங்கே சுட்டவும்
Wednesday, 22 April 2020
அஞ்சலி - Dr. சைமன் ஹெர்குலஸ்
அஞ்சலி
![]() |
மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் |
மனிதராய்ப் பிறந்த கடவுளை
அவர்கள் எற்றுகொள்வதே இல்லை..
இயேசு - மனிதராய்ப் பிறந்த கடவுள்
மாலையானவுடன் மக்களின் பசியைப் பார்த்து
ஓடிப் போங்கள் என்று சொல்ல வில்லை…
சூம்பிய கையனைப் பார்த்து
ஓய்வு நாள் என்று சொல்லி
வீட்டிற்குள் முடங்கிக் கிடக்க வில்லை
தொழு நோய் என்றாலும்
தொட்டுக் குணமாக்கினார்…
பின் ஏன் அவர்கள் அவருக்கெதிராக கல்லெறிந்தார்கள்?
ஏன் அவரது ஆடைகளைக் களைந்தார்கள்?
ஏன் ஆனிகளால் அறைந்தார்கள்?
ஏனெனில்
மனிதராய்ப் பிறந்த கடவுளை
அவர்கள் எற்றுகொள்வதே இல்லை..
நீ மருத்துவர்…
மருத்துவராய்ப் பிறந்த கடவுள்
நோயாளிகள் தனக்கு சளி, இருமல் என்றவுடன்
நீ அவர்களை ஓடிப்போகச் சொல்லவில்லை
இருமலோடு வந்தவரைப் பார்த்து
ஊரடங்கு என்று சொல்லி நீ ஓடி ஒளிந்து கொள்ளவுமில்லை.
தொற்று நோய் என்றாலும்
தொட்டுப் பார்த்தாய்
பிறர் உடல் தொட்டு
உன் உடல் கெட்டு
உன் உயிரைக் கொடுத்தாய்?
உயிரற்ற பிணமாய்ப் போனாய்.
பின் ஏன் அவர்கள் கட்டைகளைஏந்தினர்?
கற்களை எறிந்தனர்?
வண்டியை உடைத்தனர்?
மண்டையைப் பிளந்தனர்?
ஏனெனில்
மனிதராய்ப் பிறந்த கடவுளை
அவர்கள் எற்றுகொள்வதே இல்லை..
ஹெர்குலஸ் - ஜேயுஸ் - சின் மகன்
சைமன் ஹெர்குலஸ் நீ இயேசுவின் மகன்
இயேசுவுக்கு நடந்தது உமக்கு நடக்காமலா?
காலம் மாறினாலும்
காட்சிகள் மாறுவதில்லை.
இறை மனித இயேசுவை
கல்லறைக்குள் வைத்து
காவல் காத்தார்கள் …
அவர் உயிர்த்தார்
உன்னையோ
கல்லறைக்குள் விடாமல்
காவல் காத்தார்கள் …
நீயும் உயிர்ப்பாய்
Labels:
Homage,
Simon Hercules,
ஈஸ்டர்,
உயிர்ப்பு
Sunday, 12 April 2020
முதல் ஈஸ்டர் போல வெற்றுக் கல்லறை நம் அச்சத்தை வெறுமையாக்கட்டும்
ஈஸ்டர் 2020
கொரோனா ஈஸ்டர் என்று அழைக்கப்பட்டாலும்,
Home Easter என்று அழைக்கப்பட்டாலும்,
Celebration இல்லா ஈஸ்டர் என்று அழைக்கப்பட்டாலும்,
இது மிகவும் ஸ்பெஷலான ஈஸ்டர்தான்.
ஏனெனில்
இந்த ஈஸ்டர்தான்
முதல் ஈஸ்டருக்கு
மிக நெருக்கமானதாக இருக்கிறது.
இது முதல் ஈஸ்டர் போல
ஆடம்பரமாக இல்லை
வான வேடிக்கைகள் இல்லை
அலங்கார விளக்குகள் இல்லை
அதனால் மட்டும் இது
ஒரிஜினல் ஈஸ்டருக்கு நெருக்கமானதாக இல்லை.
மாறாக
இந்த ஆண்டு நடக்கும் நமது ஈஸ்டரில்
முதல் சீடர்களின் மன நிலையும்
நமது மன நிலையும்
அவர்களின் எண்ண ஓட்டங்களும்
நமது எண்ண ஓட்டங்களும்
மிக நெருக்கமாக இருக்கிறது.
இயேசுவைக் கல்லறையில் புதைத்தவுடன்
முதல் சீடர்கள் தங்களையே
வீட்டிற்குள் புதைத்துக் கொண்டார்கள்.
இயேசு கல்லறையில் நிறைந்து இருந்த போது
அவர்கள் உள்ளம் அச்சத்தில் நிறைந்து இருந்தது.
குழப்பங்கள் நிறைந்து இருந்தன.
கேள்விகள் நிறைய இருந்தன.
நாமும் இப்படித்தான்
நம்மை வீட்டுக்குள் பூட்டியவுடன்
இயேசுவைப் புதைத்து விட்டோம்.
அவர்களைப் போலவே
அச்சமும், குழப்பமும், கேள்விகளுமே
நம் இதயத்தை நிறைத்துக் கொண்டிருந்தன.
இயேசு உயிர்த்த போது
சீடர்கள் அங்கே இல்லை - நாமும்தான்.
விடியற்காலையில் வெற்றுக்கல்லறை
பற்றிய செய்தி மட்டுமே வருகிறது.
பெண் சொன்ன செய்தி என்பதலா,
அல்லது ஆர்வமா
என்பது தெரியாவிட்டாலும்
கல்லறை நோக்கி ஓடியே வருகிறார்கள்.
கல்லறை வெறுமை என்றவுடன்,
மூடியிருந்த கல் விலகியதைப் போல
அச்சமும், குழப்பமும், கேள்விகளும்
அவர்கள் உள்ளத்திலிருந்து சற்றே விலகி நின்றன -
இயேசுவிற்கு மீண்டும்
அவர்கள் இதயத்தில் இடம் கொடுக்க வழி விடுவதைப்போல.
இந்த ஆண்டு உண்மையிலேயே
முதல் ஈஸ்டருக்கு நெருக்கமாய் இருக்க முடியும்
நாமும் வெற்றுக் கல்லறை அனுபவத்தைப் பெற்றால்
கல்லறை வெறுமையாய் இருக்கிறதை
எந்த அளவுக்கு நம்புகிறோமோ
அந்த அளவுக்குத்தான்
நமது அச்சமும், குழப்பமும், கேள்விகளும்
மிகப்பெரிய கல் விலகியதைப் போல் விலகி நிற்கும்.
கல்லறை விட்டு வெளியே வந்த இயேசு
[அப்போதுதான் நாம் புதைத்த இயேசு]
நம் இதயத்திற்குள் வருவார்
வெற்றுக் கல்லறை சீடர்கள் வாழ்வில்
அச்சத்தை வெறுமையாக்கியதைப் போல
வெற்றுக்கல்லறை மீதான நம்பிக்கைதான்
நமது எதிர்காலம் பற்றிய அச்சத்தையும்
வாழ்வைப் பற்றிய குழப்பங்களையும்
இறைவனைப் பற்றிய அய்யத்தையும்
வெறுமையாக்க முடியும்.
அப்போதுதான்
கல்லறை விட்டு வெளியில் வந்து
எங்கும் இருக்கும் வல்லமை
பெற்ற இயேசு நம்
உள்ளம் புக முடியும்.
உயிர்த்த இயேசு நம் உள்ளம் இருந்தால்
வெளியில் காவலர்கள் இருந்தாலும்
நாம் வீட்டிற்குள் முடங்கிக் கிடந்தாலும்
அச்சம் நமக்குத் தேவையே இல்லை.
கல்லறைவிட்டு வெளியே வந்த
இயேசுவை
நம் உள்ளம் தங்க அனுமதித்தால்
இந்த ஈஸ்டர்
உண்மையிலேயே
முதல் ஈஸ்டர் தான்.
Subscribe to:
Posts (Atom)