Friday, 10 April 2020

ஈஸ்டர் - 2020 - டிஜிடல் வழிபாடுகள்: நம்பிக்கை கீற்றுகள்

ஈஸ்டர் - 2020
டிஜிடல் வழிபாடுகள்: நம்பிக்கை கீற்றுகள் 

நேற்று எனக்குத் தொலைபேசிய சகோதரி ஒருவர் வேளை நகர் ஆலயம், பெசண்ட் நகர் ஆலயம் எல்லாம் மூடப்பட்டு இருப்பது குறித்து மிகவும் வேதனைப் படுவதாகக் கூறினார். வத்திக்கான் நகரில் தனிஆளாய் திருத்தந்தை யப் பார்த்த நம் எல்லாருமே கூட இதேபோல வேதனையின் பாரம் தாங்காமல் இதயக் கண்ணீர் முட்ட அழுதிருப்போம். சிறு வைரஸ் ஒன்று உலகையே அச்சுறுத்தும் சூழலில் இதைத் தவிர்க்க முடியாமல் போய் விட்டது. ஆனால் அதை இலகுவாகக் கடந்து போகின்ற நம்பிக்கைக் கீற்றுகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன

திரும்பிய பக்கமெல்லாம் யூ ட்யூப் சானல்கள். வாட்ஸ் ஆப் செய்திகளில் எல்லாம் லைவ் சிலுவைப்பாதைகள், தொடர்ந்த திருப்பலிகள். ஒவ்வொரு மறைமாவட்டம் மற்றும் பங்குகள் என அனைவருக்கும் தனித்தனிச் சானல்கள். இது இல்லாமல் 24 மணி நேரமும் நம்மை செபத்திலும் திருப்பலியிலும் வழி நடத்த நமக்கு மாதா தொலைக்காட்சி, ஆங்கிலத்தில் - EWTN. தனி மறையுரைகள், சிந்தனைகள். திருத்தந்தையோடு நாம் பயணித்ததால், ஒரு மணி நேர வழிபாட்டில் பங்கெடுத்ததற்காக பரிபூரண பலன்

கொரோனா நம்மை கோவிலுக்குச் செல்ல விடாமல் செய்துவிட்டதே என்கிற மன வருத்தத்தை ஆழப்புதைக்கவே அனைத்தும் நம் இல்லம் தேடி வருகின்றன. கிறித்தவ விசுவாசிக்கான சுதந்திரத் தேர்வு அபரிமிதமாக இருக்கிறது. கோவிலுக்குச் சென்றால் கூட எனக்கு ஒரே ஒரு சாய்ஸ்தான். வேறு வழியே இல்லை. ஆனால் இன்றைக்கு தொலைக் காட்சி, திறன்பேசிகள், கணினி என்று பல வழிகளில் டிஜிடல் வழியாக வழிபாட்டில் பங்கெடுக்க அரிய வாய்ப்பு.

குருக்கள் மீடியாவில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். பங்கு மக்கள் யூட்யூபை சப்ஸ்க்ரைப் (subscribe) பண்ணுகிற அளவிற்கு வளர்ந்திருக்கிறார்கள், இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். தொலைக்காட்சியில் சானலை மாற்றுவது போல ஒன்றில் இருந்து ஒன்றில் மாற்றி வழிபாட்டில் பங்கெடுக்கிறார்கள். புனிதவாரத்தில் ஒரு வழிபாடுதான் என்பது மாறி, நாள் முழுவதும் ஆண்டவரோடு இருப்பது என்கிற நிலைக்கு வந்திருக்கிறோம்.

இது மிகவும் அர்த்தமுள்ளது என்றே எனக்குத் தோன்றுகிறது. இது கொடுக்கிற செய்திகளுக்காக நாம் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம்.

  1. ஆண்டவர் எப்போதும் நம்மைத் தேடி வருகிறவர். இந்த ஆண்டு வீட்டுக்குள் நாம் கட்டுண்டு கிடக்கிற போது ஆண்டவர் நம்மைத் தேடி வருகிறார் என்பதை, இந்த நினைவுபடுத்தலை, வீடு தேடி வரும் வழிபாடுகள், நமக்குச் சொல்லுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் நாம்தான் புனித வாரத்திற்காக ஆலயம் நோக்கிச் செல்வோம். இந்த ஆண்டு நம்மைத் தேடி அவர் நமது இல்லம் நோக்கி வருகிறார்.
  1. இறைமக்கள் வீடுகளிலேயே வழிபாடுகள் நடத்துவதற்கான வழிமுறைகளை மிகுந்த, தகுந்த தயாரிப்போடு, முன்கூட்டியே நமக்குக் கொடுத்த தமிழக ஆயர் பேரவைக்கும், குறிப்பாக வழிபாட்டுப் பணிக்குழுச்  செயலருக்கும், அதனை [டிஜிடல்] .புத்தக வடிவில் வெளிக்கொணர்ந்த நம்வாழ்வின் துரிதமான சேவையும், நாம் தனித்து விடப்படவில்லை என்பதை உணர்த்துகிறது.
  1. குருக்களின் ஆர்வம் நமக்கு மிகப் பெரிய உந்துசக்தியாக இருக்கிறது. ஆலயங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும் என்கிற நிலையில் தனது மக்களின் தேவையை எப்படிப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகமான தயாரிப்புகள், நேரச் செலவழிப்பு என்று மிகவும் நேர்த்தியாக தயாரிக்கும் ஆர்வம் நமக்கு பணியாளர்கள் மீதான நம்பிக்கையை அதிகப் படுத்துகிறது.
  1. இந்த ஆண்டு தவக்காலம் மற்றும் புனித வாரம் பல்வேறு கேள்விகளை நமக்குள் எழுப்புகிறது. இந்தக் கொள்ளை நோயின் தாக்கத்தில் நமது நம்பிக்கையைப் பலப்படுத்தவும், இந்த கொள்ளை நோய் கொடுக்கிற செய்திகளைப் புரிந்து கொள்வதற்கும், விவிலியத்தின் அடிப்படையில் பல்வேறு சிந்தனைகளை குருக்களும் அருள் சகோதரிகளும் பகிர்ந்து கொண்டிருப்பது நம்மைப் பலப்படுத்துகிறது
  1. இந்த நாட்களில் சிலர் தங்களது தனித்திறமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தங்களது இசையின் வழியாக நமது செபங்களை, ஏக்கங்களை வெளிப்படுத்த உதவி செய்வதும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளும், நமது ஒன்றிப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.
  1. டிஜிடல் கருவிகளை இந்த அளவிற்குப் பயன்படுத்துவதற்கு மக்கள் பழகிக் கொண்டது மிகவும் வரவேற்கத் தக்கது. ஒர் இடர் வரும் வேளையில் எப்படி தங்களைத் தகவமைத்துக் கொள்வது என்பதில் தேர்ந்தவர்களாக இருப்பது நாம் கற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருப்பதை வெளிப்படுத்துகிறது.
  1. அந்தத்தப் பங்கு மக்கள் தங்களது பங்கின் சானலைப் பின்பற்றுபவராகப் பதிவு செய்திருப்பது அவர்களது பங்கின் மீதான மக்களின் ஆர்வத்தை நமக்கு வெளிப்படுத்துகிறது. நேரடியாக ஆலயத்திற்குச் செல்ல முடியவில்லை என்றாலும் தாங்கள் இந்தப் பங்கின் உறுப்பினர் என்பதை அவர்கள் வெளிப்படுத்துகிற ஆர்வம் பங்கோடு மக்களுக்கு உள்ள உறவை வெளிப்படுத்துகிறது.
நமக்கு வேறென்ன வேண்டும்? இத்தனை ஆசீர்வாதங்கள் நமக்கு நம்பிக்கையைத் தர வேண்டாமா? இடர் வரும் வேளையில், தனித்திருக்க கட்டளை இடப்பட்டிருக்கிற வேளையில், அரசின் சட்டத்திற்கு உட்பட்டும், நாம் இல்லத்தை விட்டு வெளியில் செல்லாமல் இந்த ஆண்டு நமது வழிபாடுகள் வீட்டிற்குள்ளேயே இருக்கின்றன. இந்த வேளையில் பணியாற்றுகின்ற அரசுக்கும், அதன் ஊழியர்களுக்கும், உண்ணாமல் உறங்காமல் இருக்கிற மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் அவர்களின் சேவைகளையும் மதித்து, அவர்களுக்காக தொடர்ந்து மன்றாடக் கடமைப் பட்டிருக்கிறோம்.

 நம்பிக்கைக் கீற்றுகளை அதிகப்படுத்துவோம்.

    [அடுத்து - “டிஜிடல் வழிபாடு - கேள்விக்கணைகள்?”]






2 comments:

  1. I appreciate your writing skills to explore the Digital Church. This article is a great initiative to understand and analyse the Tamil Church both spiritually as well as socially. Thanks for your valuable time and feedback.
    Fr. Gnani, editor and publisher of Nam Vazhvu

    ReplyDelete
    Replies
    1. Dear Fr. Gnani. Thanks for the comment. I appreciate all the works that you are doing for the TN church and in a special way during the struggle that we all undergo. You have taken a great initiative which will be remembered for long. Continue your good work.

      Delete